சூரியின் டைரி-23: வ.உ.சி. கண்ட பாரதி

வ.உ.சி. கண்ட பாரதி என்ற இந்நூல் வ.உ.சிதம்பரனார்  அவர்கள்  எழுதிய குறிப்புகளிலிருந்து மலர்வதாக இந்நூலின் முன்னுரையில்   வ.உ.சி. அவர்களின் மைந்தர் திரு வ.உ.சி.சுப்பிரமணியம் அவர்கள்  எழுதியுள்ளார்.  (முன்னுரையின் தேதி 1946 நவம்பர் பதினேழாம்  நாள்!)   இக்குறுநூலைப்  படித்து மகிழும் பேறு ஒரு பேருந்துப் பயணத்தின் போது வாய்த்தது.  முப்பதே பக்கங்கள் கொண்ட இந்நூலின் முதற் பதிப்பை  சென்னை  ஆருத் புக்ஸ்  2002ம் ஆண்டில் வெளியிட்டுள்ளது.  விலை ரூபாய் பத்து மட்டுமே.
 இந்த நூலைப் பற்றிப் பேசுமுன், ஒரு சுய புராணம்.  என் தந்தையார் தூத்துக்குடியில் பள்ளியில் பயின்றபோது இந்நூலாசிரியர் திரு வ.உ.சி.சுப்பிரமணியம் அவர்கள் அவரது பள்ளி நண்பர்.  வ.உ.சி. அவர்களின் இறுதித் தருணத்தில் தூத்துக்குடி காங்கிரஸ் மாளிகையில் குழுமியிருந்த கூட்டத்தில் தாமும் இருந்ததாகக் என் தந்தையார் கூறுவார்.  எனது தாய்வழிப் பாட்டி தங்கத்தம்மாளின்  சொந்த ஊர்  ஓட்டப்பிடாரம்.  என் பள்ளிப் பருவத்தில்  அவரிடம் ஒரு முறை வ.உ.சியைத் தெரியுமா, உங்கள் ஊர்க்காரர்  என்று கேட்டேன்.   ‘ஏலே, என்ன அப்பிடிக் கேட்டுப்பிட்டே.  அவுக எங்க மாமால.  எங்க வீட்டுக்குப் பக்கத்திலேதான் அவுக வீடு இருந்தது’ என்றார்.

கப்பலோட்டிய தமிழன் என்ற ஒப்பற்ற தமிழ்த் திரைப்படம் பார்த்த அனைவருக்கும் வ.உ.சிக்கும் பாரதிக்கும் இருந்த இனிய உறவு தெளிவாகப் புரிந்திருக்கும்.  இந்த நூலில் அது வ.உ.சியின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது. வ.உ.சி. பாரதியை மாமாவென்றும்,  பாரதி வ.உ.சியை மாப்பிள்ளை என்றும் அன்போடு உறவு பாராட்டி மகிழ்ந்தது, அவர்களது நெருக்கத்தைப்  பறைசாற்றுவதாக உள்ளது.  அது மட்டுமல்ல, இருவரின் தந்தையாரும் நண்பர்கள்.  அவர்கள் வழியே இருவரும் ஒருவரையொருவர் பார்ப்பதற்கு முன்னரே நன்கு அறிந்திருந்தனர்.  

வ.உ.சி. பாரதியை நேரில் பார்த்தது 1906ம் வருடம் சென்னையில் இந்திய பத்திரிக்கை உரிமையாளர் ஸ்ரீ திருமலாச்சாரியார் அவர்களது வீட்டில்.  அந்த சந்திப்பு இந்நூலில் வ.உ.சி. அவர்களது வார்த்தைகளிலேயே தரப்பட்டுள்ளது.  அவர்களது நட்பு எப்படி வளர்ந்தது, எப்படி நெருக்கம் அதிகமானது, வ.உ.சியின் உள்ளத்தில் நாட்டுப்பற்று சுடர் விட்டெரிய பாரதி எப்படி காரணமாயிருந்தார், இருவர் தேசப்பணியில் இணைந்து செயல்பட்டது, சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் லோகமான்ய திலகர், ஸ்ரீ அரவிந்தர் ஆகியோரோடு பாரதியும், வ.உ.சியும் இணைந்து மிதவாதிகளிடமிருந்து போராடிப் பிரிந்து தனி அமைப்பை உருவாக்கியது, சிதம்பரனார் அவர்கள் கிட்டத்தட்ட நான்காண்டுகள் சிறைவாசம் முடித்து, புதுவை சென்று பாரதியோடும், அரவிந்தரோடும்   அளவளாவி மகிழ்ந்தது, திட்டங்கள் தீட்டியது போன்ற சுவையான தகவல்களும் நமக்குத் தெரிய வருகின்றன. மேலும் வ.உ.சியின் தலைப்புதல்வன், அவரது தந்தையின் பெயரைச் சுமந்த உலகநாதன், தந்தையைப் போல் துணிவாகப் பேசுவதைப் பாராட்டி பாரதி “லோகநாயகி புதல்வன்”  என்ற தலைப்பில் கவி எழுதிக் கொடுத்ததையும், அது  அப்போது  சிறையிலிருந்த  வ.உ.சிக்கு அனுப்பப்பட்டதையும், அவர் அதைப் படித்து மகிழ்ந்ததையும், இருபத்துஇரண்டு வயதில் அந்த  உலகநாதன் மறைந்ததையும், அதைப்போல அந்தக் கவிதை காணாமல் போனதையும் அறியும்போது நம் மனம் நெகிழ்கிறது.  பாரதி, வ.உ.சி. இருவரும் தங்கள் வாழ்வில் அனுபவித்த இன்னல்கள் நம் மனதைப் பிழிகின்றன. 
பாரதி அன்பர்களும், வ.உ.சி. பற்றி அறிய விரும்பும் அன்பர்களுக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்.      
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: