கேள்வியும் பதிலும்-23:

கம்ப்யூட்டர் மூலம் மாப்பிள்ளை பார்க்க முடியுமா? (எல்.மகாலட்சுமி, மானாமதுரை)
ஒரு பழைய ஜோக் நினைவுக்கு வருகிறது. “அழகாக இருக்க வேண்டும். ஆனால் அதிக உயரமாக இருக்கக் கூடாது. நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். குளிர் பிரதேசத்தில் வாழத்தயாராக இருக்கவேண்டும். கூட்டத்தில் ஒருவராக ஒத்துப் போகவேண்டும். எனக்கு ஒரு ஜோடி தேடிக்கொடு” என்று கம்ப்யூட்டரிடம் விண்ணப்பித்தான் ஒரு இளைஞன்.
சில நிமிடங்கள் யோசித்த கம்ப்யூட்டர் கேட்டது: “டால்ஃபினை கல்யாணம் பண்ணிகொள்ளத் தயாரா?” (தமிழன்)
நன்றி: தமிழன் கேள்வி-பதில், குங்குமம், 9.4.1999.

கேள்வியும் பதிலும்-22:

உண்மையான துறவி யார்? (பா.அச்சுதன், வயலூர்)
அரசியலில் ஊடுறுவாத, ஆடம்பர வாழ்க்கை வாழாத, கொழுத்த உடலைக் கொண்டிராத, மதஉணர்வுகளைத் தூண்டிவிடாதமக்களோடு மக்களாகக் கலந்து வாழும், தன்னையும் ஒரு கடவுளாக எண்ணிக்கொள்ளாத எளிய மனிதர். (அரசு பதில்)
நன்றி: குமுதம், அக்டோபர் 15, 2008.

கேள்வியும் பதிலும்-21:

விலங்குகளிடம் நீங்கள் பார்த்துப் பொறாமைப்படும் விஷயம்? (ஏ.ஜி.கல்யாணசுந்தரம், கோவை)
இரண்டு. தங்களுக்க நேரக்கூடிய ஆபத்தைப் பற்றி அவை கவலையே படுவதில்லை. தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. (அரசு பதில்)
நன்றி: குமுதம், அக்டோபர் 15, 2008 (“அரசு பதில்கள்”).

கேள்வியும் பதிலும்-20:

நம் தும்மலின் வேகத்தைக் கணக்கிட முடியுமா? (வி.சாமிநாதன், கோவை)
ஓ.. கணக்கெடுத்துள்ளனர்… மணிக்கு 160 கி.மீ. வேகமாம்! நமது வேகப்பந்து வீச்சாளர்கள், பந்தை வாயில் வைத்தபடியே தும்மினால் தூள் கிளப்பிவிடலாம்! ஆனால், ஒரு எச்சரிக்கை: தும்மும்போது, இதயத்தையும் சேர்த்து, உடல் உறுப்புகளெல்லாம் செயல் இழக்குமாம்… அடிக்கடி தும்மாதீங்க! (அந்துமணி)

நன்றி: “அந்துமணி பதில்கள்!”, தினமலர், வாரமலர், அக்டோபர் 5, 2008.

கேள்வியும் பதிலும்-19:

உலகத்திலேயே இன்று பெரும் பணக்காரர் யார்? (கே.கணேசன், சிதம்பரம்)
‘இருப்பதுவே போதும்’ என நினைப்பவர்கள். (அந்துமணி பதில்)

நன்றி: “அந்துமணி பதில்கள்!”, வாரமலர், தினமலர், செப்டம்பர் 7, 2008.

கேள்வியும் பதிலும்-18:

அவதாரம் என்பது என்ன?
ஓர் உடலின் மூலமாக தெய்வ உணர்வும், தெய்வ வியக்தியும் வெளிப்படுவதைத்தான் அவதாரம் என்கிறோம்.

கேள்வியும் பதிலும்-17:

பெரும்பாலும் ஒரு பெண் எதை விரும்புகிறாள்? (எஸ்.மகாலட்சுமி, வல்லக்கோட்டை)
மதிக்கப்படுவதை;
தனக்குள் இருக்கும் ஆளுமை ஆராதிக்கப்படுவதை;
நித்தம் நித்தம் நேசம் நிரூபிக்கப்படுவதை;
தன் பலவீனங்களைக் கண்டுகொள்ளாத கண்களை;
தன் பலத்தைக் கொண்டாடும் குணத்தை;
ஒலி உயராத குரலை;
நான் உனக்கு மட்டும்தான் என்னும் உயிரழுந்தும் ஸ்பரிசத்தை;
சபையில் கொடுக்கும் குரவம் தனிமையிலும் கொடுக்கப்படுவதை;
தாம்பத்யம் முடிந்த தருணங்களில் குளியல் அறைக்கு முதலில் நீ போ என்று வழங்கப்படும் முன்னுரிமையை. (கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்)

கேள்வியும் பதிலும்-15:

உங்களிடம் அமுதசுரபி கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அதிலிருந்து முதலில் ஒரு கிள்ளட்டினும், உன்னதமான தலைவனும் வரவேண்டுமென்று வேண்டிகொள்வேன். இரண்டும் கிடைத்துவிட்டால், அந்தத் தலைவனின் ஒரு கையில் கிள்ளட்டினையும், மறுகையில் அமுதசுரபியையும் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்வேன்; ஆட்டோமாட்டிக்காக இந்தியா உருப்பட்டுவிடும்.

நன்றி: “இளசிடம் ஒரு கேள்வி”, தமிழன் எக்ஸ்பிரஸ், மே 1, 2002.

கேள்வியும் பதிலும்-14:

1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்த 22 குழந்தைகளுக்கு முதல்வர் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அறிவித்துள்ளது பற்றி? – ஏ.முத்துலெட்சுமி, பெத்தானியாபுரம்)
காமத்துப் பாலெல்லாம் குழந்தைகளுக்கு எதற்கு? கண்மூடித்தனமாக எதையும் செய்யும்போது அது அர்த்தமிழக்கிறது. பத்து குறள் படித்தாலும் அதன்படி வாழக் கற்றுத்தருவதுதான் சிறந்த கல்வி, உருப்போட்டு ஒப்பிப்பது அல்ல!“நீங்கள் கேட்டவை” – பதில் – தராசு, கல்கி, ஜனவரி 16, 2000.
நன்றி: கல்கி, வார இதழ்.

கேள்வியும் பதிலும்-14: "வெற்றி பெறத் தேவையானது!"

வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையானது முயற்சியா? திறமையா? அதிருஷ்டமா? – எஸ்.ஜெயகாந்தன், பு.புளியம்பட்டி.

இருப்பது அதிருஷ்டம். இருப்பதைக் கண்டுபிடிப்பது திறமை. எடுத்துப் பயன்படுத்துவது முயற்சி. எனவே வாழ்க்கையில் வெற்றிபெற இவை மூன்றுமே தேவைதான். – தென்கச்சி கோ.சுவாமிநாதன்

நன்றி: மஞ்சரி, தமிழ் டைஜஸ்ட், ஜனவரி ௨00௨ ((“நேயர் கேள்விகள் – தென்கச்சி பதில்கள்”)

கேள்வியும் பதிலும்-13:

ஒரு மனிதனுக்கு துன்பம் எப்போது வருகிறது? – என்.ரகுபதி, கோவை

“அவன் பைக் வாங்கிட்டானே…. வீடு கட்டிட்டானே… அவனுக்கு கிளி போல பொண்டாட்டி அமைஞ்சிட்டாளே…” என எண்ணத் துவங்கும்போது பிறக்கிறது துன்பம்.”

“அந்துமணி பதில்கள்”, தினமலர், ஞாயிறு மலர், ஆகஸ்ட் 17, 2008.

நன்றி: அந்துமணி & தினமலர்.

கேள்வியும் பதிலும்-12:

எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் தைரியமாகச் செயல்பட ஒரு வழி சொல்லுங்களேன்… – என்.உஷாதேவி, மதுரை.

மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உடல் வலிமை இல்லையென்றால்கூடப் பரவாயில்லை. தைரியமான பெண் எனத் தெரிந்தால், எந்த ஆணும் தவறான கண்ணோட்டத்துடன் நெருங்க மாட்டான். இன்றுள்ள சட்டங்கள் பெண்களுக்கு மிக, மிகச் சாதகமாக உள்ளன.

- அந்துமணி பதில்கள், தினமலர் வாரமலர், ஆகஸ்ட் 24, 2008.

நன்றி: அந்துமணி & தினமலர்.

கேள்வியும் பதிலும்-11: "இலக்கியம் எப்படிப் பிறக்கிறது?"

இலக்கியம் எப்படிப் பிறக்கிறது?

வெற்றிடத்தில் உயிர்கள் ஜனிப்பதில்லை. இலக்கியமும் ஒருவகை உயிரினமே. அதுவும் ஒருவகைச் சமூகச்சூழலில்தான் பிறக்கிறது. சமூகமும் தனிமனிதனும் சேர்ந்து இயங்கி வெளிப்படுத்துகிற விசித்திர ஜனனம் அது! புறமும் அகமும் பொங்கியும் முயங்கியும் படைப்புத் தொழில் நடக்கிறது.பேராசிரியர் அருணன்

கேள்வியும் பதிலும்-10:

இந்தியாவுக்கு ஏன் எண்ணெய் வளத்தைத் தரவில்லை என்று கடவுள் பேரில் எனக்குக் கோபம் உண்டு என்கிறாரே, ப.சிதம்பரம்?(பழ.கவிதா சிவமணி, புன்செய் புளியம்பட்டி )

எண்ணெய் வளமே இல்லாத எத்தனையோ நாடுகள் பொருளாதார முன்னேற்றமும், ஸ்திரத்தன்மையும் கண்டுள்ளன. அவற்றில் உள்ளது போன்ற அரசாங்கங்களையும், அமைச்சர்களையும் தருமாறு நாம் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டியதுதான்.

நன்றி: கல்கி, ஜூன் 29, 2008 (நீங்கள் கேட்டவை – தராசு)

கேள்வியும் பதிலும்-9: "புதுக்கவிதை என்றால் என்ன?"

புதுக்கவிதை என்றால் என்ன?

கவிஞர் மு.மேத்தா

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவும்
இல்லாத -

கருத்துக்கள் தம்மைத்
தாமே ஆளக்
கற்றுக் கொண்ட

புதிய
மக்களாட்சி முறையே
புதுக்கவிதை!

கவிஞர் மு.மேத்தாவின் கவிதை, ‘கேளுங்கள் கொடுக்கப்படுமிலிருந்து’

“ஊர்வலம்”
கவிஞர் மு.மேத்தா
திருமகள் நிலையம்
55, வெங்கட் நாராயணா ரோடு
தி.நகர்
சென்னை-600017

கேள்வியும் பதிலும்-8: "எது கவிதை? – வலம்புரி ஜான்"

எது கவிதை? – வலம்புரி ஜான்

கனிக்குள்ளே
கண்ணுறங்கும் விதை!
விதைக்குள்ளே
விழித்திருக்கும் மரம்!
கூட்டுக்குள்
குறுகுறுக்கும் உயிர்ப் பறவை!
உயிர்ப் பறவை உள்ளுக்குள்
ஒளிந்திருக்கும் ஓசை!

வலம்புரி ஜானின் ‘நினைத்தால் வருவதல்ல கவிதையிலிருந்து”

ஒரு நதி குளிக்கப் போகிறது’
வலம்புரி ஜான்
அபிராமி பப்ளிகேஷன்ஸ்
307, லிங்கி செட்டி தெரு
சென்னை-600001

கேள்வியும் பதிலும்-7: "எது கவிதை? – கண்ணதாசன்"

எது கவிதை? – கண்ணதாசன்

“கவிதை என்பது உணர்ச்சியின் பிரவாகம்”. கட்டவிழ்ந்து துள்ளிவரும் சிந்தனைகள், சொற்கோலமாக விழுவதே கவிதை. உரைநடைக்கும், கவிதைக்கும் உள்ள வேறுபாடு, உரைநடை ஆற்று நடையாகவும், கவிதை அருவி நடையாகவும் வருவதுதான். கவிதையின் தனிச் சிறப்பு, தாளமும், சந்தமும் நிறைந்திருப்பதுதான்.

கவிஞர் வைரமுத்துவின் “வைகறை மேகங்களுக்கு” கண்ணதாசனின் அணிந்துரையிலிருந்து

கேள்வியும் பதிலும்-6: "எப்போது?"

கல்வி கல்லாதிருப்பது நல்லது, எப்போது? கற்றும் அறிவில்லாதபோது.
எதுவும் எழுதாதிருப்பது நல்லது, எப்போது? எழுதியபடி ஒழுக இயலாத போது.
ஒன்றும் பேசாமல் இருப்பது நல்லது, எப்போது? பேசியபடி நடக்க இயலாதபோது.
சுதந்திரம் பெறாமலிருப்பது நல்லது, எப்போது? பெற்றும் வாழ முயலாத போது.

“அறிவுக்கு உணவு” – கி.ஆ.பெ. விசுவநாதம்

கேள்வியும் பதிலும்-5: "எது அழகு?"

எது அழகு?

பயிர்களைச் சுமந்து நிற்கும் நிலம் அழகு.
தாமரையைச் சுமந்து நிற்கும் குளம் அழகு.
நாணத்தை சுமந்து நிற்கும் பெண் அழகு.
நல்லறத்தைச் சுமந்து நிற்கும் ஆண் அழகு.

இப்படி நான்மணிக்கடிகை சொல்கிறது.

கேள்வி : தேன்மொழி இளங்கோ, ஸ்ரீரங்கம்
பதில்: தாம்பிரபரணி, கலைமகள், அக்டோபர் 2000

கேள்வியும் பதிலும்-4: "எது என் கவிதை? கவிஞர் மு.மேத்தா"

கேள்வியும் பதிலும்-3: "தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி?"

கேள்வியும் பதிலும்-2: "வைரமுத்துவிடம் ஒரு கேள்வி!"

கேள்வியும் பதிலும்-1: "சுஜாதாவிடம் ஒரு கேள்வி!"

Follow

Get every new post delivered to your Inbox.