இன்றைய சிந்தனைக்கு-28: "ஆயிரம் உண்டிங்கு ஜாதி" – சுஜாதா

ஞாயிற்றுக்கிழமைகளில் நான் தவறாமல் பார்ப்பதுஹிந்து பத்திரிக்கையின்மேட்ரிமோனியல்விளம்பரங்களை. எனக்குக் கல்யாண உத்தேசம் எதுவும் இல்லை. அது முப்பத்தேழு வருடங்களுக்கு முன்னேயே நிகழ்ந்து, சண்டை போட சப்ஜெக்ட் தீர்ந்துபோய், நானும் மனைவியும் ஒரு சமநிலைக்கு வந்துவிட்டோம்.

ஹிந்துவின் இந்தத் திருமணப் பக்கங்கள் நம் சமூகத்தின் உண்மையான குறிகாட்டி. இந்த நாட்டில், குறிப்பாகத் தென்னாட்டில் அத்தனை சாதிகளும் பத்திரமாக இருக்கின்றன என்பதற்கு அத்தாட்சி.

உதாரணம்ஆர்.சி.வன்னியர், தெலுகு பிராடஸ்டன்ட், கிறிஸ்டியன் நாடார், ரோமன் கத்தோலிக், கள்ளர் முக்குலத்தோர், தமிழ் முஸ்லீம், சன்னி உருது, பலிஜா நாயுடு, கேரளைட் விஸ்வகர்மா, வன்னியகுல க்ஷத்ரியர், வடமா பரத்வாஜா, வடகலை தைத்திரிய காசியபம்!

ஆயிரம் உண்டிங்கு ஜாதிஇது
ஞாயிறுதோறும் தவறாத சேதி” – என்று பாரதி இப்போது பாடியிருப்பார்.

இதை நான் தனிப்பட்ட விமர்சனம் செய்வதைவிட, இதில் பொதிந்துள்ள சமூகவியல் செய்திகள் தாம் முக்கியமாகப்படுகின்றன.

1. சாதி இல்லை என்ற கொள்கை வீட்டுக்கு வெளியே மற்றவர்களுக்கு.
2. தங்கள் குடும்பத்துக்கு வரும்போது மட்டும் சாதி பாராட்டுகின்றனர். இதற்குப் பல யதார்த்தமான காரணங்கள் இருக்கலாம். உணவுப் பழக்கங்கள், மொழி, பெறப்போகும் பிள்ளைகள் குழப்பம் இல்லாமல் வளர்வது.
3. பிராம்மணர்கள் மட்டுமின்றி அனைத்து வர்க்கத்தினரும் சாதி பாராட்டுகின்றனர் – கல்யாணம் என்று வரும்போது.
4. ‘கிரீன் கார்டு ஹோல்டர்என்கிற புதிய சாதி உருவாகிக் கொண்டிருக்கிறது.

வேலைவாய்ப்பு, மெடிக்கல் அட்மிஷன்இவற்றுக்கு சாதி தேவைப்படுவது வேறு விஷயம். இவற்றை மீறித்தான் கலப்புத் திருமணங்கள் நிகழ்கின்றன. அதுவும், வேறு விஷயம். அதன் பின்னும் சாதிகள் பத்திரமாக இருப்பதுதான் செய்தி. உதாரணம்
Mother Brahmin, Father Vanniyar, 26 – Poorattathy, Multinational company, Five figure salary, seeks graduate girl Brahmin or pure vegetarian.

இந்த விளம்பரத்தில் ஒரு நாவலுக்குரிய சமாசாரமே அடங்கியிருக்கிறது.

நன்றி: ஆனந்தவிகடன், 11.4.1999

கேள்வியும் பதிலும்-23:

கம்ப்யூட்டர் மூலம் மாப்பிள்ளை பார்க்க முடியுமா? (எல்.மகாலட்சுமி, மானாமதுரை)
ஒரு பழைய ஜோக் நினைவுக்கு வருகிறது. “அழகாக இருக்க வேண்டும். ஆனால் அதிக உயரமாக இருக்கக் கூடாது. நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். குளிர் பிரதேசத்தில் வாழத்தயாராக இருக்கவேண்டும். கூட்டத்தில் ஒருவராக ஒத்துப் போகவேண்டும். எனக்கு ஒரு ஜோடி தேடிக்கொடு” என்று கம்ப்யூட்டரிடம் விண்ணப்பித்தான் ஒரு இளைஞன்.
சில நிமிடங்கள் யோசித்த கம்ப்யூட்டர் கேட்டது: “டால்ஃபினை கல்யாணம் பண்ணிகொள்ளத் தயாரா?” (தமிழன்)
நன்றி: தமிழன் கேள்வி-பதில், குங்குமம், 9.4.1999.

எனக்குப் பிடித்த கவிதை-44: "நின்றுபோன கடிகாரம்" – பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

நேற்றிரவு என்னுடைய கடிகாரம் நின்றுபோயிற்று.
களிம்பேறிய ஓர் இதயம்
இனி என் மணிக்கட்டில் துடிக்காது.

தங்கைக்குப் பிறக்க நிமிடம் கொடுத்ததும்
பாட்டிக்கு இறக்க வேலை குறித்ததும்
இந்தக் கடிகாரம்தான்.

ஜாதகத்தின் காரணமும்
வாழ்க்கையின் இலக்கணமும்
இந்தக் கடிகாரம்தான்.

தூங்குமுன் உற்றுக்கவனித்தால்
இந்தக் கடிகாரத்திலிருந்து
காதலியின் மூச்சிரைப்பைக் கேட்கலாம்.
குண்டுபட்ட பறவையின் சிறகடிப்பைக் கேட்கலாம்.

இருளிலும் மின்னும் பச்சை முட்களுக்கு
அயல்கிரகங்களுடனுள்ள தெளிவற்ற உறவை நினைந்து
வியந்திருக்கிறேன்.

டிக்…டிக்…டிக்…டிக்
அடிமைகள் கல்லுடைக்கும் சப்தம்
யாகக் குதிரைகளின் குளம்பொலி
திக்விஜர்களின் இரத்தம் படிந்த அமைதி மந்திரம்
தீர்க்கதரிசிகளின் தளர்ந்த நாடித்துடிப்பு.

டிக்…டிக்…டிக்…டிக்
பதில் வராத மழையில்
அகதிகள் காலடி ஓசை.
மரணத்தின் வழியே வெற்றியை நோக்கித்
தற்கொலைப்படையின் கனவுப் பயணம்
சரணடைந்த வாழ்க்கைக்கு
எதிரிப்படையின் காவல் தாளம்.

நேரமாகவில்லை.
நேரமாகவில்லை.

மெல்லிய முட்கள் ஒன்று சேரும்போது
மக்களைத் தூக்கிலிடத் தீர்ப்பளித்த
நீதிமன்றம் கலைகிறது.

நான் இனி காலத்தின் வாதியோ,
பிரதிவாதியோ இல்லை.
நேற்றிரவு என்னுடைய கடிகாரம்
நின்று போயிற்று.

- மூலம்: மலையாளம்
- பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
- தமிழில்: சுகுமாரன்

நெல்லையப்பன் கவிதைகள்-32: "தவறும் நீதி"

வாரம் என்றால் ஏழு நாள்
மாதம் என்றால் அதிக பட்சம்
முப்பத்தியொரு நாள்.
வயிற்றில் குழந்தை என்றால்
இருநூற்றெழுபது நாள்.
கோர்ட்டில் வழக்கேன்றால்
எத்தனை நாள்?

அறுப்பு முடித்தால்
கடன் அடைக்கலாம்.
வீட்டை விற்றால்
மகள் திருமணம் நடத்தலாம்.
மாட்டை விற்றால்
பேறுகாலம் பார்க்கலாம்.
எவற்றையெல்லாம் விற்றால்
வழக்கை முடிக்கலாம்?

தாமதமாக வரும் நீதி
தவறிய நீதிதானே!
வழக்காட
இல்லை பணம்
என்றால்
தோற்றுப்போகுமா நீதி?

எத்தனை காலியிடங்கள்
நீதிபதி பதவிகளுக்கு!
நீதிபதி நியமனங்களை
விரைவு படுத்தவேண்டி
எந்தக் கோர்ட்டில்
வழக்குத் தொடுப்பது?
அந்த வழக்கும்
எப்போது முடியும்?

நலக்குறிப்புகள்-17: "அருகம்புல்லின் சிறப்புகள்" – ச.வெ.சுப்பிரமணியன்

இயற்கை வாழ்வியல் அல்லது உணவு மருத்துவத்தில் அருகம்புல்சாறு முதலிடம் பெறுகிறது. இதன் சிறப்பும் பண்பும் பலவாகும். அருகம்புல்லில் பச்சையம் நிறைந்துள்ளது. காரத்தன்மை உடையது. உயிர்ச்சத்துக்களும், தாது உப்புக்களும் இருக்கின்றன. உடல்தளர்ச்சியை நீக்கி, கட்டுமாறா உடலுறுதியைத் தரவல்லது. உடலிலுள்ள நச்சுத்தன்மைகளை நீக்குகிறது.

உடற்பிணிகள் அனைத்துக்கும் முதற் காரணமான குருதியின் அமிலத்தன்மையை சீர்செய்து, குடற்புண்களை குணப்படுத்துகிறது. ஆக்கச்சிதைவு மாற்றத்தை சீர்செய்து, நரம்புத் தளர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது. இரத்தத்தைக் கூடுதலாக்கி, இரத்தச் சோகையை நீக்குகிறது. இதயம், நுரையீரல் போன்றவற்றின் சீரான இயக்கத்திற்குத் துணைபுரிகிறது. கல்லீரலில் இறுக்கம் உண்டாகி கற்கள் படிவதைத் தடுக்கிறது. இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது.

சிறுநீரகத்தின் குறைபாட்டினை நீக்கி அது சீராகப் பணிபுரிய உதவுகிறது. பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நிறுத்தி, பற்களை உறுதிப் படுத்துகிறது. பற்களை வெண்மையாக்கி, வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. பிள்ளைப்பேறு காலத்தில் தாய்மார்களுக்கு பால்சுரப்பை உண்டுபண்ணுகிறது. நச்சுப் பொருட்களால் உண்டாகும் புற்றுநோயைத் தடுக்கிறது. இதில் இன்சுலின் நிறைந்துள்ளதால் நீரழிவுக்கு நன்மருந்தாகும். நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கத்தை இது சீர்படுத்துவத்தின் மூலம், ஆஸ்துமாவிலிருந்து நலம்பெற உதவுகிறது.

உடலின் வெக்கையை நீக்க உதவும். உணவுப் பாதையில் நடைபெறும் தொடர் அலை அசைவை சீர்செய்து, மலச்சிக்கலை நீக்கி, உடல்நல உயர்வினை நல்குகிறது. தோல் தொடர்பான பிணிகளுக்கு சிறந்த பயனளிக்கிறது.

அருகம்புல் சாற்றினை காலை வெறும் வயிற்றில் உணவாகக் கொள்ளலாம். உணவைக்குடி, நீரை உன் என்ற சொற்றொடரை மனதில் கொண்டு, நன்கு சுவைத்து, சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலக்கும்படி வாயில் ஊறவைத்து உண்ணவேண்டும். குடித்த இரண்டு மணி நேரத்திற்கு நீரின்றி பிற உணவுகளைக் கொள்ளலாகாது.

நன்றி: திரு ச.வெ.சுப்பிரமணியன், அறிக அறிவியல், ஜனவரி 1995.

ஹைகூ-12:

தாத்தா விட்டுப்போனது
இது ஒன்றுதான்
என் பெயர்.

- நன்றி: ராஜமுருகுபாண்டியன்

சுற்றுச்சூழல்: "வீட்டுக்கு நாலு மரம் நடுங்கள்"

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், ஏன் நண்பர்களுக்கும்கூட கைமேல் பலன் கிடைக்கிற காரியம் ஒன்று செய்ய விரும்பினீர்களானால் – வீட்டைச்சுற்றி நாலு மரம் நடுங்கள்.

மரம் நடுவதினால் எண்ணற்ற பயன்கள் உண்டு. ஒரு மரம் மனிதர்களும், விலங்குகளும் சுவாசிக்க உயிர்க்காற்றை (ஆக்சிஜன்) உற்பத்தி செய்கிறது. மண் அரிப்பைத் தடுக்கிறது. பறவைகளுக்கும், அணில்களுக்கும் இருப்பிடமளிக்கிறது. நீரைத் தூய்மை செய்கிறது. மழை நீரை நிலத்திலிருந்து ஈர்த்து, ஆவியாக்கி அனுப்பி மீண்டும் மழை பெய்விக்க உதவுகிறது. காற்றினால் ஏஅற்படும் சேதத்தைத் தடுக்கிறது. நிழல் தருகிறது. கோட்டை வகைகள், பழவகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை அளிக்கிறது.

இப்படி, எல்லாப் பயன்களையும் கணக்கில் வைத்துப் பார்த்தால், ஒரு மரம், தான் வாழும் ஐம்பது ஆண்டுகளில் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பயன்களைத் தருகிறது.

வீட்டுக்கு நாலு மரம் நடுங்கள். இது உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள சூழல் அழகுபெறுவதோடு மதிப்பு மிக்கதாகவும் ஆக்கும்.

மரங்கள் ஒன்றோடு ஒன்று சைகைகளின் மூலம் பேசிக் கொள்கின்றனவாம். ஒரு சில மரங்கள் புழுக்களால் தாக்கப்படும்போது, அவை அருகிலுள்ள மாற்ற மரங்களுக்கு இரசாயன முறையில் எச்சரிக்கை செய்கின்றனவாம். அருகிலுள்ள மரங்களின் இலைகளுக்கு ‘தெனின்’ என்னும் இரசாயனப் பொருளை இன்னும் அதிகமாக அனுப்பி, புழுக்கள் இலைகளை ஜீரணிக்க முடியாதபடி செய்துவிடுகின்றனவாம்.

மரங்களை நடுவதினால் ஓரிடத்தின் பருவநிளையே மிகக் குளிர்ச்சி அடைவதுண்டு. மரங்களை வெட்டுவதினால் வெப்பம் அதிகரிக்கின்றது.

மரங்களை நண்பர்களாகக் கருதவேண்டும். வெட்டக்கூடாது. வளர்க்க வேண்டும். வீட்டைச்சுற்றி மரம் வளர்த்தால் கோடையில் செயற்கை குளிர்சாதனங்களுக்கு வீணாகப் பணம் அழவேண்டிய அவசியம் ஏற்படாது.
– நன்றி: “நல்வழி”, மாத இதழ்.

என் கவிதை-6: "கூண்டுக்கிளியும், கூண்டுப்புலியும்"

கூண்டுக்கிளிக்கும்
கூண்டுப்புலிக்கும்
கல்யாணம் -
பெரியவர்களால்
நிச்சயிக்கப்பட்ட
கல்யாணம்.
ஆரம்ப முதலே
கிளிக்கு
புலியை கூண்டோடு
பிடிக்கவில்லை.
புலிக்கும்
கிளியை கூண்டோடு
பிடிக்கவில்லை.
கிளி, புலியைத்
தேர்ந்தெடுத்த
வார்த்தைகளால்
வறுத்தெடுக்க,
புலி
ஊரே அதிரும் வண்ணம்
உறும,
யார் வெல்வது?
சந்தேகமென்ன,
கிளிதான்!
கூண்டுப்புளிக்கு
யார் அஞ்சுவர்?
புலி மண்டியிட்டு
முன்னங்கால்களால்
காதைப் பொத்தி,
கண்ணை மூடி,
சாய்ந்தே விட்டது.

Follow

Get every new post delivered to your Inbox.