கம்பன் கவிதை-9:

மானம்  நேர்ந்து  அறம்  நோக்கி  மனுநெறி
போன  தண்  குடை  வேந்தன்  புகழ்  என
ஞானம்  முன்னிய  நான் மறையாளர்  கைத்
தானம்  என்ன தழைத்தது  நீத்தமே.

கம்பன் கவிதை-8:

புள்ளி  மால்வரை  பொன்னென  நோக்கிவான்
வெள்ளி  வீழிடை  வீழ்த்தெனத்  தாரைகள்
உள்ளி  யுள்ள  எலாமுவந்  ஈயும்அவ்
வள்ளி  யோரின்  வழங்கின  மேகமே.

கம்பன் கவிதை-7:

பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே.

கம்பன் கவிதை-6:

பண்கள்வாய் மிழற்றும் இன்சொல் கடைசியர் பரந்து நீண்ட
கண் கைகால் முகம் வாய் ஒக்கும் களையலாற் களையி லாமை
உண்கள்வார் கடைவாய் மள்ளர் களைகிலாது உலாவி நிற்பார்
பெண்கள் பால் வைத்த நேயம் பிழைப்பாரோ சிறியோர் பெற்றால்.

இசைபாடி இன்சொல்லே பேசும் உழத்தியரின் கண், கை, பாதம், முகம், வாய் இவற்றை ஒத்த (தாமரை, குவளை மலர்களாகிய) களைகள் தவிர பிற களை அங்கு (வயலில்) இல்லை. ஆதலால், மதுவை மாந்திக் களிக்கும் உழவர், களை பறிக்காமல் நிற்பர். சிறியோர் பெண்கள் பால் பற்றுக்கொண்டபின், அதனை விட்டு விலகுவரோ?

கம்பன் கவிதை-5:

தண்டலை மயில்கள்  ஆடத்  தாமரை விளக்கந் தாங்கக்
கொண்டல்கள்  முழவின்  ஏங்கக்  குவளைகண்  விழித்து நோக்கத்
தண்டிரை  எழினி  காட்டத்  தேம்பிழி  மகர  யாழின்
வண்டுகள்  இனிது  பாட  மருதம்  வீற்றிறுக்கு  மாதோ.
சோலையில்  மயில்கள்  ஆட,  தாமரை மலர்கள் விளக்குக்ளாக, மேகம்  மத்தளம் ஒலிக்க,  குவளை மலர்கள் கண்களாகப்  பார்த்து நிற்க, நீர் அலைகள் போல்  சுருள வண்டுகள் இனிய ஒலி தரும் யாழ்  போல்  இசைக்க,  மருதவளம்  விளக்கமுறும், சோலை நாடக அரங்காக உவமை கூறப்பட்டது. 

கம்பன் கவிதை-4:

தாதுகு  சோலை தோறும்  சன்பகக் காடு  தோறும்
போதவிழ்  பொய்கை  தோறும்  புதுமணல்  தடங்கள்  தோறும் 
மாதவி  வேலிப்  பூக  வனந்தோறும்  வயல்கள்  தோறும்
ஓதிய  உடம்பு  தோறும்  உயிரென  உலாய  தன்றே.

மகரந்தப்பொடி  சிந்தும்  சோலைகள்,  செண்பகம்  செறிந்த  காடுகள்,  பூக்கள்  விரிந்த  நீர்நிலைகள்,  நல்ல  மணற்கரைத்  தடாகங்கள்,  மாதவிக்  கொடிகளை  வேலியாகக்  கொண்ட  கமுகுத்  தோட்டங்கள், பிற வயல்கள்,  யாண்டும்  சரயுநதி,  உடம்புள் உயிர் உலாவி நிற்பது போலப்,  பாய்ந்து  பரவி  வளங் கொடுத்தது.     

கம்பன் கவிதை-3:

கல்லிடைப்  பிறந்து  போந்து  கடலிடைக்  கலந்த  நீத்தம் 
எல்லையில்  மறைகளாலும்  இயம்பரும்  பொருள்  ஈதென்னத் 
தொல்லையில்  ஒன்றேயா கித் துறைதொறும்  பரந்த  சூழ்ச்சிப் 
பல்பெருஞ்  சமயம்  சொல்லும்  பொருளும்போல்  பரந்ததன்றே.

மலையில் தோன்றி  ஓடிக்  கடலிற் கலந்த  ஆற்று வெள்ளம்,  வேதங்களாலும் அளவிட்டு உரைக்க முடியாத  பரம்பொருளைப்  போல்  ஆதி தொடக்கம்  ஒன்றே ஆனது.  பின்னர்ச் சமயங்களினால் மாறுபட்ட  தெய்வம்  போல்,  தான் செல்லும்  பல  இடங்களிலும்  பல  வகையில்  பரவி (ஏரி,  குளம், வாய்க்கால்,  ஓடை எனப் பல பெயர் பெற்று) நின்றது.    

கம்பன் கவிதை-2:

முல்லையைக் குறிஞ்சியாக்கி  மருதத்தை முல்லையாக்கிப்
புல்லியநெய்தல்  தன்னைப்  பொருவருமருதம் ஆக்கி
எல்லையில்  பொருள்கள்எல்லாம்  இடைதடுமாறு  நீரால்
செல்லுறுகதியிற்  செல்லும்  வினையெனச்  சென்றதன்றே.

உயிர்களை வினை பலவகைப்  பிறப்புகளாக மாற்றுவது போலச்,  சரயு நதி தன் ஓட்டத்தால் முல்லையைக் குறிஞ்சியாகவும்,  மருதத்தை முல்லையாகவும்,  நெய்தலை மருதமாகவும்  மாற்றி, அந்த நிலங்களின் பொருட்களை எல்லாம் இடம் மாறச்செய்தது.

கம்பன் கவிதை-1:

உலகம்  யாவையும்  தாம்   உளவாக்கலும் 
நிலை  பெறுத்தலும்  நீக்கலும்  நீங்கலா 
அலகிலா  விளையாட்  டுடையார்  அவர்
தலைவர்  அன்னவர்கே   சரண்  நாங்களே. 

எல்லா  உலகங்களையும்  படைத்துக்  காத்து  அழிக்கும்  தொழில்களின்றி வேறுபடாது,  அவற்றை  விளையாட்டாகக்  கொண்டுளார்  எவரோ,  அவருக்கு எம்  வணக்கம்.