காரைக்குடி கம்பன் விழா 2010 – இரண்டாம் நாள்

காரைக்குடிக்கு பெருமை சேர்க்கும் பலவற்றில் முக்கியமானது கம்பன் விழா. கம்பன் அடிப்பொடி, திரு சா.கணேசன் அவர்கள் துவக்கிவைத்த இந்த விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு மார்ச் இருபத்து ஏழாம் நாள், சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் விழா துவங்கியது. விழாவிற்கு கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். விழாவின் சிறப்பு அம்சமாக திரு பழ.பழனியப்பன் அவர்கள் எழுதிய கம்பராமாயண உரை – யுத்த காண்டத்தின் நான்கு தொகுதிகள் புதுச்சேரி கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு வி.பி.சிவக்கொழுந்து அவர்களால் வெளியிடப்பட்டது. நான் நண்பரின் மணிவிழாவிற்காக ஸ்ரீரங்கம் சென்றிருந்ததால் முதல் நாள் நிகழ்ச்சியைக் காண இயலவில்லை.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி, கம்பன் மணிமண்டபத்தில் மார்ச் இருபத்து எட்டாம் நாள், ஞாயிறன்று மாலை 5.30 மணிக்குத் துவங்கியது. நானும், அரவிந்தும் கம்பன் மணிமண்டபம் சென்றபோது விழா ஆரம்பித்து, தலைவர் உரை முடிந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த, பேராசிரியர் சத்தியசீலன் அவர்களது உரையைக் கேட்க இயலாததற்கு பெரிதும் வருந்தினேன். திரு தி.அருணாச்சலம் அவர்கள் எழுதிய “உவமை சொல்வதில் உவமையிலாக் கம்பன்’ என்ற நூலும், திரு அ.அறிவுநம்பி அவர்கள் எழுதிய ‘செம்மொழி இலக்கியச் சிந்தனைகள்’ நூல் வெளியீடும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நூல்களை அருப்புக்கோட்டை கம்பன் கழகத் தலைவர், திரு டி.ஆர்.தினகரன் அவர்கள் வெளியிட்டார்.

இரண்டாம் நாளின் பொதுத் தலைப்பு “கம்பனில் கணியன்”. பேராசிரியர் சத்தியசீலன் தலைமையுரையில் கணியனையும், கம்பனையும் பற்றி என்ன பேசினார் என்பது தெரியாமல் போய்விட்டது.

அடுத்து “தீதும் நன்றும்” என்ற தலைப்பில் முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்கள் ஆற்றிய சிறப்புரையைக் கேட்டு மகிழ்ந்தோம். இவர் புதுச்சேரி பலகலைக்கழகத்தில் கம்பன் இருக்கை பேராசிரியராக பணிபுரிபவர். இச்சிறப்புரையில் நான் புரிந்துகொண்டது, என் மனதில் தாங்கிய மையக் கருத்து:

சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற அற்புதமான பாடலிலிருந்து இத்தலைப்பு பெறப்பட்டது.

பட்டாபிஷேகம் சூட்டிக்கொள் என்றபோது எப்படி இருந்தானோ, பதினான்கு ஆண்டுகள் வனவாசம் என்றபோதும் அப்படியே இருந்தான் இராமபிரான். அவனது சமநோக்கு, அவனது புரிதலின் அடிப்படையில் உருவானது. தீதும் நன்றும் பிறர் தர வாரா. அவை இரண்டுமே நம் மும்மை, அல்லது இம்மை வினைப்பயன்களால் வருபவை. எனவே எய்தவன் இருக்க அம்பை நோவது போல மற்றவர்தான் காரணம் என்றெண்ணி அவர் மேல் சினம் கொள்வதோ, பகை கொள்வதோ சரியல்ல. இராமபிரானுக்கு முற்றிலும் மாறாக இலக்குவன் பெருஞ்சினம் கொண்டு, கைகேயியை அழிக்கிறேன், பரதனை ஒழிக்கிறேன் என்று சூழுரைக்கிறான். இராமபிரான் அவனுக்கு இது ஊழ்வினையின் பயன் என்பதைப் புரியவைக்கிறார். இந்த சீரிய கருத்தை நாம் மனதிற் கொண்டால், நல்லவை, தீயவை இரண்டையும் வினையின் பயன் என்று புரிந்துகொண்டால், வாழ்வில் எது நடந்தாலும் அதை கலங்காமல், எதிர்கொள்ளும் பக்குவம் நமக்கு அமையும்.

கணியன் பூங்குன்றனாரின் ஒப்பற்ற இக்கவிதை பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது; இக்கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு லண்டன் மாநகர மெட்ரோ ரயில் நிலையத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது.

விழா நுழைவாயிலில் வழக்கம்போல் புத்தகங்கள் கடை விரிக்கப்பட்டிருந்தன. மேலும் பாடல்கள், இலக்கியச் சொற்பொழிவுகள் அடங்கிய CD-கள் மற்றும் DVD-களும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். குறிப்பாக திரு பழ.பழனியப்பன் அவர்கள் எழுதிய கம்பராமாயண உரைநூல் – ஒன்பது தொகுதிகளாக சிறப்பு விலைகுறைப்பில் ரூபாய் இரண்டாயிரத்து எழுநூறுக்கு விற்கப்பட்டது. மற்ற நாட்களில் விலை ரூபாய் மூவாயிரத்து நானூறு.

நான் திரு நெல்லை கண்ணன் அவர்களது சிறப்புச் சொற்பொழிவுகள் அடங்கிய மூன்று CD-களும், திரு தமிழருவி மணியன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவுகள் அடங்கிய மூன்று CD-களும், எனது துணைவியாருக்காக அவருக்குப் பிடித்த திருச்சி லோகநாதன், ஏ.எம்.ராஜா பாடிய பாடல்கள் அடங்கிய 1000 பழைய பாடல்கள் அடங்கிய DVD ஒன்றையும் வாங்கினேன்.

நிகழ்ச்சியில் சில நிழற்படங்களும் எடுத்தேன். அவற்றில் சிலவற்றை மேலே தந்துள்ளேன்.

இறுதிவரை இருந்து முழு நிகழ்ச்சிகளையும் காண இயலவில்லை. வேறு வேலை இருந்தபடியால் மனமின்றி முன்னதாகக் கிளம்பிவிட்டேன்.

நான் சென்ற பின்னர், நிகழ்ச்சி நிரல்படி, கவிச்சக்கரவர்த்தி கம்பனின் வாழ்க்கை வரலாறு பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. புதுச்சேரி கம்பன் கழகம் வழங்கிய இக்குறும்படத்தை இயக்கியவர் திரு குணவதி மைந்தன்.

இரவு ஒன்பது மணிக்கு திருமதி கௌசல்யா சிவகுமார் அவர்கள் தம் இசைப்பேருரையில் “இராம நாடகம்” நடைபெற்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: