பயணங்கள்-12: சிவகங்கைச் சீமை

நண்பர் செந்தில் அவரது பஜாஜ் பாக்சருடன்

மொபைலில் பேசும் நண்பர் செந்தில்

மருதுபாண்டியர் நகர்அரசு அலுவலகங்கள் வளாகம்

கல்லூரி நுழைவாயில்

கல்லூரி உட்புறம்

கல்லூரி முகப்பு

கல்லூரி அடிக்கல்இதில் அந்த நீளமான மன்னர்களின் பெயரை
என் தந்தையார் சொல்லிக்காட்டும்போது சிரிப்பு வரும்.அரண்மனை வாயில்

ராணி வேலு நாச்சியார் சிலை


அரண்மனைக் கட்டிடங்கள்


அரண்மனைக்கு எதிரேயுள்ள தெப்பக்குளம்

சிவகங்கை பேருந்து நிலையம்

சிவகங்கை இரயில் நிலையம்


சந்திரன் கடை

திருமதி சந்திரன்

நகரச் சிவன் கோவில்

சிவகங்கைக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் ஒட்டுதலோ, உறவோ, பாசமோ கிடையாது, அங்கே உள்ள ராஜா துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் ஒரு ஆண்டு பயின்றேன் என்பதைத்தவிர. கல்லூரியில் சென்று பயின்றது என்பது அந்த ஓராண்டு மட்டும்தான். மற்றதெல்லாம் அஞ்சல் வழியேயும், தனிப்பட்ட முறையிலும் பயின்றதுதான். எனவே கல்லூரி வாழ்க்கை என்றால் என்னைப் பொறுத்தவரை அந்த ஓராண்டு மட்டும்தான்.

அந்தக் கல்லூரி வாழ்க்கையில் பெருமைப்படவோ, நினைத்து மகிழவோ எதுமே இல்லை என்பது வருத்தமான ஒன்று. (கல்லூரி நல்ல கல்லூரிதான், ஆசிரியர்களும் திறமையானவர்கள்தான். அதில் ஒன்றும் குறையில்லை.) என் வாழ்வின் இருண்ட நாட்களில் கழிந்தது அந்த ஓராண்டு. முழுக்க முழுக்க அறியாமையில் மூழ்கியிருந்த காலம். (இப்போது என்ன கிழித்துவிட்டாய் என்று கேட்டுவிடாதீர்கள். பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை என்றாலும் தற்போது வெளிச்சத்தைத் தேடுகிறேன் என்றாவது சொல்லிக்கொள்ளலாம்.)

அந்தக் கல்லூரியை விட்டு வெளியே வந்து நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. இருந்தபோதும், சில நாட்களாக சிவகங்கை செல்லவேண்டும், அங்கே பயின்ற கல்லூரி, பழகிய இடங்கள், சுற்றிய தெருக்கள்இவற்றையெல்லாம் ஒரு முறை பார்க்க வேண்டும், அவற்றைப் பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது.

எப்போதும் எனக்கு உறுதுணையாய் இருந்து, இது போன்ற என் சில்லரைக்கனவுகளை நிறைவேற்றிவைக்கும் எனது அருமை நண்பர் செந்தில் எனக்கு உதவ முன்வந்தார். சென்ற வெள்ளியன்று, அவருடன் அவரது பஜாஜ் பாக்சர் வண்டியில் சிவகங்கை சென்றோம். காலை ஏழு மணி அளவிலேயே கிளம்பிவிட்டோம்.

திருப்பத்தூர் சாலை வழியே சிவகங்கையின், தமிழக அரசின் அலுவலகங்கள் அனைத்தும் அமைந்த மருதுபாண்டியர் நகரில் நுழைந்தோம். (க்ளிக்) அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒரே வளாகத்தில் இருப்பது எவ்வளவு வசதியானது! யாரோ உருப்படியாகச் சிந்தித்து திட்டமிட்டு செய்துள்ளனர். பாராட்டவேண்டிய செயல்.

அடுத்து நேராகக் கல்லூரிக்குச் சென்றுவிட்டோம். தற்போது அது அரசினர் கல்லூரி. புதிய தோரண நுழைவாயில். (க்ளிக்) உள்ளே அதே பழைய கருங்கல் கட்டிடம். (க்ளிக்) அலுவலகம், வகுப்புக்கள், விலங்கியல்தாவரவியல் கட்டிடம்இவற்றிலெல்லாம் மாற்றமில்லை. மற்றபடி கிட்டத்தட்ட எல்லாமே மாறிவிட்டிருந்தது. கல்லூரி திறக்க இன்னும் நாள் இருந்ததால், விண்ணப்பப் படிவங்கள் வாங்கவருவோர் தவிர வேறு யாருமில்லை.

வாயிலில் மன்னர் சிலை. (க்ளிக்) சிவகங்கை மன்னர் ஷண்முக ராஜா அவர்கள் தனது தந்தையார் மன்னர் துரைசிங்க ராஜ அவர்களது நினைவாக உருவாக்கிய கல்லூரி. நான் பயின்றபோது பேராசிரியர் B.S.தண்டபாணி அவர்கள் கல்லூரி முதல்வர். அவர் ஒரு ஷேக்ஸ்பியர் அதாரிட்டி. அவர் ஷேக்ஸ்பியர் நடத்தி அதைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். (எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. நான் அங்கு பயின்றது புகுமுக வகுப்பு மட்டுமே.)

நினைவைப் புரட்டிப்பார்க்க எங்களது விலங்கியல் பேராசிரியர் O.N.குருமணி அவர்கள், பேராசிரியர் இராமானுஜ ஐயங்கார் அவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் திருவாளர்கள் சந்திரன், சந்திரசேகரன், துளசிதாஸ், கே.வி.கணபதி, இலக்குமணப்பெருமாள் அவர்களது உருவம் மனக்கண் முன்னே ஓடியது. நிறைய பெயர்கள் மறந்துவிட்டன. எழுத்துலகில் தடம்பதித்த கவிஞர் மீரா, பேராசிரியர் தர்மராஜன் போன்றோர் அப்போது அக்கல்லூரியில் பணிபுரிந்தனர். உடன் பயின்ற நண்பர்கள் முகங்கள் நினைவில் ஓடியது: என் வகுப்பிலேயே பயின்ற சிவப்பிரகாசம் (பின்னாளில் இவர் பள்ளி ஆசிரியர்), பெரியதிருவடி (பின்னாளில் ஆங்கிலப் பேராசிரியர்), காந்திமதிநாதன் (எனக்கு ஒரு வருடம் சீனியர். பின்னாளில் சென்னை அக்கவுன்ட் ஜெனரல் அலுவலக அலுவலர்).

அடுத்து சிவகங்கை அரண்மனைக்குச் சென்றோம். முகப்பு சிறப்பான மாற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப் பட்டிருந்தது. உள்ளே உள்ள அரண்மனைக் கட்டிடங்களும் அப்படியே இருந்தன. சிவகங்கையை ஆண்ட மன்னர்களின் காலம் வரிசைப்படி கல்வெட்டில். (க்ளிக்) வெளியே ராணி வேல் நாச்சியாரின் வீரச் சிலை. எதிரே காந்தி சிலை. இன்னொருபுறம் நேதாஜி சுபாஸ் போஸ் சிலை. (க்ளிக்). ( சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தனதுசிவகங்கைச் சீமைஎன்ற திரைப்படத்தின் வழியே உலகறியச் செய்தார். மிகவும் அற்புதமான திரைப்படம் அது. நினைக்கும்போது இன்றும் இனிக்கும் பாடல்கள்! )

அருகில் பேருந்து நிலையம். எந்த மாற்றமும், முன்னேற்றமும் இல்லாமல் நகருக்குத் திருஷ்டிப்பரிகாரமாய். தொடர்ந்து நேரே இரயில் நிலையம். மூன்றுநான்கு கிலோமீட்டர் தூரத்தில். தினமும் மானாமதுரையில் ஒரு கிலோமீட்டர் + சிவகங்கையில் நான்கு கிலோமீட்டர் என்று காலை ஐந்து கிலோமீட்டர், மாலை ஐந்து கிலோமீட்டர் என்று தினமும் பத்து கிலோமீட்டர் நடப்போம். இதில் காலையிலும் முகத்தில் வெயில், மாலையிலும் முகத்தில் எதிர் வெயில்.

மேலும் நாங்கள் படித்தபோது தேசிய மாணவர் படைப் பயிற்சி கட்டாயம். அதிகாலை பேரேடிற்கு முதல்நாள் இரவே ரயில் நிலையத்தில் வந்து தங்கிவிட்டு, அதிகாலைக் குளிரில் கிணற்றில் குளித்துவிட்டு, சீருடையுடன், தூக்கமுடியாத கனமுள்ள காலணிகளை அணிந்துகொண்டு, இருட்டில் ஓடுவோம். நாய்களெல்லாம் துரத்தும். தாமதமானாலோ மைதானத்தை மூன்று முறை சுற்றவேண்டும். கலந்துகொள்ளாமல் விட்டால், பின்னர் ஈடுகட்டரூட் மார்ச்” – ஒரு நாள் முழுவதும். தேர்வு நுழைவுச் சீட்டை வாங்க தேசிய மாணவர் படை அலுவலகத்தில் கையெழுத்துப் பெறவேண்டும். இப்படி நிறைய கழுத்தறுப்புகள். தேசிய மாணவர் படை, அதன் அதிகாரிகள்இவற்றின் மேல் அப்போது எனக்கு கடும் வெறுப்பு. நல்லகாலமாக, தற்போது இந்தக் கட்டாயப் பயிற்சி இல்லை.

பழைய கட்டிடங்கள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டு, புதிய கட்டிடங்கள், வசதிகள். (இரண்டு ATM உட்பட)(க்ளிக்). நிலையத்திற்கு எதிரேசந்திரன் கடை“. இரண்டையும் என்னால் மறக்கமுடியாது.

நாங்கள் ஒரு பத்துப் பதினைந்து பேர் தினமும் மானாமதுரையிலிருந்து காலை ரயில் கோச்சில் சிவகங்கை வந்து, கல்லூரியில் பயின்றுவிட்டு, மாலை ரயில் கோச்சில் மானாமதுரை திரும்புவோம். காலை ஏழு மணிக்கு மானாமதுரையை விட்டு ரயில் கிளம்பும். எனவே வீட்டை விட்டு குறைந்தது அரை மணி முன்னதாகவே கிளம்பிவிடுவோம். மாலை ஏழு மணிக்கு ரயில் மானாமதுரை வந்து சேரும்.

பல நாட்கள் காலை சாப்பிடாமல் வந்துவிட்டு, சந்திரன் கடையில் இட்லி, சட்னி, சாம்பார் என்று வெளுத்துக் கட்டியிருக்கிறேன். மிகவும் சுவையாக இருக்கும். எஞ்சின் டிரைவர், கார்டு என்று ரயில் ஊழியர்கள் பலரும் மானாமதுரையை விட்டுக் கிளம்பு முன்னரே தொலைபேசியில் ஆர்டர் செய்வர். கோச் சிவகங்கை வரும்போது, அவர்கள் ஆர்டர் செய்து உணவு அவர்களுக்குத் தயாராக ரயில் தேடி வந்துவிடும். அவ்வளவு புகழ் பெற்றது. சந்திரனும், அங்கு பணிபுரிந்த அழகிரியும் எங்களிடம் பிரியமாக இருப்பார். தற்போது சந்திரன் அவர்கள் இல்லை. அவரது துணைவியார் கல்லாப்பெட்டியில். (க்ளிக்). அழகிரி பின்னாளில், கடைக்கு வந்துபோன அலுவலர் யாரின் உதவியாலோ, ரயில்வே ஊழியராகி, ஓய்வு பெற்று, தனது கிராமத்தில் வசிப்பதாக அந்த அம்மையார் கூறினார். கடை தற்போதும் அதே புகழோடு. (வடை, டீ சாப்பிட்டோம்).

மீண்டும் அரண்மனை வழியே கோவிலைக் காணக் கிளம்பினோம். வழியில் ஒரு புதிய கோவில். கௌரி விநாயகர் ஆலயம். சென்று வழிபட்டேன். அடுத்து சிவகங்கைப் பெரிய சிவன் கோவில். (க்ளிக்). வெளியிலிருந்தே வழிபட்டுவிட்டு தொடர்ந்தோம். ஸ்ரீராம் தியேட்டர் கண்ணில்படவில்லை. தற்போது இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அதில் நிறைய படம் பார்த்திருக்கிறேன்.

சிவகங்கையை விட்டு காலை பதினோரு மணியளவில் கிளம்பினோம். திரும்பும் வழியில் யோகி சுத்தானந்த பாரதியார் நிறுவிய பள்ளி, அவரது சமாதி, அவர் வாழ்ந்த சோழபுரம் ஆகியவற்றைக் காணும் பேறு கிட்டியது. அதைப் பற்றித் தனியே எழுகிறேன்.

Advertisements

5 Responses to “பயணங்கள்-12: சிவகங்கைச் சீமை”

 1. era.murukan Says:

  நீங்கள் ராஜா துரைசிங்கம் கல்லூரியில் எந்த ஆண்டு புகுமுக வகுப்பு? 1969-70 என்றால் என் வகுப்புத் தோழர். போன வாரம் தான் கணிதப் பேராசிரியர் பாஸ்கரன் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். இயற்பியல் (பௌதிகம்) பேராசிரியர் துரைசாமி (ஆர்.டி) அவர்களை என் திரைப்படம் (குறும்படம்) 'ரெட்டைத்தெரு' மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெளியிட்ட போது சந்தித்தேன். நா.தர்மராஜன் சார் ஒரு பிரம்மாண்டமான மொழிபெயர்ப்பில் மும்முரமாக இருக்கிறார். துளசிதாஸ் சார் புதுவை வாசி. சில ஆண்டுகள் முன்னால் ஒரு இலக்கியக் கூட்டத்தில் இருவரும் கலந்து கொண்டபோது பேச வாய்ப்பு கிடைத்தது

 2. R.Mukundarajan Says:

  sathguru நண்பரே நான் சிவகங்கைவாசி என் பெயர் இரா.முகுந்தராசன் மன்னர் மே நி பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். சிவகங்கை வரலாற்றை அறிய ஆர்வம் உள்ளவரா? தொடர்புக்கு rmukundarajan@gmail.com

 3. SURI Says:

  நன்றி திரு.இரா.முருகன் அவர்களே! நான் பயின்றது 1965-66. எங்களுக்கு ஆங்கில ஆசிரியர் திரு கே.வி.கணபதி அவர்கள். (பின்னாளில் அவர் பொய்ச் சான்றிதழ் மூலமாக வேலைக்குச் சேர்ந்தது தெரியவந்து கைது செய்யப்பட்டு, சிறை சென்றார் என்று கேள்விப்பட்டு வருந்தினேன்). திரு இராமானுஜ ஐயங்கார் அவர்கள் தமிழாசிரியர். பேராசிரியர் ஒ.என்.குருமணி மற்றும் திரு கே.சந்திரன் விலங்கியல், திரு சந்திரசேகரன் தாவரவியல்; திரு துளசிதாஸ் அவர்கள் வேதியியல். திரு தர்மராஜன், கவிஞர் மீரா எங்கள் வகுப்புக்கு வரவில்லைஎன்றாலும் அப்போது அந்தக் கல்லூரியில் பணியில் இருந்தனர். அவர்களைத் தெரியும். என்னுடன் பயின்ற நண்பர், ஆ.பெரியதிருவடி அவர்கள் பின்னாளில் தேவகோட்டை கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அவரது அண்ணன் ஆ.காந்திமதிநாதன் அவர்கள் எங்களுக்கு சீனியர். அவர் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணிபுரிந்தார். அவருடன் சில காலம் தொடர்பு இருந்தது. பின்னர் அதுவும் விட்டுப் போய்விட்டது. மற்றபடி யாருடைய தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

 4. SURI Says:

  வணக்கம், திரு முகுந்தராஜன் அவர்களே! சிவகங்கை வரலாறு எனக்கு சிவகங்கைச் சீமை திரைப்படத்தில் பார்த்த அளவுக்குத்தான் தெரியும். தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கிறது. நன்றி.

 5. akilarajan Says:

  சிவகங்கை நான் பிறந்த ஊர், தற்போதைய சிவகங்கை எனக்கு பிடிக்காது, ஏன் என்று சொல்ல விருப்பம் இல்லை. வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களது ஆட்சி காலம் எனக்கு மிகவும் பிடிக்கும், இன்னும் சொல்லி கொண்டே போகலாம்…


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: