எனக்குப் பிடித்த கவிதை-44: "நின்றுபோன கடிகாரம்" – பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

நேற்றிரவு என்னுடைய கடிகாரம் நின்றுபோயிற்று.
களிம்பேறிய ஓர் இதயம்
இனி என் மணிக்கட்டில் துடிக்காது.

தங்கைக்குப் பிறக்க நிமிடம் கொடுத்ததும்
பாட்டிக்கு இறக்க வேலை குறித்ததும்
இந்தக் கடிகாரம்தான்.

ஜாதகத்தின் காரணமும்
வாழ்க்கையின் இலக்கணமும்
இந்தக் கடிகாரம்தான்.

தூங்குமுன் உற்றுக்கவனித்தால்
இந்தக் கடிகாரத்திலிருந்து
காதலியின் மூச்சிரைப்பைக் கேட்கலாம்.
குண்டுபட்ட பறவையின் சிறகடிப்பைக் கேட்கலாம்.

இருளிலும் மின்னும் பச்சை முட்களுக்கு
அயல்கிரகங்களுடனுள்ள தெளிவற்ற உறவை நினைந்து
வியந்திருக்கிறேன்.

டிக்…டிக்…டிக்…டிக்
அடிமைகள் கல்லுடைக்கும் சப்தம்
யாகக் குதிரைகளின் குளம்பொலி
திக்விஜர்களின் இரத்தம் படிந்த அமைதி மந்திரம்
தீர்க்கதரிசிகளின் தளர்ந்த நாடித்துடிப்பு.

டிக்…டிக்…டிக்…டிக்
பதில் வராத மழையில்
அகதிகள் காலடி ஓசை.
மரணத்தின் வழியே வெற்றியை நோக்கித்
தற்கொலைப்படையின் கனவுப் பயணம்
சரணடைந்த வாழ்க்கைக்கு
எதிரிப்படையின் காவல் தாளம்.

நேரமாகவில்லை.
நேரமாகவில்லை.

மெல்லிய முட்கள் ஒன்று சேரும்போது
மக்களைத் தூக்கிலிடத் தீர்ப்பளித்த
நீதிமன்றம் கலைகிறது.

நான் இனி காலத்தின் வாதியோ,
பிரதிவாதியோ இல்லை.
நேற்றிரவு என்னுடைய கடிகாரம்
நின்று போயிற்று.

- மூலம்: மலையாளம்
- பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
- தமிழில்: சுகுமாரன்

எனக்குப் பிடித்த கவிதை-42: "பந்தயம்"

நடக்கக் கற்று
நாலடி வைப்பதற்குள்
‘ஓடு!’ என்றார்கள்.
ஓடலானேன் -
கைதட்டல்கள், வாழ்த்துக்கூச்சல்கள்
வேகம், வேகம், இன்னும் வேகம்
அன்னை மடியும்
காதல் ஒத்தடமும்
இளமைக் கூத்தும்
ஓட்டத்தினூடே ஓடிமறைந்தன.
ஓடும்போதே கல்யாணம் பண்ணி
கடமைகள் முடித்து
குழந்தைகள் பெற்று
குடும்பம் சுமந்து -
அடைந்தாள் சிரித்து
இழந்தால் அழுது
பக்தியில் நனைந்து
பயத்தில் உறைந்து
நரைக்க, நரைக்க
நாட்கள் பறக்க
இறைக்க, இறைக்க
ஓடிக்கொண்டிருந்தேன்.
ஒருநாள் எனக்கு
உண்மை புரிந்தது -
பந்தயம் என்றோ
முடிந்து போனது
நான் வெறும்
பழக்க தோஷத்தில்
ஓடிக் கொண்டிருக்கிறேன்!
- தஞ்சாவூர்க் கவிராயர்
நன்றி: கல்கி, டிசம்பர் 28, 1997.

எனக்குப் பிடித்த கவிதை-41:

ராமருக்கு வேண்டும் கோயில்
பாபருக்கு வேண்டும் மசூதி
ஜனங்களுக்கு வேண்டும்
நல்ல கழிப்பறைகள்.
நன்றி: மனுஷ்ய புத்திரன்

எனக்குப் பிடித்த கவிதை-41: "அழைப்பு"

இரண்டாம் மாடியில் – உப்பரிகையில்
ஒற்றைச் சன்னல் அருகில்
நான் என்னோடு
உணவருந்திக்கொண்டு
அருகில் வேப்பமரக்கிளை
மீதிருந்த காகம் அழைத்தது
பித்ருக்களோ தேவர்களோ
என எண்ணி
ஒரு சிறு கவளச் சாதத்தை
வெளியே வைத்தேன்
சாதம் சாதமாக
காகம் பறந்துவிட்டது
யாருடைய பித்ருக்களோ
நானறியேன்.

கவிஞர் ஆத்மா நாமின் கவிதை.

நன்றி: நியூ செஞ்சுரியின் “உங்கள் நூலகம்”, செப்டம்பர் 2008 & கவிஞர் ஆத்மா நாம்.

எனக்குப் பிடித்த கவிதை- 40: "பெண்"

இந்தக் கொடி
சொந்தக் காலில்
நிற்க முடிவதில்லை…

இந்தக் கொடி
இங்கே
மரமாவதேயில்லை…

இளமையிலிருந்து
முதுமையின்
மூச்சு நிற்கும் வரை
எந்த மரத்திலாவதுதான்
சுற்றிப் படர்கிறது…

தன்
மென்கரத்தை
எந்த மரத்தின்
வலிமையான
கரத்தில் இணைத்ததோ
அந்தக் கரம்
நெகிழும் பொது
இந்த மென்கொடி
சுடுமணலில் வீழ்ந்து
துடிக்கிறது…

இந்தக் கொடி
என்றுதான்
மரமாகுமோ?

நன்றி:
“கனவின் விலை ஒரு ரூபாய்”
மேலூர் மாவேந்தன்
அகரம் , சிவகங்கை


எனக்குப் பிடித்த கவிதை-39: "தொலைந்து போனவர்கள்"

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடித்தல் என்பது எதற்குமில்லை.

மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப் பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல.

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவை நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பாய் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலேதான் தோற்கின்றார்.

ஆட்டத்தில் உன்னை இழந்துவிட்டை – உன்
அசலைச் சந்தையிலே விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டை – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்.

‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்?’ என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு.

- “சுட்டுவிரல்”
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்
கவிக்கோ பதிப்பகம் , சென்னை-600 041
நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் & கவிக்கோ பதிப்பகம் , சென்னை-600 041

எனக்குப் பிடித்த கவிதை-38:

கொஞ்சம் முகம் பார்த்து
தலை சீவ ஒரு சந்திரன்.
லோஷன் மணக்கும் பாத்ரூம்
என் மனக்குதிரைகள் நின்று
அசைபோட ஒரு லாயம்.
என் கையெழுத்துப்
பிரதியில் கண்நோடமுகங்
கொள்ளும் – ஆனந்தச் சலனங்கள்.
நான் காண – ஒரு பெண்.
சிந்திக்கையில்
கோத ஒரு வெண்தாடி
சாந்த சூரியன்
லேசான குளிர்
அடிமனத்தில் கவிதையின் நீரோடை.

- சுந்தரராமசாமி

எனக்குப் பிடித்த கவிதை-36: "எந்த மலர்?"

வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் பூவுமல்ல, வேறெந்த மாமலருமல்ல,
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது!

- சுவாமி விபுலானந்தர்

எனக்குப் பிடித்த கவிதை-35:

நிலவைப் பிடித்துச் – சில
கரைகள் துடைத்துக் – குறு
முறுவல் பதித்த முகம்.
நினைவைப் பதித்து – மன
அலைகள் நிறைத்துச் – சிறு
நளினம் தெளித்த விழி.
தரள மிடைந்து – ஒளி
தவழக் குடைந்து – இரு
பவளம் பதித்த இதழ்.
முகிலைப் பிடித்துச் – சிறு
நெளிவைக் கடைந்து – இரு
செவியில் திரிந்த குழல்.
அமுதம் கடைந்து – சுவை
அளவிற் கலந்து – மதன்
நுகரப் படைத்த எழில்.

நன்றி: “குறிஞ்சி மலர்”, நா.பார்த்தசாரதி

எனக்குப் பிடித்த கவிதை-34: "மானுடம் – ந.இராமையா பிள்ளை"

இறையரு ளுணர்வது நிறைமொழி மானுடம்

இயற்கையில் மானுடம் இன்பம் உறையிடம்

செயற்கையில் மானுடம் சேர்ப்பதே துயராம்.

குறையறு மானுடம் தரணியி லேது?

குறைநிறை இரண்டன் கூட்டே மானுடம்.

மானுடர் மல்கிடு குறையோ ராயினர்

உயர்செயல் மானுடர் இறைகரக் கருவியே

ஆற்றுவ ராற்றிறை யாற்றே யறிக.

- ஓரடி ஆயிரம்

நன்றி: திரு ந.இராமையா பிள்ளை அவர்கள்

எனக்குப் பிடித்த கவிதை-33: "தனிமை"

எனக்குப் பிடித்த கவிதை: “தனிமை

உணர்வுக்குள் ஒளிந்துவிட்ட ஒருகோடி ரகசியத்தை
எனக்குள்ளே தேடுவதில் என்காலம் கழிகிறது.
முடியாத மோனநிலை முனகிவிட்ட சொற்களையே
விடியாத வைகறையில் வெண்மேகம் உதிர்க்கிறது.
தனிமையிலே கடைசிமிச்சம் தவிப்புத்தான் என்றாலும்
நானினிமேல் தனிமையிலே விடமாட்டேன்.
மௌனக்கடலுக்குள் மனத்தோணி மிதந்திருக்க,
கனவுப் பொதிகளினால் கண்முதுகு கனக்கட்டும்.
புரியாத உணர்வுகளில் புதைந்துவிட்ட என்னுயிரைத்
தெரியாமல் தனிமையிலே தினம்தோண்டிப் பார்க்கின்றேன்.
மனக்கொடிக்கு நீர்வார்த்து மரணமலர் பூப்பதற்குள்
எனக்குள்நான் தேடுவது எதுவென்றே தேடுகின்றேன்.
ஆகா! ஒ! தனிமைகளே! ஆவிகளின் நினைவுகளே!
சாகாத நினைவுகளைத் தவிக்கவிட்ட தனிமைகளே!
இறக்காமல் இனி நீங்கள் எனக்காக வாழுங்கள்!
மறக்காமல் நானுங்கள் மடிமீது தவமிருப்பேன்.
ஒளிப்பூவின் மெத்தைகளில் உறங்குங்கள் தனிமைகளே!
குளிர்மேகச் சிறகடியில் கூடுகட்டிப் படுத்திருங்கள்.
இமைக்கோழி அடைகாக்கும் எழிலான விழிமுட்டை
அமைதியிலே தனிமைதரும் அகச் சூட்டில் பொரியட்டும்!
சோகரத்தம் சொட்டுகின்ற சுயநினைவுக் காயங்கள்
தாகமுத்தத் தனிமையிலே சந்தனம் போல் ஆறட்டும்!

(கவிஞர் வைரமுத்துவின் “தனிமைதான் தத்துவம்” என்ற கவிதையிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள்.)
“வைகறை மேகங்கள்”
கவிஞர் வைரமுத்து
சூர்யா வெளியீடு, சென்னை.
எண்பது பக்கங்கள்.
விலை ரூபாய் முப்பது மட்டும்.

எனக்குப் பிடித்த கவிதை-32: "உரக்க உணர்! – கவிஞர் ஜனநேசன்"

உன் பெருமூச்சால்
ஓர் இலை அசையலாம்!
ஓர் இலையால் ஒரு கிளை,
ஒரு கிளையால் ஒரு மரம்,
தோப்புகளும் அசையலாம்!
அசைவுகளின் உசாவலை
விசாரிக்கத் தென்றல் வரலாம்!
மாற்றத்தை முன்மொழிந்து
புயலும் எழலாம்!
ஆகவே சகோதரியே,
உன் அழுகையும், உவகையும்
உரத்தே ஒலிக்கட்டும்!
ஓர் இயக்கமாய் இயங்கட்டும்!

(‘புதிய ஆசிரியன்’ நவம்பர் 1998 இதழிலும், ‘செம்மலர்’ பிப்ரவரி 1999 இதழிலும் வெளியானது.)

புத்தக வடிவில்:
“மஞ்சள் சிலுவை”
கவிஞர் ஜனநேசன்
கிருதயா பதிப்பகம்,
காரைக்குடி
விலை ரூபாய் இருபத்தைந்து மட்டும்.

எனக்குப் பிடித்த கவிதை-31: "புத்தகம்" – கவிஞர் வாலி

பிள்ளையில் படிக்கும் புத்தகம் மழலை
பள்ளியில் படிக்கும் புத்தகம் நட்பு
இளமையில் படிக்கும் புத்தகம் காதல்
வளமையில் படிக்கும் புத்தகம் வாழ்வு!

கட்டிலில் படிக்கும் புத்தகம் மனைவி
தொட்டிலில் படிக்கும் புத்தகம் மதலை
சட்டியில் படிக்கும் புத்தகம் சோறு
பெட்டியில் படிக்கும் புத்தகம் செல்வம்!

உறங்கையில் படிக்கும் புத்தகம் கனவு
கிறங்கையில் படிக்கும் புத்தகம் கள்ளு
உறவினில் படிக்கும் புத்தகம் காமம்
துறவினில் படிக்கும் புத்தகம் ஞானம்!

உவகையில் படிக்கும் புத்தகம் சிரிப்பு
உணர்ச்சியில் படிக்கும் புத்தகம் கோபம்
கவலையில் படிக்கும் புத்தகம் கண்ணீர்
கோவிலில் படிக்கும் புத்தகம் கடவுள்!

முதுமையில் படிக்கும் புத்தகம் ஏக்கம்
முடிவினில் படிக்கும் புத்தகம் தூக்கம்
பிறந்தது முதல்தான் எத்தனை படிப்பு
படித்ததை முடித்ததன் பரீட்சைதான் இறப்பு!

எனக்குப் பிடித்த கவிதை-30: "துணிவுடன் உலகை வெல்லுங்கள்! "

கடலுக்கு பயந்தவன்
கரையில் நின்றான்
அதைப் படகினில் கடந்தவன்
புது உலகைக் கண்டான்.
பயந்தவன் தனக்குப் பகையானான்.
என்றும் துணிந்தவன்
உலகிற்கு ஒளியாவான்.
என்னால் முடியும் என்றுநம்புங்கள்.
துணிவுடன் உலகை வெல்லுங்கள்!

(ஆசியாவின் மிகப்பெரிய ‘Spoken English’ பயிற்சி நிறுவனமான ‘வீட்டா” (VETA) நிறுவனத்தின் சென்னை-தி.நகர் அலுவலகம் இப்படியொரு ‘டானிக்’ கவிதையோடுதான் நம்மை வரவேற்கிறது. இருபது லட்சம் பேருக்கு மேல் போதித்து சாதனை படைத்த நிறுவனம்! உள்நாட்டில் 200 கிளைகள், கடல் கடந்து சிங்கப்பூரிலும் தற்போது கிளை!)

(நன்றி: ‘மல்லிகை மகள்’, தமிழ் மகளிர் மாத இதழ், மார்ச் 2008)

எனக்குப் பிடித்த கவிதை-29: கண்ணீர் வங்கி!

எனக்குப் பிடித்த கவிதை-29: கண்ணீர் வங்கி!

காடு விளைந்து வாழ்வு சிறக்கும்
என நம்பினேன் மண்ணை!
புன்னகை மட்டுமல்ல,
பொன்னகையும் போனது – அடகுக்கடையில்.
நெல்மணியுடன் பொன்மணியும்
வந்துசேரும் என பூரித்த வேளையில்,
புயலுடன் வந்த மழையில் – மூழ்கியது
பயிர்கள் மட்டுமா? – எங்கள்
வாழ்க்கையும் அன்றோ?
கந்துவட்டியின் பிடியில் எங்களிடம்
எஞ்சியிருப்பது கண்ணீர் மட்டுமே.
கண்ணீருக்கு உண்டா வங்கி?
அடமானம் வைப்பதற்குத்தான்.

- செல்வி நளினி
நன்றி: தினமலர், மதுரை, ஜூலை 27, 2008

எனக்குப் பிடித்த கவிதை-28: "அழகின் சிரிப்பு"

எனக்குப் பிடித்த கவிதை-28: “அழகின் சிரிப்பு”

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிலத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!

- பாரதிதாசனின் அழகின் சிரிப்பிலிருந்து ஒரு பகுதி.

எனக்குப் பிடித்த கவிதை-27: "காய்த்தல்"

எனக்குப் பிடித்த கவிதை-27: “காய்த்தல்”

கை நழுவிய சொல்லொன்று
நிலம் பிளந்து
உள்ளிரங்கியது.

எங்கெங்குமாய் கிளைதெழுந்த
செடிகள் தோறும்
சொற்கள் காய்த்தன.

காத்திருப்பின் நீள்பொழுதில்
கனியவேயில்லை,
ஒரு சொல் கூட.

வெறுமையின் கூடுடைத்து
திரும்பி நடக்கையில்…
காய்த்திருந்த சொற்கள்
பூவாய் மாறியிருந்தன
மறுபடியும்.

- மு.முருகேஷ் கவிதைகள்
“புதிய பார்வை”, ( மாதம் இருமுறை தமிழிதழ்) டிசம்பர் 16-31, 2007.
நன்றி: திரு மு முருகேஷ் & புதிய பார்வை.

எனக்குப் பிடித்த கவிதை-26 : ‘ஐம்பது வயதில் புரிகிறது’ – கவிஞர் வைரமுத்து

ஐம்பது வயதில் புரிகிறது‘ – கவிஞர் வைரமுத்து

ஓரோர் பொழுது
ஞானக் கிடங்காய்,
வேறோர் பொழுது
குப்பைக் கூடையாய்
மாறி மாறித் தோற்றங் காட்டும்
மனமே!

உனது பள்ளம் எனது சமாதி
உனது சிகரம் எனது உயரம்.

மனமே! என் மனமே!
சூரியனாய் இரு,
பொறாமைத் தூசுகள்
புகாதபடி.

வானமாய் இரு,
அவமானத் துப்பல்கள்
ஒட்டாதபடி.

மேகமாய் இரு,
மெய்வருத்தி ஞானம் தேக்கி
சமத்துவ மழையாய்ச் சிதறும்படி.

காலமாய் இரு,
எனக்குப் பிறகும்
நீளும் படி.

கொஞ்சம் தேநீர், நிறைய வானம்
சூர்யா லிட்டரேச்சர் பிரைவேட் லிமிடெட், சென்னை.
ஜனவரி 2005
விலை : ரூபாய் 75/-

எனக்குப் பிடித்த கவிதை-25 : தெரு மணம் – பூர்ணா

எனக்குப் பிடித்த கவிதை

தெரு மணம் – பூர்ணா

பலகடை ஏறி இறங்கி
எடுக்கப்பட்டது
பட்டுப்புடவை.

உரசிப் பார்த்து
வாங்கப்பட்டது
நகை.

தட்டிப் பார்த்து
எடுக்கப்பட்டது
பாத்திரம்.

நசுக்கிப் பார்த்து
வாங்கப் பட்டது
காய்கறி.

மாப்பிள்ளையை மட்டும்
கண்ணை மூடிக்கொண்டு
பார்த்து விட்டார்கள்.

நன்றி : தாமரை, மே-ஜூன் 2008

எனக்குப் பிடித்த கவிதை-24: "அறிவிலே தெளிவு…"

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!

- சி. சுப்ரமணிய பாரதி

எனக்குப் பிடித்த கவிதை-23: "அரங்கேறும் சொற்கள் – கண்ணதாசன்"

எனக்குப் பிடித்த கவிதை-23

அரங்கேறும் சொற்கள் – கண்ணதாசன்

கன்று தான் சிங்கம் என்பான்
கரடிதான் கலைமான் என்பான்
பன்றிதான் யானை என்பான்
பருந்து தான் மஞ்ஞ என்பான்
அன்றிலே காக்கை என்பான்
ஆமென்பார் சபையிலுள் ளோர்;
வென்றவன் சொல்வ தெல்லாம்
வேதமல் லாமல் என்ன?

பள்ளமே இமயம் என்பான்
பாட்டியே குமரி என்பான்
வெள்ளியே ஈயம் என்பான் ;
வெந்தயம் இனிக்கும் என்பான்;
கள்ளியே முல்லை என்பான்
கண்ணாலே கண்டேன் என்பான்;
உள்ளவன் சொல்வ தெல்லாம்
உண்மையல் லாமல் என்ன?

நதிபோகும் திசையை மாற்றி
நடக்கட்டும் வடக்கே என்பான்
மதியம் தன்வானை விட்டு
மண்ணிலே வீழட்டும் என்பான்
இதுமுதல் கடல்நீ ரெல்லாம்
இனிக்கட்டும் தேன் போல் என்பான்
அதிகாரி போடும் ஆணைக்கு
அடங்காமல் வேறென் செய்ய?

சொல்லுவார் வார்த்தை யாவும்
தொல்புவி ஏற்பதில்லை
செல்வர்கள் வெற்றி பெற்றோர்
தினஏடு கையில் உள்ளோர்
வல்லவர் பதவி கொண்டோர்
வார்த்தையே அரங்கம் ஏறும்
நல்லவர் சொற்கள் ஏறும்
நாளொன்று வருமா தாயே?

எனக்குப் பிடித்த கவிதை-22: "நாம் மனிதர்கள்!"

எனக்குப் பிடித்த கவிதை-22

கை அசைத்தாலே
காற்றில் பறந்துவிட
நாம்
‘பயந்தாங்கொள்ளி’ காகம் அல்ல..

ஆபத்தை அறிந்தாலே
மணலுக்குள் தலையை
மறைத்துக்கொள்ள
‘முட்டாள்’ நெருப்புக் கோழியுமல்ல..

தொட்டாலே
சுருண்டு கொள்ள
‘பரிதாப’ மரவட்டையும் அல்ல…

வருவது எதுவாயினும்
எதிர்கொள்ள வேண்டும்..
உறுதியோடு நின்று
மகுடம் சூடவேண்டும்!

ஏனெனில்,
நாம்..
மனிதர்கள்!

நன்றி :- அவள் விகடன், ஆகஸ்ட் 4, 2006

எனக்குப் பிடித்த கவிதை-22 – "புலம் பெயர்தல் "

எனக்குப் பிடித்த கவிதை-21

புலம் பெயர்தல்

கையில் பெட்டியுடனும்
அம்மாவின் கண்ணீருடனும்
அப்பாவின் அறிவுரையுடனும்
கிராமத்தை விட்டு வெளியேறி
ஏழெட்டு வருடமாகிறது.

கல்லூரிப் படிப்பிற்காக
நகரம் வந்தது,
நண்பர்க்ளோடு ‘பேச்சிலர்’ வாழ்க்கையும்
படிப்பிற்கேற்ற வேலையும்
நகரத்தில் கிடைத்துவிட
விழித்துக் கொண்ட பின்னும்
ஞாபகத்திலிருக்கும்
கனவாகவே ஆகிப்போனது
கிராமம்.

அம்மாவின் அன்போ
அப்பாவின் வசவோ
கல்லூரியில் கடிதத்திலும்
பிறகு தொலைபேசியிலும்
இப்பொழுது
ஆளுக்கொன்றாய்
வாங்கிக் கொடுத்திருக்கும்
செல்போனில் மட்டும்தான்.

விளையாடித் திரிந்த
வேலிக்காடுகளையும்,
அணில்வேட்டையாடிக் கிடந்த
மஞ்சனத்தி மரங்களையும்,
அலைந்து திரிந்த
ஆற்றங்கரையையும்
எட்ட நின்று வேடிக்கைபார்ப்பதுகூட
விடுமுறைகளில் மட்டும்தான்.

நகரத்தில் பார்க்கிற
கடற்கரை பௌர்ணமியையும்
கட்டிடங்களுக்குப்
பின்னால் மறைகிற
சூரியனையும்
அப்பார்ட்மென்ட் மாடியில் பெய்கிற
மழையையும்
கிராமத்து நிமிஷங்களோடு
ஒப்பிட்டுக்கொண்டே கிடக்கிறது மனசு.

ஊருக்குப் போக முடியாத
பண்டிகை நாட்களில்
உள்ளூர் நண்பனின்
வீட்டுக்குச் செல்கையில்
குடும்பத்தோடிருக்கும்
அவனைப் பார்க்கும் போது
ஏக்கம் மெதுவாய்
எட்டிப் பார்க்கும்.

தலைகீழாய் இறங்கி
தரைதொட்டு வேரூன்றி
தாய்மரத் தின் கூடவேயிருந்து
தாங்கும் விழுதாய்
வாழமுடியாமல்
பிறந்து வளர்ந்த இடத்திலிருந்து
துண்டாய் வெட்டியெடுத்து
தொலைதூரத்தில்
பதியனிட்டுக் கொண்டிருப்பதை
சுய பரிதாபம் சுட்டிக்காட்டும்.

பார்த்துக்கொண்ட வேலையும்
பழகிப்போன பிழைப்பும்
நகரத்தோடு பிணைத்துப்போட
இழந்துவிட்ட சொர்க்கமாகவே
இருக்கிறது கிராமம்.

இனியென்ன…
எல்லோரையும் போல
நகரத்தின் மையத்திலோ ஓரத்திலோ
இல்லை கொஞ்சம் தூரத்திலோ
ஒருவீ டு வாங்கி
ஆலமரத்தை
வேரோடு பெயர்த்து
வேறிடத்தில் நடுவது போல
அப்பா அம்மாவையும்
கிராமத்திலிருந்து நகரத்திற்கு
அழைத்து வரவேண்டும்.

மரமென்றால் பட்டுப்போகும்
மனிதர்கள்தானே…
பழகிப் போகும்.
என்ன,
எனக்கு வாய்த்த
வேப்பமரத்தடிப் பள்ளியும்
வெள்ளம் பெருகியோடும் ஆற்றங்கரையும்
களத்து மேட்டுக்
காவல் ராததிரிகளும்
அங்கு கேட்டுக்கிடந்த
காதல் கற்பனை, பேய்க் கதைகளும்
ஊருணிக்கரை புளியம்பழங்களும்
என் மகனுக்கோ மகளுக்கோ
என்னவென்றே தெரியாமல்போகும்.

- பொ.வெண்மணிச்செல்வன்

நன்றி : செம்மலர், பிப்ரவரி 2008

எனக்குப் பிடித்த கவிதை-20: "அழகல்ல காதலனே! "

எனக்குப் பிடித்த கவிதை-20

அழகல்ல காதலனே!

கடந்து கொண்டிருக்கிறது
காலம்!
கரைந்து கொண்டிருக்கிறது
வாலிபம்!

கண்களைச்சுற்றிக்
கருப்பு வளையங்களை
மலர் வளையமாக
வைத்து மனதை
இம்சிக்கிறது
இயற்கை!

அலைபாயும் கூந்தலில்
‘சிகைப்பூச்சு’க்குள்
சிக்க மறுத்து
அங்கொன்றும்,
இங்கொன்றுமாக
ஆடிப் படம்எடுக்கிறது
வெள்ளை நாகமாய்
நரைமுடி!

என்வீடு கடக்கும்
எல்லாரும்
ஏளனப் பார்வையால்
இம்சிக்கின்றனர் என்னை!

எங்கிருக்கிறாய்
எனக்கான
பிருத்திவி ராஜனே?
உன் குதிரைக்குக்
கொள்ளும்,
தண்ணீரும் கொடுத்து
சிறை எடுக்கச்
சீக்கிரம் வா!

இல்லை என்றால்
எள்ளும், தண்ணீரும்
இறைக்க வேண்டியிருக்கும்!

காதல் நோயிலிருந்து
என்னைக்
காப்பாற்றாமல் இருப்பது
உனக்கு –
அழகல்ல காதலனே!

- ஜெயகவிதா, கோவை

நன்றி : தினமலர் வாரமலர் (கவிதைச் சோலை), பிப்ரவரி 3, 2008

எனக்குப் பிடித்த கவிதை-19 : கவிதை ஒரு கண்ணாடி

எனக்குப் பிடித்த கவிதை-18

எனக்குப் பிடித்த கவிதை-17

கேள்வியும் பதிலும்-5: "எது அழகு?"

எது அழகு?

பயிர்களைச் சுமந்து நிற்கும் நிலம் அழகு.
தாமரையைச் சுமந்து நிற்கும் குளம் அழகு.
நாணத்தை சுமந்து நிற்கும் பெண் அழகு.
நல்லறத்தைச் சுமந்து நிற்கும் ஆண் அழகு.

இப்படி நான்மணிக்கடிகை சொல்கிறது.

கேள்வி : தேன்மொழி இளங்கோ, ஸ்ரீரங்கம்
பதில்: தாம்பிரபரணி, கலைமகள், அக்டோபர் 2000

எனக்குப் பிடித்த கவிதை-16: "ஆதிக்கம்"

எனக்குப் பிடித்த கவிதை-16

ஆதிக்கம்

கைப்பிள்ளையோடு
நாலஞ்சு மைலு தனியா போற…
வழியில …
காத்து கருப்பு அடிச்சிடும்…
பேய் பிசாசு பிடிச்சிடும்னு சொல்லி
தலையில
கொஞ்சம்வேப்பிலையை
சொருகிவிடும் அம்மா,
உனக்குத் தெரியுமா?
நான்வாக்கப்பட்டு போனதே
ஒரு பேய்க்குத்தானென்பது !

- திருவை குமரன், திருச்சி-2
நன்றி – கல்கண்டு

எனக்குப் பிடித்த கவிதை-15

Follow

Get every new post delivered to your Inbox.