கருத்துக்கள்-24: சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்கள்

… மாநிலக்  கல்வித்  திட்டத்தை  அப்படியே  தூக்கிவைத்து, இதுதான் சமச்சீர்க் கல்வித் திட்டம் என அறிவித்துவிடவில்லை.  சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தை எந்த அடிப்படையில் தயாரிக்கிறார்களோ, அதே தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன தேசியக் கலை திட்டத்தின்படிதான் சமச்சீர் கல்வி பாடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.    ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், பலகலைக் கழக, கல்லூரி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எனத் திறமை, தகுதி வாய்ந்தவர்கள்தான் இந்தப் பாடத் திட்டத்தை உருவாக்கித் தந்தார்கள்.  தரத்தில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. ‘ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறனுக்கேற்ப பாடங்கள் உருவாக்கப்படவேண்டும்’ எனும் குழந்தை மனநல நிபுணர்களின் கருத்தையும் விட்டுவைக்கவில்லை.  மாணவர்கள் படிப்படியாக, சீரான வளர்ச்சிப் போக்கில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் வகையில், புதிய முறையை உருவாக்கினோம்.  இதனால், அந்தந்த வயதுக்கு மீறிய பாடச் சுமை இல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.  அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளக்கூடிய வகையில், புதிய மதிப்பீட்டு முறை சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும், கேள்விகளுக்குப் பதில் எழுதும் முறையை மாற்றி, படித்த பாடத்தில் உள்ளவற்றைப் பகுப்பாய்வு செய்து, தீர்வுகளைச் சொல்லக்கூடிய முறை சேர்க்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாணவனின் ஆளுமைத் திறனையும் வளர்க்கக் கூடிய முறை இது… 

–  பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

நன்றி:  ஜூனியர் விகடன், ஜூலை 27 , 2011
Advertisements

கருத்துக்கள்-23: சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்கள்

“நான்கு ஆண்டுகளாக நடந்த விரிவான ஆய்வுக்குப்பின், சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில்லை என ஒரே நாளில் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாடப்புத்தகத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இரு நூறு கோடி ரூபாய் செலவில் ஒன்பது கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு, விநியோகிக்கத் தயாராக உள்ளன. இந்தப் புத்தகங்களை எரிக்கப் போகிறார்களா. கிட்டங்கியில் வைக்கப் போகிறார்களா; பாடப் புத்தகங்கள் இல்லாமல் இரண்டு மாதங்களாக மாணவர்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும், குழந்தைகள் மத்தியில் அரசு ஏன் அரசியல் செய்யவேண்டும்…”


– மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு ஏ.கே.கங்குலி


நன்றி: தினமலர், மதுரை, ஜூலை 22 , 2011

கருத்துக்கள்-22: சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்கள்

 ….

….நீதிமன்ற விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே, புத்தகங்களை அச்சடித்து, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது தமிழக அரசு.  இப்படி ஒரு அறிக்கையை அரசு நியமித்த குழுவினர் கொடுப்பார்கள் என்று நீதிமன்றமே எதிர்பார்க்கவில்லை.  அரசு மீது நம்பிக்கை வைத்து, நீதிமன்றம் அரசையே ஒரு குழு அமைக்கச் சொன்னது.  ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்தவர்களைக் கொண்டே குழு அமைத்தது அரசு.  அதனால்தான், இப்படி ஒரு மோசமான அறிக்கையை அவர்கள் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

‘இந்தப் பாடத் திட்டத்தைக் கற்றுக்கொள்ள முடியாது.  நகர்ப்புற, வசதியான மாணவர்களால் மட்டுமே முடியும்’ என்றெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.  இன்று குறைந்த வசதிகளை மட்டுமே கொண்டு, நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறும் கிராமப்புறப் பள்ளிகளை நான் காட்டவா?  மொத்தத்தில் இது பாடத் திட்டம் தொடர்பான பிரச்னையே இல்லை.  கல்விக் கட்டணக் கொள்ளை அடிக்கும் கும்பலுக்கும், நியாயமான சமச்சீரான கல்வி வேண்டும் என்பவர்களுக்குமான போராட்டம் என்பதுதான் உண்மை!.
 ….
 …மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் ஆயிரம் குறைகளையும், ஓட்டைகளையும் நான் கண்டுபிடித்து சுட்டிக் காட்டவா?….
….
மெட்ரிகுலேஷன் தேர்வுகளில்  சாய்ஸ் நிறைய உண்டு.  அதனால், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், ‘குறிப்பிட்ட பகுதியை மட்டுமே படி’ என்று மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.  அதை மட்டுமே படித்து தேர்வு எழுதுகிறான் மாணவன்.  ஆனால், சமச்சீர் கல்வியில் சாய்ஸ் கிடையாது. முழுப் புத்தகத்தையும் படித்து மெத்த அறிவு பெறுகிறான் மாணவன்……
–  மூத்த கல்வியாளரும், முன்னாள் துணை வேந்தருமான வசந்தி தேவி அவர்கள், ஜூனியர் விகடன், ஜூலை 17 , 2001.
நன்றி:  வசந்தி தேவி அவர்கள் மற்றும் ஜூனியர் விகடன்