நெல்லையப்பன் கவிதைகள்-40: "பக்கத்து வீட்டுக்காரர்"

நம் வீட்டு “இந்து” பேப்பர்
நமக்கு முன் படித்துவிடுவார்;
நமது வீட்டு டெலிபோன் நம்பர்
அவரது விசிட்டிங் கார்டில்;

எதிர்வீட்டு கரண்ட் பில் கட்ட
நமது வாஹனத்தில் விரையும்
நல்ல சமூக சேவகர்;
இரவல் வாங்கியதை மறக்கும்
செலக்டிவ் அம்னீஷியாக்காரர்;

மாதம் ஒரு காரணம் சொல்லி
நிதிவசூல் செய்யும்
நிகரற்ற நன்கொடை நாயகன்;
பெண்கல்வியை மதித்து
அவர் பெண் படிப்பிற்காக,
நம் வீட்டில் டி.வி. பார்ப்பார்;

உரிமையோடு “காபி” குடித்து,
கைப்பக்குவம் சிலாகிக்கும்
மனோதத்துவ நிபுணர்;
சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர் -
நான்கு பக்கமும்
பக்கத்து வீடுகள் இருக்கின்றதே!

நெல்லையப்பன் கவிதைகள்-39: "தகுதிகள்"

பலமுறை
விளம்பரம் செய்தும்,
நேர்முகத் தேர்வுக்கு
அனைவரையும் அழைத்தும்,
பத்து இடங்களுக்கு
ஆயிரம் பேரை பரிசோதித்தும்,
ஆறு இடங்களுக்கே
ஆட்கள் கிடைத்தார்கள்!

எந்த ஒரு வேலைக்கும்
தகுதியில்லாமல் இளைஞர்களை ,
தயாரிக்கும் சேவையினை,
தப்பாமல் செய்வது
நம் பல்கலைக்கழகங்கள்.

வெள்ளைக்காரர்களை
விரட்டிவிட்டு,
மெக்காலே பிரபுவின்
கல்வியை மட்டும்
பிடித்துக் கொண்டோம்.

உதவியாளர்களை மட்டும்
உற்பத்தி செய்ய
உருவான திட்டம்
வேறெப்படி இருக்கும்?

தெரியாத மொழியில்
புரியாத பாடத்தை,
பிடிக்காத ஒருவர்
விருப்பமின்றி நடத்த,
மாணவர்களின் கதி?

இங்கிருப்பது
வேலையில்லாத்
திண்டாட்டமல்ல ;
வேலைக்குத்
தகுதி இல்லாதவர்களின்
திண்டாட்டம்தான்!

நெல்லையப்பன் கவிதைகள்-38: "யோகிக்கு வெகு அருகில்"

“நான்” அழிந்தால்தான்
ஏந்த முடியும் கையை;
பெயர் தொலைத்தால்தான்
எடுக்க முடியும் பிச்சை.

குடும்பம் விட்டு,
உற்றார் உறவினர் மறந்து,
ஒரு யோகிக்கு வெகு அருகில்
வருபவர்கள் பிச்சைக்காரர்கள்;
அழுக்கு மட்டுமே இவர்களை
அந்நியப்படுத்துகிறது;
வயிறும் வகை பிரிகின்றது.

ஒருவகையில் இவர்கள்
“அந்தக் கணத்தில்” வாழும்
ஜென் துறவிகள்;
கடந்த, எதிர் காலங்களைக்
கடந்தவர்கள்.

வினைப்பயனை
இந்த ஜென்மத்திலேயே
அனுபவிப்பவர்களை
அவமதிக்காதீர்கள்.

“பிச்சை போடாதீர்கள்”
என்பது
ஒரு விபரீதமான பகுத்தறிவு;
இவர்களின் இருப்பிற்கு
வெட்கித் தலைகுனிய
வேண்டும் நாம்.

இவர்களுக்கு உதவி,
மனிதநேயத்தை
தக்கவைத்துக்கொள்ள
வாய்ப்பளித்தமைக்கு
நன்றி சொல்வோம் நாம்.

நெல்லையப்பன் கவிதைகள்-37: "ராமர் பாலம்"

அறையை
சுத்தம் செய்யும்போது
நான் தூக்கி எறிய இருந்த
அந்தப் பழைய துணியை,
தாத்தாவின் அண்டர்வேர் என்று
பிடுங்கி வைத்தான் நண்பன்.

அது எதுக்குடா?
அசிங்கமா,
இடைஞ்சலாத் தொங்குது;
காயப்போட இடம் வேண்டும்
என நான் சப்தமிட,
தாத்தாவின் ஞாபகச் சின்னமது
என்றான் நண்பன் பிடிவாதமாக.

தாத்தாவின் ஞாபகமாக
அவர் எழுதியவைகளைப்
படிக்கலாம், பதிப்பிக்கலாம்,
படித்தபடி நடக்கலாம்;
அதையெல்லாம் விட்டுவிட்டு,
அன்டர்வேரை வைத்து
இதென்ன மூட நம்பிக்கை?

என் நம்பிக்கைகளோடு
விளையாடாதே,
அது பாட்டுக்குத் தொங்கட்டும்;
இத்தனூண்டு இடத்தில்
கப்பலா விடப்போகிறாய்
என நண்பன் கடுப்படிக்க,

உன் தாத்தா காலத்தில்
அன்டர்வேரே கிடையாதே
என புதிதாய் நான் கொடிபிடிக்க,
சண்டை இன்னும் முடியவில்லை.
நீங்களாவது தீர்ப்புச் சொல்லுங்க!

நெல்லையப்பன் கவிதைகள்-36: "வறுமைக்கோடு"

தலையெழுத்தையும்
வறுமைக்கோட்டையும்
உழைப்பால் விளைந்த
வியர்வை அழித்துவிடாதா?

அழிக்க முடியாதென்பதற்கு
வறுமைக்கோடு ஒன்றும்
உள்ளங்கை ரேகையல்ல;
ரேகை தேய உழைப்பவனின்
தலைக்குமேல் ஒருபோதும்
வட்டமடிக்காது வறுமைக்கோடு;

மீறக்கூடாதென்பதற்கு
வறுமைக்கோடு ஒன்றும்
இலட்சுமணக் கோடல்ல;
உழைக்க விரும்பும்
வறியவனுக்கு வாய்ப்பாக
வேலை கொடுத்தால்
காலுக்கடியில் மிதிக்கலாம்
எந்த வறுமைக்கோட்டையும்.

அறுபது ஆண்டுகள்
முடிந்த பின்னும்
நாட்டின் எல்லைக்கோட்டைத்
தாண்டவில்லையே வறுமைக்கோடு!

அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி
தன் சட்டைக்கு
கஞ்சியாய்ப்போட்டு
விறைப்பாக நடப்பவன்
இருக்கும் வரை
என்றும் இருக்கும்
நாட்டில் வறுமை.

நெல்லையப்பன் கவிதைகள்-35: "சிதைக்கவா, செதுக்கவா?"

பீடி வளிக்கலாம்
சிகரெட் புகைக்கலாம்
கஞ்சா அடிக்கலாம்
செல் பேசலாம்
ஒருபால் உறவு கொள்ளலாம்
பணம் இருந்தால் செய்யலாம்,
இவை அத்தனையும்.

குழம்ப வேண்டாம்
எங்கே என்று.
அதுதான் நம்
மத்திய சிறைச்சாலை!

சிறைச்சாலை
வருத்தவா? திருத்தவா?
பள்ளிக்கூடம்தான்!
படிப்பினை என்ன?

அம்மணப்படுத்தி
ஆளுமை சிதைத்து
மொட்டையடித்து
விகாரமாக்கி
ஒரு தப்பு செய்து மாட்டி
உள்ளே வந்தவனை,
பலவகை தப்பு
செய்தவருடன் பழகவிட்டு
தவறுகள் பல செய்ய
தயாரித்து
வெளியேவிடவா சிறைச்சாலை?

சிறைச்சாலையும்
தவச்சாலையாகலாம்,
இலக்கு என்ன
என்ற தெளிவு பிறந்தால்!

நெல்லையப்பன் கவிதைகள்-34: "அமாவாசைச் சந்திரன்"

தொப்பை இல்லா போலீஸ்
சொத்து இல்லா மந்திரி
அரியர் இல்லா மாணவன்
மீசை இல்லா தாதா
தண்ணி இல்லா பால்
வன்முறை இல்லா சினிமா
வசூல் இல்லா கட்சி
குழி இல்லா ரோடு
ஜாதி இல்லா அரசியல்
படபடப்பு இல்லா முதலிரவு
வரிகட்டும் வியாபாரி
ரேஷன் கடை எடை
நேரத்தில் வரும் ரயில்
தமிழ் பேசும் நடிகை
சிந்திக்க வைக்கும் சீரியல்
ஜி-எச் சுத்தம்
போட்ட பட்ஜெட்டில் புதுவீடு
அறிவித்த நேரத்தில்
கட்சிப் பொதுக்கூட்டம்
லாபம் தரும் இலக்கிய இதழ்
கவிஞர்களுக்குள் ஒற்றுமை.

நெல்லையப்பன் கவிதைகள்-33: "மின்சார வட்டி"

“ஆயிரம் ரூபா
ராத்திரி எட்டு மணிக்குள்ள
கரக்டா கட்டலேன்னு வையி,
மவனே, ஒம் பொண்டாட்டிய
ஒட்டிக்கினு வந்து விட்டுடு” -
அதிகாலை ஐந்து மணிக்கு
வசைபாடியவரை
வணங்கி நின்று,
நூறுரூபா பிடித்துக்கொண்டு,
அவர் கொடுத்த
தொள்ளாயிரம் ரூபாயில்,
முதலில் சூடான உயிர்த் திரவம்
டீக்கடையில் அருந்திவிட்டு,
தள்ளுவண்டியின் சக்கரங்களுக்கு
மூச்சு வாங்க காற்று அடித்து,
விடியுமுன்னே மார்க்கெட்டுக்கு ஓடி,
நான்கு கூடை ஆப்பிள்களை
பேரம்பேசி வாங்கி,
தெருத் தெருவாகக் கூவி விற்று
மொத்த வெயிலையும் தலையில் வாங்கி,
ஐம்பது பைசா இட்லி பத்தும்,
பிறகு கதம்ப சாதமும் சாப்பிட்டு,
ஏட்டையாவுக்கு ஆப்பிள் கொடுத்து,
இரவு ஏழு மணிக்கு விற்றுமுடித்து,
அவசரமாக ஆயிரம் ரூபாயை
முதாளியிடம் கட்டிவிட்டு,
வீடுநோக்கி நடந்தவனிடம் மிஞ்சியது:
இருபது சில்லரையும்,
அடிபட்ட ஆப்பிள்கள் நான்கும்.

நெல்லையப்பன் கவிதைகள்-32: "தவறும் நீதி"

வாரம் என்றால் ஏழு நாள்
மாதம் என்றால் அதிக பட்சம்
முப்பத்தியொரு நாள்.
வயிற்றில் குழந்தை என்றால்
இருநூற்றெழுபது நாள்.
கோர்ட்டில் வழக்கேன்றால்
எத்தனை நாள்?

அறுப்பு முடித்தால்
கடன் அடைக்கலாம்.
வீட்டை விற்றால்
மகள் திருமணம் நடத்தலாம்.
மாட்டை விற்றால்
பேறுகாலம் பார்க்கலாம்.
எவற்றையெல்லாம் விற்றால்
வழக்கை முடிக்கலாம்?

தாமதமாக வரும் நீதி
தவறிய நீதிதானே!
வழக்காட
இல்லை பணம்
என்றால்
தோற்றுப்போகுமா நீதி?

எத்தனை காலியிடங்கள்
நீதிபதி பதவிகளுக்கு!
நீதிபதி நியமனங்களை
விரைவு படுத்தவேண்டி
எந்தக் கோர்ட்டில்
வழக்குத் தொடுப்பது?
அந்த வழக்கும்
எப்போது முடியும்?

நெல்லையப்பன் கவிதைகள்-31: "துண்டு"

உழைப்பவனுக்கு முண்டாசு
சுமப்பவனுக்கு சும்மாடு
மலையாள மங்கைக்கு மாராப்பு
அரசியல் அன்பர்க்கு தோள(ழ)ன்.

பாகவதருக்கு அங்கவஸ்திரம்
மேடையில் பொன்னாடை
பிடிபட்ட திருடனுக்கு கைவிலங்கு
வியர்த்துக் களைத்தவனுக்கு விசிறி.

வெயிலில் நடப்பவனுக்குக் குடை
துயில்பவனுக்குத் தலையணை
நழுவ நினைப்பவனுக்குத் திரை
இளைப்பாருபவனுக்கு விரிப்பு.

இல்லாதவனுக்கு அதுவே வேட்டி
குளிரில் நடுங்குபவனுக்குப் போர்வை
குளிக்கும்போது பலருக்குக் கோவணம்
மீன்பிடிக்கும் சிலருக்கு வலை

வல்லவன் கைகளில் ஆயுதம்
பணிவைக்க் காட்டும் இடையணி
பசியடங்கக் கட்டும் ஈரத்துணி
பட்ஜெட்டில் இருக்கும் இடைவெளி

நிறமும், கரையும், நீளமும்
இனத்தை அடையாளம் காட்டும் சின்னம்,
இத்தனூண்டு துண்டிற்கு
இத்தனை பரிமானங்களா!

துண்டுபோட்டு தாண்டிச் சொல்கிறேன்:
தொழில் துண்டுபோட்டு ஏய்ப்பவர்களை,
கழுத்தில் துண்டைப்போட்டு, மக்கள்
கேள்வி கேட்கும் காலம் வரும்!

நெல்லையப்பன் கவிதைகள்-30: "புகைவண்டி"

கரியிலிருந்து
டீசலுக்கு மாறி
புகையில்லா வண்டியானது
புகை வண்டி.

அன்று
கோத்ராவில்
மறுபடியும்
புகைவண்டியானது.

பிறிதொரு முறை
பாகிஸ்தான் போகும் வழியில்
வெடித்துச் சிதறியபோது
புகைவண்டியானது.

முன்பு
தேசப் பிரிவினையின்
சிதறிய ரத்தத்தில்
கறை வண்டியானது.

மதங்களுக்கிடையே
புகையாமலிருந்தால்
தொடர்வண்டி எப்பொழுதும்
புகையா வண்டியாய்த் தொடரும்.

நெல்லையப்பன் கவிதைகள்-29: "முதலும், முடிவும்"

வியாபாரம் சரியில்லையென
ஒன்றுவிட்ட சித்தப்பா பையன்
மாற்றியமைத்தான் வாசலை;
தொட்டி வைத்தான் மூலையில்;
திசை மாற்றினான் நாற்காலியை.
ஒரு எழுத்தைச் சேர்த்தான் பெயரில்
கையெழுத்தைப்போட்டான் தமிழில்.
தொட்டியில் விட்டான் சீன மீன்களை.
வாசலில் வைத்தான் சிரிக்கும் புத்தரை.
ஆண்டுகள் இரண்டு முடிந்தபின்,
செல்வத்தில் மிதந்த தம்பியை
எப்படி இந்த மாற்றமெனக் கேட்க,
வியாபாரத்தை இழுத்து மூடி
வெகுநாளாச்சு என்றவன்
நீட்டிய விசிட்டிங் கார்டு
“வாஸ்து நிபுணர்” என்றது.

நெல்லையப்பன் கவிதைகள்-28: "மண்ணின் மைந்தர்கள்"

அவரைத் தாக்கரே,
இவரைத் தாக்கரே -
மும்பை மாநகர
மண்ணின் மைந்தர்காள்!
உங்கள் தினவெடுக்கும்
தோள் வலிமை
வடமாநிலத்து
கோதுமை தந்தது.

வானளாவ உயர்ந்த
வலிமையான கட்டிடத்தில்
தெளிக்கப்பட்டிருக்கிறது
தென்னிந்திய வியர்வை!

மும்பைவரும் லாரிகள்
முடக்கப்பட்டால் -
சாப்பிட உணவின்றி
மராட்டியன் மராட்டியனை
சாப்பிடவேண்டியதுதான்!

மண்ணின் மைந்தர்கள்
மறந்துவிட்ட ஒரு விஷயம்,
மராட்டியம் இருப்பது
இந்தியாவில் என்பதை.

இந்தியனாய் இல்லாமல்
மண்ணின் மைந்தனாய்
மாறிப்போனவர்களே!
எப்போது மனிதனாக
மாறப்போகிறீர்கள்?

நெல்லையப்பன் கவிதைகள்-27: "வாக்காளப் பெருமக்கள்"

அதைத் தருகிறேன்
இதைத் தருகிறேன்
ஓட்டுப்போடென்று
அனைத்து வேட்பாளர்களும்
வாக்களித்துவிட்டு,
ஒட்டுப்போடுபவனைப் பார்த்து
“வாக்காளன்” என்பது
என்ன நியாயம்?

அவர்களெல்லாம்,
தவறுவதற்காகவே
வாக்குறுதிகளைத்
தருவதினாலே,
மக்களை வாக்காளர்களென்று
ஏமாற்றுகிறார்களா?

ஓட்டுப்போடும்
ஒருநாள்
தலைவர்கள்
தலையெழுத்தை
தாங்களே எழுதட்டும்
என வாய்ப்புக் கொடுத்தாலும்
தப்புப் தப்பாய்
எழுதித் தவிப்பவர்கள்

தானே தன் தலையில்
மண்ணை வாரிப்போட்டு,
தலை சொரிந்துகொள்ள
எரியும் கொள்ளியில்
நல்ல கொள்ளியை
தேர்ந்தெடுப்பவர்கள்;
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை
ஏய்ப்பவர்களுக்கு என்ன குறை?

நெல்லையப்பன் கவிதைகள்-26: "விடியல்"

மாலையா
மலர்ச்சரமா
மலர் வளையமா
அர்ச்சனை உதிரியா
உதிரும் சருகா -
சேருமிடம்
எதுவானாலும்
மலரின் காத்திருத்தல்
ஓரிரு நாட்களே!
மலரினும் மெல்லிய
மங்கையர்க்கு?

மரணத்தைப் போலவே
மணநாளும் தெரியாமல்
எத்தனை நாள் காத்திருக்க?
முதலாவது நிச்சயம் வரும்
என்றாவது ஒரு நாள்.
இரண்டாவது
வருமா, வராதா?

இத்தனை வயதிற்குள்
காத்திருக்கும் கன்னியர்க்கு
மணம் முடிக்க வேண்டுமென
அவசரச் சட்டம் வராதா?
அரசே நடத்த முடியாதா?

அவசரம் எனக்கில்லை,
இளைய மகள் நான்.
அக்காக்கள் இருவர்
அவர்களுக்கு விடியட்டும்!

நெல்லையப்பன் கவிதைகள்-25: "மகளிர் மட்டும்"

மகளிர் பள்ளி
மகளிர் கல்லூரி
மகளிர் மட்டும் பஸ்
மகளிர் விடுதி
என்றெல்லாம் பெண்களைத்
தனிமைப்படுத்தி,
தயார்ப்படுத்தி,
மணமுடித்து வைக்க -

ஆணைப் புரியாமல்
பெண்ணும்,
பெண்ணை பிரமிப்பாகப்
பார்க்கும் ஆணும்,
எதிர்பார்ப்புகள் வெவ்வேறாய்,
சிக்கலுடன்
தொடங்கும் வாழ்க்கை!

பெண்களை
இயல்பாய் பார்க்க ஆணும்,
ஆண்களுடன்
நட்புடன் பழக பெண்ணும்,
வாய்ப்பற்று இருப்பது
சிக்கல்களின் தொடக்கம்.

விலங்குகளும், பறவைகளும்
பால்பேதம் பார்ப்பதில்லை!
குழந்தைகளாக வளர்க்காமல்,
ஆண், பெண் என்று
ஆரம்பம் முதல் வளர்த்ததாலே,
உறவுச் சிக்கல்கள்;
பணியிடத்தில் குழப்பங்களை.

பணியில் தொடங்கி,
பாராளுமன்றம் வரை
வந்துவிட்டபின்
பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல,
காவல் நிலையத்திலும்
தேவையில்லை,
மகளிர் மட்டும்.

நெல்லையப்பன் கவிதைகள்-24: "அடம் பிடிக்கும் மனசு"

குளக்கரையில்,
வெளி மண்டபத்தில்,
புறச்சாலையில்,
புளிய மரத்தடியில்
ஆட்களே இல்லாத
புகைரத நிலையத்தில்,
இருபத்தைந்தாண்டுகள்
பின்னோக்கி ஓடி,
அமர்ந்து, வர மறுத்து
அடம் பிடிக்கும் மனசு.

பதினாறு மணி நேரம்
பயணப்பட வேண்டும்;
செய்யாது விட்ட
இரண்டு நாள் வேலைகள்
வரிசைகட்டி நிற்கும்;

வந்தாச்சு, பார்த்தாச்சு,
வாங்கிக்கொடுத்தாச்சு,
அம்மாவின் தேவையெல்லாம்.

கிளம்பலாமென்றால்,
கண்கள் ஒரு புறமும்,
கால்கள் மறுபுறமும் இழுக்க,
இரண்டிற்கும் இடையே
அலைபாயும் மனசு.

நெல்லையப்பன் கவிதைகள்-23: "அரசு இயந்திரம்"

வரன் வராதா கைப்பிடிக்க
எனக் காத்திருக்கும் பெண் போல்,
ஆறு மாத காலமாய்
சுனாமி பாதித்த மீனவரின்
கால்படாதா என்று
காத்துக்கிடக்கின்றன
மீன்வளத்துறை கிடங்கில்
மிதிவண்டிகள் ஆறாயிரம்.

அது என்ன
சொல்லிவைத்த மாதிரி
அரசு வழங்கும்
இலவசங்கள் அனைத்தும்
உரியவரிடம், உரிய நேரத்தில்
ஏன் சேருவதில்லை?

கடற்கரை ஈரக்காற்றும் தன்
வேலையைத் தொடங்கியாச்சு
சராசரி இந்தியனின்
மூளையைப் போல
உபயோகிக்காமலேயே
துருப்பிடிக்கத் தொடங்கியாச்சு

தானமாய் வந்த மிதிவண்டிகள்.

இழவு வீட்டிலும் திருடும்
இந்தியக் குடிமகன்கள் சிலர்
இதிலும் கைவச்சாச்சு
வீனாகப்போவது
வண்டிகள் மட்டுமல்ல
சுனாமி துயர் துடைக்க
வாரி வழங்கியவர்களின்
வியர்வையும் அப்போய்.

நெல்லையப்பன் கவிதைகள்-22: "மொழி"

மொழி –
முதலில்
ஊடகம், வாஹனம், சாதனம்;
அதற்கு உணர்வூட்டி,
உயிரூட்டி,
பிற மொழியினரின்
உயிரை எடுக்கலாமா?
தாய்மொழிக் கத்தியால்,
நிராயுதபாணிகளைக் கீறலாமா?

நெல்லையப்பன் கவிதைகள்-21: "மரம்"

புவியீர்ப்பை எதிர்த்து,
வான் நோக்கி வளரும்
உன் தன்னம்பிக்கை பிடிக்கும்;
காற்றுடன் கலந்து நீ
நகைப்பது பிடிக்கும்;
எனக்கும் மழையில்
நனைவது பிடிக்கும்;
உனக்குப் பிடித்த
பச்சை நிறம்,
எழுத்தில் தவிர
மற்றெல்லாவற்றிலும்,
எனக்கும் பிடிக்கும்;
பூ, காய், கனி வழங்கும்
உன் அருட்கொடை பிடிக்கும்;
பூமிக்கு நீ பிடிக்கும்
நிழற்குடை பிடிக்கும்;
வெளியே வளர,
உள்ளேயும் வளர வேண்டும் -
எனும் உன் வேர்களின் பாடம்,
வேதமாய்ப் பிடிக்கும்;
கனமான கட்டை,
நீரில் மிதக்கும்,
தத்துவம் பிடிக்கும்;
காணாமல்போன காற்றுக்கு,
ஆடாமல், அசையாமல்,
நீ மௌனமாகிவிட ,
உன் சோகம்,

என்னைப் பிடிக்கும்;
கட்டிலாகி, தொட்டிலாகி,
வீடாகி, விறகாகி, வீணையாகி,
இன்னும்,
தூணாகி, துடுப்பாகி, தோணியாகி,
மலராகி, காயாகி, கனியுமாகி,
புத்தனுக்கு ஞானம் தந்த
போதியுமாகி,
யாதுமாகி நிற்கும்
என் சக்தி நீயே!
நீருக்கான உன் தாகம்,
என் ஞானத் தேடலுக்கு வேண்டும்;
மனிதநேயம் போற்ற,
உன் மலரின் மென்மை,
என் மனதிற்கு வேண்டும்;
சிறுமைகண்டு பொங்க,
உன் வைரம்பாய்ந்த வலிமை,
என் தேகத்திற்கு வேண்டும்;
மரமே இல்லாது போனால்,
மனிதகுலம் மரித்துப் போகும்;
நட்டு வைப்போம்,
மரத்தையும், மனித நேயத்தையும் -
மண்ணிலும், மனத்திலும்!

நெல்லையப்பன் கவிதைகள்-20: "லாரி ஓட்டுனர்"

நான்கு சக்கரங்களை
ஒரு சக்கரத்தால்
ஆட்டுவிக்கும்
சக்கரவர்த்தி!

இவர் வாழ்க்கை
இவர் கையில்!
மூலக்கதையறிய
நதிமூலம், ரிஷிமூலம்
தேவையில்லை,
தொழில் மூலம் வந்ததது!

செல்லும் இடமெல்லாம்
பெண்கள் கிடைத்தாலும்
மணம் முடிக்க ஒரு பெண்
கிடைப்பதரிது!

நியாமாகப் பார்த்தால்
இன்சூரன்ஸ் பிரிமியத்தை
இவருக்காகக் கட்டவேண்டியது
ரோடு கான்ட்ராக்டர்கள்தான்!

லோடு ஏற்றிக்கொண்டு
கிளியுடன் வலம் வருவார்;
உஷாராக இல்லையென்றால்
தெருவில் நிற்க வேண்டியதுதான்!

பின்னாலும், உள்ளேயும்
சரக்கேற்றுவார்;
தண்ணியால்
கஷ்டப்படுவார்!

டீயும், டீசலும்
உயிர்த் திரவங்கள்;
ஒரு திரவத்தில்
சம்பாதித்ததை
இன்னொரு திரவத்தில்
செலவிடுவார்.

மாமூல் வாழ்க்கை பாதிக்கும் -
ஏற்றவும், இறக்கவும்
சோதனைச்சாலை கடக்கவும்
மாமூல் வழங்காவிடில்.

எந்த ஊர் போனாலும்
ஊருக்கு வெளியேதான் உணவு;
ஹைவேயும், எச் ஐ வியும்
பிரிக்க முடியாதவை;
கண்டத்திலிருந்து தப்ப
காண்டம் வேண்டும்!

நெல்லையப்பன் கவிதைகள்-19: "காத்திருக்கும் விதை நெல்"

மறுஜென்ம நம்பிக்கையுடனும்,
மண்சேரும் ஆசையுடனும்,
வயதுக்கு வந்தபின்னும்
மணமாகாக் கன்னியராய்
விதைநெல் காத்திருக்கிறது.

மண்ணும், நெல்லும்
மனிதனும், கலப்பையும்,
தயார் என்றாலும்,
நிகழவில்லை கலப்பு மணம்.

சீர் வேண்டுமாம்
நிறைய நீர் வேண்டுமாம்:
கண்களில் இருந்தென்றால்
கொடுத்து விடலாம்.

ஆனால்
கரையில் வரவேண்டுமாம்,
காவிரி
கரைஉடைக்க வேண்டுமாம்.

காவிரியில் எப்படி நீர் வரும்?
மொழி வழிமறிக்குமே!
மனம் வைக்கவேண்டுமே
மதகு திறக்க!!

கேட்பவன் மொழி ஒன்றாகவும்,
மதகு திறப்பவன் மொழி
வேறாகவும் இருக்க,
நிகழவில்லை அங்கே
புரிந்து கொள்ளுதல்.

காத்திருக்கிறது விதை நெல்;
மழை பொழிய வேண்டும்,
அல்லது
கர்நாடக மக்கள்
கருணை மழை பொழிய வேண்டும்.

நெல்லையப்பன் கவிதைகள்-18: "மதம்"

அரிசிக்கு கல்லு
பாலுக்கு தண்ணி
சர்க்கரைக்கு ரவை
டீக்கு இலவம் பிஞ்சு

தேனுக்கு சர்க்கரைப்பாகு
காப்பிக்கு புளியங்கொட்டை
மிளகாய்ப்பொடிக்கு செங்கல்
சாம்பார்பொடிக்கு மஞ்சள்

முடிக்கு சவுரி
உதட்டுக்கு சாயம்
புருவத்திற்கு மை
மீசைக்கு “டை”

இசைக்கு இரைச்சல்
சீரியலுக்கு அழுகை
சினிமாவிற்கு ஆபாசம்
காதலுக்கு காமம்

காரருக்கு கரும்புகை
நதிக்கு ஆலைக்கழிவு
நடிப்புக்கு இமிடேஷன்

அரசியலுக்கு வாரிசு
தேர்தலுக்கு ஜாதி
மாணவனுக்கு அரசியல்
மனிதனுக்கு மதம்.

நெல்லையப்பன் கவிதைகள்-17: "நம்பிக்கை விற்பவன்"

மழையில் நனைந்தபடி வந்து,
கிளிக்கூண்டு நனையாதபடி
தன் பழைய சைக்கிளை நிறுத்திவிட்டு,
ரோட்டோர உணவகத்தின் உள்ளே,
பையத் துழாவி சில்லறைகளை
பலமுறை எண்ணிப்பார்த்துவிட்டு,
மழையால் தொழில் பாதிக்கப்பட்டதாக
மழையை கெட்டவார்த்தையில் திட்டி,
“இதெல்லாம் ஒரு பிழைப்பா?” என்று
தன்னைத்தானே நொந்துகொண்டு,
அரைச்சாப்பாடு கிடைக்குமா என்று
தயங்கியபடி கேட்டவனுக்கு,
தலைவாழை இல்லை போட்டு,
சிறப்பு சாப்பாடாக
ஒவ்வொன்றாய் பரிமாறியபடி
முதலாளி சொன்னார்:
“உன் பெருமை உனக்குப் புரியவில்லை;
அரசு செய்யமுடியாததை,
அப்பன் ஆத்தா செய்யத் தவறியதை,
கிளி ஜோதிடன், நீ செய்கின்றாய்!”
நீ நம்பிக்கை விற்கின்றாய்;
நாடிவருபவற்கு நல்லது சொல்கின்றாய்;
உருப்படாமல் போய்விடுவாய் என்று
ஒருவருக்கும் நீ சொல்வதில்லை.
இடரினி இல்லை என்றும்,
விரைவில் துன்பம் விலகும் என்றும்,
நம்பிக்கை விதைக்கும் நீ
நல்ல தொழில் செய்கின்றாய்;
உனக்கு சாப்பாடு போடுவதில்

சந்தோசம் எனக்குத்தான் ;
பணம் தரவேண்டாம் நீ,
நன்றாகச் சாப்பிடப்பா”
வயிறுமுட்டச் சாப்பிட்டபின்
கிழிக்கும் உணவு தந்துவிட்டு,
கைதொழுது சொன்னான்:
“ஐயா, பெரியவரே!
இனி எனக்கு கலக்கமில்லை,
இந்தத் தொழில் பற்றி வருத்தமில்லை,
மழையைப் பார்த்தால்ஆகாதையா!
விரைந்து நான் போக வேண்டும்,
நாலு பேருக்காவது
நம்பிக்கை கொடுக்க வேண்டும்!”

நெல்லையப்பன் கவிதைகள்-16: நன்மரம்

நெல்லையப்பன் கவிதைகள்-16

நன்மரம்

வீட்டுக்கு ஒருமரம்
வளர்ப்போம்!
இயலாதவர்கள்
ஆசிரியர் இல்லா
அரசுப் பள்ளியில்
ஒரு குழந்தையை
சேர்ப்போம்!

நெல்லையப்பன் கவிதைகள்-15

நெல்லையப்பன் கவிதைகள்-15

தீர்ப்பு

பள்ளியறை காமத்தை,
பள்ளிக்குள் கொண்டுவந்து,
பயிர்மேயும் வேலிகளுக்கு
என்ன தண்டனை?

சத்துணவில் கைவைத்து,
பருப்பு, எண்ணெய், முட்டைகளை,
பதம்பார்க்கும் படித்தவர்க்கு
என்ன தண்டனை?

பயிற்றுவிக்கும் பணியின்
மகத்துவத்தை உணராமல்,
கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்திற்கு
என்ன தண்டனை?

புத்தகங்களுக்கு
வெளியேயும் படிக்கலாம்,
புத்தகங்களுக்கு உள்ளும்
இளைப்பாறலாம்,
இது புரியாத ஆசிரியர்களுக்கு
என்ன தண்டனை?

நூல்களையும், மக்களையும்
விடாது படிப்பவரே ஆசிரியரெனில்,
படிப்பதையே நிறுத்திவிட்டவர்க்கு
என்ன தண்டனை?

தீர்ப்பெழுதிய பின்
தீர்மானிக்க வேண்டியவை:
ஆசிரியர்களுக்கான தகுதிகள்,
சம்பளம், உயர்தர பயிற்சி.

நெல்லையப்பன் கவிதைகள்-14

நெல்லையப்பன் கவிதைகள்-14

தீவுகள்

ஜாதி, மல்லிகையில்
மட்டும் இருக்கட்டும்.
மதம், யானைக்குக்கூடப்
பிடிக்க வேண்டாம்.
மொழி, முதலில்
ஊடகம் தான்.
தோலுக்குக் கீழே
எல்லோரும் ஓர் நிறம்,
எனில் நான்கின் பெயராலும்
சுவர்கள் எதற்கு?
பாலங்களை எல்லாம்
சுவர்களாக்கி விட்டால்,
திசைகளை மறந்து
தீவுகளாகி விடுவோம்.

நெல்லையப்பன் கவிதைகள்-13

நெல்லையப்பன் கவிதைகள்-13

வன்முறை

பேருந்தில் பெண்கள் நின்றுவர
பெண்கள் இருக்கையில் வசதியாய்
ஆண்கள் அமர்ந்து வருவதும்,
நியாயமான காரணம் இருந்தும்
விடுப்புதர அதிகாரி மறுப்பதும்,

புத்தம் புது ரோஜாவை
ஒவ்வொன்றாய் இதழ் பிடுங்குவதும்,
தொலைக்காட்சியில்
முரட்டுக் குத்துச்சண்டைகளை
தேடி ரசித்துப் பார்ப்பதுவும்,

தாமதமாகப் படுக்கைக்கு
புது மருமகளை அனுப்புவதும்,
பிச்சைக்காரனை அடிப்பதுவும்,
பயணத்தில் பலர் பார்த்திருக்க
தான் மட்டும் உண்ணுவதுவும்,
சப்தமாகப் பேசி
காதுகளைத் தாக்குவதுவும்,

அசந்து தூங்குபவரை
காரணமின்றி எழுப்புவதும்,
ஆயுதங்கள் பாதுகாக்கும்
என்ற நம்பிக்கையும்,
வன்முறை, வன்முறை, வன்முறை!

நெல்லையப்பன் கவிதைகள்-12

இலக்கு

கருத்தரங்கில் கைகலப்பு.
தலைப்போ வள்ளுவம்.
காரணம் ஆய்வறிக்கை.

வள்ளுவன் திருக்குறளில்
அதிகம் பயன்படுத்திய
சொல்எதுவென்ற ஆய்வில்
அறிஞர் பெருமக்கள்
ஆளுக்கு ஒருசொல்லை முன்மொழிய,
சொல்லுக்காக சொற்களால்
அடித்துக் கொண்டவர்கள்,
சொற்கள் தீர்ந்து போனதும்,
கைகளால் அடித்துக் கொள்ள,
கிழிந்தன சட்டைகள்,
பறந்தன புத்தகங்கள்,
காலில் மிதிபட்டது திருக்குறள்.

நெல்லையப்பன் கவிதைகள்-11

துன்பத்தை நெய்தவன்!

அடுப்பில் பூனை,
தறியில் குருவிக்கூடு,
நெய்தவை வீட்டுக்குள்,
நெய்தவனோ தெருவில்.

பசங்க பள்ளிக்குப் போகல,
தறி வெகுநாளா ஓடல,
காரணம் “நூல்” இல்ல.

பசங்க பாடம் எழுதல,
அவங்க வயிறும் நிறையல,
காரணம் “நோட்டு” இல்ல.

நெய்தத வாங்கல,
புது நூலும் கொடுக்கல,
காரணம் அரசிடம் “நாணயம்” இல்ல.

வியர்வையும் கண்ணீரும்
கலந்து நெய்த கைத்தறிய
விற்பதற்கு என்ன வழி?

பொருளில் தரமிருந்தால்
விற்பதற்கு என்ன தடை?

தரமற்ற நூலிலும் , சாயத்திலும்
வியர்வயையும், உழைப்பையும்
வீணடித்து விட்டார்களோ?

களர் நிலத்தில் விதைக்கலாமா?
கிழிந்த காகிதத்தில்
ஓவியம் வரையலாமா?

பட்டினிச் சாவும்
கஞ்சித் தொட்டியும் தொடருமா?
ஆட்சிகள் மாறுது காட்சிகள் மாறுமா?

Follow

Get every new post delivered to your Inbox.