மனதில் பதிந்தவை-13: ஆனந்த விகடன், ஆகஸ்ட் 10, 2011

ஆனந்த விகடன், ஆகஸ்ட் 10, 2011   

நம்பர் ஒன் தமிழ் வார இதழ்

————————————————————-

முதலில், ப.திருமாவேலனின், “ரியல் ஹீரோஸ்”.  

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, டிராஃபிக் ராமசாமி, காவல்துறை அதிகாரி கண்ணப்பன், ஆஸ்ரா கார்க், தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உமாசங்கர், சகாயம் பற்றி.

என்னைப் பொறுத்தவரையில், டாக்டர் சுவாமியைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன: கோமாளி, குழப்பவாதி, அமெரிக்க சி.ஐ.ஏ.ஏஜென்ட். இப்படிப் பல. இவற்றில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, பல ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரக் காரணமாய் இருந்தவர்; இவர் கிளப்பியிருக்காவிடில்  சில ஊழல்கள் முற்றிலுமாக மறைக்கப் பட்டிருக்கலாம் என்று கூறலாம். எனவே நிச்சயமாக அவர் ஒரு ஹீரோதான். 

அதுபோல் திரு ராமசாமி பொதுநல வழக்குகள் மூலம் பல அக்கிரமங்களை, அராஜகங்களை எதிர்த்துப் போராடியவர். அதனால் பல தொல்லைகளுக்கு ஆளானவர்.  சுயநலம் இல்லாமால் இப்படிப் பொது நலத்திற்காகப்  போராடிய இவரும் ஒரு ஹீரோதான். 

அரசியல்வாதிகளின் உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் கடமையாற்றிய காவல்துறை மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பாராட்டுக்குரியவர்களே; அவர்களையும் ஹீரோ என்று பாராட்டலாம்.

அடுத்து, டி.எல்.சஞ்ஜீவ்குமாரின்  , “பொருள்: சென்னை”. 

வட சென்னையைப் பற்றிய தகவல்கள் அச்சம் தருவதாக உள்ளன.  இதெற்கெல்லாம் விடிவு காலம் எப்போது என்ற கேள்விதான் என் மனதில் நிற்கிறது. காலம்தான் பதில் சொல்லவேண்டும். அதிலிருந்து:


“திருவொற்றியூர் கன்டெய்னர் கார்ப்பரேஷனில் மறைமுகமாக நடக்கும் கடத்தல், திருட்டு, மாமூல் எனத் தினமும் கொடிகளில் பணம் புரளும். கேடி, கோடி, வறுமை, வயிறு ஒட்டிய வாழ்க்கை என முற்று முரணான வாழ்வியலே வாடா சென்னையின் அடையாளம்….

அரசு யந்திரம் என்கிற ஒன்று அந்தப் பக்கம் இயங்குகிறதா என்பதே கேள்வி. அந்த அளவுக்குப் பாரா முகமும், பகீர் ரகமுமாக வன்மம் காட்டுகிறது வடசென்னை!…” 

அடுத்து, “விகடன் வரவேற்பறை”யிலிருந்து:  
ஆர்,சூடாமணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த முப்பத்தாறு சிறுகதைகளின் தொகுப்பு, “நாகலிங்க மரம்“.  பக்கம்: 328. விலை: ரூ.230/- வெளியீடு: “அடையாளம்”, புத்தாநத்தம். இதன் பின் இணைப்பாக சூடாமணியின் சிநேகிதி பாரதி மற்றும் எழுத்தாளர் அம்பை ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 

“இணையம் அப்டேட்ஸ் ” –
“சிலிக்கான் பள்ளத்தாக்கின் மாற்றங்களைப் புதுப் புது டெக்னிகல் வார்த்தைகள் சொல்லிப் புரியவைக்கிறார்கள்.” அனைவருக்கும் பயனுள்ள பல தகவல்கள்.

“வெளிநாடு போவோருக்கு”: 
  
“வேலை தேடி வெளிநாடு செல்வோருக்கு பயனுள்ள தளம்.

அடுத்து, ந.வினோத்குமாரின், “பாஸ்கோவின் இரும்புப் பிடி!” நம் நாட்டு இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் வெளிநாட்டார் நம் ஆட்சியாளர்களின் உதவியுடன் எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு பாஸ்கோ.  இக்கட்டுரையிலிருந்து:

“… இடிஷாவில் உள்ள ஜகத் சிங் பூர் மாவட்டத்தில் பாரதீப் துறைமுகத்திலிருந்து பத்து கி.மீ. தூரத்தில் அமைய இருக்கிறது இந்த ‘பாஸ்கோ’ நிறுவனம். … “போஹாங் ஸ்டீல் கம்பெனி” என்பதன் சுருக்கம்தான் பாஸ்கோ.  முதலில் தென் கோரிய அரசிடம் இருந்த இந்த நிறுவனம் தற்போது தனியாரிடம்!…”

உலகிலேயே மிகச் சிறந்த இரும்புக் கனிமம் ஓடிஷாவின் சுந்தர்கர் மாவட்டத்திலுள்ள கண்டாதர் சுரங்கத்தில் நிறைந்திருக்கிறது. இங்கே இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவில் அந்நியமுதலீட்டுடன் (55,000 ௦௦௦கோடி) தொடங்கப்படும் திட்டம் இது! இருபது வருடங்களுக்குள் கனிமங்களை முழுதாகச் சுரண்டி எடுத்துவிடவேண்டும் என்பது இவர்களின் நோக்கம். ஒரு மெட்ரிக் டன் கனிமத்திற்கு ஓடிஸா அரசிற்கு இவர்கள் கொடுப்பது வெறும் அறுபது சென்ட்! வெளிச்சந்தையில் இதன் விலை சுமார் இருநூறு டாலர்!! இதைச் செறிவூட்டி விற்றால் இரண்டாயிரம் டாலர்!!! உயர்தரக் கனிமமாக மாற்றி விற்றால் சுமார் ஐயாயிரம் டாலர்!!!!  பன்னிரண்டு மில்லியன் டாலர் முதலீட்டில் இருநூறு பில்லியன் டாலரைக் கொள்ளைகொண்டு போகும் திட்டமிது.  சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்லாது, இப்பகுதியிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கிறது.  வனப் பாதுகாப்புச் சட்டம், கடற்கரை ஒழுங்கமைவு சட்டம் போன்ற பல சட்டங்கள் மீறப்பட்டுள்ளன.  எதிர்த்துப் போராடும் மக்களின் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன (சராசரியாக, ஒவ்வொரு ஆணின் மீதும் இருநூறு வழக்குகள்!).

அடுத்து, ஷங்கர் ராமசுப்பிரமணியனின், “நல்ல தங்காள்” என்கிற கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்து, அன்டன் பிரகாஷின், “வருங்காலத் தொழில் நுட்பம்”. இதிலிருந்து: “… சின்ன விஷயங்களில் புதுமையைப் புகுத்தி அதை TALK OF THE TOWN ஆக மாற்றிவிடலாம் என்பதற்கு சமீபத்திய உதாரணம்: iWatch.
(http://www.iwatchz.com /).  ஐ-பாட் நானோ என்பது ஆப்பிள் ஐ-பாட் குடும்பத்தின் ஒரு உறுப்பினர். சதுர வடிவில் இருக்கும் இந்த இசைப் பேழை சாதனத்தில், மிகவும் அடிப்படையான மென்பொருட்கள் சிலவும் உண்டு. உதாரணத்துக்கு, புகைப்படங்களைச் சேமித்துப் பார்க்க முடிகிற வசதி. கடிகார மென்பொருளும் உண்டு.  அந்த மென்பொருளை இயக்கினால், ஐ-பாட் நானோ பார்ப்பதற்கு கைக்கடிகாரம்போல் இருக்கும் என்பதைப் பார்த்து அதற்கு STRAP ஒன்றைச் செய்திருக்கிறது இந்த நிறுவனம். இதை வாங்கி, ஐ-பாட் நானோவை அதில் செருகினால் போதும், கைக்கடிகாரம் தயார்!…”

அடுத்து, வாலியின் தொடர் கட்டுரை, “நினைவு நாடாக்களின்” நாற்பத்திரெண்டாவது பகுதியிலிருந்து இசைஞானி இளையராஜா பற்றி: “…அவர் – கண்மூடித்தனமாய்க் கை கூப்பிக் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் ஆண்மீகவாதியல்ல. தன்னுள், தன்னைத் தேடி, அந்தத் ‘தன்’னிலேயே, தன்னைக் கரைத்துக் கொண்ட சித்தர் அவர்!  ஒரு நூற்றாண்டுக் காலம் அருள் பிலிற்றி நின்ற காஞ்சிப் பெரியவாளால், பெரிதும் போற்றப்பட்டவர் இளையராஜா…”

அடுத்து, எஸ்.கலீல்ராஜாவின், “மரணம் தப்பினால் மரணம்”. அதிலிருந்து:
“…கடல், காற்று, நிலம் என்று மூன்றிலும் அதிவேகமாகச் செயல்படும் அமெரிக்கக் கடற்படையின் சிறப்பு அதிரடிப்படைதான் – சீல்.  Sea, Air, Land ஆகியவற்றின் சுருக்கம்தான் SEAL.  இரண்டாம் உலகப் போரின்போது ஏற்பட்ட அனுபவங்களால், எதிரி-நண்பன் எனப் பாரபட்சம் காட்டாமல் அனைத்து நாடுகளுக்குள்ளும் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் குறித்து யோசித்தது அமெரிக்கா. அதைத் தொடர்ந்து, வியட்நாம் போரின்போது உருவாக்கப்பட்ட அமைப்புதான் சீல்.  மூக்கை நுழைப்பது என்பது அடுத்த நாடுகளின் நிலவரங்களைத் தெரிந்துகொள்வது மட்டுமல்ல. படுகொலை, சதித் திட்டங்கள் செய்வதன் மூலம், அரசியல் நிலைமைகளை அமெரிக்காவுக்குச் சாதகமாக மாற்றி அமைப்பதும் கூட. பிற நாடுகளின் எல்லைப்புறத்தில் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்துவது, எதிரி நட்டு முக்கியத் தலைகளைக் காலி செய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சீல், பின்னாட்களில் தீவிரவாதிகளைக் கொல்வது, போதைக் கடத்தல்காரர்களைப் போட்டுத்தள்ளுவது, பணயக் கைதிகளை விடுவிப்பது, விமானக் கடத்தலைத் தடுப்பது எனப் பல்வேறு பணிகளுக்காக விரிவாக்கப்பட்டது. உலகின் எந்த நாட்டு அதிரடிப் படைகளையும்விட, சீல் வீரர்களுக்கு மிக மிகக் கடினமான பயிற்சி கொடுக்கப்படும்….ஒசாமா என்கவுன்டருக்காக அதிகம் சத்தம் வராதபடி ப்ளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை வடிவமைத்தார்கள். ஒன்றுக்கு மூன்று ஹெலிகாப்டர்களை அனுப்பிவைத்தார்கள்.  பாகிஸ்தான் ரேடாரில் சிக்காதபடி மிகத் தாழ்வாகப் பறந்தார்கள். ஒசாமா வீட்டு மொட்டை மாடியில் இறங்கினார்கள். இருபது நிமிடங்களில் காரியத்தை முடித்தார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் சுதாரித்து, போர் விமானங்களை அனுப்பியபோது, அங்கே யாரும் இல்லை….”

அடுத்து, சார்லஸின், “ரெபேக்கா புரூக்ஸ்”.  
‘நியூஸ் ஆஃப் தி வேர்ல்டு’, ‘தி சன்’  ஆகிய  பத்திரிக்கையின் ஆசிரியராகவும், அதன் பின் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியவர். இந்தக் கட்டுரையிலிருந்து: 

“…ரெபக்கா புரூக்ஸ்… இங்கிலாந்து அரசியலில் புயல் கிளப்பி இருக்கும் அதிரடி மீடியா பெண்மணி.  இங்கிலாந்து அரசியலை அதிரவைத்த, தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தின் முக்கியப் புள்ளி இவர்தான். ரூபர்ட் முர்டோக்கின் மீடியா பேரரசில் நுழைந்து, சாம்ராஜ்யத்தின் லகானை இறுக்கிப் பிடித்து ஆதிக்கம் செலுத்தி, இன்று நாற்பத்தி மூன்று வயதில் சிறைவாசலையும் தொட்டு இருக்கும் ரெபக்கா புரூக்ஸ் கடந்து வந்த பாதை மிகவும் சுவாரஸ்யமானது!…  தனி மனுஷியாக மீடியாவில் நுழைந்து, அசுர பலம் காட்டினாலும்… தவறான அணுகுமுறையால் இப்போது தலைகுனிந்து நிற்கிறார் ரெபக்கா புரூக்ஸ்!”

கவின்மலரின், “கன்னித்தீவு கதையா கல்வி?”.  சமச்சீர் கல்விப் பிரச்சினை இன்னும் இழுத்துக் கொண்டே போகிறது.  பள்ளிகள் திறந்து மூன்று மாதங்கள் முடியப் போகிறது.  இன்னும் மாணவர்கள் கைக்கு புத்தகங்கள் போய்ச்சேர்ந்த பாடில்லை. இக்கட்டுரையிலிருந்து:

“… ‘பாடத் திட்டம் பொது.  ஆனால், பாடப் புத்தகம் பொது கிடையாது. அப்படியென்றால், அரசுப் பள்ளிகளில் ஒரு பாடப் புத்தகமும், மெட்ரிக் பள்ளிகளில் ஒரு பாடப் புத்தகமும் வைக்க அரசே வழிவகுக்குத் கொடுக்கிறது. எப்படியோ ஒருவகையில் மாணவர்களை இரண்டு வகையினராகப் பிரித்துவிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது’ என்கிறார் அ.மார்க்ஸ்’….” 

அடுத்து, சி.கார்த்திகேயனின், “தி ஸ்பிரிட் ஒப் மியூசிக்”.  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி  நஸ் ரீன் முன்னி கபூர் எழுதிய நூலிலிருந்து சில பகுதிகள் இக்கட்டுரையில்.    இந்த குறும்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளருடன் கடந்த நான்கு வருடங்களாக ரஹ்மான் அவ்வப்போது உரையாற்றியதன் தொகுப்பே இந்தப் புத்தகம்.

அடுத்து. OP-ED  பக்கத்திலிருந்து, இலங்கையில் நடந்த தமிழ் இனப் படுகொலை பற்றி சந்திரிகா குமாரதுங்கே கூறியது: “லண்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட, தமிழர்கள் கொல்லப்படும் காட்சிகளைக் கண்டு என் இருபத்தெட்டு வயது மகன், தான் ஒரு சிங்களவன் என்று சொல்ல வெட்கப்படுவதாக என்னிடம் அழுதபடி கூறினான். இதே கருத்தை என் மகளும் தெரிவித்தாள்!” இதற்குமேல் என்ன வேண்டும்?


அடுத்து, விகடனுடன் இனிப்பான, “என் விகடனிலிருந்து”: 

நாஞ்சில் சம்பத், நாஞ்சில் நாடன் – நாகர்கோவிலைச் சேர்ந்த பல வி.ஐ.பிக்களின் பெயரோடு ஒட்டியே இருக்கும் ‘நாஞ்சில்’ பட்டம். நாஞ்சில் என்றால் ‘கலப்பை’ என்று அர்த்தம். தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு குமரி மாவட்டம் இருந்த காலகட்டத்தில் இங்கிருந்துதான் சமஸ்தானம் முழுவதற்கும் நெல் சென்றது.  அந்த அளவுக்கு நெல் சாகுபடியில் கொடிகட்டிப் பறந்த பகுதி இது.  ஆனால், இன்று விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறிவிட்டதால், அரிசி உற்பத்தியில் உள்ளூர் தேவைக்கே தடுமாறுகிறது நாஞ்சில் நாடு!”

“என் ஊர்” பகுதியில் எழுத்தாளர்  ம.காமுத்துரை தன் ஊர் அல்லிநகரம் பற்றி எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி இதிலிருந்து: “…இதுவரை பதினான்கு தொழில்கள் வரை மேற்கொண்ட இவர், கடந்த எட்டு வருடங்களாக அல்லிநகரத்தில் ஒரு வாடகைப் பாத்திரக் கடை வைத்து நடத்தி வருகிறார். … இதுவரை ஒன்பது சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கும் காமுத்துரை, தனது ஒன்பதாவது சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாக, அவர் நேசிக்கும் எழுத்தாளர் பூமணியின் பெயரையே சூட்டி இருக்கிறார்.  தற்போது இவர் எழுதி முடித்து விரைவில் வெளியாக இருக்கும் நாவலின் தலைப்பு, “ஆயா!”.  


மனதில் பதிந்தவை-11: ஆனந்த விகடன், நம்பர் ஒன் தமிழ் வார இதழ், ஆகஸ்ட் 3, 2011

ஆனந்த விகடன், நம்பர் ஒன் தமிழ் வார இதழ், ஆகஸ்ட் 3, 2011
———————————————————————————— 
முதலில் விகடன் வரவேற்பறையிலிருந்து: “மூன்றாம் பிறை” எனும் மம்மூட்டியின் வாழ்பனுவங்கள் – தமிழில் கே.வி.ஷைலஜா – பக்கங்கள் ௧௨௮ – விலை ரூ.80/- – வம்சி புக்ஸ். இந்நூலில், “…வக்கீலாக வாழ்ந்தது, முதல் தர நடிகர் ஆனது வரை வாழ்வில் சந்தித்த மனிதம், அன்பு, நேரம், நட்பு, பாடம் என எல்லாவற்றையும் பாசிடிவ் கோணத்தில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார் மம்மூட்டி…”

“அறிவியல் ஆயிரம்”:
“மாணவர்களுக்கு பயனுள்ள வலைப்பூ. முழுக்க முழுக்க அறிவியல் செய்திகள் மட்டும்தான். வெறுமனே வார்த்தைகளில் விவரிக்காமல் படங்கள், காட்சிகள் ஆகியவற்றோடு விளக்கம் சொல்கிறார்கள். … பின் பி.பி.சி-யின் உரலியைக் கொடுத்திருக்கிறார்கள்(தொடர்புள்ள விரிவான செய்திகளுக்கு)…”

“சக்தே இந்தியா”:   
“… ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் ஆர்வலர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தளம்…”

“எனக்கு இல்லையா கல்வி?” –  குறும்படம் – இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார் – வெளியீடு: மனித உரிமைக் கல்வி நிறுவனம். “வசதியற்ற அரசுப் பள்ளிகள், வகுப்பறை வன்முறை, சமச்சீர் கல்வி, பாடத்திட்டம் என்று கல்வித்துறையின் அத்தனைக் கோளாறுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் படம்…” 

அடுத்து, “நானும் விகடனும்” தொடரில், வண்ணதாசன் கட்டுரை.  

கவின்மலரின், “குழந்தைகள் அடம் பிடிக்கலாம்! அம்மா..?” சமச்சீர்  கல்வி  பற்றி:  “… உயர்நீதி மன்ற விசாரணையின்போது நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை தவிர, ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியே கொடுத்த கருத்துக்களையும் சர்மர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டது நீதிமன்றம்.  அதன்படி சமர்ப்பிக்கப்பட்ட தனித்தனி அறிக்கைகளையும், இறுதி அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தனர் நீதிபதிகள்.  நிபுணர் குழு அறிக்கை, ஒவ்வொரு உறுப்பினரின் கருத்தையும் பிரதிபலிக்கவில்லை.  சமச்சீர்ப் பாடத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், அதைப் படிப்படியாகச் செய்யவேண்டும் என்றும் நிபுணர் குழுவில் ஒரு சிலர் கூறியுள்ளனர்.  ஆனாலும், சமச்சீர் கல்வியை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று அவர்கள் ஒட்டுமொத்தமாகக் கருதவில்லை.  அதோடு, பழைய 2004-ம் ஆண்டு பாடத் திட்டங்களுக்குச் செல்லவேண்டும் என்றும் அவர்கள் கூறவில்லை.  ஆனால், அறிக்கையோ தமிழக அரசு எடுத்துள்ள நிலையைத்தான் பிரதிபலிக்கிறது. … ஆக, நிபுணர் குழு, உறுப்பினர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்காமல், தன இஷ்டத்துக்கு ஓர் அறிக்கையைத் தயார் செய்திருக்கிறது அரசு.  இது மக்களையும், நீதிமன்றத்தையுமேகூட ஏமாற்றும் வேலை. நேர்மையற்ற இந்தச் செயலை நீதிமன்றம் மன்னித்தாலும், மக்கம் மன்றம் மன்னிக்கப்போவது இல்லை!”

வா.மு.கோமுவின் சிறுகதை, “ரகசியங்களை யாரிடமும் சொல்லவேண்டாம்” 

வாலியின் “நினைவு நாடாக்கள்” (நாற்பத்தோராவது)

அன்டன் பிரகாஷின் “வருங்காலத் தொழில்நுட்பம்”.

“புள்ளிவிபரங்கள்” பகுதியிலிருந்து: “… பதினோரு மாநில முதல்வர்கள், தங்கள் மாநிலங்களில் புகையிலைப் பொருட்கள் விற்கத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளனர்!” .  இந்த நல்ல செய்தியோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

நன்றி: “ஆனந்த விகடன்”        

மனதில் பதிந்தவை-9: ஆனந்த விகடன், ஜூலை 27, 2011

ஆனந்த விகடன், ஜூலை 27, ௨௦௧௧.  இந்த இதழில் “புள்ளிவிபரங்கள்” பகுதியிலிருந்து தொடங்குகிறேன்.

இந்தியாவின் மக்கட்தொகை 121 கோடியாக உயர்ந்திருக்கிறது.  கவலை தரும் தகவல். குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரமும், அதற்காக அரசு செலவழித்த பெரும்பணமும் வீணோ என்று தோன்றுகிறது.  என்னதான் திட்டம் திட்டமிட்டு செயல்படுத்தினாலும், மக்கட்தொகையைக் கட்டுப்படுத்தாதவரை வாழ்க்கைத்தர உயர்வோ, பொருளாதார முன்னேற்றமோ சிரமம்தான்.


அடுத்து, அறுபது சதவிகித உணவுப் பொருட்கள் பதப்படுத்தாததால் வீணாகின்றன என்ற அதிர்ச்சித் தகவல்.  ஏற்கனவோ நமது உணவு தானியக் கிடங்குகளில் தானியங்கள் புழுத்து வீணாகி பயனற்றதாகிக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் உச்ச நீதிமன்றம் வரை சென்று, கண்டனங்கள், ஏழை எளியவர்க்கு இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்று வெளியான செய்திகள் நினைவிற்கு வருகின்றன.  ஆனால் நம் அரசோ வழக்கம்போல் செயல்படாமல் இருக்கிறது.  வீணாகப் போனாலும் பரவாயில்லை, யாருக்கும் இலவசமாகத் தரமோட்டோம் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.  அவர்கள் படித்த பொருளாதாரக் கோட்பாடுகள் அதைத் தவறு என்று என்று சொல்கிறதோ?

“சொல்வனம்” பகுதியில், அமீர் அப்பாஸின் அற்புதமான கவிதை, “தேவதைகளின் உலகம்”.  

அடுத்து, என்னை ஈர்த்தது, விகடன் மேடையில் எஸ்.ராவின் கேள்வி-பதில்கள்.  அதிலிருந்து:

தமிழ் இலக்கியத்தின் டாப் டென் புதினங்கள்: 

1 . தி.ஜானகிராமன் – மோகமுள்
2.  ஜெயகாந்தன் – ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்
3.  கி.ராஜநாராயணன் – கோபல்ல கிராமம்
4.  ப.சிங்காரம் – புயலிலே ஒரு தோணி
5.  ஜி.நாகராஜன் – நாளை மற்றும் ஒரு நாளே
6.  சுந்தர ராமசாமி – ஒரு புளிய மரத்தின் கதை
7.  அசோகமித்ரன் – ஒற்றன்
8.  கரிச்சான் குஞ்சு – பசித்த மானுடம்
9.  வண்ணநிலவன் – கடல்புரத்தில்
10.எஸ்.சம்பத் – இடைவெளி 

“நேர்மையாக வாழ்வது என்பது ஒரு சவால்.  அது தனி நபர், சமூகத்துடன் மோதும் போராட்டம். அதை சமூக அமைப்பு எளிதாக அன்கீகரித்துவிடாது. பொதுவாக, மனிதம் மனம், கீழ்மைகளையும், தீய எண்ணங்களையும், வன்முறைகளையும் நோக்கியே ஓடுகிறது. நல்வழிப்படுத்துதல் நாமாக மேற்கொள்ளவேண்டிய முயற்சி!”  (அற்புதம், எஸ்.ரா!)

படித்துப் பிரமித்துப்போன வாழ்க்கை வரலாறு: “ஹெலன் கெல்லர். சிறு வயதில் கண் பார்வை, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகியவற்றை இழந்த அவர் விடாமுயற்சியில் கல்வி கற்று, அதன் வழியே உலகம் வியக்கும் ஆளுமையாக எப்படி உருமாறினார் என்பதை விளக்கும் அவருடைய சுயசரிதையான “STORY OF MY LIFE ” மறக்க முடியாத புத்தகம்!” 

விகடன் வரவேற்பறையிலிருந்து: மகாபாரதக் கதைகளின் வழியே அதில் மறைந்திருக்கும் தத்துவ விசாரங்களை எடுத்துக் கூறும் வலைப்பூ:                   <http://bagavathgeethai.blogspot.com>.

அடுத்து, குழந்தைகளுக்கு கதை சொல்ல உதவும் எளிமையான இணையதளம்: .

அடுத்து, அழகிய பெரியவனின் பத்தொன்பது சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு, “குறடு”.  பக்கங்கள் 200 – விலை ரூ.130 /-.  கலப்பை வெளியீடு.

“வலைபாயுதே” பகுதியிலிருந்து: 

thoppi_az@twitter.com: “மனிதன் தான் செய்யும் தவறுகளுக்கு சிறந்த வக்கீலாகவும், மற்றவர்கள் செய்யும் தருகளுக்கு சிறந்த நீதிபதியாகவும் இருக்கிறான்!

இதழுடன் இலவச இணைப்பு: “என் விகடன்”.  அதிலிருந்து:

“கலாம் கண்காட்சி” – இராமேஸ்வரத்தில் கலாம் அவர்கள் வசித்த வீட்டை புனரமைத்து, அங்கே ஒரு அருங்காட்சியகம்.  இந்த நேரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்ப்படுமுன் தம்பி நெல்லையப்பனுடன் நான் சென்றிருந்தபோது அவன் வீட்டின் நிரபதுபோல படம் எடுத்தேன்.  மற்றபடி, வீடு பூட்டியிருந்தபடியால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.


“என் ஊர்” பகுதியில், கவிஞர் விக்ரமாதித்யனின் திருநெல்வேலி பற்றிய கட்டுரை.  நானும் பழைய திருநெல்வேலிக்காரன்.  கட்டுரையில் வரும் பழக்கமான பெயர்கள்:  புட்டாரத்தி அம்மன் கோயில், கள்ளத்தி முடுக்குத் தெரு, நயினார் குளம், குறுக்குத்துறைக் கோயில்(ஒரு காலத்தில் என் மாமா இக்கோவிலின் மேலாளர்), கீழப் புதுத் தெரு, தெற்குப் புதுத் தெரு (இரண்டு தெருவிலும் நாங்கள் குடியிருந்திருக்கிறோம்), காந்திமதியம்மன் சன்னதி, நெல்லையப்பர் கோவில், வாகையடி முக்கு, பூதத்தார் முக்கு, ராயல் டாக்கீஸ், பாப்புலர் தியேட்டர் (இத்தியேட்டர் உரிமையாளரின் மகன் என்னுடன் ஒரு வருடம் படித்தான்), ரத்னா டாக்கீஸ் என்று சிறு வயதில் நண்பர்களுடன் கொட்டமடித்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன.  

         

மனதில் பதிந்தவை-1: ஆனந்த விகடன் ஜூலை 2011

இந்தப் புதிய பகுதியை என் மனதிற்கு மிகவும் பிடித்த ஆனந்த விகடன் வார இதழுடன் ஆரம்பிக்கின்றேன். 

விகடன் விலை இந்த இதழ் முதல் ரூபாய் பதினேழு!

விகடனில் நான் விரும்பிப் படிக்கும் பகுதிகள் எஸ்.ராமகிருஷ்ணனின் கேள்வி பதில்கள் (விகடன் மேடை), வாலியின் நினைவு நாடாக்கள், சுகாவின் மூங்கில் மூச்சு, சிறுகதை, அன்டன் பிரகாஷின் WWW வருங்காலத் தொழில் நுட்பம் ஆகியவை.

இந்த இதழிலும் எஸ்.ராவின் பதில்கள் சிறப்பாக இருந்தன. குறிப்பாக என் மனதில் பதிந்த வரிகள்: (மகாபாரதம்) கலாச்சாரம் மற்றும் சமூக மாற்றங்களின் வழியே இந்திய சமூகம் எப்படித் தன்னை வளர்த்துக்கொண்டது என்பதைப் பற்றிய மிகப் பெரிய ஆவணக் களஞ்சியம்.

வாலியின் நினைவு நாடாக்களில் மனதில் பதிந்த வரிகள்: மனித வாக்கியத்தின் முற்றுப்புள்ளியாய் மரணத்தைச் சொன்னால் முக்கால் புள்ளியாய் முதுமையைச் சொல்லலாம்…. எவ்வளவு முக்கியப் புள்ளியையும் முக்காற் புள்ளியும், முற்றுப் புள்ளியும் விட்டுவைப்பதில்லை…..

சுகாவின் மூங்கில் மூச்சை நான் படிக்க முக்கியக் காரணம், அவரைப் போலவே நானும் திருநெல்வேலிக்காரன். நெல்லைப் பேச்சு, பார்வதி டாக்கீஸ், ரத்னா தியேட்டர், குறுக்குத்துறை, சந்திப் பிள்ளையார் கோவில், சா ஃப்டர் ஹைஸ்கூல் என்று நான் ஒரு காலத்தில் சுற்றி வந்த இடங்களைப் பற்றிப் படிக்க முடிகிறது. நான் நெல்லைக்குச் சென்று பல வருட காலம் ஆகிவிட்டது; அப்படியே சென்றாலும் சில மணி நேரங்கள் மட்டுமே அங்கிருப்பேன். என்ன சுகாவிற்கு நான் பலப் பல வருடங்கள் சீனியர். இந்த வாரம் பண்டாரவிளை நாடார் பற்றி எழுதியிருப்பதைப் படித்ததும் என் பாட்டியின் நினைவு வந்தது; அவள்தான் பண்டாரவிளை நாடாரைப் பற்றிச் சொல்லுவாள்.

அடுத்து யுவ கிருஷ்ணாவின் சிறுகதை, அசோகர் கல்வெட்டு. தரமான கதை. ஏனோ கதையில் வரும் அமல்ராஜ் போல என் வாழ்விலும் என்னுடன் படித்த மணியை நெல்லை ரயில் நிலையத்தில் சந்தித்தது நினைவிற்கு வந்தது. நெல்லை எக்ஸ்ப்ரஸ் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. தன் முதலாளிக்கு ஸ்லீப்பரில் பெர்த் கேட்டு பரபரப்பாக அலைந்து கொண்டிருந்தான். டேய்! உன் அப்பா டி.டி.ஆர்.தானே, எனக்கு உதவக்கூடாதா என்றான் பரிதாபமாக. அன்றைக்கு என்னால் உதவ முடியவில்லை. அதன் பிறகு பல வருடங்கள் ஓடிவிட்ட பின்பும் அவனை இன்றுவரை பார்க்க முடியவில்லை.

அன்டன் பிரகாஷின் WWW – கூகுள் பிளஸ் மற்றும் ஸ்கைப் தொழில்நுட்பத்துடன் கைகோர்த்து ஃபேஸ்புக் வழங்கும் வீடியோ சாட் பற்றி படித்தேன். நான் இரண்டையும் இதுவரை முயன்று பார்க்க வில்லை. இனிதான் பார்க்கவேண்டும்.

இவைதவிர, விகடன் தரும் புள்ளிவிபரங்கள் பகுதி. பத்மநாப சாமி கோயிலின் பாதுகாப்புக்கென கேரள பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட தகவல். அப்போதும் நூறு சதவிகிதம் பாதுகாப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. தேவையில்லாத பல பிரச்சினைகள். ஏன் இவ்வளவு சிரமம்? அவ்வளவு நகைகளையும் போட்டுப் பார்க்கவோ, பயன்படுத்தவோ முடியாத நிலையில் அவற்றை விற்று எவ்வளவோ நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தலாமே, திருப்பதியில் உள்ளதுபோல் பல்கலைக்கழகம், பக்தர்களுக்கு உதவும் வகையில் இலவச தங்குமிடம், இலவச உணவு, பக்தி நூல்களை குறைந்த விலையில் பதிப்பித்து வெளியிடுவது, தினமும் பல ஊர்களில், பல இடங்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகள், சிறார்களுக்கு தினமும் மனதை ஒருமுகப் படுத்தும், மேன்மைப் படுத்தும் பக்திப் பாடல்களை சொல்லிக்கொடுப்பது, ஆன்மீக நூல்களை எழுவோரை ஆதரிப்பது மற்றும் எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு உதவுதல் என்று.

புத்தகப்பிரியன் என்ற முறையில் விகடன் வரவேற்பறையில், தீப.நடராஜன் தொகுத்து, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள ரசிகமணி டி.கே.சி.கடிதங்கள் என் கவனத்தை ஈர்த்தது. 960 பக்கங்கள், விலை ரூபாய் அறுநூறு! அம்மாடியோவ்! எங்காவது நூலகத்தில் ஓசியில் படித்தால்தான் உண்டு.

அடுத்து இன்பாக்ஸில், எழுபத்தைந்து கோடி மக்களை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் முதலிடம் பிடித்துள்ள தகவல்.

ந.வினோத்குமாரின் கூடங்குளம் அணுமின் நிலையம் – காத்திருக்கும் பேராபத்து. அணுமின் நிலையங்கள் பற்றி வெளிவரும் செய்திகளைப் படித்தும், தொகுத்தும் வருகிறேன். மேலைநாடுகளே வேண்டாம் என்று கைவிடத்தொடங்கியுள்ள அணுமின் சக்தி நமக்கு ஏன்? தவறு நேர்ந்தால் ஏற்படும் கதிர்வீச்சு அபாயம் 40,000 வருடங்களுக்கு மேல் நீடிக்கும் என்று எங்கோ படித்திருக்கிறேன். நம்மவர்களின் கவனக்குறைவு அனைவரும் அறிந்ததே. அழிவு நம்மோடு முடிவதல்ல, தலைமுறை தலைமுறையாய்த தொடரும். எல்லாம் அச்சுறுத்துவதாக இருக்கிறது. இதெல்லாம் தேவைதானா? வேறு எத்தனையோ வழிகள் இருக்கிறதே, ஏன் அவற்றை முயலக் கூடாது. அமெரிக்காவே தற்போது சூரிய சக்திக்கு முதல் இடம் அளிக்க ஆரம்பித்துவிட்டது என்று படிக்கிறேன். அப்புறம் காற்றாலைகள் இருக்கின்றன. வெப்ப நாடான இந்தியா போன்ற நாடுகளுக்கு சூரியசக்தியை விட சிறந்தது என்ன இருக்க முடியும்?

அப்புறம் நிறைய சினிமா, அரசியல் குப்பைகள். ஆம், என்னைப் பொறுத்தவரை அவை குப்பைகள்தாம். நம் சினிமாக்களும் சரி, அரசியல்வாதிகளும் திருந்தப் போவதே இல்லை. ஊழல் அரசை மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள் என்று மகிழும் வேலையில், மறுபடியும் பதினைந்து பெர்சென்ட் கமிஷன் என்று ஆளுக்கு ஆள் ஆரம்பித்துவிட்டார்கள் என்று படிக்கிறேன். வேதனையாக இருக்கிறது. 2 ஜி ஊழலைப் பொறுத்தவரை பத்து சதவிகித உண்மையாவது வெளிவருமா என்பது சந்தேகமே.

விகடனில் கவிபேரரசு வைரமுத்து படைக்கவிருக்கும் உலக இலக்கியத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 

நன்றி: ஆனந்த விகடன்