மனதில் பதிந்தவை-8: காலச்சுவடு, ஜூன் 2011

காலச்சுவடு, உலகத் தமிழ் இதழ், ஜூன் 2011,  விலை ரூ.25/-, ஆசிரியர் சுந்தர ராமசாமியின் புதல்வர் கண்ணன் (இணையதளம்: http://www.kalachuvadu.com

முதலில் தலையங்கம், “ஒரு கெட்ட நிமித்தம்”.  1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தைப் புதிய அரசு புறக்கணித்திருப்பதும், சமச்சீர் கல்வித் திட்டத்தை ஓராண்டு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருப்பதும் (200 கோடி  ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டுள்ள புத்தகங்கள் வீணா?) கெட்ட நிமித்தங்களதாம்.  இத்தலையங்கத்திலிருந்து:

“…தமிழக பாரம்பரிய கட்டடக்கலையின் சுவடே இல்லாமல், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம் போல் கட்டப்பட்டிருக்கும் இந்த அமைப்பு தமிழக சட்டசபையாகத்   திகழ்வதற்குத் தகுதியற்றது.  வட இந்திய ஏழைத் தொழிலாளர்களைக் கேவலமாகச் சுரண்டி, காலனியவாதிகளின்  வழிமுறைகளைப் பின்பற்றி இக்கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் மிருகங்கள் போலக் கேவலமாக நடத்தப்பட்டது பற்றியும், கட்டடப்பணிகளின் பொது நடந்த பல விபத்துக்களும், மரணங்களும் மூடிமறைக்கப்பட்டது பற்றியும் எண்ணற்ற வதந்திகள் துர்தேவதைகள் போல உலவிக் கொண்டிருக்கின்றன.  இந்தக் குற்றச்சாட்டுகளை நடுநிலையோடு விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப் புதிய அரசு ஆவன செய்யவேண்டும்.  இக்கட்டடத்தை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கு முன்பாகவே, திரைப்படக் கலை இயக்குனர் தோட்டா தரணியைக் கொண்டு, இரண்டு கோடி ரூபாய் செலவில் செட் அமைத்துத் திறந்துவைக்க வேண்டிய கட்டாயம் கருணாநிதியின் தன்முனைப்பால் ஏற்பட்டது….
“….இந்தத் தேர்தலில் மக்கள் எத்தகைய மாற்றங்களைக் கோரி அதிமுகக் கூட்டணியை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் என்பதை ஜெயலலிதா சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.  கடந்த ஐந்தாண்டுக் காலத் திமுக அரசின் செயல்பாடுகளால் பலவிதங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜெயலலிதா முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.  தனக்கும், கருணாநிதிக்கும் இடையேயான கணக்கு வழக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இந்த வெற்றியைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வது அபத்தம்.  அரசின் எல்லாத் திட்டங்களையும் தன்னுடையதாக மாற்றிவிடும் கருணாநிதியின் மனநோயும், அதைச் சகிக்க முடியாமல் அழித்துவிடும் ஜெயலலிதாவின் எதிர்வினைகளும் இனியும் சகித்துக் கொள்ளக்கூடியதாக இல்லை.  மாற்றத்தை விரும்பி வாக்களித்திருக்கும் மக்கள், ஆட்சியாளர்களின் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களது கோபம் எத்தகைய சாம்ராஜ்யங்களையும் வீழ்த்தும் சக்திகொண்டது.  பலமுறை இது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  அதிகாரத்தில் இருப்பவர்கள் தம் ‘அதிரடி’ நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தொடங்குவதற்கு முன் இதைக் கவனத்தில் கொள்வது நல்லது.”
  
அடுத்து, “கண்ணோட்டம்” பகுதியில், ஆசிரியர் கண்ணனின் “அந்நியப்படுத்தும் சகிப்பின்மை”. அதிலிருந்து:

“…ஐ.நா.வின் குற்ற அறிக்கை இலங்கை அரசை மட்டுமல்ல, புலிகளையும் கண்டிக்கிறது.  ஐ.நா. அறிக்கையை முன்வைத்துப் பேசும்போது  இந்த விமர்சனத்தையும் சேர்த்தே ஏற்றுக்கொள்கிறோம்.  இதில் ஒரு பகுதியை மட்டும் முன்னிலைப்படுத்தி, பிற பகுதிகள் விவாதத்திற்கு வராமல் தடுப்பது பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களை அறியும் உரிமையைத் தடுப்பதாகும். பிறர் எதை அறியவேண்டும், எதை விவாதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை யாருக்கும் இல்லை.  அதேபோல ஈழப் போராட்டத்தின் தமிழகத்தின் ஆதரவாளர்கள் தம்மை ஈழ மக்களின் பிரதிநிதியாகக் கருதிக்கொள்வதும், அவர்கள் சார்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தமதாக்கிக் கொள்வதும் கேடானது.  பிரதிநிதித்துவ அரசியல் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.  எல்லாம் இழந்து நிற்பவர்களின் பிரதிநிதித்துவத்தையும் பிடுங்க முயல்வது கண்டனத்திற்குரியது….”

“…சகிப்பின்மையே கடந்த காலங்களில் நம்மைத் தனிமைப் படுத்தியது. அந்த மூதேவியை இனியும் சுமந்து திரிவது அழகல்ல.  பிறரின் கருத்துரிமையை மறுப்பவர்களுக்குச்  சமத்துவம், மனித உரிமை பற்றி எல்லாம் பேசும் அருகதையே இல்லை…”

“கடிதங்கள்” பகுதியில், வத்திராயிருப்பிலிருந்து தெ.சுந்தரமகாலிங்கம் எழுதியிருக்கும் கடிதத்திலிருந்து ஒரு பகுதி: “…உழைப்பின் மேன்மையைப் பறைசாற்ற வேண்டிய அரசு இரந்துண்டு வாழும் வாழ்வின் இழிவு குறித்த அக்கரையற்றவர்களாகக் குடிமக்களை மாற்றும் அவலம் மதிமயக்கும் பானங்களின் வலுவால் நீடிக்கிறது. வரலாறு தன் பக்கங்களில் ‘இருண்ட காலம்’ என்று பதிவுசெய்யும் காலம் இன்று ஒளிமயமானதெனப் பொய்யுரைப்போரால் நெஞ்சைப் புறந்தள்ளிக் கூறப்படுகிறது.”

அடுத்து, காலச்சுவடு புதிய வெளியீடு பற்றிய தகவல் – சுந்தர ராமசாமியின் நினைவோடை வரிசையில் எட்டாவது நூலான, “கு.அழகிரிசாமி”.   முதல் பதிப்பு ஏப்ரல் 2011.   விலை ரூ.50௦/-. அதைப் பற்றி: “மென்மையும், நேரடியுமான சிறுகதைகள் மூலம் தமிழில் முக்கிய இடத்தைப் பெற்றவரான கு.அழகிரிசாமியின் இயல்புகளையும், எழுத்துச் செயல்பாட்டின் பின்னணிகளையும் இந்நூல் முன்வைக்கிறது.  அழகிரிசாமியைச் சந்திப்பதற்கு முன்பே அவரது கதைகளைத் தேடி வாசித்த  வாசகரான சுந்தர ராமசாமி நேரடிப்  பழக்கத்தில் அவருடன் கொண்டிருந்த நட்பு நெருக்கமானது; இலக்கியம் சார்ந்தது, சமரசமற்றது.”

அடுத்து, “சு.ரா. 80”   விழாவின் நிகழ்ச்சி நிரல்.  ஜூன் மூன்று முதல் ஐந்து தேதி வரை கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் சிறப்பாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.  கருத்தரங்கில் நடைபெற்ற விவாதங்கள், கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் பற்றி அறிய ஆவல்.

ஆசிரியர் கண்ணனின், தமிழகச் சட்ட மன்றத் தேர்தல் பற்றிய கட்டுரை, “சதுரங்க ஆட்டங்களின் முடிவு”. அதிலிருந்து: “கருணாநிதியின் குடும்பம் – இச்சொல்லின் மூலப் பொருளில் – ஒரு மாஃபியா.   அதிகார அமைப்புகளை ஊடுருவிப் பணத்தையும், சட்டத்திற்குப் புறம்பான அதிகாரத்தையும் குவிப்பது மாஃபியா பாணி.  ‘காட்பாதர்’ நாவலையும், திரைப்படத்தையும் அனுபவித்தவர்களுக்கு எண்ணற்ற ஒப்பீடுகள் தோன்றும். நீதித் துறையும், போலீஸ் அமைப்பையும் ஊடுருவுவது, அரசியல்வாதிகளைக் குடும்பத் தொண்டர்களாக்குவது , போலீசாரையே குற்றங்களுக்கு உடந்தையாகுவது, ஊடங்களை ஊழலில் கரைத்துச் செய்திகளை வரவழைப்பது, சட்டம் அண்டிவரும்போது இடைப்பட்ட கண்ணிகளைத் தீர்த்துக்கட்டுவது, உதவி தேடி வருபவர்களை ‘நட்புக்கு’ அடிமையாக்குவது, குடும்பம் பல கிளைகளாகப் பிரிந்து பணத்தைச் சுருட்ட சினிமா, சூதாட்டம், பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் கைவைப்பது, பாதிரிகளைக் கைப்பாவைகளாக்குவது, கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாகச் ‘சலவை’ செய்வது எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. ‘காட்பாதரில்’ மாஃபியா குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்களிடையே வெளிப்படும் அன்பும், பாசமும், கரிசனமும் உண்மையானது.”

க.திருநாவுக்கரசின் கட்டுரை, “மாறிவரும் அமெரிக்க மனசாட்சி”யிலிருந்து: “… தீவிரவாதத்தை எந்தக் காரணம் கொண்டும் ஒருவர் ஆதரிக்க முடியாது.  ஆனால் அது உருவாவதற்கான காரணத்தை ஒருவர் புரிந்துகொண்டாக வேண்டும்.  இந்தப் புரிதல் இல்லாமல் எந்தவிதமான தீவிரவாதத்தையும் ஒழிக்க முடியாது. மேலும், அரசு தீவிரவாதத்தை ஆதரித்துக் கொண்டே, அரசு-சாரா இயக்கங்களின் தீவிரவாதத்தை மட்டும் கண்டிப்பது என்பது இரு தீவிரவாதங்களும் (அரசு மற்றும் அரசு சாரா) மேலும், மேலும் அதிகரிக்கவே உதவும்….”

சங்கீத ஸ்ரீராமின் தொடர்கட்டுரையான “பசுமைப் புரட்சியின் கதையின்” பதினெட்டாவதும், இறுதியுமான கட்டுரை, “வேளாண்மையின் இறுதி லட்சியம் எது?”.  அதிலிருந்து: 

“… மனித மனம் உழன்று வரும் இரைச்சல், இல்லாத ஒன்றை உருவாக்கி, எதையோ சாதிக்க வேண்டும் என்னும் ஆழமற்ற அகங்கார இலட்சியங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடுதான், இன்று நாம் பார்க்கும் சூழலியல் நெருக்கடி (ecological crisis). இதன் நீட்சிதான் வேளாண் நெருக்கடியும் கூட.

நாம் எதற்காக வாழ்கிறோம் என்னும் கேள்விக்கு ஆழமான, அர்த்தமுள்ள விடை காண இந்தியாவின் பண்டைய நூல்கள் முயல்கின்றன. “உன்னுடைய இளமை, பணம், புகழ் எல்லாம் வெறுமையானது; பொய்யானது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு மரத்தடியில் போய்  உட்கார்ந்து தியானம் செய், உண்மை எதுவென விளங்கும்” என்று ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் கூறுகிறார். இந்தக் கருத்து பல தத்துவ நூல்களிலும், தரிசனங்களிலும் எதிரொலிக்கிறது.  இதைத்தான் ஃபுக்குவோக்கா, ‘ஒன்றும் செய்யாமல் இருத்தல்’ (do nothing ) என்னும் தத்துவமாக வாழ்ந்து காட்டினார். தனது விவசாயத்தையே ஒருவகையான தியானமாகப் பாவித்து, பல்கலைக்கழகத்தில் படித்த கருத்துக்களை எல்லாம் நிசப்தப்படுத்திவிட்டு, இயற்கையிடம் சரணடைந்து, உணர்வுபூர்வமாக அறிவித்தார். (இந்தக் கட்டுரையில் அவரது ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூலிலிருந்து பல பகுதிகள் தரப்பட்டுள்ளன.)…

…இயற்கை வேளாண்மை என்பது ஒருவனது அகத்திலிருந்துதான்  தொடங்கவேண்டும்.  மண் குணமாவதற்கும், மனித ஆன்மா குணமாவதற்கும் செயல்முறை ஒன்றுதான்.  அவை இரண்டும் ஒருங்கிணைந்த வாழ்க்கைமுறையையும், வேளாண்முறையையும்  நோக்கித்தான் நாம் பயணிக்க வேண்டும்.

ஃபுக்குவோக்கா கூறுவது போல ‘வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனித இனம் முழுமையடையும் வண்ணம் அதைப் பயன்படுத்துவதே.”

சேரனின் கட்டுரை, “சர்வதேச அமைப்பின் ஜனநாயக மறுப்பும், இரட்டை வேடமும்”.  அதிலிருந்து:

“ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், கட்டாய ஆள் சேர்ப்பு (சிறுவர்கள் உட்பட), வெளியேறாவண்ணம் மக்களைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தியமை, மீறித் தப்பிச் செல்ல முயன்றோரைக் கொன்றமை போன்ற விடுதலிப்புலிகளின் செயற்பாடுகள் விடுதலையின் அறத்தைச் சிதைத்தவை…விளைவு வழிமுறைகளை நியாயப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும், கோட்பாட்டிலும் விளைந்தவை. ஆனால் சர்வதேசச் சட்டங்களும், ஜெனிவா உடன்படிக்கைகளும் சர்வதேசப் போர் நெறிமுறைகளும், வழிமுறைகளின் நியாயப்பாட்டையும் தேவையையும் அடியொற்றி எழுந்தவை. விளைவு வழிமுறைகளை நியாயப்படுத்துமென வாதிடுவோமானால், அந்த வாதம் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கும் பொருந்திப்போகும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்….”

தேவிபாரதியின், “அற்ற குளத்து அற்புத மீன்கள்”; சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின், “ஒசாமா பின்லாடன் என்னும் பயனுள்ள பகைவன்”; மனோமோகன், ரவி சுப்பிரமணியன், பெருந்தேவி ஆகியோரின் கவிதைகள்; பா.வெங்கடேசனின் சிறுகதை, “வெறும் கேள்விகள்”; பா.செயப்பிரகாசத்தின், ஈழ இனப்படுகொலை பற்றிய கட்டுரை, “புதைகுழிக்கு அனுப்பப்படும் அறக்கோட்பாடுகள்”; செல்லப்பாவின், “பிரச்சாரப் பொதிசுமக்கும் மரக்குதிரை” (அழகர்சாமியின் குதிரை திரைப்படம் பற்றிய விமர்சனம்); தவசிக் கருப்பசாமியின், “அருங்கூத்து” நூலின் மதிப்புரை;  இந்திய நாடக உலகில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்திய பாதல் சர்க்காருக்கும், ‘கணையாழி’யைத் தோற்றுவித்த கஸ்தூரி ரங்கனுக்கும் அஞ்சலி;  ஏப்ரல் பதினைந்து அன்றும், மே பதினைந்து அன்றும் மதுரையில் நடைபெற்ற “அற்றைத் திங்கள்” பற்றிய குறிப்புகள் என்று பல சுவையான அம்சங்கள்.

காலச்சுவடு ஒரு சிறப்பான மாத இதழ் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. 

நன்றி: “காலச்சுவடு” மற்றும் அதன் ஆசிரியர் கண்ணன் அவர்கள்.    
  

   
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: