மனதில் பதிந்தவை-10: உயிர் எழுத்து, ஜூலை 2011

உயிர் எழுத்து,  படைப்பிலக்கியத்தின் குரல், தமிழ் இலக்கிய மாத இதழ், ஜூலை 2011, ஆசிரியர் – சுதீர் செந்தில், விலை ரூ.20 /- 
———
நண்பர், கவிஞர் ஜனநேசன் மூலமாக அறிமுகமான இதழ்.  காலச்சுவடும், உயிர்மையும், தீரானதியும்தான் சிறந்த தமிழ் இலக்கிய இதழ்கள் என்றெண்ணி இருந்தேன்.  நான்காவதாக ஒரு இதழும் இருக்கிறது என்பதை நண்பர் ஜனநேசன் மூலம் அறிந்துகொண்டேன்.

இந்த இதழோடு நான்காண்டுகள் நிறைவுபெற்று, ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது.

முதலில் பெண்ணியம் பற்றிய கொற்றவையின் பதினைந்து பக்கக் கட்டுரை. அதிலிருந்து: “யூனிசெ ஃப்பின் “உலக குழந்தைகள் நிலை – 2009″ அறிக்கைப்படி 20-24 வயதில் உள்ள 47 சதவிகித பெண்கள் பதினெட்டு வயதிற்கு முன்னரே திருமணம் செய்துகொண்டவர்கள்.  நாற்பது சதவிகித குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில்தான் நடப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது. 1994-ல் ஹையிஸ் என்பவரால் செய்யப்பட்ட ஆய்வில் ஐந்து நிமிடத்திற்கொருமுறை பெண்களுக்கெதிரான குற்றங்கள் நேர்வதாக பதிவாகியிருக்கிறது.”

அடுத்து, பாவண்ணனின் சிறுகதை, “கனவு”.  தற்போது வாடா மாநிலங்களில் நடைபெறும் “கௌரவக் கொலைகளை”  அடிப்படையாகக் கொண்ட கதை.

ந.முருகேசபாண்டியனின், “ராஜபார்ட்” எனும் நாடகம்.

எஸ்.வி.ராஜதுரையின், “பா பா ராம் ஷீப்”  எனும் கட்டுரை.  ராம்தேவின் சாகும்வரை உண்ணாவிரத நாடகத்தை சாடியிருக்கிறார்.  அதிலிருந்து:

“… இந்திய அரசு யந்திரம் ஊழல்மயமானது, இலஞ்ச லாவண்யங்களால்  கரைபட்டுள்ளது என்பதைக் குறைந்தது கருத்தளவிலேனும் ஆட்சியாளர்களை ஒத்துக்கொள்ள வைத்த அண்ணா ஹசாரேயின் இயக்கத்தையே பிசுபிசுக்கச் செய்துவிட்ட மத்திய அரசாங்கம், பாபா ராம்தேவ் விஷயத்தில் இன்னும் துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. மேற்சொன்ன இரண்டு சந்தர்ப்பங்களையும் எடுத்துக்கொண்டால் உண்மையான அவலத்துக்கு, துன்பத்துக்கு ஆளானவர்கள், கடந்த ஜூன் நான்காம் நாள் டெல்லி ராம் லீலா திடலில் கூடியிருந்த மக்கள்தான்; முன் அறிவிப்பில்லாமல் நள்ளிரவில் அத்திடளுக்குள் நுழைந்து பெண்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் மூர்க்கத்தனமாக அவர்களை அடித்துத் துவைத்த, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்த காவல்துறையினர், அதிரடிப்படையினர் ஆகியோரை ஏவிவிட்ட மத்திய அரசாங்கமும் டெல்லி நிர்வாகமும் கடும் கண்டனத்துக்குள்ளாக்கப்பட வேண்டியவை என்பதில் இரு கருத்துகள் இருக்க முடியாது…

…நக்குள்ள ஒரே வருத்தம் தனது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டத்தை நிறுத்த மாட்டேன் என சிங்கல்போல கர்ஜித்த ராம்தேவ், கடைசியில் கழுத்தறுபட்ட ஆடுபோலக் கதரியதுகூட அல்ல; மாறாக, புற்றுநோய், எய்ட்ஸ், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை குணப்படுத்தக்கூடிய சர்வரோக நிவாரணியான பிராணாயாமத்தால், கண்ணீர்ப்புகைக் குண்டுகளுக்குத் தாக்குப் பிடித்து நிற்க முடியவில்லையே என்பதுதான்!”

கவிதா முரளீதரன், ஆத்மார்த்தி, செல்மா பிரியதர்ஷன், நாஞ்சில் நாடன், சுதிர் பாரதி, ச,விஜயலட்சுமி, அ.வெண்ணிலா, பூர்ணா, தேவேந்திர பூபதி ஆகியோரின் கவிதைகள்.  ஏகப்பட்ட கவிதைகள்!

பொன்.சந்திரனின் பாதல் சர்க்காருக்கு அஞ்சலி.

இந்த இதழிலேயே எனக்கு மிகவும் பிடித்தது கலாப்பிரியாவின், “நினைவின் தாழ்வாரங்கள்” எனும் நூல் பற்றிய எஸ்.எஸ்.செங்கமலத்தின் விமர்சனம்.  அதிலிருந்து:

“கலாப்பிரியா பொதுவாகவே ஒரு கவிஞராகவே அறியப்பட்டவர். சுமார் நாற்பது ஆண்டு காலம் கவிதை உலகில் தீவிரமாக இயங்கி வருபவர். முதன்முதலாக உரைநடையில் கவனம் செலுத்தி தன இளமைக் கால ஞாபகங்களை நினைவுக் கேணியின் ஆழத்தில் இருந்து, இறைத்து, குளுமையாக, இனிமையாக, துல்லியமாக, அற்புதமாக “நினைவின் தாழ்வாரங்கள்” என்ற தொகுப்பில் பதிவு செய்துள்ளார்.  இளம்பிராயத்தில் நடந்த நிகழ்வுகளை சுமார் ஐம்பது தலைப்புகளில் (383 பக்கங்களில்) சொல்லி இருக்கிறார்.  சந்தியா பதிப்பகம், சென்னை, இந்த நூலை வெளியிட்டுள்ளது…”

இந்த இதழில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை, மதிகண்ணனின், “பேராசிரியர் முரளியின் சுட்டுவிரல்”.  அதிலிருந்து:

“…’மனித மனங்களில் இடம் பெற்றால்தான் நீங்கள் ஜெயித்ததாக அர்த்தம்’ என்றார்.  புறப்படும்போது அவர்  எதிரில் நின்று விடை பெற்றபோது, என் நெஞ்சில் அவரின் சுட்டுவிரலை வைத்து அழுத்தி, ‘நீங்கள் எத்தனை பேருக்கு எதிரில் நிற்கிறீர்கள் என்பதைவிட, நீங்கள் எத்தனை பேருக்கு உள்ளே நிற்கிறீர்கள் என்பதே முக்கியம். அதில் கவனம் செலுத்துங்கள்’ என்றார். ஒருசில நேரங்களில் என் செயல்பாடுகளின் வழியாக அவரின் சுட்டுவிரல் அழுத்தத்தை நான் உணர்ந்திருக்கிறேன்….”

அடுத்து, இளஞ்சேரலின், “நினைவில் நிற்கும் பகிர்தல்”.  கோவையில் மே 29 ஞாயிறன்று நடைபெற்ற புத்தக அறிமுக விழா பற்றி.  அதிலிருந்து:

“…தலைமையுரையாற்றிய வெ.மு.பொதியவெற்பன் … சிற்றிதழ்களின் இடையறாத இலக்கிய முயற்சிகள் தொடர்ந்த வண்ணமே இருப்பது நம்பிக்கையும் வலிமை தருவதாகவும் இருக்கிறது என்றார். ஃபிர்தௌஸ் ராஜகுமாரனின் ‘நகரமே ஓநாய்கள் ஊழையிடும் பாலைவனம் போல’ சிறுகதைத் தொகுப்பை க.அம்சப்பிரியா அறிமுகப்படுத்திப் பேசினார்…. சுதிர் செந்தில், லக்ஷ்மி சரவணக்குமாரின் “யாக்கை” எனும் சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்திப் பேசினார்.  ந.முருகேசபாண்டியன் “காட்டின் பெருங்கனவு” எனும் சிறுகதைத் தொகுப்பு பற்றிப் பேசினார்.

அடுத்து, “கடிதங்கள்” பகுதியில், தி.க.சி. அவர்களின் கடிதத்திலிருந்து ஒரு பகுதி மட்டும்:  “… உயிர் எழுத்து, ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்ற இதழ் என்பது மிக்க மகிழ்ச்சிக்கும், மன நிறைவுக்கும் உரியதாகும்.  கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அருமையான பயனுள்ள பன்முகமான இலக்கிய இதழைத் தொடர்ந்து நடத்துவதற்கு எவ்வளவு எதிர்நீச்சல் போட்டிருப்பீர்கள் என்பதை அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சிற்றிலக்கிய ஏடுகளில் எழுதி வருபவன் – 1952 முதல் 1962 வரை ‘சரஸ்வதி’ ஆசிரியர் வ.விஜய பாஸ்கரனுடன் நெருங்கிப் பழகியவன். அந்த இதழின் வளர்ச்சிக்கு என் ஆசான் வல்லிக்கண்ணன் அவர்களின் ஒத்துழைப்புடன் சிறு பங்களிப்புச் செய்தவன் என்ற முறையில், என்னால் நன்கு உணர முடிகிறது.  எனவே, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகும் உயிர் எழுத்து இதழுக்கும், அதன் ஆசிரியர் குழுத் தோழர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.  இதழின் நற்பணிகள், தமிழ் இலக்கியத்தையும், தமிழ் மக்களின் வாழ்வையும், எல்லா வகையிலும் மேம்படுத்த உதவுமாக! வளர்க; வெல்க!”

தி.க.சி. அவர்களின் மேலான உணர்வுகளை நானும் எதிரொலிக்கிறேன். உயிர் எழுத்து, வாழ்க! வளர்க!!

நன்றி: “உயிர் எழுத்து”    
            
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: