சூரியின் டைரி-27: முனைவர் சுந்தரமும், பேராசிரியர் ‘வெற்றி’ மெய்யப்பன் அவர்களும்

மேலே  உள்ள  படம்  இரண்டாவது  காரைக்குடி  புத்தகத்  திருவிழாவின்  துவக்க  விழாவில்  எடுக்கப்பட்டது  என்று  நினைக்கிறேன்.  மனிதமேம்பாட்டு அறிவியல் அமைப்பு  (FASOHD – Forum for Advancement of Science of Human Development) காரைக்குடி மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன்  காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில்  நடத்திய இத்திருவிழா அமைப்புக் குழுவின் தலைவர்  பேராசிரியர் முனைவர்  ச.மெய்யப்பன் அவர்கள் (தமிழ்நாட்டின் தலைசிறந்த பதிப்பகங்களின் ஒன்றான மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர், ‘வெற்றி’ மெய்யப்பன் என்று போற்றப்படுபவர்) மேடையில் பேசுவதைப் படத்தில் காணலாம்.  அருகில் அமர்ந்திருப்பவர் எங்கள் அமைப்பின் தலைவர் முனைவர் வே.சுந்தரம் அவர்கள் (காரைக்குடி மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Central Electrochemical Research Institute) திட்டமிடல் பிரிவின் தலைவர் மற்றும் இணை இயக்குனர்).
சென்னையிலும், நெய்வேலியிலும் நடைபெறும் மாநில அளவிலான  புத்தகக் கண்காட்சியைபோல் ஒன்று காரைக்குடியிலும்  நடத்தவேண்டும் என்பது என் நெடுநாளைய கனவு.  அதை நிறைவேற்ற பல பெரியவர்கள், நண்பர்கள் பலவகையில் உதவியுள்ளனர்.  அதில்  குறிப்பிடத்தக்கவர்கள் மேலே உள்ள இருவரும், மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் மீ.இராகவன் அவர்களும், எங்கள் அமைப்பின் செயலர் முனைவர் (திருமதி) ந.கலைச்செல்வி அவர்களும் (தமிழிலிலும், ஆங்கிலத்திலும் மிகச் சிறப்பாக உரையாற்றும் வல்லமை படைத்தவர், எங்கள் நிறுவனத்தின் செயல்திறன்மிக்க விஞ்ஞானி)  மற்றும் காரைக்குடி நலந்தா பதிப்பகத்தின் உரிமையாளர் நண்பர் திரு.ஜம்பு அவர்களும்.
முதலாமாண்டிலேயே புத்தகத் திருவிழா சிறப்பாக அமைந்து எண்ணற்ற பலருக்கும் பயனுள்ளதாக அமைந்துவிட்டது.  அதைத் தொடர்ந்து இன்றுவரை ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக இந்த விழா நடந்து வருகிறது.  (இடையில் ஓராண்டு மட்டும் நடக்கவில்லை என்று நினைக்கிறேன்). 
வீட்டில் இடப் பிரச்சினை காரணமாக தொகுத்து வைத்திருந்த  பேப்பர்களையும்,  புத்தகங்களையும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கழிக்க ஆரம்பித்தேன்.  அப்போது சிக்கிய படங்களில் ஒன்றுதான் மேலே உள்ள படம்.  இந்தப் படத்தைக் கண்டதும் என் நினைவுகள் பின் நோக்கிச் சென்றன.  பல துறையைச் சேர்ந்தவர்களும், மாணவ மாணவியரும், போது மக்களும் எவ்வளவு ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும்  கலந்து கொண்டனர்!  புத்தகத் திருவிழாவையொட்டி  எத்தனை எத்தனை கலை இலக்கிய நிகழ்ச்சிகள், போட்டிகள், பரிசுகள்!!   ஒருவருட நிறைவு விழாவிற்கு வருகை புரிந்த,  சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் என்னிடம் கூறினார்: “சூரி! நீங்கள் அமைத்துள்ள இந்தப் புத்தகத் திருவிழா எத்தனை பேர் வாழ்வில் எப்படியெல்லாம் மாற்றம் விளைவிக்கும்  என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்.  ஆனால் என்னால்  அதை மனக் கண்ணில் காண முடிகிறது” என்று புகழ்ந்துரைத்தார். அந்த இனிய நாட்களை எண்ணி மகிழ்ந்தேன்.
முனைவர் இராகவன் அவர்களும், முனைவர் சுந்தரம் அவர்களும் நானும் பணி நிறைவு பெற்று மைய மின்வேதியியல் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம்.  அதைத் தொடர்ந்து,  மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் பெற்றெடுத்த செல்லக் குழந்தையான  மனித மேம்பட்டு அறிவியல் அமைப்போடு எங்களுக்குள்ள தொடர்பும் குறைந்து விட்டது.  கருத்து வேற்றுமை காரணமாக நண்பர் ஜம்பு அவர்கள் தொடர்பு இல்லாமல் போய்விட்டது (அதில்  இழப்பு எனக்குத்தான்).  பேராசிரியர் வெற்றி மெய்யப்பன் அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள்.  திருமதி கலைச்செல்வி அவர்கள் இன்னும் பணியிலிருக்கிறார்கள்.  ஆனால் அவர்களுமே அமைப்பில் எந்தப் பொறுப்பிலும் இல்லை.  

முனைவர் சுந்தரம் அவர்களுக்கும் எனக்கும் உள்ள நட்பு இன்றும் தொடர்கிறது.  பலவகைகளில் எங்களது சிந்தனை, ஈடுபாடு ஒரே மாதிரி இருக்கும்.  அவர் தலைவராக இருந்தபோது அவரும், செயலர் திருமதி கலைச்செல்வி அவர்களும் எனக்கு அளவிலாத சுதந்திரம் அளித்திருந்தார்கள்;  பிரச்சினை என்று வந்தபோதெல்லாம்  என்னை   விட்டுக் கொடுக்காமல் காத்தனர்.  அதனால் என்னால் மிகச் சிறப்பாகவும், மனதிற்கு நிறைவாகவும் செயல்பட முடிந்தது.  அவர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருந்த மற்ற அன்பர்கள் அனைவருக்கும் எங்கே எனது உளமார்ந்த நன்றிகளைப் பதிவு செய்கிறேன். 

மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பும், காரைக்குடி புத்தகத் திருவிழாவும் எனக்குப் பெற்றுத் தந்த இனிய அனுபவங்கள், நல்ல நண்பர்கள் எத்தனை!  அதையெல்லாம் தற்போது நினைத்துப் பார்க்கையில் மனம் மகிழ்ச்சி அடைகிறது.  இது போல மேலும் பல படங்கள் கிடைத்துள்ளன.  ஒவ்வொன்றும்  பழைய நினைவுகளைக் கிளறுகின்றன.  வரும் நாட்களில் அவற்றைப் பற்றியெல்லாம் எழுதுவேன். 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: