உச்சிக்கு உயர்த்துங்கள்! – கி.கஸ்தூரிரங்கன்

ஒவ்வொரு தெருக்கொடியிலும் தொலைபேசி நிலையங்கள் முளைத்திருப்பதற்குக் காரணமானவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன். செயற்கைக்கோள் படங்களுடன், வானிலை அறிக்கைகள் வெளியாவதற்கும் இவர்தான் காரணம். 38 ஆயிரம் கி.மீ. உயரத்தில் இந்திய செயற்கைக்கோள் நிலைபெற்றதும் இவரால்தான்.

நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் பிறந்தது கேரள மாநிலம், எர்ணாகுளத்தில். மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம். விண்வெளியியல் மற்றும் விண்வெளி இயற்பியலில் பிஎச்.டி. பட்டம். பின்னர் இந்திய விண்வெளித்துறையில் சேர்ந்து, இந்திய தேசிய செயற்கைக்கோள்கள் (ஐ.ஆர்.எஸ். வகை செயற்கைக்கோள்கள்), பாஸ்கரா செயற்கைக்கோள்கள், துருவ செயற்கைக்கோள் ஏவு வாகனம் (பி எஸ் எல் வி) என இந்தியாவின் புகழை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பணியில் பங்கேற்பு. அடுத்து இந்திய விண்வெளித் துறைத் தலைவர் பொறுப்பு. இப்படி சாதனைமேல் சாதனை நிகழ்த்தியவர்.

சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது, ஸ்ரீ ஹரி ஒம் ஆஷ்ரம் டாக்டர் விக்ரம் சாராபாய் விருது, எம்.பி.பிர்லா விருது என இவர் பெற்ற விருதுகள் நட்சத்திர எண்ணிக்கையை நீள்கின்றன.

சாதனை-3: "நீதிச்சாமி"

சேவைச்சாமி இந்த ராமசாமி! உதவும் கைகளே கோயில், எதிர்பார்ப்பு இல்லா இதயமே தெய்வம் என்பதற்கு ராமசாமி நடமாடும் உதாரணம். சென்னை சாலைகள் நீள அகலங்கள் இவருக்கு அத்துபடி. தினம் தினம் எந்த லாபமும் பாராமல் அவராகவே ஏதேனும் சாலையில் வந்து நின்று டிராஃபிக்கைச் சரி செய்வதால் இவருக்குப் பெயரே டிராஃபிக் ராமசாமி. பொதுநல வழக்குகள் போடுவதில் புலி. சட்ட விதிமுறைகளை மீறி சென்னையில் காட்டப்படும் கட்டடங்களை வழக்குத் தொடுத்து இடித்துக் காட்டியவர். கண்முன் என்ன தவறு நடந்தாலும் பயப்படாமல் துணிந்து நீதிமன்றம் ஏறும் இவர் வக்கீல் வைக்காமல் தானே வாதாடிக் கொள்வார். அப்படி இவர் கோர்ட் ஏறி கொண்டுவந்த வெற்றிகள் பல. எந்த சன்மானமும் வாங்காது, சமூகப் பணிகளை தொடர்ந்து வருகிற ராமசாமி, நாம் படிக்க வேண்டிய பல்கலைக்கழகம்!

நன்றி: ஆனந்த விகடன், டிசம்பர் 27, 2006, வெல்கம் 2007 சிறப்பிதழ்.

புத்தகம் என்ன செய்யும்?

ராலேகான் சித்தி, மகாரஷ்ட்ரத்தின் அகமது நகர் மாவட்டத்திலுள்ள வறண்ட கிராமங்களில் ஒன்று. மொத்தக் கிராமத்திலும் ஐந்நூறு ஏக்கர் நிலம்தான் பாசன வசதியுள்ள நிலம். எஞ்சியவை வானம் பார்த்தவை. அதனால், கள்ளச்சாராயம் காய்ச்சுவதே முக்கிய தொழிலாகிவிட்டது அக்கிராமத்துக்கு. மழை பெய்யும் காலம் தவிர மீதி காலங்களில் ஆறு முதல் ஏழு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால்தான் குடிநீர் கிடைக்கும் என்றநிலை. ஆனால் இதெல்லாம் 1975க்கு முன் இருந்த நிலைமை. இன்று சென்னைக்கு வெங்காயத்தையும், வளைகுடா நாடுகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளையும் ஏற்றுமதி செய்யும் கிராமமாகிவிட்டது ராலேகான் சித்தி. இந்த மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வித்திட்டவர் அண்ணா ஹசாரே. அண்ணா சாரே ஒரு முறை தில்லி ரயில் நிலையப் புத்தகக் கடையில் விவேகானந்தரின் நூலொன்றை வாங்கிப் படித்தார். மக்களுக்குச் சேவை செய்வதே பிறப்பின் கடமை என்பது விவேகானந்தரின் போதனையால் அவருக்குப் புரிந்தது.

எட்டாம் வகுப்பைக்கூட எட்டாத அண்ணா ஹசாரே நாட்டுப்புற வளர்ச்சியில் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தார். அவரை இந்தச் சேவையில் ஈடுபடுத்தியது ஒரு புத்தகம்தான் என்பதை அறியும்போதுதான் புத்தகங்களின் தாக்கம் நமக்குப் புரிகிறது.

நன்றி: தினமணி, தமிழ் நாளிதழ்.

சாதனை:

நாற்பத்தாறு வயதாகும் கெல்லி பெர்க்கின்ஸ் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். மலையேறுவதில் ஆர்வம் கொண்ட இப்பெண்மணி, இருதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னும் பல மலைகளில் ஏறிச் சாதனைகள் புரிந்துள்ளார். கலிபோர்னியாவின் மவுண்ட் விட்னி, சுவிட்சர்லாந்தின் மேட்டர்ஹான், ஜப்பானின் மவுண்ட் ப்யூஜி, தான்சானியாவின் மவுண்ட் கிளிமாஞ்சரோ மற்றும் யோஸ்மைட் தேசியப் பூங்காவிலுள்ள இரண்டாயிரம் அடி உயரமான செங்குத்தான பாறை இவற்றிலெல்லாம் ஏறிச் சாதனை புரிந்துள்ளார். மாற்று இருதயத்துடன் மலை ஏற்றச் சாதனை புரிந்த இம்முதல் பெண்மணியின் துணிச்சலும், தன்னம்பிக்கையும் போற்றத்தக்கது.

Follow

Get every new post delivered to your Inbox.