மனதில் பதிந்தவை-7: உயிர்மை, மாத இதழ், ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன், ஜூன் 2011

உயிர்மை, மாத இதழ், ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன், ஜூன் 2011, விலை ரூ.20/-

————————————————————————————————————

என்னைப்போல் பலருக்கும் “உயிர்மை”, “காலச்சுவடு” மற்றும் “உயிர் எழுத்து” தற்போதைய தலைசிறந்த தமிழ் இலக்கிய இதழ்கள்.


உயிர்மை இதழில் மனுஷ்ய புத்திரனின் தலையங்கம் எப்போதுமே மிகச் சிறப்பாக, ஆழமாக இருக்கும்.  இந்த மாத இதழின் தலையங்கம், “ஒரு ‘புரட்சி’யின் கதை”.   அதிலிருந்து: 

“… எல்லாவற்றையும்விட தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் ஆழமான சில தார்மீக உணர்வுகள் அவமதிக்கப்பட்டன. … தன்னுடைய பல்வேறு குடும்பங்கள், கிளைக் குடும்பங்களின் அதிகாரப் போராட்டத்திற்கான மையமாக ஒரு அரசை, ஒரு கட்சியை மாற்றுவதன் அபாயம் குறித்து கருணாநிதி புரிந்துகொள்ளவே இல்லை.  இரண்டாவதாக, அரசியல் அதிகாரம் ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டதே தவிர, தனது குடும்பத்திற்கு வழங்கப்பட்டதல்ல என்பதை கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே ஏற்கவில்லை.  அவர்கள் கருணாநிதியின் பிள்ளைகளாகவோ உறவினர்களாகவோ இருப்பதாலேயே அதிர்காரம் செலுத்துவது தங்கள் பிறப்புரிமை என்று கருதினார்கள். அந்த உரிமையை நிலை நாட்டுவதற்காகவே ஒருவரை ஒருவர்  ரகசியமாக  வேட்டையாடினார்கள், சதிச் செயல்களில் ஈடுபட்டார்கள், தீ வைத்து எரித்தார்கள், வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டார்கள். ஒரு ஜனநாயக அமைப்பின் மக்களது உணர்ச்சிகளை நாம் அவமதிக்கிறோம் என்று யோசிக்கக்கூடிய ஒருவர்கூட அங்கு இல்லை.

ஒரு தேர்தலை யுத்தகால கெடுபிடியுடன் தேர்தல் கமிஷன் நடத்த வேண்டியிருந்தது என்றால் அது தமிழகத்தில்தான்.  ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தி.மு.க. இவ்வளவு பரவலாகவும், பகிரங்கமாகவும் செயல்படுத்த முயன்றதன் விளைவாக அது நேரான வழிமுறைகளில் சிறிதும் நம்பிக்கையற்ற ஒரு இயக்கம் என்கிற அவப்பெயரையே தேடித் தந்தது…. தி.மு.க. அரசு எல்லாவிதத்திலும் தனது நம்பகத்தன்மையையும், தார்மீக நெறிகளையும் இழந்ததன் மூலம் இப்போது அதிகாரத்தை இழந்திருக்கிறது….”
அடுத்து, “கடிதங்கள்”.  குடந்தையிலிருந்து நெய்வேலி தியாகராசன் எழுதிய கடிதமும் ( ஊழல் பற்றிய மனுஷ்ய புத்திரனின் மே மாத தலையங்கத்தைப்பற்றி), ஆர்.கோவிந்தசாமி எழுதிய கடிதமும் (மௌனியுடன் சந்திப்பு) என்னை ஈர்த்தன.  அவற்றிலிருந்து: 

“… தங்களின் தலையங்கம் ‘சுருக்’கென்று இதயத்தில் பாய்கிறது. ஊழல் என்பது அன்றும் சரி, இன்றும் சரி, அது ஒரு சிலந்தி வலை.  அதில் சிறிய பூச்சிகள் சிக்கிக்கொள்கின்றன. பெரிய பூச்சிகள் அறுத்துவிட்டுப் பறந்துவிடுகின்றன. இன்னும் சில நேரங்களில் அரசியல் துறையில் தனக்குப் பிடிக்காத பெரும்புள்ளிகளைப்  பழிவாங்கும் துருப்புச்சீட்டாக இது பயன்படுத்தப்படுகிறது. புராண, இதிகாச காலங்களிலும் இது கொடிகட்டிப்  பறந்திருக்கிறது  வெவ்வேறு வடிவங்களாய்….  ஊழல்வாதியைத் தீண்டத்தகாதவராக மக்கள்  ஒதுக்க வேண்டும். அந்தநிலை ஏற்பட்டால், ஓரளவு ஊழலை ஒழிக்கமுடியும். இவை அனைத்திற்கும் மக்கள் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.”

“தருமு சிவராமு குறித்த மணா கட்டுரை நன்று. அது குறித்து சில முக்கிய தகவல்கள். எங்கள் ஊருக்குப் பக்கம் உள்ள எழுத்தாளர் சிதம்பரம் ‘மௌனியை’ ஒரு தருணம் நானும் சந்தித்தேன்…. பூர்வாங்க விசாரணை நிறைவுற்று, இலக்கிய விசாரம் துவங்கிற்று.  “தமிழ்,  இலக்கியத்துக்கு உகந்த பாஷை இல்லை. அதை இலக்கியத்துக்கு உகந்ததாக மௌனி மாற்றினார் என்று கே.என்.எஸ். சொல்வார்” என்றார் மௌனி.  நான் “கே.என்.எஸ். என்றால் யார்?” என்றேன்.  “க.நா.சுப்ரமண்யம்”  என்றார் மௌனி.  நான், “ஏன், தமிழ் இலக்கியத்துக்கு உகந்த பாஷை இல்லை என்று சொல்லணும். திருக்குறள் நல்ல இலக்கியமாச்சே” என்றேன்.  மௌனி, “திருக்குறள் நீதிநூலே தவிர, இலக்கிய நூல் இல்லை” என்றார்.  “ஏதிலார் விலைமாதர் பெண்டிர் முயக்கம் குறித்து ‘இருட்டறையில் பிணந்தழீ  இயற்று’ என திருவள்ளுவர் சொல்கிறார்.  இத்திருக்குறளில் சிறுகதைக்கு வேண்டிய உருவம், உள்ளடக்கம், உத்தி நுட்பம், கருத்து எல்லாம் அபாரமா இலக்கியத்தன்மை பொருந்திக் கவித்துவமாகவும் இருக்கே’ எனவும், அவர் “உங்கள் பேர் என்ன சொன்னீங்க?” எனவும், நான் “என் பேர் ஆர்.கோவிந்தசாமி. ‘கனலரசன்’ற பேர்ல கவிதைகள் எழுதுவேன்  என்றேன். “உங்களைப்போல்தான் தருமு சிவராமு எழுதுவார். இலங்கைக்காரர். பிரம்மச்சாரி.” என்றார் …எனக்கு அப்போது தருமு சிவராமு குறித்து எதுவுமே தெரியாது. தற்போது மணா கட்டுரை மூலம் பழைய நினைவுகள் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தன….”
அடுத்து, மாயாவின், “ஒசாமா பின்லாடன்: இன்னும் முடியாத ஒரு பயங்கரவாதக் கனவு”.  அதிலிருந்து: 
   
“…அடக்குமுறையை எதிர்கொள்ளும்போதுகூட வன்முறையைக் கடைசி ஆயுதமாகப் பிரயோகிக்கவேண்டும் என்றும், அப்பாவிகளைக்   கொல்வதை  எந்த இடத்திலும் ஜிகாத் நியாயப்படுத்தவில்லை என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.  இந்த நூற்றாண்டில் புரிதலில் இரு வேறு துருவங்களையும் தொட்ட ஒரு வார்த்தை என்றால் அது ஜிகாத்.  அதில் ஒசாமா பின்லாடனின் அடிப்படைவாத விளக்கத்தைக் கேட்கவும் ஒரு கூட்டம் உருவாகியிருக்கிறது என்றால் அதற்கு அமெரிக்காவின் நூறு ஆண்டுகளைக் கடந்த உலக ஏகாதிபத்தியத்தைக் கட்டுப்படுத்தத் முடியாத இயலாமையே காரணம்.”

அடுத்து, ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதை, “அமெரிக்கத் தூதரகம்”.  தமிழில் தந்தவர் ஜி.குப்புசாமி.  அருமையான கதை.  ஆனால் இது போன்ற துயரம் வடியும் கதைகளை இப்போதெல்லாம் படிப்பதையே நான் தவிர்க்கிறேன்.

அடுத்து, தேவதச்சனின் கவிதைகள்.  அதிலிருந்து எனக்குப் பிடித்த ஒரு கவிதை மட்டும்.

கவிதை எழுதுவது
என்பது
ஒரு குண்டு பல்பை
ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது
முழுமையானதின்
அமைதியை ஏந்தி
பல்ப்
ஒளிவீசத் தொடங்குகிறது
ஒரு
மெல்இழை
நிசப்தத்தில்
எவ்வளவு நீள
நன்கணம்.
இன்னும் ஆரபி ஆத்ரேயா, சுகுமாரன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரது கவிதைகள்; இங்கே ஒன்றை நான் முக்கியமாகப் பதிவு செய்தாக வேண்டும்.  தற்காலத் தமிழ் கவிதைகள் பெரும்பாலும் என் களிமண் மண்டையில் ஏறுவதில்லை. ஒரு சில கவிதைகளே என்னை ஈர்க்கின்றன.  குறை என்னுடையதுதான். இந்த நேரத்தில் ஏனோ நான் எங்கோ வாசித்த ஆங்கிலக் கவிதை ஒன்றிலிருந்து சில வரிகள் அரைகுறையாக நினைவுக்கு வருகின்றன: 
In this prosaic world
There is no room for poetry 
The full moon is  
But a baked bread 
Call it a day for the poet.
இந்தக் கவிதை கருத்தை நான் ஏற்றுக்கொள்ளாத போதும், அந்த வரிகளுக்குப்பின் இருக்கும் வலியை என்னால் உணரமுடிகிறது.

அடுத்து, எஸ்.ராவின் “இன்றைய வானம்” பகுதியில் “எண்கள்  மட்டும் கணிதமல்ல”.  வித்தியாசமான, தனித்துவம் வாய்ந்த அவரது எழுத்து எனக்கு எப்போதுமே பிடிக்கும்.  அவரது பரவலான, ஆழமான வாசிக்கும் பழக்கம், மேலான சிந்தனைகள் அனைத்துமே பாராட்டத்தக்கவை. ஞானக்கூத்தனின் ஒரு சுவையான கவிதையோடு கட்டுரையை நிறைவு செய்துள்ளார்.

அடுத்து மூன்று அஞ்சலிக் கட்டுரைகள்.  மறைந்த சின்னக் குத்தூசி, மருத்துவர் தம்பையா, பாதல் சர்க்கார் ஆகியோருக்கு.   அ.முத்துலிங்கத்தின் “கூஸ்பெர்ரீஸ் ” என்கிற சிறுகதை. செக்காவின் அதே பெயருடைய கதையின் பின்னணியில்.  நன்றாக இருந்தது.
இன்னும் பிரபஞ்சனின் “பூ விற்போர் என்றும் இவர்களைச் சொல்வார்கள்”; “அழகர்சாமியின் குதிரை” எனும் தமிழ்ப்படத்தையும், ‘I am” எனும் இந்திப் படத்தைப் பற்றியும் சாரு  நிவேதிதாவின் கட்டுரை;  யமுனா ராஜேந்திரனின்    ஈழப்படுகொலை மீதான ஐ.நா. அறிக்கை பற்றிய கட்டுரை; தியடோர் பாஸ்கரனின் “கரையேறுமா நோவாவின் பேழை”, அ.ராமசாமியின் “அரசியல் குடும்பங்களின் இருண்ட காலம்”;  “சுஜாதா  விருதுகள் 2011”  பற்றிய பதிவுகள் படங்களுடன்.
உயிர்மை இதழ் தற்காலத் தமிழ் இலக்கிய இதழ்களில் சிறப்பான முதலிடத்தைப் பிடித்துள்ளதை என் போன்ற அரைகுறைகள் கூட எளிதில் உணரமுடிகிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்!
நன்றி: திரு.மனுஷ்ய புத்திரன் மற்றும் “உயிர்மை”  
  
Advertisements