சூரியின் டைரி-2: ஜனவரி 30, 2010

1. இன்று தைப்பூசம். பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பர். பதின்மூன்று ஆண்டுகள் பழனிக்குப் பாதயாத்திரை சென்றிருக்கிறேன். அதில் ஏழெட்டு ஆண்டுகளாவது தைப்பூசத்தன்று அதிகாலை நான்கு மணிக்கு முன்னர் அங்கப்பிரதட்சணம் செய்து, அதன் பின் முருகப் பெருமானை வழிபட்டு வந்திருக்கிறேன். தைப்பூசத்தன்று மலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது எளிதல்ல. லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம். விடியுமுன் செய்வதால், மின் வெளிச்சம் மட்டுமே. கூட்டத்தில் மிதிபடும் ஆபத்து நிறையவே இருந்தது. ஆனால் நண்பர்கள் பாதுகாவலாக சுற்றிவர நின்று, உற்சாகமூட்டி, நல்லபடியாக அங்கப்பிரதட்சணம் செய்துமுடிக்க உதவியதை மறக்கமுடியாது. குறிப்பாக நண்பர் திரு வி.சுப்பிரமணியன் அவர்களையும், நண்பர் வி.சி.யையும் மறக்கமுடியாது. தைப்பூசத்தை ஒட்டி, இரண்டு அல்லது மூன்று நாட்கள் பழனியில் இருப்போம். அந்த இனிமையான நாட்களை நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

2. இன்று நான் நெஞ்சில் போற்றி வழிபடும் காந்தி மகானின் நினைவு நாளும்கூட. சில நாட்களாக, அண்ணலின் சுயசரிதையிலிருந்து (ஆங்கில மூலம்) ஒரு அத்தியாயமாவது படித்து வருகிறேன். ஏற்கனவே எப்போதோ படித்ததுதான் என்றாலும்கூட, அறுபது வயதுக்குமேல் அதைப் படிக்கும்போது சிலிர்க்கிறது. அவர் ஏதோ திடீரென்று மகாத்மா ஆகிவிடவில்லை. சிறுவயதிலிருந்தே சீரிய பண்புகள், மேன்மையான சிந்தனைகள் அவரிடம் இருந்தன என்பது அவரது சுயசரிதையைப் படிக்கும்போது புரிகிறது. அவரது பெற்றோர்களின், குறிப்பாக அவரது அன்னையாரின், ஒப்பற்ற முன்மாதிரி வாழ்க்கையின் தாக்கம் அவரிடம் இருந்தது தெரிய வரும்.

எங்கோ படித்த, காந்திமகானின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. காந்தியடிகள் தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய புதிதில் நடந்தது என்று நினைக்கிறேன். அப்போது சாதாரண மக்களிடையே அவர் பிரபலமாகவில்லை. அவர் ரயிலில் ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்தார். அந்தப் பெட்டியில் ஒரு பெரிய மனிதர் அடாவடியாக இடத்தை அடைத்து அமர்ந்துகொண்டு, மேலும் வெற்றிலைபோட்டு, மற்றவர்கள் சிரமத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாது, உள்ளேயே துப்பிக் கொண்டிருந்தார். காந்தியடிகள் அவரிடம் குழந்தைகள், பெண்டிர் பயணம் செய்கிறார்கள்; அனைவருக்கும் நல்லதல்ல; அவ்வாறு செய்யவேண்டாம் என்று பல முறை வேண்டிக்கொண்டார். அந்தப் பெரிய மனிதரோ சற்றும் பொருட்படுத்தாது தொடர்ந்து உள்ளேயே துப்பிக்கொண்டிருந்தார். பெட்டியிலிருந்த மற்ற பயணிகள் பெரிய சண்டை, பிரச்சினை உருவாகப் போகிறது என்று பயந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் காந்தியடிகள் செய்தது அனைவரையும் வியக்க வைத்தது. அவர் தன்னுடைய கைப்பையிலிருந்த ஒரு பழைய செய்தித்தாளை எடுத்து, அதைச் சிறுசிறு துண்டுகளாக கிழித்து வைத்துக்கொண்டு, ஒவ்வொருமுறை அந்தப் பெரிய மனிதர் துப்புவதைஎல்லாம் துடைத்து பொறுமையுடன் சுத்தம் செய்துகொண்டிருந்தார். அந்த மனிதரை கடிந்து கொள்ளவோ, அவருடன் சண்டையிடவோ முயலவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பெரிய மனிதருக்கு மனதில் உறுத்தியதோ என்னவோ, துப்புவதை நிறுத்திவிட்டார். அண்ணல் இறங்க வேண்டிய ஊர் வந்தபோது, அங்கே பல பெரிய மனிதர்கள் அண்ணலுக்கு மாலையிட்டு வரவேற்றதைப் பார்த்தபோதுதான் அவர் சாதாரண மனிதரல்ல என்பதை அந்தப் பெட்டியில் பயணம் செய்த மற்றவர்கள் உணர்ந்து கொண்டனர்.

காந்திமாகானின் திருவடிகளைப் போற்றி இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: