கருத்துக்கள்-11: "புகைக்குடி" – யோகி சுத்தானந்த பாரதியார்

சந்தைக்கூட்டம், வண்டிக்கூட்டம், காட்சிக்கூட்டங்களில் எல்லாம் கரிக்காற்று மிகுதி. கரிக்காற்றும், வியர்வை நாற்றமும் ஆளைக் கெடுக்கும். சுருட்டுப் புகையும் கூடிவிட்டால் வேறு வினை வேண்டா! இச்சுருட்டை எந்த சைத்தான் கொண்டுவந்தான்? நெஞ்சைக்கெடுத்து, வாயைச் சாக்கடை நாற்றமாக்கி, பல்லைக் கெடுத்து, பசியைக் கெடுத்து, உருசியைக் கெடுத்து, நச்சுப் புகையால் சுற்றிலும் உள்ள பலருக்குத் தீங்கு விளைவிக்கும் இப்புகைக்குடிகளை ஏனோ பகுத்தறிவுள்ள மனிதன் பழகினான்! பார்த்தால் ஒரு பைசா பீடி; புகைத்தால் பல பேருக்குக் கேடு! ஒரு பெரிய அறையின் காற்றைக் கெடுக்க ஒரு சிறிய சுருட்டுப் போதும்! ஒருவர் பிரம்மப்பத்திர புகைவிட்டால் 2000 பேர் மூச்சைக் கெடுப்பதாகும். மூச்சைப் பிடித்து ஆளைக் கொள்கிறதே! இந்த சுருட்டுப் பாவியை ஒழிக்கலாகாதா? அட, நாகரிகமே! பொறிப்புகை, கரிப்புகை, வண்டிப்புகை, சுருட்டுப்புகை, மண்ணெண்னைப்புகை, சாராய வாடை, கும்பல் நாற்றம்! காடு, மலை, வானம், கடல் வெளிகளுக்குப் போனால்தான் நல்ல காற்று!
- யோகி சுத்தானந்த பாரதியாரின் “உடல் உறுதி” என்ற நூலிலிருந்து.
நன்றி: இயற்கை நாதம், அக்டோபர் 2008, (ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்க வெளியீடு)

கருத்துக்கள்-10: "அன்பை வளர்க்கும் இலக்கியம்" – ஜெயகாந்தன்

நம் நாட்டில் எல்லா வளங்கள் இருந்தும் மக்களிடம் ஒற்றுமை இல்லை. ஒற்றுமையை ஏற்படுத்த இலக்கியத்தால்தான் முடியும். மதம் என்பது ஒரு புத்தகம். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் இவை எல்லாமே நூல்கள்தான்! நூல்களைத் தெய்வமாக மதிக்கும் பழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. நம் முன்னோர்களைத் தரிசிக்க ஒரே வழி புத்தகங்கள்தான்! மனக்கோணல்களைச் செம்மைப்படுத்துவதும் புத்தகங்கள்தான்! …

உயிர் உள்ளவரை கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். பருவம் மற்றும் ரசனைக்கேற்ப புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்….

புத்தகம் என்பது குரு, கடவுளுக்குச் சமம். அறிவியல் வளர்க்கும் இக்காலத்தில் அன்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அன்பில்லாமல் வாழ்வின் இயக்கம் அசையாது. அன்பை வளர்க்க இலக்கியம் தேவை!

ஈரோட்டில் ஆகஸ்ட் 2008-ல் நடந்த புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் அவர்கள் பேசியதிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: “இனிய உதயம்”, தமிழ் மாத இதழ், செப்டம்பர் 2008 & திரு ஜீவா தங்கவேல்.

கருத்துக்கள்-9: "தூக்கம்" – கண்ணதாசன்

நான் தூக்கத்தில் மன்னன். பாழுங்காட்டில் துண்டை விரித்துப்படுத்தால்கூட, நான் சுலபமாகத் தூங்கிவிடுவேன். அதனால் நான் இழந்தது கொஞ்சமா? கேலிக்கு ஆளானது கொஞ்சமா? இரவில் சாப்பிட்டுவிட்டுக் காரில் ஏறிப்படுத்தால், காலையில் திருச்சி வரும்போதுதான் விழிப்பேன். அதிலே சிந்தனைக்கு லாபம் இருந்ததே தவிர, வந்த லாபம் போகவும் செய்தது.

கும்பகர்ணன் மட்டும் தூக்கத்தைக் குறைத்துக் கொண்டிருந்தாள், ஸ்ரீராமனுடைய சைன்யம் சேதுக்கடலைத் தாண்டியிருக்காது என்பார்கள். இரவும், பகலும் தூங்காமல் விழித்துக்கொண்டே நம்மைக் காவல் காக்கிறாள் மதுரை மீனாட்சி. அவளுக்கு மீனாட்சி என்ற பெயர் வந்ததற்குக் காரணமே அதுதான் என்கிறார் வாரியார் சுவாமிகள். மீன்போல் விழித்திருந்து அவள் ஆட்சி செய்வதால் அவள் மீனாட்சி. இதை எனது குருநாதர் வாரியார் சுவாமிகள் அழகாகச் சொல்லுவார்: “ஓடும் ரயிலில் இரண்டாயிரம் பேர் தூங்குகிறோம். இன்ஜின் டிரைவர் விழித்துக் கொண்டிருக்கிறார். அவரும் தூங்கிவிட்டால் இரண்டாயிரம் பேரும் என்ன ஆவது?”

“நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தாமும் கேட்டார்” என்று தம்பி கல்யாணசுந்தரம் பாடியிருக்கிறார்.

தூக்கம் ஒருவகை லயம், ஒரு வகைச் சுகம், ஈடு இணையில்லாத போகம்! நல்ல தூக்கம் ஒருவனுக்கு வருவது, அவன் செய்த தவம், அவன் பெற்ற வாரம்! ஆனால், கடமைகளை மறக்கடிக்கும் தூக்கம் போகமல்ல – ரோகம்.

காலை ஆறு மணிக்குத் திருமணம். மாப்பிள்ளை ஏழு மணிக்கு எழுந்திருந்தால், நேரம் காத்திருக்குமா? ஆகவே எந்தப் போகமும் அளவுக்குரியது.

ஒரு குறிப்பிட்ட வயது வரையில், குழந்தைக்குத் தூக்கம்தான் வளர்ச்சி. அந்த வயதுக்குப்பின், விழிப்புத்தான் வளர்ச்சி. நன்றாக வளர்ந்து, காக்கவேண்டியவர்களைக் காத்து, சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்த பிற்பாடு தூக்கம் ஒரு யோகம். காக்கவேண்டிய காலத்தில் தூங்குவதே ரோகம். ஆனால், துர்ப்பாக்கியவசமாகத் தள்ளாடும் வயதில் எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டுத் தூங்கப் போகிறவனுக்குத் தூக்கம் வராது. ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் தூக்கம் குறையத் தொடங்கும். ‘ஐயோ தூங்கமுடியவில்லையே’ என்று கவலைப்பட்டுப் பயனில்லை. ‘சுகபோகத்தை அனுபவிக்க வேண்டிய வயதில் அனுபவித்துத் தீர்த்துவிட்டோம்’ அன்று ஆறுதலடைவதைத் தவிர வேறு வழியில்லை.

திருடர் பயம் நிறைந்த இடத்தில், விழுந்து விழுந்து தூங்கினால் நஷ்டம். ஆபத்தான நேரங்களில், தூக்கத்தை அறவே விளக்காவிட்டால் கஷ்டம். தவறினால், ஒரு போகம் பல ரோகங்களுக்குக் காரணமாகிவிடும்.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம்தான் தூங்குவான் அடால்ஃப் ஹிட்லர். அது அவனுக்குப் ஒதுமானதாக இருந்தது. மளமளவென்று வெற்றியையும் தேடித் தந்தது. ஒருநாள் நிம்மதியாகத் தூங்க விரும்பி, இரண்டு மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு தூங்கினான். அன்றைக்குத்தான், ‘நார்மண்டி முற்றுகை’ நடந்தது. ஐசன்ஹோவரும், சர்ச்சிலும் ஆயிரக்கணக்கான கப்பல்களைப் பிரஞ்சு நாட்டு ‘நார்மண்டி’ கடற்கரைக்கு அனுப்பி வெற்றி பெற்றுவிட்டார்கள். ஹிட்லரின் தோல்விக்கு அமெரிக்காவின் அணுகுண்டா காரணம்? இல்லை, ஹிட்லரின் தூக்கமே காரணம்! ஆகவே அனுபவத்தின் காரணமாகச் சொல்கிறேன்:

“அனுபவிப்பதை அளவோடு அனுபவியுங்கள். உண்பதில் நிதானம் – உடலுறவில் நிதானம் – உறங்குவதில் நிதானம் – தீயன பழகாமல் இருத்தல் – அளவான வாழ்க்கையிலேயே அதிகமாக உற்சாகத்தைக் காணுதல் – இப்படி வாழ்ந்தால் இறைவன் ஒத்துழைப்பான்.

- கண்ணதாசனின், “போகம், ரோகம், யோகம்”
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.

கருத்துக்கள்-8: "எஃப்-எம் வானொலிகள்"

“எத்தனை வருஷமா லவ் பண்றீங்க?”
“ஏழு வருஷமா”
“அவ்வளவு வருஷமாவா… கேட்கவே பெருமையா இருக்கு… எப்போ கல்யாணம்?”
“அவங்களுக்கு ஏற்கனவே ஆயிருச்சு…”

இப்படி ஒரு உரையாடல் ஒரு நாளைக்கு பலமுறை பல்வேறு குரல்களில் பல்வேறு எஃப்-எம் வானொலிகளின் வழியே ஏதோ அன்றாட நிஜம்போல தமிழர்களின் செவியில் ஈயத்தைக் காய்ச்சி, வலி தெரியாமல் ஊற்றப்படும் கலாச்சார நிஜமாகி வருகிறது. நாள் பலன், நட்சத்திர பலன் தொடங்கி மூட நம்பிக்கைகளின் ஊற்றுக் கண்ணாகவும், ‘செக்சை மனம் விட்டுப் பேசலாம்.. எஸ்.எம்.எஸ்., லவ் கவிதை, பாட்டை டெடிகேட் பண்ணலாம்’.. ஜாலியா லைஃப் கொண்டாடலாம்’… பீச், பார்க், நகைக்கடை என கலாச்சார சீரழிவின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய அவமானமாக நாம் எஃப்.எம். வானொலிகளைப் பார்க்கிறோம். கலை, பொழுதுபோக்கு எனும் பெயரில் நடைபெறும் இந்த அவமான பரிணாமம் அரசு வானொலிகளையும் விட்டுவைக்கவில்லை.

கோடிக்கணக்கான விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், அன்றாட உணவிற்கு அல்லல்களை வலியோடு தாங்குபவர்கள் குறித்த ஒரு அணுஅளவு அக்கறைகூட காட்டிக் கொள்ளாத இந்த அரைவேக்காட்டு நஞ்சு, நகர்ப்புற மத்திய வர்க்கத்தின் கிடைக்கும் நேரத்தையும் கொன்று, வாழ்வின் யதார்த்தத்தை விட்டு தள்ளிவைப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். தினசரிகளில் வரும் கள்ளக்காதல் கொலை, கணவனுக்கு விஷம் வைத்துக் கொலை, குழந்தைகளுடன் மனைவி எரித்துக் கொலை, ஆசைக்கு இணங்க மறுத்த அக்கா கொலை, இத்யாதிகளுக்கு, விஷக்கிருமியான தொலைக்காட்சித் தொடர்களைவிட, இன்று இந்த எஃப்.எம். வானொலிகள் அதிகப்பங்கு வகிப்பது வலி ஏற்படுத்தும் உண்மையாகும். காதலர் தினம், ‘ஃபிரெண்ட்ஷிப் டே’, என சர்வதேச சந்தையின் அங்கமாயும், உள்ளூர் கலாசார சீர்கேட்டின் வினை ஊக்கியாகவும் செயல்படும் இந்த மக்கள் விரோத அபினி… ‘நங்கநல்லூர் வழியாப் போகாதீங்க… அங்கே ஒரு போராட்டம் நடந்து கிட்டுருக்கு” என்று நல்வழிப் படுத்துவதையும் பார்க்கிறபோது, அவை யாருக்கான வேலையை பார்க்கின்றன, அவற்றின் நோக்கம் பொழுதுபோக்குதானா எனச் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

நாம் ‘காலர் டியூன்’ காலத்தில் வாழ்வது உண்மைதான். ஆனால் ஒரு புத்தகத்தைப் படிக்கவோ, பிரச்னைகளை சிந்தித்து சராசரி மனிதனின் அன்றாட வாழ்வியலை முன்னுக்கு கொண்டுவந்து ஒரு முற்போக்குச் சமூகத்தை, சமத்துவத்தை, மாமனிதர்கள் கனவைக் கண்ட யதார்த்தத்தை சாதிப்பதற்கோ எவ்விதத்திலும் இந்த ஃஎப்.எம். வானொலி சேவை உதவிடப் போவதில்லை என்பது மட்டுமல்ல, தேவைப்பட்டால் அவ்விதமான மனிதநேயச் சமூக உருவாக்கத்திற்கு எதிராகவே அவர்களது செயல்பாடுகள் அமைகின்றன என்பதையும் பார்க்கிறபோது, அவைகளுக்கு எதிராக நாம் களம் இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே படுகிறது – தமிழைக் கொன்று, கலாச்சாரத்தையும் கொன்று, அது தன் விளம்பரதாரர் உதவியோடு, தின்று கொழுத்து ஏப்பம் விடுவதற்குள்.

நன்றி: “கீலுங்க..கீலுங்க… கீத்துக்கிட்டே இருங்க?”, தலையங்கம் (ஆசிரியர் குழு), புதிய புத்தகம் பேசுது, செப்டம்பர் 2008.

கருத்துக்கள்-7: "புத்தகமும் மனிதனும்" – பழநிபாரதி

ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது ஒரு விலக்கு ஏற்றப்படுகிறது. ஒரு புத்தகத்தைத் திறக்கிறபோது ஒரு கதவு திறக்கப்படுகிறது. புத்தகம் தமிழ்ச்சொல்தான் என்கிறார் பாவாணர் என்றாலும், அதற்கு ‘நூல்’ என்று பெயர் வைத்த நுண்ணறிவுள்ள நம் முன்னவனை வணங்க வேண்டும். நூல் நம்மோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் உயரத்தையும், அகலத்தையும் நூல்தான் அளந்திருக்கிறது. இன்றைக்கும் காட்டப்படும் சுவர்களின் நேர்மட்டம் பார்க்க தொழிலாளர்களின் கையில் நூல்மட்டம் இருக்கிறது. நூல்தான் ஒரு காகிதத்தை பட்டமாக்கி வானத்தில் ஏற்றிவிட்டு மண்ணுக்கும் வின்னுக்குமான தொடர்பு அறுந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறது. நூல்தான் எந்த ஒன்றையும் கட்டிவைக்கிறது. நூல்தான் கிழிசல்களைத் தைக்கிறது.

நூகப்படும் நூல் நிகழ்த்துகிற இந்த எல்லாச் செயல்களையும், மனிதனால் கற்கப்படும் நூலும், அவனுக்குள் நிகழ்த்துகிறது. அதனால்தான் ‘புத்தகத்தைத் தொடுபவன் அதன் மூலம் மனிதனைத் டுபவனாகிறான்’ என்கிறான் வால்ட் விட்மன்.

நன்றி: ‘ஒவ்வொரு புத்தகமும் ஒரு மனிதன், ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகம்” – பழநிபாரதி, நியூ செஞ்சுரியின் “உங்கள் நூலகம்”, ஜூலை-ஆகஸ்ட் 2006.

கருத்துக்கள்-6:

இந்தியாவில் பாலுறவுக் குற்றங்களுக்குத் தீனி போடும் வண்ணம் படங்களையும், கதைகளையும், வியாபார நோக்கில் வெளியிடும் பத்திரிகை, திரைப்பட, தொலைகாட்சி அதிபர்களையும் நெறிக்குள் கொண்டுவருதல் வேண்டும்.முன்னாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் அவர்கள்
நன்றி: தினமலர், மதுரை, அக்டோபர் 13, 2008.

கருத்துக்கள்-5: "புகைப்பிடித்தல்"

நம்முடைய நாட்டில் சுமார் அறுபது கோடி இளைஞர்களில் பெரும்பாலனவர்களைச் சிகரெட் துர்ப்பாக்கியமான நிலைமைக்குத் தள்ளிவிடுகிறது. புற்றுநோய், நீரிழிவு நோய், நரம்புத் தளர்ச்சி, ஆண்மை இழப்பு என்று பலவிதமான நோய்கள் ஏற்பட சிகரெட்தான் காரணம். பொது இடங்களில் சிகிரெட் பிடிக்கத் தடை செய்யப்பட்டிருக்கும் உத்தரவை கொடுங்கோல் சட்டம் என்று கூறுகின்றனர். அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. இது போன்ற சட்டம் அயர்லாந்தில் அமலான ஒரே வருடத்தில் சுமார் நாற்பதாயிரம் பேர் சிகிரெட் பழக்கத்தைக் கைவிட்டனர். இதுபோல் நம்முடைய நாட்டில் நடந்தாலும் அது வெற்றிதான்.

- டாக்டர் அன்புமணி இராமதாஸ், ஜூனியர் விகடன், அக்டோபர் 8, 2008.

கருத்துக்கள்-4: "அரசியல் செருப்பு"

இன்று நாட்டிலும், உலகிலும் நிலவும் அரசியல், தலையில் தூக்கி வைத்துக் கொள்ளத்தக்கதாக இல்லை. மிக அதிகமாகப் போனால், காலில் போட்டுக் கொள்ளலாம். எனவே அதை எடுத்துக்கொண்டு, குருத்துவாராவிலும், சர்ச்சிலும், பள்ளிவாசலிலும், கோவிலிலும் நுழையாதீர்கள். அதை அங்கே எடுத்துச் சென்றால் இறைவனின் உறைவிடம், சாத்தானின் உரைவிடமாகிவிடும். – வினோபாஜி

‘கனவுச்சிப்பி’

‘கனவுச்சிப்பி’

* கனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது.
* கனவுகள், உற்சாகத்தின் ஊற்றுக் கண்கள். களைப்பும் சலிப்பும் அண்டவிடாமல், மனதைக் காக்கும் மந்திரத் திரைகள். “நடக்க முடியுமா”" என்று தவிக்கும் மனிதனுக்கு, “பறக்க முடியும் பார்” என்று சிறகுகளைப் பரிசளிப்பவை கனவுகள்.
* கனவுகள் வெற்றிக் கோலம் வரைவதற்காக வைக்கப்படுகிற புள்ளிகள். அவற்றை செயல் என்னும் கோடுகளால் சேர்ப்பவர்களே பெரும்புள்ளிகள். * கனவுகள் இலட்சியங்களாகலாம். இலட்சியங்கள், வெறும் கனவுகளாக விரயமாகி விடக்கூடாது.
* கனவாய் முளை விட்டு, முயற்சியில் துளிர்விட்டு, செயலாய் வேர்பிடிக்கும் விருட்சங்களே இலட்சியங்கள்.
* கனவென்னும் சிப்பிக்குள் கலையழகோடு கண் சிமிட்டுகிறது சாதனை என்னும் ஆணி முத்து. முயற்சியின் கடலுக்குள் மூழ்குங்கள், முத்தெடுங்கள்.

(‘மரபின் மைந்தன்’ ம.முத்தையாவின் “கனவுச் சிப்பியைத் திறந்து பார்” என்ற கட்டுரையிலிருந்து தேர்ந்த ஒரு பகுதி.)

“வெற்றிச் சிறகுகள் விரியட்டும்”
‘மரபின் மைந்தன்’ ம.முத்தையா
விஜயா பதிப்பகம், கோவை.
128 பக்கங்கள்
விலை: ரூபாய் முப்பத்தைந்து மட்டும்

கருத்துக்கள்-1:

கருத்துக்கள்-1:

முதலாளித்துவம் பெற்றுப்போட்டுள்ள நெறி கெட்ட பிள்ளைகள் உழலும், ஊதாரித்தனமும்பேராசிரியர் அருணன்

இன்றைய சிந்தனைக்கு-4: "இந்திய வளர்ச்சிக்கு சச்சின் டெண்டுல்கர் சொல்லும் வழி"

Follow

Get every new post delivered to your Inbox.