நாலடியார்-3: "கல்லார், கள்ளுண்ணார்…"

கல்லார், கள்ளுண்ணார், கடிவ கடின்தொரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் – தள்ளியும்
வாயிற் பொய்கூறார், வடுவறு காட்சியார்
சாயிர் பரிவ திலர்.

பெரியோர் திருட்டுத்தனம் செய்யார்; மது அருந்தார்; தீய செயல்களை விலக்கி வாழவர்; யாரையும் துச்சமாகப் பேசி அவமரியாதை செய்யார். மறந்தும் பொய் பேசமாட்டார்கள். செல்வச் சிறப்பழிந்து வறுமைக்குத் தள்ளப்பட்டாலும் அதற்காக வருந்தார்.

நாலடியார்-2: "கல்லாரே ஆயினும்…"

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாலுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
ஒன்னிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

படிக்காதவர் ஆயினும் படித்த பெரியோர்களுடன் சேர்ந்து பழகினால், நல்லறிவு வாய்க்கப்பெறும். அழகும், மணமும் நிறைந்த பாதிரிப்பூ வைத்திருந்த பாண்டத்தில் உள்ள தண்ணீருக்கும் பூவின் மணம் கிடைப்பதைப்போல.

நாலடியார்-1: "கல்வி கரையில…"

கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல; – தெள்ளிதின்
ஆராய்ந்த் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

நாம் கற்கவேண்டிய நூல்கள் மற்றும் பெறவேண்டிய அறிவு அளவில்லாதது. ஆனால் நம் வாழ்நாளோ குறைவு. எண்ணிப்பார்த்தால் இதிலும் நோய், நொடிகள். எனவே வாழ்நாளை வீணாக்காமல், அன்னப்பறவை எப்படி நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ, அதுபோல நாம் சிறந்த நூல்களை மட்டும் கற்றுப் பயன்பெறவேண்டும்.