மனதில் பதிந்தவை-13: ஆனந்த விகடன், ஆகஸ்ட் 10, 2011

ஆனந்த விகடன், ஆகஸ்ட் 10, 2011   

நம்பர் ஒன் தமிழ் வார இதழ்

————————————————————-

முதலில், ப.திருமாவேலனின், “ரியல் ஹீரோஸ்”.  

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, டிராஃபிக் ராமசாமி, காவல்துறை அதிகாரி கண்ணப்பன், ஆஸ்ரா கார்க், தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உமாசங்கர், சகாயம் பற்றி.

என்னைப் பொறுத்தவரையில், டாக்டர் சுவாமியைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன: கோமாளி, குழப்பவாதி, அமெரிக்க சி.ஐ.ஏ.ஏஜென்ட். இப்படிப் பல. இவற்றில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரக் காரணமாய் இருந்தவர்; இவர் கிளப்பியிருக்காவிடில்  சில ஊழல்கள் முற்றிலுமாக மறைக்கப் பட்டிருக்கலாம் என்று கூறலாம். எனவே நிச்சயமாக அவர் ஒரு ஹீரோதான். 

அதுபோல் திரு ராமசாமி பொதுநல வழக்குகள் மூலம் பல அக்கிரமங்களை, அராஜகங்களை எதிர்த்துப் போராடியவர். அதனால் பல தொல்லைகளுக்கு ஆளானவர்.  சுயநலம் இல்லாமால் இப்படிப் பொது நலத்திற்காகப்  போராடிய இவரும் ஒரு ஹீரோதான். 

அரசியல்வாதிகளின் உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் கடமையாற்றிய காவல்துறை மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பாராட்டுக்குரியவர்களே; அவர்களையும் ஹீரோ என்று பாராட்டலாம்.

அடுத்து, டி.எல்.சஞ்ஜீவ்குமாரின்  , “பொருள்: சென்னை”. 

வட சென்னையைப் பற்றிய தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளன.  இதெற்கெல்லாம் விடிவு காலம் எப்போது என்ற கேள்விதான் என் மனதில் நிற்கிறது. காலம்தான் பதில் சொல்லவேண்டும். அதிலிருந்து:


“திருவொற்றியூர் கன்டெய்னர் கார்ப்பரேஷனில் மறைமுகமாக நடக்கும் கடத்தல், திருட்டு, மாமூல் எனத் தினமும் கொடிகளில் பணம் புரளும். கேடி, கோடி, வறுமை, வயிறு ஒட்டிய வாழ்க்கை என முற்று முரணான வாழ்வியலே வாடா சென்னையின் அடையாளம்….

அரசு யந்திரம் என்கிற ஒன்று அந்தப் பக்கம் இயங்குகிறதா என்பதே கேள்வி. அந்த அளவுக்குப் பாரா முகமும், பகீர் ரகமுமாக வன்மம் காட்டுகிறது வடசென்னை!…” 

அடுத்து, “விகடன் வரவேற்பறை”யிலிருந்து:  
ஆர்,சூடாமணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த முப்பத்தாறு சிறுகதைகளின் தொகுப்பு, “நாகலிங்க மரம்“.  பக்கம்: 328. விலை: ரூ.230/- வெளியீடு: “அடையாளம்”, புத்தாநத்தம். இதன் பின் இணைப்பாக சூடாமணியின் சிநேகிதி பாரதி மற்றும் எழுத்தாளர் அம்பை ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 

“இணையம் அப்டேட்ஸ் ” –
“சிலிக்கான் பள்ளத்தாக்கின் மாற்றங்களைப் புதுப் புது டெக்னிகல் வார்த்தைகள் சொல்லிப் புரியவைக்கிறார்கள்.” அனைவருக்கும் பயனுள்ள பல தகவல்கள்.

“வெளிநாடு போவோருக்கு”: 
  
“வேலை தேடி வெளிநாடு செல்வோருக்கு பயனுள்ள தளம்.

அடுத்து, ந.வினோத்குமாரின், “பாஸ்கோவின் இரும்புப் பிடி!” நம் நாட்டு இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் வெளிநாட்டார் நம் ஆட்சியாளர்களின் உதவியுடன் எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பாஸ்கோ.  இக்கட்டுரையிலிருந்து:

“… இடிஷாவில் உள்ள ஜகத் சிங் பூர் மாவட்டத்தில் பாரதீப் துறைமுகத்திலிருந்து பத்து கி.மீ. தூரத்தில் அமைய இருக்கிறது இந்த ‘பாஸ்கோ’ நிறுவனம். … “போஹாங் ஸ்டீல் கம்பெனி” என்பதன் சுருக்கம்தான் பாஸ்கோ.  முதலில் தென் கோரிய அரசிடம் இருந்த இந்த நிறுவனம் தற்போது தனியாரிடம்!…”

உலகிலேயே மிகச் சிறந்த இரும்புக் கனிமம் ஓடிஷாவின் சுந்தர்கர் மாவட்டத்திலுள்ள கண்டாதர் சுரங்கத்தில் நிறைந்திருக்கிறது. இங்கே இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவில் அந்நியமுதலீட்டுடன் (55,000 ௦௦௦கோடி) தொடங்கப்படும் திட்டம் இது! இருபது வருடங்களுக்குள் கனிமங்களை முழுதாகச் சுரண்டி எடுத்துவிடவேண்டும் என்பது இவர்களின் நோக்கம். ஒரு மெட்ரிக் டன் கனிமத்திற்கு ஓடிஸா அரசிற்கு இவர்கள் கொடுப்பது வெறும் அறுபது சென்ட்! வெளிச்சந்தையில் இதன் விலை சுமார் இருநூறு டாலர்!! இதைச் செறிவூட்டி விற்றால் இரண்டாயிரம் டாலர்!!! உயர்தரக் கனிமமாக மாற்றி விற்றால் சுமார் ஐயாயிரம் டாலர்!!!!  பன்னிரண்டு மில்லியன் டாலர் முதலீட்டில் இருநூறு பில்லியன் டாலரைக் கொள்ளைகொண்டு போகும் திட்டமிது.  சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாது, இப்பகுதியிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கிறது.  வனப் பாதுகாப்புச் சட்டம், கடற்கரை ஒழுங்கமைவு சட்டம் போன்ற பல சட்டங்கள் மீறப்பட்டுள்ளன.  எதிர்த்துப் போராடும் மக்களின் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன (சராசரியாக, ஒவ்வொரு ஆணின் மீதும் இருநூறு வழக்குகள்!).

அடுத்து, ஷங்கர் ராமசுப்பிரமணியனின், “நல்ல தங்காள்” என்கிற கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்து, அன்டன் பிரகாஷின், “வருங்காலத் தொழில் நுட்பம்”. இதிலிருந்து: “… சின்ன விஷயங்களில் புதுமையைப் புகுத்தி அதை TALK OF THE TOWN ஆக மாற்றிவிடலாம் என்பதற்கு சமீபத்திய உதாரணம்: iWatch.
(http://www.iwatchz.com /).  ஐ-பாட் நானோ என்பது ஆப்பிள் ஐ-பாட் குடும்பத்தின் ஒரு உறுப்பினர். சதுர வடிவில் இருக்கும் இந்த இசைப் பேழை சாதனத்தில், மிகவும் அடிப்படையான மென்பொருட்கள் சிலவும் உண்டு. உதாரணத்துக்கு, புகைப்படங்களைச் சேமித்துப் பார்க்க முடிகிற வசதி. கடிகார மென்பொருளும் உண்டு.  அந்த மென்பொருளை இயக்கினால், ஐ-பாட் நானோ பார்ப்பதற்கு கைக்கடிகாரம்போல் இருக்கும் என்பதைப் பார்த்து அதற்கு STRAP ஒன்றைச் செய்திருக்கிறது இந்த நிறுவனம். இதை வாங்கி, ஐ-பாட் நானோவை அதில் செருகினால் போதும், கைக்கடிகாரம் தயார்!…”

அடுத்து, வாலியின் தொடர் கட்டுரை, “நினைவு நாடாக்களின்” நாற்பத்திரெண்டாவது பகுதியிலிருந்து இசைஞானி இளையராஜா பற்றி: “…அவர் – கண்மூடித்தனமாய்க் கை கூப்பிக் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் ஆண்மீகவாதியல்ல. தன்னுள், தன்னைத் தேடி, அந்தத் ‘தன்’னிலேயே, தன்னைக் கரைத்துக் கொண்ட சித்தர் அவர்!  ஒரு நூற்றாண்டுக் காலம் அருள் பிலிற்றி நின்ற காஞ்சிப் பெரியவாளால், பெரிதும் போற்றப்பட்டவர் இளையராஜா…”

அடுத்து, எஸ்.கலீல்ராஜாவின், “மரணம் தப்பினால் மரணம்”. அதிலிருந்து:
“…கடல், காற்று, நிலம் என்று மூன்றிலும் அதிவேகமாகச் செயல்படும் அமெரிக்கக் கடற்படையின் சிறப்பு அதிரடிப்படைதான் – சீல்.  Sea, Air, Land ஆகியவற்றின் சுருக்கம்தான் SEAL.  இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட அனுபவங்களால், எதிரி-நண்பன் எனப் பாரபட்சம் காட்டாமல் அனைத்து நாடுகளுக்குள்ளும் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் குறித்து யோசித்தது அமெரிக்கா. அதைத் தொடர்ந்து, வியட்நாம் போரின்போது உருவாக்கப்பட்ட அமைப்புதான் சீல்.  மூக்கை நுழைப்பது என்பது அடுத்த நாடுகளின் நிலவரங்களைத் தெரிந்துகொள்வது மட்டுமல்ல. படுகொலை, சதித் திட்டங்கள் செய்வதன் மூலம், அரசியல் நிலைமைகளை அமெரிக்காவுக்குச் சாதகமாக மாற்றி அமைப்பதும் கூட. பிற நாடுகளின் எல்லைப்புறத்தில் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்துவது, எதிரி நட்டு முக்கியத் தலைகளைக் காலி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சீல், பின்னாட்களில் தீவிரவாதிகளைக் கொல்வது, போதைக் கடத்தல்காரர்களைப் போட்டுத்தள்ளுவது, பணயக் கைதிகளை விடுவிப்பது, விமானக் கடத்தலைத் தடுப்பது எனப் பல்வேறு பணிகளுக்காக விரிவாக்கப்பட்டது. உலகின் எந்த நாட்டு அதிரடிப் படைகளையும்விட, சீல் வீரர்களுக்கு மிக மிகக் கடினமான பயிற்சி கொடுக்கப்படும்….ஒசாமா என்கவுன்டருக்காக அதிகம் சத்தம் வராதபடி ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை வடிவமைத்தார்கள். ஒன்றுக்கு மூன்று ஹெலிகாப்டர்களை அனுப்பிவைத்தார்கள்.  பாகிஸ்தான் ரேடாரில் சிக்காதபடி மிகத் தாழ்வாகப் பறந்தார்கள். ஒசாமா வீட்டு மொட்டை மாடியில் இறங்கினார்கள். இருபது நிமிடங்களில் காரியத்தை முடித்தார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் சுதாரித்து, போர் விமானங்களை அனுப்பியபோது, அங்கே யாரும் இல்லை….”

அடுத்து, சார்லஸின், “ரெபேக்கா புரூக்ஸ்”.  
‘நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு’, ‘தி சன்’  ஆகிய  பத்திரிக்கையின் ஆசிரியராகவும், அதன் பின் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியவர். இந்தக் கட்டுரையிலிருந்து: 

“…ரெபக்கா புரூக்ஸ்… இங்கிலாந்து அரசியலில் புயல் கிளப்பி இருக்கும் அதிரடி மீடியா பெண்மணி.  இங்கிலாந்து அரசியலை அதிரவைத்த, தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தின் முக்கியப் புள்ளி இவர்தான். ரூபர்ட் முர்டோக்கின் மீடியா பேரரசில் நுழைந்து, சாம்ராஜ்யத்தின் லகானை இறுக்கிப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி, இன்று நாற்பத்தி மூன்று வயதில் சிறைவாசலையும் தொட்டு இருக்கும் ரெபக்கா புரூக்ஸ் கடந்து வந்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது!…  தனி மனுஷியாக மீடியாவில் நுழைந்து, அசுர பலம் காட்டினாலும்… தவறான அணுகுமுறையால் இப்போது தலைகுனிந்து நிற்கிறார் ரெபக்கா புரூக்ஸ்!”

கவின்மலரின், “கன்னித்தீவு கதையா கல்வி?”.  சமச்சீர் கல்விப் பிரச்சினை இன்னும் இழுத்துக் கொண்டே போகிறது.  பள்ளிகள் திறந்து மூன்று மாதங்கள் முடியப் போகிறது.  இன்னும் மாணவர்கள் கைக்கு புத்தகங்கள் போய்ச்சேர்ந்த பாடில்லை. இக்கட்டுரையிலிருந்து:

“… ‘பாடத் திட்டம் பொது.  ஆனால், பாடப் புத்தகம் பொது கிடையாது. அப்படியென்றால், அரசுப் பள்ளிகளில் ஒரு பாடப் புத்தகமும், மெட்ரிக் பள்ளிகளில் ஒரு பாடப் புத்தகமும் வைக்க அரசே வழிவகுக்குத் கொடுக்கிறது. எப்படியோ ஒருவகையில் மாணவர்களை இரண்டு வகையினராகப் பிரித்துவிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது’ என்கிறார் அ.மார்க்ஸ்’….” 

அடுத்து, சி.கார்த்திகேயனின், “தி ஸ்பிரிட் ஒப் மியூசிக்”.  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி  நஸ் ரீன் முன்னி கபூர் எழுதிய நூலிலிருந்து சில பகுதிகள் இக்கட்டுரையில்.    இந்த குறும்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளருடன் கடந்த நான்கு வருடங்களாக ரஹ்மான் அவ்வப்போது உரையாற்றியதன் தொகுப்பே இந்தப் புத்தகம்.

அடுத்து. OP-ED  பக்கத்திலிருந்து, இலங்கையில் நடந்த தமிழ் இனப் படுகொலை பற்றி சந்திரிகா குமாரதுங்கே கூறியது: “லண்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, தமிழர்கள் கொல்லப்படும் காட்சிகளைக் கண்டு என் இருபத்தெட்டு வயது மகன், தான் ஒரு சிங்களவன் என்று சொல்ல வெட்கப்படுவதாக என்னிடம் அழுதபடி கூறினான். இதே கருத்தை என் மகளும் தெரிவித்தாள்!” இதற்குமேல் என்ன வேண்டும்?


அடுத்து, விகடனுடன் இனிப்பான, “என் விகடனிலிருந்து”: 

நாஞ்சில் சம்பத், நாஞ்சில் நாடன் – நாகர்கோவிலைச் சேர்ந்த பல வி.ஐ.பிக்களின் பெயரோடு ஒட்டியே இருக்கும் ‘நாஞ்சில்’ பட்டம். நாஞ்சில் என்றால் ‘கலப்பை’ என்று அர்த்தம். தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு குமரி மாவட்டம் இருந்த காலகட்டத்தில் இங்கிருந்துதான் சமஸ்தானம் முழுவதற்கும் நெல் சென்றது.  அந்த அளவுக்கு நெல் சாகுபடியில் கொடிகட்டிப் பறந்த பகுதி இது.  ஆனால், இன்று விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறிவிட்டதால், அரிசி உற்பத்தியில் உள்ளூர் தேவைக்கே தடுமாறுகிறது நாஞ்சில் நாடு!”

“என் ஊர்” பகுதியில் எழுத்தாளர்  ம.காமுத்துரை தன் ஊர் அல்லிநகரம் பற்றி எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி இதிலிருந்து: “…இதுவரை பதினான்கு தொழில்கள் வரை மேற்கொண்ட இவர், கடந்த எட்டு வருடங்களாக அல்லிநகரத்தில் ஒரு வாடகைப் பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகிறார். … இதுவரை ஒன்பது சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கும் காமுத்துரை, தனது ஒன்பதாவது சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாக, அவர் நேசிக்கும் எழுத்தாளர் பூமணியின் பெயரையே சூட்டி இருக்கிறார்.  தற்போது இவர் எழுதி முடித்து விரைவில் வெளியாக இருக்கும் நாவலின் தலைப்பு, “ஆயா!”.  


Advertisements

One Response to “மனதில் பதிந்தவை-13: ஆனந்த விகடன், ஆகஸ்ட் 10, 2011”

  1. Admin Says:

    nalla vimarsanam.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: