மனதில் பதிந்தவை-4: "பாடம்", சிற்றிதழ் , ஏப்ரல் 2011

அண்மையில்  “பாடம்”  என்ற சிற்றிதழை வாங்கினேன்.  அது ஏப்ரல் 2011 இதழ். பை-லைனில்  “குன்றா வளர்ச்சி அரசியல் மாத இதழ்”  என்று குறிப்பிட்டிருந்தார்கள்.  அதில் தரமான, சமுதாயப் பிரக்ஞை உள்ள பல கட்டுரைகள் படித்தேன்.  தரமான சிற்றிதழ்கள் வளரவேண்டும் என் நினைப்போர் ஆதரவு தரவேண்டிய நல்ல மாத இதழ்.  அதிலிருந்து:

இதழின் “வரவேற்பறை”  தலையங்கம் – இதழின் ஆசிரியர் அ.நாராயணன்   அவர்களின் அருமையான கட்டுரை  –  “பாவம், குப்பம்மாளுக்குக் கிடைக்காது!” 
கிருஷ்ணகிரியிலிருந்து பஞ்சம் பிழைக்க கோவை வந்த ஒரு குடும்பத் தலைவி.  ஒன்பது மாத கர்ப்பிணி.  அடிப்படை வசதிகளில்லாத ஒரு குப்பத்தில் வாழ்ந்தார்.  காலை ஐந்து மணிக்கே எழுந்து, ரயில் பாதை அருகே காலைக் கடன்களை முடித்தாக வேண்டும்.  ஒரு நாள் பிரசவ வலி ஏற்பட்டு, ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்துவிட்டு, ஆயாசத்தில் தண்டவாளத்தில் சாய, அடுத்த வந்த நீலகிரி எக்ஸ்ப்ரஸ் அவளைச் சிதைக்க, காலை ஏழு மணி அளவில் வந்தவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை எடுத்து, மருத்துவ மனையில் சேர்க்க, அது உயிர் பிழைத்ததா என்று தெரியாத நிலை.  இதிலிருந்து சில பகுதிகள் மட்டும் ஆசிரியரின் வார்த்தைகளில்: 

“… ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாங்க முடிந்த அவள், கக்கூஸ் போக கட்டணக்காசு கொடுக்க முடியாமல், இருட்டு கலையுமுன் காடு கழனி செல்ல வேண்டி வந்ததா?…. ஒரு கக்கூஸ் பிரச்சினை அவளது உயிரைப் பறித்தது நியாயமா?…
எல்லாமே இலவசம் என்று அறிவிக்கும் ஆட்சியாளர்கள், குப்பம்மாள் போன்றவர்கள் கழிப்பதற்காக ஒன்று செய்வதில்லையே? … 
தங்க நாற்கர சாலைகளுக்கும், மேம்பாலங்களுக்கும், பூங்காக்களுக்கும், புதிய தலைமைச் செயலகங்களுக்கும் அரசு-தனியார் ஒப்பந்தங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கொடிகளை முதலீடு செய்ய நினைப்பவர்கள், குப்பம்மளுக்கும், அவரது குழந்தைகளுக்கும், கவுரவமாக மலம் கழிப்பதற்கும், கழுவிக் கொள்வதற்கும், உறுதி செய்ய முடியாதா?  
பஸ் பிரயாணம் இலவசம் என்கிறார்கள், ஆனால் பேருந்து நிலையங்களில், தரமான குடிநீருக்கும், சுத்தமான கழிப்பறைக்கும் ஒன்றும் செய்வதில்லையே?  பரம ஏழை கூட, ஒரு பாட்டில் குடிநீரை தனியாரிடமிருந்து பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவலம் அல்லவா இன்றைக்கு சுட்டெரிக்கும் உண்மை!  எதற்கெல்லாமோ  சாலை மறியல்!  இந்த ஒரு காரணத்திற்காகவே தமிழகம் ஸ்தம்பிக்கக் கூடாதா?

இயற்கையாக சாகலாம்! இயற்கை சீற்றத்தினால் சாகலாம்! தீவிரவாதிகளிடம் போராடி சாகலாம்! வறுமையினால் சாகலாம்! உண்மைக்காக சாகலாம்.  ஆனால், கக்கூஸ் போக இடம் தேடி இருட்டுப் புதர்களில் பாம்பும் விஷப்பூச்சிகளும் கடித்தோ, ஓடும் ரயில்களில் அடிபட்டோ சாகக் கூடாது. ஆனால் பல குப்பம்மக்கள் இவ்வாறு செத்திருக்கிறார்கள் நம் இந்தியாவில்….
அடுத்து டவுன் டு எர்த் (DOWN TO EARTH) ஆங்கில மாத இதழை ஆதாரமாகக் கொண்டு, டி.எஸ்.ஜம்புநாதனின் “விளையாட்டுக்கள் முடிந்தன, வேதனைகள் முடியவில்லை”.   “குடிசைவாழ் மக்களும், பணித்திட்டங்களுக்காக சிறு மனைகளில் வசித்தவர்களும் காமன்வெல்த் விளையாட்டின் பொது எவ்வாறு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை அண்மையில் வெளியாகி இருக்கிறது.  மனித உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டிருக்கின்றன என்ற துயரக் கதையை அது வெளியிட்டிருக்கிறது.  ஒரு தோராயமான மதிப்பீட்டின்படி சுமார் இரண்டு லட்சம் மக்கள் இந்த காமன்வெல்த் விளையாட்டுத் திட்டங்களின் பொது வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். … சேரிகளற்ற உலகத்தரம் வாய்ந்த நகரமாக தில்லியை உருவாக்கும் மறைமுகமான திட்டமே சேரிகள் இடிக்கப்பட்டதற்கு உண்மையான காரணமாகும். … காமன்வெல்த் விளையாட்டுகளினால் முறையற்ற வழிகளில் செல்வம் குவித்தவர் சிலர் ஒரு புறம்.  தங்களின் சிறு குடிசைகளையும், பிழைப்பையும் கூட இழந்து வாழ வழியின்றித் தவிக்கும் மக்கம் மறுபுறம்.  பின் எப்படி எல்லோரும் இந்நாட்டு மன்னர்?

ஜம்புநாதனின் இரண்டாவது கட்டுரை – “பாதரச விளக்குகளா, பாதக ரச விளக்குகளா?”  “சி.எ ஃப்.எல். ஒளிர் விளக்குகளில் உள்ள பாதரசம் நரம்பு மண்டலம், சிறு நீரகங்கள், கல்லீரல், சுவாசப்பை ஆகிய உறுப்புகளை பாதிப்பது மட்டுமின்றி கை கால் அசைவு, நினைவாற்றல் ஆகியவற்றைக் கூட பாதிக்கக் கூடியது.  … இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சி.எ ஃப்.எல். விளக்கிலும் மூன்றிலிருந்து பன்னிரண்டு மில்லிகிராம் வரை பாதரசம் கலந்திருக்கிறது.  ஆனால் … அகில உலக தர அமைப்பின் தர நிர்ணயங்களின்படி, ஐந்து மில்லிகிராமிற்கு மேல் பாதரசம் இருக்கக் கூடாது.  அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் … ஒரு மில்லிகிராம் பாதரசத்துடன் இந்த விளக்குகளை உற்பத்தி செய்யமுடிகிறது…. இந்த விளக்குகள் உடைந்து பாதரச ஆவி வெளிப்பட்டால், வீட்டில் உள்ளவர் பாதிக்கப்படுவர். .. ஃ ப்யூஸ் ஆகி குப்பைக் கிடந்குகளுக்குச் சென்றால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.  2009 -ஆம் ஆண்டுவரை உற்பத்தி செய்யப்பட முப்பத்து கோடி விளக்குகள், கிட்டத்தட்ட 1750 கிலோ எடை உள்ள பாதரசம் கலந்த குப்பைகளை சேர்த்திருக்கும்…..” 

அடுத்து, ஆசிரியர் நாராயணனின் சிறப்புக் கட்டுரை – “துயரத்திலும் கண்ணியம் காக்கும் ஜப்பானியர்கள்”  அதிலிருந்து: 

“…இதுவரை, அதிகாரபூர்வமாக 24,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  ஆயிரக்கணக்கானவர்கள் வீடிழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு 300 பில்லியன்  டாலர்கள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.  ஜப்பானில் 55 அணு உலைகள் இருப்பதாக விக்கிப்பீடியா கூறுகிறது.  இவற்றில் ஆறு உலைகள் பதிப்படைந்ததால் மூடப்பட்டுள்ளன. 
குழாயில் வரும் குடிநீரில்கூட அணுக்கதிர்வீச்சு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.  பால் உட்பட ஒவ்வொரு உணவுப் பொருளும் சோதிக்கப்பட்ட பின்னரே விநியோகிக்கப்படுகின்றன.  
நல்ல குடிநீருக்குத் தட்டுப்பாடு.  ஆயினும் மக்கள் பதறவில்லை. அரசின் ஒவ்வொரு அறிவிப்பினையும் தெளிவாகக் கடைப்பிடிக்கின்றனர்.  ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர்.  
தட்டுப்பாடு இருப்பினும், வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை, தாமாக முன்வந்து சலுகை விலையில் விற்கின்றனர்…”

அடுத்து, தூரிகை எழுதிய “தலைவர்கள் எந்த சாதி?” அதிலிருந்து:  “விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக் குருவியைப்போல”  என்பது மிக மிக அப்போர்வமான உணர்வு.  மனக்கட்டுகளை உடைத்துக் கொண்டு ஜிவ்வென்று எம்பிப் பறக்கும் எழுச்சி.  இந்த அற்புதமான உணர்வோடு பிறருக்காகவே வாழ்ந்து காட்டியவர்களை அறிஞர்கள், பெருந்தகையோர், மக்கள் தலைவர்கள் என்று அழைக்கிறோம்…. இருக்கும் நிலையிலிருந்து வேறு உயர்ந்த நிலைக்கு மாறுவதைத்தான் முன்னேற்றம் என்கிறோம்.  சாதி என்ற மாறாத விலங்கை சர்வ சதா காலமும், பிறப்பிலிருந்து, இறந்த பின்பும் மாட்டிக் கொண்டு அலைந்தால், நாம் எப்படி முன்னேறுவது?…அறிஞர்கள் பூமியில் பிறந்த நாட்களையும், மறைந்த நாட்களையும் நினைந்து கோலாகலமாகக் கொண்டாடுவது நம் வழக்கமாகிவிட்டது.  எதற்காக, எவ்வாறு, நாம் கொண்டாடுகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்தால் மனம் வேதனைப் படுகிறது.  அன்று  உண்டு இல்லை என்று இந்த மகான்களை ஒருகை பார்த்து விடுகிறோம்.  அநியாயமாக அவர்களைச் சாதிக் கூண்டுகளில் ஏற்றுகிறோம். … சாதீயம், மதத்துவேசம், மொழி வெறி, இன வெறி என்பதற்கு எதிராகப் போரிட்டு உன்னதமாக வாழ்ந்தவர்களின் மேல் நமது அழுக்குகளைப் பூசலாமா? ….
ஆலன் ஆக்செல்ராடு ஆங்கிலத்தில் எழுதிய “Gandhi CEO ” என்ற நூலை தமிழாக்கம் செய்து தொடராக எழுதி வருகிறார் ஈரோடு பசுமை இயக்கத்தின் தலைவர், மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள்.  இன்னும் இது போன்ற பல சிறப்பான சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்.  மொத்தத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய, ஆதரிக்க வேண்டிய இதழ்.  வளர்க பாடத்தின் சிறப்பான சேவை!

நன்றி:  “பாடம்” 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: