சூரியின் டைரி-49: காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 ஐந்தாம் நாள்

பேராசிரியை  ஆவுடையம்மாள்  தயாளனின்
வினாடி-வினா  நிகழ்ச்சி

போட்டிக் கட்டுரைகளை திருத்தும்
பேராசிரியர் பழனி ராகுலதாசன்

நண்பர்கள் இராமகிருஷ்ணனும்,
ஸ்ரீவித்யாராஜகோபாலனும்

வேதாத்திரி மகரிஷி புத்தக ஸ்டாலில்
நண்பர் செல்வராஜ் மற்ற அன்பர்களுடன்

என்னைக்  கவர்ந்த இன்னொரு ஸ்டால்

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களது
நூல்களும், வீடியோ டிவிடிகளும்

ஆங்கில நூல்கள் நிறைந்ததும், இருப்பதிலேயே பெரியதுமான  
லியோ பதிப்பக ஸ்டால்

சத்ய சாய் பாபா நூல்கள்

என் மனத்தைக் கவர்ந்த காலச்சுவடு ஸ்டால் – பல கோணங்களில்

நாதம் கீதம் பதிப்பகத்தின் ஸ்டால்
நேற்று  (பிப்ரவரி 15 , 2011)  மாலை ஐந்து மணி அளவில் காரைக்குடி கம்பன் மணி மண்டபம் சென்றேன், புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ள.  முகப்பில் பேராசிரியர் மு.பழனி ராகுலதாசன் அவர்களையும், பேராசிரியை ஆவுடையம்மல் தயாளன் அவர்களையும் பார்த்தேன். என்னைப் பார்த்ததும், உங்களுக்கு நூறு வயசு, உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்றனர்.  (யாரைப் பார்த்தாலும் இதே போல் சொல்கின்றனர், பொருள்தான் விளங்கவில்லை எனக்கு). பேராசிரியர் ராகுலதாசன் அவர்கள் பதிப்பித்து வந்த ஒரு நான்கு-பக்க மாத இதழ், ‘பாரதி ஞானம்’  எனக்கு மிகவும் பிடித்தது.  பின்னர் அது பல்வேறு காரணங்களால் நின்று போய்விட்டது. 
பேராசிரியை ஆவுடையம்மல் தயாளன்  பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தார்.  ஒன்பது ஆண்டுகளாக இந்தப் பொறுப்பு அவர்களிடம் உள்ளது.  ஒவ்வொரு சரியான பதிலுக்கும் அங்கேயே ஒரு நல்ல புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.  (படம் மேலே). 
தம்பி நெல்லையப்பனுக்காக கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைத் தொகுப்பு, கு.அழகிரிசாமியின் சிறுகதைத்தொகுப்பு, லா.ச.ராமாமிருதத்தின் சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றைத் தேடினேன்.  எங்குமே கிடைக்கவில்லை. தமிழில் சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை சேர்த்துக் கொண்டிருந்தான்;  அவனிடம் ஏறகனவ பல நல்ல சிறுகதைத் தொகுப்புகள் இருப்பதை நான் அறிவேன்.  இறுதியில் அவனுக்காக முத்துக்கள் பத்து வரிசையில் ஆ.மாதவனின் பத்து சிறுகதைகள், எம்.வி.வெங்கட்ராமின் பத்து சிறுகதைகள்   ஆகிய இரண்டு நூல்களையும் வாங்கினேன்.  (ஒவ்வொன்றும் ரூபாய் ஐம்பது; தள்ளுபடி போக ரூபாய் நாற்பத்தைந்து).  (அம்ருதா பதிப்பக வெளியீடு – கதைகளைத் தேர்வு செய்தது:  திருமதி திலகவதி ஐ.பி.எஸ்.).
இந்தி, ஆங்கிலத் திரைப்படங்கள் மற்றும் டாக்குமெண்டரிகள் கடையில் ஆங்கில இலக்கியம் படித்த என் மகளுக்காக   சர் லாரன்ஸ்  ஒலிவியர் இயக்கிய ஷேக்ஸ்பியரின் ‘ஹேம்லட்’,  ‘ஜூலியஸ் சீசர்’,  ரிச்சர்ட் பர்ட்டன், எலிசபெத் டைலர் மற்றும் ரெக்ஸ் ஹாரிசன் நடித்த ‘கிளியோபாத்ரா’,  மற்றும் ‘ஜோன் ஆஃப்   ஆர்க்’  டிவிடிகள் வாங்கினேன்.  ஒவ்வொன்றும் தள்ளுபடி போக ரூபாய்  ஐம்பத்தைந்து.  இந்தியில் குரு தத், ரித்விக் கடாக் இயக்கிய மிகச் சிறந்த திரைப்படங்கள், சத்யஜித் ரேயின் வங்காள மொழித் திரைப்படங்கள், அற்புதமான அறிவியல், சரித்திர டாக்குமெண்டரிகள் அந்தக் கடையில் இருந்தன.  சத்யஜித் ரேயின் ‘தி அப்பு த்ரைலாஜியும்’  (The Apu Trilogy – Pather Panjali , Aparajito and Apur Sansar), ‘The Gods Must be Crazy ‘  முதல் பாகமும் வாங்கினேன்.
பிப்ரவரி மாத  காலச்சுவடும், உயிர்மையும் வாங்கினேன்.
சுற்றிவருகையில் நண்பர் ஸ்ரீவித்யாராஜகோபாலன் அவர்களைப் பார்த்தேன்.  முன்தலை வழித்து, பின் ஜடை வளர்த்து, ஐதீக பிராம்மணராகக்  காட்சியளித்தார். எங்களது அலுவலகத்தில் இணை இயக்குனராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.  புத்தகங்களின் காதலர்.  அவரது சொந்த நூலகம் காரைக்குடியில் பெயர் பெற்றது.  இந்து ஆங்கில நாளிதழிலும், தினமணியிலும் அதைப் பற்றிய கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த புத்தகத் திருவிழாக் குழுவின் துணைத் தலைவர்.

அடுத்து நண்பர் திரு மு.இராமகிருஷ்ணன்  அவர்களைப் பார்த்தேன்.  எங்கள் அலுவலகத்தில் துணை இயக்குனராகப் பணிபுரிபவர்.  அவரும் ஆரம்ப காலங்களில் புத்தகத் திருவிழாவை நடத்த நாங்கள் பட்ட சிரமங்களை நினைவு கூர்ந்தார்.        

சூரியின் டைரி-48: காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 இரண்டாம் நாள்

நேற்று (12 .2 .11) கோவில்களுக்குச் சென்றுவிட்டு, கம்பன் மணி மண்டபம் போய்ச் சேரும்போது மதியம் பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது.  முகப்பில் மாணவர்களுக்கான போட்டி நடத்திவிட்டு  அமர்ந்திருந்த நாச்சியப்பன் தம்பதிகளைப் பார்த்தேன்.  அவர்கள் என்னை அன்புடன் வரவேற்றனர்.  திருமதி தேவி நாச்சியப்பன், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் புதல்வி.    சிறிது நேரம் அவர்களிடம் அளவளாவிவிட்டு, உள்ளே சென்றேன்.  இந்த வருடம் புதிதாக காலச்சுவடு, உயிர்மை மற்றும் தினமணி ஸ்டால்களைக்  கண்டேன்.  மிகச் சிறப்பாக இருந்தது மதுரை மீனாக்ஷி பதிப்பகத்தாரின் ஸ்டால். அற்புதமான பல புத்தகங்கள். சுந்தர ராமசாமி அவர்களது ஜே.ஜே.சில குறிப்புகள் மற்றும் அவர்களது அனைத்துப் படைப்புகளுமே இருந்தன.   ஆனால் புத்தகங்களின் விலைதான் அச்சுறுத்துவதாக இருந்தது.
என்னுடைய பிரச்சினை என்னவென்றால் ஏற்கனவே வாங்கிவைத்திருக்கும் புத்தகங்களை நான் குடியிருக்கும் வாடகை வீட்டில் வைக்க இடமில்லாது, புளி மூட்டை போன்று மூட்டை கட்டி பரண்மேல் போட்டிருந்தேன்.  அவற்றை எடுப்பதோ, படிப்பதோ அல்லது எந்த மூட்டையில் எந்தப் புத்தகம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதோ மிக மிகச் சிரமம்.  அடுத்து புத்தகம் படிக்கும் போதே என்னையும் அறியாமல் கண்கள் சொருக, தூக்கம் வருகிறது.  முதுமையின் தாக்கத்தை உணர்கிறேன்.  எல்லாவற்றிற்கும் மேலாக ஓய்வு பெற்றபின், மாத வருமானம் குறைய, விலைவாசியும், செலவுகளும் கன்னாபின்னாவென்று எகிற, ஒவ்வொரு பைசாவையும் எண்ணி செலவழிக்க வேண்டிய நிலை. என் போன்ற புத்தகப் பிரியர்களுக்கு இவை பெரிய தண்டனைதாம்.  இனி  புத்தகம் வாங்குவதென்றால் பழைய புத்தகக் கடைகளைத்தான் நாடவேண்டும் போலிருக்கிறது.
எனினும் வெறும் கையேடு திரும்ப மனமில்லாது காலச்சுவடு கடையில் பழைய இதழ்கள் பத்து ரூபாய் வீதம் ஆறு இதழ்கள் வாங்கினேன்.  அதேபோல் உயிர்மை கடையில் ஒரு பழைய இதழ் மட்டுமே இருந்தது.  அவர்கள் ஆண்டு வாரியாக  பைண்ட் செய்து வைத்திருந்த பழைய இதழ்களின் தொகுப்பு ஒன்று இரு நூறு ரூபாய்.  பின்னால் பார்த்துக் கொள்வோம் என்று விட்டுவிட்டேன்.
மணிவாசகர் பதிப்பகம் ஸ்டாலில் முனைவர் வெற்றி மெய்யப்பன் அவர்களது திருவுருவப்படம் என்னை வரவேற்றது.  காரைக்குடியில் முதல்முதலாக புத்தகத் திருவிழா நடத்த பிரயத்தனப் பட்டபோது அமைப்புக் குழுவின் தலைவர் பொறுப்பேற்று, முழு ஆதரவையும் நல்கி, மற்றும் பல வகைகளிலும்  பேருதவி புரிந்த அவரை அன்போடும், நன்றி உணர்வோடும் நினைத்துப் பார்த்தேன்.  எல்லாவற்றிற்கும் மேலாக அவரது செல்வாக்கும், சொல்வாக்கும் இல்லாவிடில் கம்பன் மண்டபம் கிடைத்திருக்காது.  மணிவாசகர் பதிப்பகத்தில் அய்க்கண் அவர்களது நான்கு சிறுகதைத் தொகுப்புகளைப் பார்த்தேன்.  ஒரு தொகுப்பு ரூபாய் எழுபத்தைந்து.  திருவிழா முடிவதற்குள் முன்னூறு ரூபாய்க்கு நான்கு தொகுதிகளையும் ரூபாய் முன்னூறு கொடுத்து வாங்கிவிடுவது என்று எண்ணிக் கொண்டேன்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா மடம் ஸ்டாலில் திருமதி காயத்திரி வெங்கடகிருஷ்ணன் அவர்களைப் பார்த்தேன்.  அவர்களும் என்னை அன்போடு வரவேற்றார்கள்.  அவரது கணவர் சிதம்பரத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் கடையைப் பார்த்துக் கொண்டு அங்கே இருப்பதாகக் கூறினார்.  தற்போது தமிழ்நாட்டில் எல்லா முக்கிய ஊர்களிலுமே புத்தகத் திருவிழா நடத்துவது என்பது வழக்கமாகிவிட்டது.  அதனால் பல சமயங்களில் ஒரே தேதிகளில் இரண்டு ஊர்களில் புத்தகத் திருவிழா நடைபெறும் நிலை.  அங்கே ஒரு பக்திப் பாடல் டிவிடி மட்டும் என்பது ரூபாய்க்கு வாங்கினேன்.  என்னிடம் அநேகமாக இராமகிருஷ்ணா மடத்தின் முக்கிய பதிப்புகள் அனைத்துமே இருக்கிறது.
அடுத்து தமிழ்நாடு அறிவியல் பேரவை ஸ்டாலில் நண்பர், முனைவர் கே.ரகுபதி அவர்களைப் பார்த்தேன்.  கருத்து ரீதியாக அவர் இடதுசாரி, இறை நம்பிக்கை இல்லாதவர்; நானோ ஒரு ஆன்மீகவாதி.  எனினும் என்னிடம் அவர் மிகவும் அன்பும், மரியாதையும் காட்டுவார்.  அங்கே துளிர் இதழ் ஒன்று மட்டும் ஐந்து ரூபாய்க்கு வாங்கினேன்.
அடுத்து ஒரு ஸ்டாலில் உடல் நலம் பேண பல   ‘சார்ட்டுகள்’, ஒவ்வொன்றும் ஒன்பது ரூபாய் விலையில் வைத்திருந்தார்கள்.  பழங்களின் சத்து மதிப்பீட்டுப் பட்டியல், காய்கறிகளின் சத்துப் பட்டியல், கீரைகளின் சத்துப் பட்டியல், நீரிழிவு நோய்க்கான உணவு முறைகள்  என்று மொத்தம் ஐந்து பட்டியல்கள் ரூபாய் நாற்பத்து ஐந்திற்கு வாங்கினேன்.  இதற்கிடையில் நண்பர், கவிஞர் ஜனநேசன் வந்து அன்புடன் வரவேற்றார்.
இன்னொரு ஸ்டாலில் ஆங்கிலப் படங்களின் டிவிடிகள் ஒரு அற்புதமான தொகுப்பு.  அவர்களின் பட்டியல் இல்லை.  பொறுமையுடன் ஒவ்வொரு டிவிடியாகப் புரட்டிப் பார்க்க என்னால் முடியவில்லை.  சரி, பின்னால் பார்த்துக் கொள்வோம் என்று நகர்ந்துவிட்டேன்.

மற்றபடி நிறைய குழந்தைகளுக்கான நூல்கள், தமிழ் சா ஃ ட்வேர், டிவிடிக்கள் கடைகள், வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூல்கள், ஜக்கி வாசுதேவ் அவர்களின் நூல்கள், வீடியோ டிவிடிகள், நிறைய புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல் தொகுப்புகள், தமிழ், ஆங்கில அகராதிகள் விதம் விதமாக  என்று அனைவரையும் கவரும் வண்ணம் பல்லாயிரம் நூல்கள்.   

எனது வலைப்பூவில் பதிவு செய்வதற்காக சில படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  (பேட்டரிகள் அதற்குள் காலை வாரிவிட்டன.   சரி, மறுபடியம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நகர்ந்தேன். எடுத்த படங்களில் சில மேலே.)

வெளியே வரும்போது முகப்பில் பேராசிரியர் முனைவர் அய்க்கண் அவர்களையும் (எங்கள் பகுதியின் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் புத்தகத் திருவிழா அமைப்புக்குழுத் தலைவர்), நண்பர் பி.வி.சுவாமி அவர்களையும் (நாலெஜ் புக் ஹவுஸ் உரிமையாளர் மற்றும் அமைப்புக் குழுத் துணைத் தலைவர்), டாக்டர் ஏ.செல்வராஜ் அவர்களையும்  (ஹோமியோபதி மருத்துவர் மற்றும் கலைநிகழ்ச்சிகளின் பொறுப்பாளர்) சந்தித்துப் பேசினேன்.  சுவாமி அவர்கள் தொடக்கவிழாவில் காரைக்குடியில் புத்தகத் திருவிழா அமையக் காரணமாக  இருந்த என்னை நினைவு கூர்ந்ததைக் குறிப்பிட்டார்.  அவர்கள் அனைவரிடம் அவர்களது அன்பிற்கு நன்றி கூறி விடை பெற்றேன்.  மீண்டும் ஒரு நாள் புத்தகத் திருவிழாவிற்குச் செல்லவேண்டும்.  பார்க்கலாம்.    

சூரியின் டைரி-47: காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 தொடக்க விழா

 நேற்று மாலை ஒரு வழியாக காரைக்குடி புத்தகத் திருவிழா அழைப்பிதழை நண்பர் சுவாமி அவர்களது அலுவலகத்தில் பெற்றேன்.  ஆனால் அதைப் பதிவு செய்வதற்குள் எனது கணினியில் நீண்ட காலமாக இருந்த பழுதொன்றை நீக்க நண்பரொருவர் வந்துவிட்டார்.  பழுது நீக்கப்படுவதற்குள் எனது பொறுமை போய்விட்டது.  எனவே இன்று தொடக்க விழா முடிந்தபின் இன்று தொடக்க விழா அழைப்பிதழைப் பதிவு செய்கிறேன்.  வெறும் தகவலாக இருந்து விட்டுப்போகட்டும் என்று. (பதிவு மேலே).

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை தொடக்க விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. கலந்துகொண்ட  நண்பர்களிடம்  விவரங்கள் கேட்டிருக்கிறேன்.  வந்தவுடன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் எவ்வாறு அமைந்தன என்பதனைப் பதிவு செய்கிறேன்.  

சூரியின் டைரி-46: காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 தொடக்க விழா

நேற்று செக்காலை  சிவன் கோவிலுக்குச் சென்றிருந்தேன்.  வாசலில்   காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 பற்றிய பெரிய அளவிலான விளம்பரத்தைக் கண்டேன் (படம் மேலே). கோவிலுக்குச் சென்று திரும்பியதும் நண்பர் அலெக்சிடமிருந்து  அலைபேசி அழைப்பு வந்தது.  என்னிடம் சில முகவரிகளைக் கேட்டார்.  அவற்றைத் தந்தபின் அவை எதற்காக என்று கேட்டபோது சொன்னார், புத்தகத் திருவிழா தொடக்கவிழா அழைப்பிதழ்களை சில முக்கியமானவர்களிடம்  சேர்க்கும் பொறுப்பு, செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் அவரிடம் தரப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
அவரிடம் ஆவலுடன் தொடக்கவிழா நிகழ்ச்சி நிரல் பற்றி கேட்டேன்.  அவர் கூறிய தகவல்களின் படி,  நாளை, பிப்ரவரி 11-ம்   நாள் மாலை 5.30 மணிக்கு  கம்பன் மணிமண்டபத்தில் தொடக்க விழா நடைபெறவிருப்பதையும், அதில் தவத்திரு குன்றக்குடி அடிகளார், தினமணி ஆசிரியர் (பெயர் மறந்து விட்டது), பலகலைக் கழக துணைவேந்தர் ஒருவர் (பெயர் மறந்து விட்டது), செக்ரி  இயக்குனர் முனைவர் வெ.யக்ஞராமன், செக்ரி இணை இயக்குனர் முனைவர் ந.பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதைத் தெரிவித்தார்.
இன்று அழைப்பிதழின் நகல் ஒன்றை இரவலாகப் பெற்று அதை ஸ்கேன் செய்து இங்கே பதிவு செய்யலாம் என்று முயன்றேன்.  முடியவில்லை.
நாளை மாலை தொடக்கவிழாவில் பார்வையாளராகக் கலந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்தும், பேசப்படும் முக்கிய கருத்துகளைக் குறித்துக் கொண்டும் வருவது,  பின்னர் அவற்றை இங்கே பதிவு செய்யலாம் என்று எண்ணியுள்ளேன்.    

சூரியின் டைரி-45: காரைக்குடி புத்தகத் திருவிழா 2011

சில நாட்களுக்கு முன் நண்பர், கவிஞர் ஜனநேசன் அவர்களை வீதியில் சந்தித்தேன்.  அப்போது அவர் காரைக்குடி புத்தகத் திருவிழா இம்மாதம் 11-ம் நாள் தொடங்குகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியினைக் கூறினார்.  நேற்று காரைக்குடி சென்றபோது பார்த்த மேலே உள்ள விளம்பரம் அதனை உறுதி செய்தது.  என் தம்பியர் இருவரையும்  தொலைபேசி மூலம் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ள அழைத்தேன்.  இனி புத்தகத் திருவிழா பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகளை இங்கே பதிவு செய்கிறேன்.

மேலே உள்ள விளம்பரத்திற்கு உதவிய ஜனப்பிரியா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்  பற்றி ஒரு கருத்தையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்.  மருந்துகள், காஸ்மெடிக் சரக்குகள், ஹார்லிக்ஸ், போன்வீட்டா போன்ற பெவேரேஜ்கள், தமிழ் மருந்துகள்  மற்றும் பலசரக்குச் சாமான்கள் எல்லாம் இங்கே குறைந்த விலையில் கிடைக்கிறது.  உதாரணமாக நான் மாதாமாதம் டிப்ரோடீன் (DProtin)  என்ற பாலில் இட்டு உண்ணும் புரதச்சத்து பானப்பொடி வாங்குகிறேன்.  மருந்துக் கடைகளில் வாங்கினால் MRP படி பில் தந்து பணத்தைக் கறந்துவிடுவார்கள்.  நீங்கள் அவர்களிடம் MRP என்பது அதிக பட்ச விலையே தவிர குறைந்த பட்ச விலையில்லை  என்று போராடினால் ஒரு வேளை ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ குறைப்பார்கள்.  ஜனப்பிரியாவில் எதுவுமே கேட்காமல், ஒரு டிப்ரோடீன் (DProtin) பாட்டிலுக்கு நாற்பது ரூபாய் குறைத்துக் கொடுத்தார்கள்! (MRP ரூபாய் 285 /-; அவர்களது விலை ரூபாய் 245 /-)   என்னால் நம்பவே முடியவில்லை.  சந்தேகப்பட்டு அவர்களிடம் கேட்டதில் அவர்கள் கடையில் எல்லாமே  குறைந்த பட்ச லாபத்திற்கு விற்பதாகக் கூறினார்கள்.  இது போல பல பொருட்களின் விலையையும் சோதித்துப் பார்த்திருக்கிறேன்.  அவர்கள் கூறுவது உணமைதான்.  காசு காசு என்று பேயாய் அலையும் இந்நாளில் நேர்மையாக, customer -freindly ஆக கடை நடத்தும் ஜனப்பிரியா நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.   

சூரியின் டைரி-27: முனைவர் சுந்தரமும், பேராசிரியர் ‘வெற்றி’ மெய்யப்பன் அவர்களும்

மேலே  உள்ள  படம்  இரண்டாவது  காரைக்குடி  புத்தகத்  திருவிழாவின்  துவக்க  விழாவில்  எடுக்கப்பட்டது  என்று  நினைக்கிறேன்.  மனிதமேம்பாட்டு அறிவியல் அமைப்பு  (FASOHD – Forum for Advancement of Science of Human Development) காரைக்குடி மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆதரவுடன்  காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில்  நடத்திய இத்திருவிழா அமைப்புக் குழுவின் தலைவர்  பேராசிரியர் முனைவர்  ச.மெய்யப்பன் அவர்கள் (தமிழ்நாட்டின் தலைசிறந்த பதிப்பகங்களின் ஒன்றான மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர், ‘வெற்றி’ மெய்யப்பன் என்று போற்றப்படுபவர்) மேடையில் பேசுவதைப் படத்தில் காணலாம்.  அருகில் அமர்ந்திருப்பவர் எங்கள் அமைப்பின் தலைவர் முனைவர் வே.சுந்தரம் அவர்கள் (காரைக்குடி மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Central Electrochemical Research Institute) திட்டமிடல் பிரிவின் தலைவர் மற்றும் இணை இயக்குனர்).
சென்னையிலும், நெய்வேலியிலும் நடைபெறும் மாநில அளவிலான  புத்தகக் கண்காட்சியைபோல் ஒன்று காரைக்குடியிலும்  நடத்தவேண்டும் என்பது என் நெடுநாளைய கனவு.  அதை நிறைவேற்ற பல பெரியவர்கள், நண்பர்கள் பலவகையில் உதவியுள்ளனர்.  அதில்  குறிப்பிடத்தக்கவர்கள் மேலே உள்ள இருவரும், மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் மீ.இராகவன் அவர்களும், எங்கள் அமைப்பின் செயலர் முனைவர் (திருமதி) ந.கலைச்செல்வி அவர்களும் (தமிழிலிலும், ஆங்கிலத்திலும் மிகச் சிறப்பாக உரையாற்றும் வல்லமை படைத்தவர், எங்கள் நிறுவனத்தின் செயல்திறன்மிக்க விஞ்ஞானி)  மற்றும் காரைக்குடி நலந்தா பதிப்பகத்தின் உரிமையாளர் நண்பர் திரு.ஜம்பு அவர்களும்.
முதலாமாண்டிலேயே புத்தகத் திருவிழா சிறப்பாக அமைந்து எண்ணற்ற பலருக்கும் பயனுள்ளதாக அமைந்துவிட்டது.  அதைத் தொடர்ந்து இன்றுவரை ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக இந்த விழா நடந்து வருகிறது.  (இடையில் ஓராண்டு மட்டும் நடக்கவில்லை என்று நினைக்கிறேன்). 
வீட்டில் இடப் பிரச்சினை காரணமாக தொகுத்து வைத்திருந்த  பேப்பர்களையும்,  புத்தகங்களையும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கழிக்க ஆரம்பித்தேன்.  அப்போது சிக்கிய படங்களில் ஒன்றுதான் மேலே உள்ள படம்.  இந்தப் படத்தைக் கண்டதும் என் நினைவுகள் பின் நோக்கிச் சென்றன.  பல துறையைச் சேர்ந்தவர்களும், மாணவ மாணவியரும், போது மக்களும் எவ்வளவு ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும்  கலந்து கொண்டனர்!  புத்தகத் திருவிழாவையொட்டி  எத்தனை எத்தனை கலை இலக்கிய நிகழ்ச்சிகள், போட்டிகள், பரிசுகள்!!   ஒருவருட நிறைவு விழாவிற்கு வருகை புரிந்த,  சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் என்னிடம் கூறினார்: “சூரி! நீங்கள் அமைத்துள்ள இந்தப் புத்தகத் திருவிழா எத்தனை பேர் வாழ்வில் எப்படியெல்லாம் மாற்றம் விளைவிக்கும்  என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்.  ஆனால் என்னால்  அதை மனக் கண்ணில் காண முடிகிறது” என்று புகழ்ந்துரைத்தார். அந்த இனிய நாட்களை எண்ணி மகிழ்ந்தேன்.
முனைவர் இராகவன் அவர்களும், முனைவர் சுந்தரம் அவர்களும் நானும் பணி நிறைவு பெற்று மைய மின்வேதியியல் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம்.  அதைத் தொடர்ந்து,  மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் பெற்றெடுத்த செல்லக் குழந்தையான  மனித மேம்பட்டு அறிவியல் அமைப்போடு எங்களுக்குள்ள தொடர்பும் குறைந்து விட்டது.  கருத்து வேற்றுமை காரணமாக நண்பர் ஜம்பு அவர்கள் தொடர்பு இல்லாமல் போய்விட்டது (அதில்  இழப்பு எனக்குத்தான்).  பேராசிரியர் வெற்றி மெய்யப்பன் அவர்கள் இறையடி சேர்ந்துவிட்டார்கள்.  திருமதி கலைச்செல்வி அவர்கள் இன்னும் பணியிலிருக்கிறார்கள்.  ஆனால் அவர்களுமே அமைப்பில் எந்தப் பொறுப்பிலும் இல்லை.  

முனைவர் சுந்தரம் அவர்களுக்கும் எனக்கும் உள்ள நட்பு இன்றும் தொடர்கிறது.  பலவகைகளில் எங்களது சிந்தனை, ஈடுபாடு ஒரே மாதிரி இருக்கும்.  அவர் தலைவராக இருந்தபோது அவரும், செயலர் திருமதி கலைச்செல்வி அவர்களும் எனக்கு அளவிலாத சுதந்திரம் அளித்திருந்தார்கள்;  பிரச்சினை என்று வந்தபோதெல்லாம்  என்னை   விட்டுக் கொடுக்காமல் காத்தனர்.  அதனால் என்னால் மிகச் சிறப்பாகவும், மனதிற்கு நிறைவாகவும் செயல்பட முடிந்தது.  அவர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருந்த மற்ற அன்பர்கள் அனைவருக்கும் எங்கே எனது உளமார்ந்த நன்றிகளைப் பதிவு செய்கிறேன். 

மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பும், காரைக்குடி புத்தகத் திருவிழாவும் எனக்குப் பெற்றுத் தந்த இனிய அனுபவங்கள், நல்ல நண்பர்கள் எத்தனை!  அதையெல்லாம் தற்போது நினைத்துப் பார்க்கையில் மனம் மகிழ்ச்சி அடைகிறது.  இது போல மேலும் பல படங்கள் கிடைத்துள்ளன.  ஒவ்வொன்றும்  பழைய நினைவுகளைக் கிளறுகின்றன.  வரும் நாட்களில் அவற்றைப் பற்றியெல்லாம் எழுதுவேன். 

சூரியின் டைரி-5: 15.2.2010






















காரைக்குடி புத்தகத் திருவிழா2010: மூன்றாம் நாள்

நேற்று மாலை நண்பர் செந்தில் என்னை கம்பன் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். நண்பர்கள் பலரையும் அங்கே கண்டு மகிழ்ந்தேன். (பேராசிரியர் முனைவர் அய்க்கண், பேராசிரியை ஆவுடையம்மாள் தயாளன், கவிஞர் ஜனநேசன், ஹோமியோ ஆர்வலர் செல்வராஜ், இராமகிருஷ்ணா மட புத்தக ஸ்டாலின் உரிமையாளர் நண்பர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது துணைவியார், விஞ்ஞானி முனைவர் கே.ரகுபதி, முனைவர் மலைக்கனி, திரு நாச்சியப்பன், திருமதி தேவி நாச்சியப்பன்) புத்தகக் கண்காட்சியை கண்டு இன்புற்றேன். நிறைய படங்கள் எடுத்துக் கொண்டேன். முக்கியமாக நான் செய்யாதது: புத்தகங்கள் எதுவும் வாங்கவில்லை. ஆம், அதற்கு இன்னொரு நாள் செல்லவேண்டும்.

பேராசிரியை ஆவுடையம்மாள் மாணவர்களுக்கான வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்தினார். நிகழ்ச்சியை நடத்த நண்பர் செல்வராஜ் உறுதுணையாக இருந்தார். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு புத்தகம் பரிசாகத் தரப்பட்டது.

பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் தொடங்குமுன் நான் வீட்டிற்கு புறப்பட்டுவிட்டேன். இன்னும் உடல்நிலை சரியாகவில்லை, என்ன செய்வது.

கம்பன் மண்டபத்தில் எடுத்த படங்களை இங்கே பதிவு செய்துள்ளேன். மீண்டும் மன்னிக்கவும். படங்கள் சரியாக அமையவில்லை. முக்கிய காரணம், அரங்கில் நிறைய மின்விளக்குகள். அவற்றின் ஒளி படமெடுக்க இடையூறாக அமைந்தது. மற்றொரு காரணம், நான் இன்னும் புகைப்படக்கலையை தெளிவாகக் கற்காதது. பொறுத்தருள்க!

நண்பர் செந்திலுக்கு மனமார்ந்த நன்றி.

சூரியின் டைரி-4: ஃ பிப்ரவரி 13, 2010

காலை ஐந்து மணிக்கு எழுந்தேன். எழுந்தது முதல் சிந்தனை எல்லாம் நேற்று துவங்கிய காரைக்குடி புத்தகத் திருவிழா பற்றித்தான். அரவிந்தை விரட்டி அனைத்து செய்தித்தாட்களையும் வாங்கி வரச் செய்தேன். புத்தகத் திருவிழா பற்றிய செய்திகளைத் தேடினேன். தினமணியில் புத்தகத் திருவிழா ஊர்வலப் படம் கருப்பு வெள்ளையிலும், தினத்தந்தியில் வண்ணத்திலும் வெளியாகி இருந்தது. வேறு செய்தி எதுவும் இல்லை.

எனவே நண்பர் ராஜசேகரன் அவர்களை அலைபேசியில் அழைத்தேன். துவக்க விழாவுக்குச் சென்றிருந்த அவர் மூலம் செய்திகள் அறிந்தேன். மாலை 6.30 மணி அளவில் விழா தொடக்கி இரவு 9 மணி அளவில் நிறைவுற்றதை அறிந்தேன். விழாவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களது இருபது நிமிட உரை மிகச் சிறப்பாகவும், திருமதி சாரதா நம்பி ஆரூரன் அவர்களது கிட்டத்தட்ட ஒரு மணி நேர இலக்கிய உரை இனிமையாக இருந்ததையும் அறிந்தேன். மேலும் அவர் திருமதி ஆரூரன் அவர்கள் மறைமலையடிகள் அவர்களது பேத்தி என்ற தகவலையும் தந்தார். மற்றபடி கடைகள் நிறைய சிறப்பாக அமைந்துள்ளதையும் தெரிவித்தார்.

செய்தித்தாட்களில் வெளியாகி இருந்த படங்களை மேலே தந்துள்ளேன். ஏனோ படங்கள் சரியாக அமையவில்லை. மன்னிக்கவும். புகைப்படக்கலையில் நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. நேரில் செல்லும்போது நிறைய படங்கள் எடுத்து, இவ்வலைப்பூவில் பதிவு செய்யவேண்டும்.

முடிந்தால், நாளை ஞாயிறு அன்றோ அல்லது பிறிதொரு நாளிலோ கம்பன் மண்டபம் சென்று புத்தகக் கண்காட்சியை அவசியம் பார்க்க வேண்டும். உடல்நிலை ஒத்துழைக்க வேண்டும், பார்க்கலாம்.

நன்றி: தினத்தந்தி நாளிதழ், தினமணி நாளிதழ் மற்றும்
நண்பர் திரு RM.R.இராஜசேகரன் அவர்கள்.

சூரியின் டைரி-3: "காரைக்குடி புத்தகத் திருவிழா"

எட்டாவது காரைக்குடி புத்தகத் திருவிழா இன்று மாலை ஐந்தரை மணியளவில் கம்பன் மணிமண்டபத்தில் தொடங்குகிறது.

நிகழ் முறை
—————-

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை: Rtn.PHF.முத்து பழனியப்பன், அமைப்புச் செயலர், புத்தகத் திருவிழா

தலைமையுரை: பேராசிரியர் முனைவர் அய்க்கண், தலைவர், புத்தகத் திருவிழா

தொடக்கவுரை: மாண்பமை என்.சுந்தரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்

திறப்புரை: கலைப்புரவலர் எல்.சபாரத்தினம்

இலக்கியவுரை: கலைமாமணி முனைவர் சாரதா நம்பி ஆரூரன்

சிறப்புரை: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன்

வாழ்த்துரை: திருமிகு சேது.சொக்கலிங்கம், தலைவர், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம்

நன்றியுரை: திரு ஸ்ரீவித்யாராஜகோபாலன், துணைத்தலைவர், புத்தகத் திருவிழாக் குழு

நாட்டுப்பண்
——–
இணைப்புரை: முனைவர் .கலைச்செல்வி, விஞ்ஞானி, மைய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்

புத்தகத் திருவிழா இம்மாதம் இருபத்து ஒன்றாம் தேதி, ஞாயிற்றுக் கிழமை இரவு நிறைவு பெறும்.

இறையருளால் இவ்வாண்டும் விழா சிறப்புற நடைபெற வேண்டும். அமைப்பாளர்களுக்கு எனது மனமுவந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

வாய்ப்புள்ள அன்பர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறேன். (உடல்நிலை காரணமாக என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் கண்காட்சி நிறைவு பெறுமுன் ஒருநாள் பகற்பொழுதில் சென்று பார்த்துமகிழ்ந்துவேண்டிய புத்தகங்களை வாங்கி வரவேண்டும். மேலும் நண்பர்களைக் கண்டுஅளவளாவி மகிழவேண்டும்.)

பார்த்தது-3: "காரைக்குடி புத்தகத் திருவிழா 2009"

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் ஒன்பது நாளாக நடைபெற்ற ஏழாவது மாநில அளவிலான காரைக்குடி புத்தகத் திருவிழா நேற்றோடு நிறைவு பெற்றது.

காரைக்குடியில் முதன்முதலாக மாநில அளவிலான புத்தகக் கண்காட்சி பற்றிக் கனவு கண்டு, மிகுந்த சிரமங்களுக்கிடையில் செயல்படுத்தி , முதல் நான்கு புத்தகத் திருவிழாக்களின் பொறுப்பாளனாக செயல்படும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், புத்தகத் திருவிழா தொடர்ந்து விடாமல் நடைபெறுவது குறித்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். பல இடையூறுகள் காரணமாக போகமுடியாமல், இறுதி நாளான நேற்று இரவுதான் திருவிழாவிற்குச் செல்ல முடிந்தது.

அரங்கினுள் நுழையும்போது, வண்ணமலர்கள் பூத்துக்குலுங்கும் அழகிய, அற்புத நந்தவனத்திற்குள் நுழையும் உணர்வே ஏற்பட்டது. வண்ணமலர்களை ஈக்கள் மொய்ப்பதுபோல் மக்கள் பேராவலுடன் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்வதைக் கண்டு உவகை அடைந்தேன். பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் பார்க்கிறபோது வாசித்தல் என்பது ஒரு கரை காணமுடியாத கடல், வாழ்நாள் முழுவதும் வாசித்தாலும் நாம் வாசித்தது கைம்மண் அளவே என்ற பணிவும் பிறந்தது.

நல்ல நூல்களை மேலும் மேலும் படித்து, இன்புற்று, அவற்றில் கூறப்பட்டுள்ள மேன்மையான கருத்துக்களை உள்வாங்கி, மனதில் மேன்மையான, உன்னதமான சிந்தனைகளை வளர்த்து, வாழ்க்கையில் மகத்தான சாதனைகள் படைக்கவேண்டும் என்ற வேட்கையை இதுபோன்ற புத்தகத் திருவிழாக்கள் ஏற்படுத்துகின்றன. இத்தகைய தலை சிறந்த தொண்டினைச் செய்துவரும் இப்புத்தகத் திருவிழா அமைப்பாளர்களையும், இது சிறப்பாக நடைபெற பல வகைகளிலும் உதவி புரிந்துள்ள அன்பர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இது போன்ற நல்ல வாய்ப்புக்களை பயன்படுத்தி அனைவரும் மேன்மையுற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நிறைவாக ஒன்று. “படிக்காமல் சிந்திப்பது ஆபத்தானது; சிந்திக்காமல் படிப்பது பயனற்றது”. ஆவலுடன் புத்தகங்களை வாங்கிச் செல்லும் அனைவரும் இக்கருத்தினை மனதில் நிறுத்தி பயனடைய வேண்டுகிறேன்.