சூரியின் டைரி-21: மானாமதுரை நாட்கள்

1965ம்  வருடத்தின் இரண்டாம் பாதியிலிருந்து 1970ம்  வருடத்தின் முற்பாதி வரை எங்கள் குடும்பம் மானாமதுரையில் இருந்தது. இரயில்வேயில் பணிபுரிந்த என் தந்தை மாற்றலாகி அங்கே வர, எங்கள் குடும்பமும் அங்கே  வந்தது.  பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிப் படிப்பை தொடங்கும் தருணம் அது.  அப்போது மானாமதுரையில் கல்லூரி இல்லாத காரணத்தால் அருகிலுள்ள சிவகங்கையில், மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில்  சேர்ந்தேன்.  தினமும் காலை ஏழு மணிக்கு மானாமதுரையிலிருந்து இரண்டு பெட்டி  டீசல் ரயில் கோச்  ஒன்று திருச்சி செல்லும்.  அதில் நாங்கள் (நானும் என்னைப்போல் மானமதுரையிலிருந்து சிவகங்கையில் படிப்போர் அனைவரும்) தினமும் செல்வோம்.  அதுபோல  மாலை  ஆறரை மணிக்கு  சிவகங்கை வரும் திருச்சி-மானாமதுரை இரண்டு பெட்டி டீசல் ரயில் கோச்சில் வீடு திரும்புவோம்.  வீட்டிற்கு வரும்போது மாலை ஏழேகாலுக்கு மேல் ஆகிவிடும்.  சிவகங்கை ரயில் நிலையத்திலிருந்து கல்லூரி செல்ல பேருந்தோ, மற்ற வசதிகளோ அப்போது கிடையாது.  நான்கு கிலோமீட்டருக்கு மேல் நடந்தாக வேண்டும்.  முகத்தில் அடிக்கும் காலை வெயில்.  அதே போல மாலை நான்கு மணிக்கு கல்லூரி முடிந்து, ரயில் நிலையம் வரும்போதும் முகத்தில் எதிர் வெயில் அடிக்கும்.  சமயத்தில் போதும் போதும் என்றாகிவிடும்.  
என்னுடைய கல்லூரிப் படிப்பு சுவையானதாகவோ, சுவாரசியமானதாகவோ இருக்கவில்லை.  முக்கிய காரணம், பள்ளிக் கல்வியில் நேர்ந்த முக்கியமான இழப்பு.  எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அறிவியல், கணிதம் பயிலமுடியாமல் (ஆசிரியர்கள் இல்லை; பள்ளி நிர்வாகம் வழக்கில் சிக்கியதால் ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்படாமல் மூன்று ஆசிரியர்கள் தவிர அனைவரும் விலகிவிட்டனர். அந்த மூன்று ஆசிரியர்களும் அருகில் சொந்த வீடு, வயல், வேறு வருமானம் இருந்ததாலும், வயதாகிவிட்ட படியாலும் வேலையை விடமுடியாமல் தொடர்ந்தனர்.  அவர்கள் – தமிழாசிரியர், சம்ஸ்கிருத ஆசிரியர், ஹிந்தி பண்டிட்.)  என்னுடைய கல்வியறிவில் பெரியதொரு இடைவெளி விழுந்தது.  முக்கிய பாடங்களான அறிவியலிலும், கணிதத்திலும் அடிப்படையே  இல்லாமல் போனது.  அதனாலும், மற்றக் காரணங்களாலும் முதல் முறை  பல்கலைத் தேர்வில் வேதியல் வழுக்கியது; இரண்டாம் முறை இயற்பியல் இடறியது.  ஆனால் மூன்றாம் முறை அனைத்துப் பாடங்களிலும் நிறைய மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.  ஆனாலும் கடும் போட்டி காரணமாக கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது.  என்ன செய்வது என்று தெரியாமல், ஏதாவது பொழுதுபோக்காக கற்றுக் கொள்ளலாம் என்று மானமதுரையிலிருந்த தட்டச்சுப்பள்ளியில், சுருக்கெழுத்து, தட்டெழுத்து கற்க ஆரம்பித்தேன்.  அப்போது எனக்குத் தெரியாது அவையே என் வாழ்வாக மாறிவிடும் என்பது.

ஓராண்டு கல்லூரி வாழ்வில் பழகிய நண்பர்கள், ரயில் நண்பர்கள் நட்பு நெருக்கமாகவில்லை.  சில பெயர்கள் மட்டும் நினைவில் நிற்கிறது:  ஜோதிராமலிங்கம், ராமன்,  சம்பத்குமார் என்ற பெயரில் இருவர்; அருள்; பெரியதிருவடி மற்றும் அவரது அண்ணன் காந்திமதிநாதன்.  (கடைசி இருவரின் தந்தையார் இரயில்வே ஊழியர்; என் தந்தையாரின் நெடுநாளைய நண்பர்). தட்டச்சுப்பள்ளியில் உடன் பயின்ற சிலரும், பயிற்றுவித்த  சிலரும் நண்பராகினர்.  அந்த தட்டச்சுப்பள்ளியே கதி என்று அங்குள்ள நண்பர்களுடன் பெரும்பாலான நேரத்தைக் கழித்தேன்.  அந்த நண்பர்களில் நாங்கள் மூவர் காரைக்குடியில் வேலை கிடைத்து 1969ம் வருட இறுதியில் காரைக்குடி வந்தோம்.  அந்தப் பிரியும் தருணத்தில் எடுத்த படத்தைத்தான் மேலே பதிவு செய்துள்ளேன்.

இடது புறமிருந்து.  முதலில் துரை.  எனக்கு ஜூனியர். அவருக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கமில்லை.  அடுத்தவர் சண்முகராஜன்.  அவர் அங்கு எனக்கு சீனியர்.  பயிற்றுவித்தவர்.  பின்னாளில் மானாமதுரை பஞ்சாயத்து அலுவலகத்தில்  பணி    புரிந்தார்.  மூன்றாவது சீனு.  தட்டச்சுப்பள்ளியின் உரிமையாளரின் இளைய மகன்.  இவரும்  எனக்கு  ஜூனியர்.  அடுத்தது நான்.  அதாவது இடமிருந்து நாலாவது.  (அலுவலகத்தில் என் துறைத்தலைவர் இப்படத்தைப் பார்த்துவிட்டு,  உன்னைப் பார்த்தால் ஜமீன்தார் மகன் போல இருக்கிறது என்று ஆங்கிலத்தில் கூறியபோது உச்சி குளிர்ந்து போய்விட்டது).  அடுத்தது சோமா.  பள்ளி உரிமையாளரின் மூத்தமகன், சீனுவின் அண்ணன்.  அடுத்தது சுப்பிரமணியன்.  இதில் இல்லாத முக்கியமானவர் ராஜூ.  சோமா, ராஜூ மற்றும் நான்  1969 இறுதியில்  காரைக்குடி வந்தோம் – நானும்  ராஜுவும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியவும், சோமா ஒரு ஆடிட்டரிடம் பணிபுரியவும்.
மானாமதுரையில் என்னால் மறக்கமுடியாதவை:  வைகை ஆற்றுப்படுகையில் மாலைப் பொழுதை நண்பர்களுடன் கழித்தது.  (எங்களுக்கெல்லாம்  அதுதான்  மெரீனா பீச்.) ஆற்றைக் கடந்து கீழ்கரையில் இருந்த அமுது தியேட்டரில் நண்பர்களுடன் சினிமா பார்த்து மகிழ்ந்தது.  மானமதுரையிளிருந்த பெரிய நூலகம்.  (எவ்வளவோ அற்புதமான புத்தகங்களை அங்கே படித்திருக்கிறேன்.)
இன்று ராஜூ தவிர மற்ற நண்பர்களின் தொடர்பு முற்றிலுமாக விடுபட்டுவிட்டது.  ராஜூ கூட எதிர்ப்படும்போது நலமா என்று ஒரு சில நிமிடங்கள் பேசுவதோடு சரி.  காலம் என்ற உரைகல்லில் இந்த நட்புகள் கரைந்து போய்விட்டன.
சமீபத்தில்  தற்செயலாகப் பார்த்த ஒருவர் தான் மானாமதுரையில் இருப்பதாகக் கூற,  அவரிடம் தற்போது ஊர் எப்படியிருக்கிறது என்று நான் வினவ, அவர்,  நாற்பது ஆண்டுகளுக்கு முன் நீங்கள் பார்த்த ஊர் இப்போது இல்லை;  முற்றிலுமாக மாறிவிட்ட புதியர் ஊர் என்றார்.
மானாமதுரையில் எனது பழைய நண்பர்கள் யாராவது இப்போது இருப்பார்களா என்று தெரியவில்லை;  அப்படி இருந்தாலும் நட்பு ஒட்டுமா என்று தெரியவில்லை.  மற்றபடி  அந்த  ஊர்  மீது தணியாத பாசமோ, பிடிப்போ எதுவும் இல்லை.  இன்னும் சொல்லப்போனால் என் வாழ்வில் பழசை நினைத்து ஏங்கும்படியான  சம்பவங்களோ, இடங்களோ இல்லை. (There is nothing in my life to feel nostalgic about).  இருப்பினும் சில நாட்களாக ஒரு எண்ணம்:  ஒரு முறை மானாமதுரை சென்று வந்தாலென்ன?  பார்க்கலாம், அநேகமாகப் போவேன்;  அப்படிப் போனால் அதைப் பற்றி இங்கே எழுதுகிறேன்.  
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: