பயணங்கள்-21: பட்டமங்கலம்

ஸ்ரீ கற்பக சிந்தாமணி விநாயகர் 

அருள்மிகு அடைக்கலம் தந்த அய்யனார்  கோவில்

ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் முகப்பு 

ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் பிரகாரம் 

ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் வெளித் தெப்பக்குளம் 

கடந்த வியாழக்கிழமை பட்டமங்கலம் சென்று பிரசித்தி பெற்ற  அருள்மிகு      ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் சென்று வழிபாட்டு வருகிறேன்

பட்டமங்கலம் சிவகங்கைமாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்.  ஊருக்குள் நுழையுமுன் கோவில் வந்து விடுகிறது.  அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் சூழல்.  மனம் அடங்கி மகிழ்வைத் தந்தது.

இங்குவியாழக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  குரு பகவானுக்கமிகவும் உகந்த நாள்வியாழன் என்பதால்.  வியாழக்கிழமை  காலை ஒன்பது மணிக்கு  முன்னரே  கோவிலுக்கு வந்துவிட்டேன்  முதலில் வழியில் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் அருள்மிககற்பக சிந்தாமணி விநாயகரை அருகம்புல் கொண்டு வழிபட்டேன்.  அடுத்து, அருள்மிகு அடைக்கலம் தந்த அய்யனார்  கோவில்  அங்கே வழிபாட்டு  அதன் பின்னர் கோவிலுக்குள் நுழைந்தேன்.

முதலிலேயே குரு பகவான் சன்னதி.  கூட்டத்தில் காத்திருந்து, அவருக்குகந்த  முல்லைப்பூ மாலையோடு  அர்ச்சனை செய்து. நெய் விளக்கேற்றி வழிபட்டேன்.  மும்முறை பிரகாரம் சுற்றி வந்து வழிபட்டேன்.  பிரகாரம் பின்புலம் முழுவதும் ஒரு  நெடிய  ஆலமரம்  விழுதுகள் விட்டுக் கிளர்ந்து விழுதுகள் மரங்களாகி அற்புதமாகக் காட்சியளித்தது.  மரத்தடியில் நாகர்கள்.  அருள்மிகு நாகனாதப் பெருமானை நினைந்து, ஒம் நமோ நாகராஜாய நமோஸ்துதே என்று ஜபித்து வழிபட்டேன்.

பிரகாரத்திலிருந்து உள்ளே  சென்றால் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி மற்றும் நவ கிரகங்களின் சன்னதி. அங்கெல்லாம் வழிபட்டபின  அக்கோவிலின் பிரகாரத்தில் திருக்குளம் தென்பட்டது  எட்டிப் பார்த்தால் அங்கே ஒரு விநாயகர் சன்னதி அருள்மிகு  அனுக்க விநாயகர் சன்னதி. அங்கும் வழிபாட்டு வெளியே வந்தேன்.  மனம் நிறைந்த அனுபவம்.  இயன்றவரை oஒவ்வொரு வியாழனும் வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

ஒரு சிற்றூரில் இவ்வளவு பெரிய கோவிலா!   தல வரலாற்றைப் பார்த்தபோதுதான் தெரிந்தது அது முப்பத்துமூன்றாவது திருவிளையாடல் நடை பெற்ற திருத்தலம்  என்பது.

மேலும் பிரகாரத்தில் திருவிளையாடற் புராணத்தில் இடம் பெற்றுள்ள,  ஸ்ரீ பரஞ்சோதி முனிவரின் பிரசித்தி பெற்ற,  பெரும்பாலும் அனைவரும் அறிந்த  குரு பகவானைப் பற்றிய திருப்பாடல்:

கல்ஆலின்   புடை அமர்ந்து  நான்மறை  ஆறு
         அங்க முதற்  கற்றகேள்வி
வல்லார்கள்  நால்வருக்கும்  வாக்கிறந்த
         பூரணமாய்  மறைக்கு அப்பாலாய்
எல்லாம் ஆய்  அல்லதும் ஆய்  இருந்ததனை
         இருந்தபடி  இருந்து  காட்டிச்
சொல்லாமல்  சொன்னவரை  நினையாமல் நினைந்து
         பவத்  தொடக்கை   வெல்வாம்.

மன நிறைவைத்  தந்த அந்தப் பயணக்காட்சிகளில் சிலவற்றை எனது  புகைப்படக்கருவியில் பதிந்தேன்.  அவற்றுள் சில  மேலே.

புதிதாக அக்கோவிலுக்குச் செல்லும் அன்பர்களுக்காகச் சில தகவல்கள்:

காரைக்குடியிலிருந்து காலை எட்டு மணி அளவில் மல்லிகா எனும் பேருந்து பட்டமங்கலம்  வழியாக திருக்கோஷ்டியூர் செல்கிறது சிவகங்கையிலிருந்து காலை ஆறு மணி அளவில் ராயல் இந்தியா எனும் பேருந்து பாகனேரி, பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர் வழியாக புதுக்கோட்டை செல்கிறது.

ஐந்து கால பூஜை நேரம்:
———————————

காலை 6 மணி முதல் 6.30 மணி வரை                 திருவனந்தல்

காலை 8 மணி முதல் 9 மணி வரை                      காலசந்தி

மதியம் 12.30 முதல் 1.00 வரை                                  உச்சிக்காலம்

மாலை 5 முதல் 6 வரை                                              சாயரட்சை

இரவு  7.30 முதல் 8.00 வரை                                       அர்த்தஜாமம்

வியாழன் மட்டும்
——————————

காலை  4.30 மணி முதல்
இரவு  9.00 மணி வரை

கோவிலமுகவரி
——————————-

ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வரர்
ஸ்ரீஅஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி  திருக்கோவில்
பட்டமங்கலம் – 630 310
சிவகங்கை மாவட்டம்

              

சூரியின் டைரி-53: மானாமதுரை

மானாமதுரை  இரயில்  நிலையத்தின்  புதிய  முகப்பு 
முதல் பிளாட்பாரத்தில் மழை கொட்டுகிறது 

முதல் பிளாட்பாரத்தின் கடைசியில்தான் 
டிக்கட் பரிசோதகர்களின் அறை  
தம்பிமார் பயின்ற 
ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி 
வைகை மேம்பாலத்திலிருந்து ஊருக்குள் நுழையாமல்  பைபாஸ் சாலை வழியே புதிய பேருந்து நிலையம் செல்லும் பாதை – அண்ணா சிலை 

புதர்தான் என்றாலும் வைகைக் கரையில் ஒரு அழகிய காட்சி 

வைகை ரயில் பாலமும், 
எங்கு பார்த்தாலும் மண்டிக் கிடக்கும் புதரும் 

வைகை சாலைப் பாலத்திலிருந்து ஒரு காட்சி 

மானாமதுரை கீழ்கரை – ஒரு காட்சி 
அருள்மிகு பூர்ண சக்ர  விநாயகர் கோவில்

அருள்மிகு  ஆதிபராசக்தி  திருக்கோவில்  
அருள்மிகு சாஸ்தா ஆலயம் 

மானாமதுரையின் முக்கிய கோவிலான அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சோமநாதர் திருக்கோவில் – வைகை ஆற்றங்கரையில் 

வைகை ஆற்றுத் தரைப்பாலம் – பெரும்பாலும் ஆற்றில் தண்ணீர் இல்லாதபடியால் இப்பாலம் வழியே எளிதில் அக்கறை செல்லலாம் 

வைகை சாலைப்பாலத்தில் வாகனங்கள் செல்கின்றன 
எனது பள்ளி இறுதித் தேர்வு முடியவும், இரயில்வேயில் பணிபுரிந்த என் தந்தைக்கு திருநெல்வேலியிலிருந்து, மானாமதுரைக்கு மாற்றலாகவும் சரியாக இருந்தது.  நான் விடுமுறையில் திருச்சியில் என் சித்தப்பா வீட்டிலிருந்தேன்.  வீடு மாற்றியதே எனக்குப் பின்னர்தான் தெரியும்.   1965  ஆண்டு ஜூன் மாதம் என்று நினைக்கிறேன்.  ஒருநாள் அப்பாவிடமிருந்து ஒற்றைவரிக் கடிதம் வந்தது. இரவு ராமேஸ்வரம் பாசெஞ்சரில் அவருடன் நான் மானாமதுரை   செல்லவேண்டும். இதுபோன்ற ஒற்றைவரிக் கடிதம் அவர் கோபத்தில் இருக்கிறார் என்பதை தெளிவாக்கியது. எனக்கு சித்தப்பாவைவிட்டு பிரிந்து செல்ல விருப்பமில்லை; சித்தப்பாவிற்கும் என்னை அனுப்ப மனமில்லை. இருப்பினும் வேறு வழியின்றி திருச்சி இரயில் நிலையம் சென்றோம். சித்தப்பா என்னிடம் சொன்னார்: அப்பா கேட்டால் சொல்லிவிடு துணிமணி எதையும் எடுத்து வரவில்லையென்று. சீப்பை ஒளித்து வைத்துக் கல்யாணத்தை நிறுத்துவதைப் போல். என்னைப் பார்த்ததும், ஏறி உள்ளே உட்கார் என்று ஒரு உறுமல் கட்டளை. நான் சப்தநாடியும் ஒடுங்க, அந்த ரயில் பெட்டியில் ஏறி காலியாக இருந்த ஒரு ஓரத்தில் அமர்ந்தேன். சித்தப்பா ஏதோ சொல்ல முயல, அவரை ஒரு கடி, அதோடு அவர் சரி. ரயில் புறப்பட்டது. மேலே லக்கேஜ் ரேக்கில் ஏறிப் படுத்துக் கொள்கிறாயா என்று கேட்டு, விரிப்பையும் விரித்துக் கொடுத்தார்.  நான் ஏறிப் படுத்தேன்.  சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டேன்.  இரவு  முழுவதும்  தந்தை டிக்கட் பரிசோதனை செய்யும் தன் பணியைப் பார்க்கப்  போய்விட்டார்.   
அதிகாலை மூன்று மணி அளவிருக்கும்.  தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி மானாமதுரை வருகிறது; இறங்கவேண்டும்; தயாராகு என்றார் தந்தை. விடியாத ஒரு வேளையில் மானாமதுரையில்  வந்திறங்கினேன்.  டிக்கட் பரிசோதகர்களின் பெட்டிகள் வைக்கும் அறையில், இரண்டு, மூன்று பெட்டிகளை இழுத்துப் போட்டு, படுத்துறங்கு; விடிந்தவுடன் எழுப்புகிறேன்; வீட்டிற்குச் செல்லலாம் என்றார் தந்தை.  உறங்கினேன்.  அவர் மீண்டும் என்னை எழுப்பியபோது, நன்றாக விடிந்திருந்தது.  பல் தேய்த்து, அருமையான காப்பி ஒன்றைப் பருகிவிட்டு, (அப்போதெல்லாம் மானாமதுரையில் இரயில்வே சிற்றுண்டியகம் இருந்தது; அங்கே சிறப்பான காப்பி கிடைத்தது), அப்பாவுடன் வீட்டை நோக்கி நடந்தேன்.
வைகை ஆறு மானாமதுரையை மேல் கரை, கீழ்கரை  என்று இரண்டாகப் பிரித்திருந்தது.  ரயில் நிலையம், எங்கள் வீடு போன்ற முக்கிய பலவும் மேல் கரைதான்.  கீழ் கரை ஞாயிறன்று அப்பாவுடன் சந்தையில் காய்கறி வாங்கச் செல்வது, பின்னர் கட்டப்பட்ட அமுது தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்க்கச் செல்வது,  நண்பர்களுடன் செல்லமுத்து கடையில் புரோட்டா சாப்பிடச் செல்வது  என்று மிகக் குறைந்த தொடர்புதான்.
மேல்கரையில் ரயில் நிலையத்துடன் ஊர் முடிகிறது.  அல்லது ரயில் நிலையத்திலிருந்துதான் ஊர் ஆரம்பமாகிறது.
பிரதான சாலையில் அப்பாவுடன் வீட்டை நோக்கி நடந்தேன். சரியான பட்டிக்காடு. நெல்லை மாநகருக்குப்பின், மானாமதுரை அவ்வாறு தோன்றியதில் வியப்பில்லை. அடுத்த ஐந்தாண்டுகளை அந்த ஊரில் எப்படிக் கழிக்கப் போகிறேன் என்று நினைக்கவே கஷ்டமாக இருந்தது.  பத்து நிமிட நடைக்குப்பின் ஒருவழியாக வீட்டை அடைந்தோம்.  ஒரு பழைய வீடு.
இப்படித்தான் மானாமதுரை வாழ்கை ஆரம்பித்தது.  1970-ஆம்  ஆண்டு அந்த ஊரை விட்டுக் கிளம்பி, காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் குடிபுகுந்தது வரை உள்ள வாழ்க்கையை தற்போது பதிவு செய்ய முடியாது. நான் பதிவு செய்யப்போவது 2011 அக்டோபரில் மீண்டும் மானாமதுரையைச் சென்று பார்த்தது பற்றித்தான்.  அதாவது நாற்பது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மானாமாதுரையைப் பார்த்தது பற்றி.
மதகுபட்டியிலிருந்து சிவகங்கை   சென்று, பின் அங்கிருந்து மானாமதுரை செல்ல திட்டம்.  ஆனால் நேரடியாக மானாமதுரை பேருந்தே கிடைக்க, நேராக மானாமதுரைக்கே    சீட்டு வாங்கினேன்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பயணத்திற்குப் பின் மானாமதுரை கீழ்கரை, வைகைப் பாலம், மேல்கரை என்று பேருந்து செல்ல, மேல்கரை அடைந்தவுடன் ஊருக்குள் செல்லாமல், பைபாஸ் சாலை வழி வெளியே சென்றது.  இது முதல் மாற்றம்.  புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்தின் மறுபகுதியில் புதிதாக முளைத்திருந்த சாலையில் இருந்தது.  அருகே இரண்டு பெரிய சினிமா தியேட்டர்கள், மற்றும் பல கடைகள் என்று ஊர் வளர்ச்சி பெற்றிருந்தது.
பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில் என்பதை முதலில் உணர்ந்தேன். அதன் பின் ஊருக்குள் நடந்தேன்.  பிரதான சாலையில் பெரிதான  மாற்றம் ஒன்றுமில்லை. தம்பிகள் பயின்ற ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி. சீனியப்பா என்ற பெயரில் பல நிறுவனங்கள் (சினிமா தியேட்டர் உட்பட).  நாங்கள் அங்கிருந்த காலத்தில் பெரிய மரக்கடை வைத்திருந்தார்கள்.  தற்போது நிறைய மரக்கடைகள் மற்றும் தியேட்டர்.  நான் சற்றும் எதிர்பாராத ஒன்று பெரிய குழந்தைகள் மையம் ஒன்று டோப்ளர் ஸ்கேன் வசதியுடன்!
அடுத்து நிறைய குட்டிக் குட்டி கோவில்கள்.  (படங்களைப் பதிவு செய்துள்ளேன்.)  நகரின் முக்கிய கோவிலான அருள்மிகு ஆனந்தவல்லி சமேத  சோமநாதர் திருக்கோவில்.  எதிரே வைகை ஆற்றின் தரைப்பாலம்.  கிட்டத்தட்ட தூர்ந்து போயிருந்தது.  கோவிலைத் தாண்டி சென்றபோது வைகை ஆற்றின் மேலுள்ள பெரிய பாலம்.  அதற்கு முன் அண்ணா சிலை.  பாலத்திலிருந்து பார்த்தபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  நாங்கள் வாழ்ந்த காலத்தில் வைகை ஆற்றுப் படுக்கை, மெரீனா பீச்சைப் போன்று வெள்ளைமணல் கொழிக்கும் எங்களது மாலைப் பொழுதை உவகையுடன் கழிக்கும் இடம்; குழந்தைகள் கொட்டமடிப்பது, விளையாடுவது;  தற்போது முற்றிலுமாக தூர்ந்து, புதர் மண்டியிருந்தது.  ஆறே சுருங்கிவிட்டதுபோன்ற உணர்வு.
நான் தட்டெழுத்து, சுருக்கெழுத்துப்  பயின்ற லக்ஷ்மி தட்டெழுத்துப்பள்ளி காணாமல் போயிருந்தது. புகுமுக வகுப்பில் இருமுறை தோற்று,  கல்லூரியில் பட்டப்படிப்பிற்கு இடம் கிடைக்காமல், அந்த ஆண்டை வீணாக்காமல் உருப்படியாக தட்டெழுத்து, சுருக்கெழுத்து வகுப்பில் சேர்ந்தேன். ஆனால் ஏதோ காலம் வீணாகி விடக்கூடாது என்று பொழுதுபோக்காக படித்த அவைதான் என் வாழ்வின் ஆதாரமாயின.  குடும்பம், பிள்ளைகுட்டி, அவர்களது படிப்பு, திருமணம் என்று அனைத்திற்குமே உதவியது அந்தப் படிப்புதான். இறுதியில் எனது சிறு சிறு கனவுகளை   நனவாக்கவும், எனக்கு ஓரளவு பெயரும் புகழும் கிடைக்கவும் அவையே ஆதாரமாயிருந்தன என்பதுதான் வாழ்க்கையின் வினோதம்.  

நண்பர்கள் யாரும் கண்ணில் படவில்லை.  தொடர்பே இல்லாமல் போயிருந்தது.

வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில், பிரதான சாலையில், குண்டு காதர் கடையில் அப்பா எங்களுக்கு நொறுக்குத்தீனி வாங்கி வருவார். அந்தக் கடை காணாமல் போயிருந்தது.  அதுபோல் காலையில் அருமையான, சுவையான தேநீர் வழங்கும் சைவப் பிள்ளை கடையும் காணாமல் போயிருந்தது.   

நாங்கள் கடைசியாகக் குடியிருந்த தெற்கு ரத வீதியிலுள்ள வீட்டில் முகப்பில் மட்டும் சிறிய மாற்றம்.  முகப்பில் கேம்ப் காட்டில் படுத்துக் கொண்டு புத்தகம் படிப்பது, வேடிக்கை பார்ப்பது, உறங்குவது என்று எவ்வளவு நாட்களை கழித்திருக்கிறேன்.  எதிரே இருந்த கிருஷ்ணா மெடிக்கல்ஸ் காணாமல் போயிருந்தது.  எங்களூர் பாராளுமன்ற உறுப்பினர் தா.கிருட்டிணன் அவர்களது கடை.  திறந்து வைக்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வந்திருந்தார். என் படுக்கையில் இருந்து பார்த்தால், கல்லாப் பெட்டியில் யார் என்று தெரியும்.  பல நாட்கள் எங்கள் எம்.பி. உட்கார்ந்திருப்பார்.  இளைஞர்களெல்லாம் சான்றிதழுக்காகப் படையெடுப்பர்.  பொறுமையாக ஒவ்வொருவருக்கும் தனது லெட்டர் பேடிலிருந்து ஒரு தாளைக் கிழித்துக் கொடுப்பார்.  அவர்கள் ஓடோடிச் சென்று டைப் அடித்து வாங்கி வருவர்.  அவரும் பொறுமையாக அனைவருக்கும் கையெழுத்திட்டுக் கொடுப்பார்.  பின்னாளில் சட்ட மன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் வளர்ந்தார். அதன் பின் பல்லாண்டு கழித்து,மதுரையில் அவர் கொலையுண்ட செய்தி  வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
கடைசியாக மானாமதுரை ரயில் நிலையம்.  ஒருகாலத்தில் எப்போதும் ஜேஜே என்றிருக்கும்.  இராமேஸ்வரம், சென்னை, மதுரை, விருதுநகர் என்று நான்கு புறமும் ரயில் பாதைகள் பிரிந்து செல்லும் ஒரு முக்கிய ரயில் நிலையமாக விளங்கியது, காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட ரயில்கள். மண்டபம்-பாம்பன் இடையே தரைப் பாலம் வந்த பிறகு, ரயிலின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இன்று மிகக் குறைந்த ரயில் சேவைகளுடன் பரிதாபமாக் காட்சியளித்தது.  புதிய கட்டிடம், புதிய சிறந்த முகப்பு என்று எல்லாம் இருந்தும் பழைய சிறப்பில்லை.  நல்ல காப்பி கூட கிடைக்கவில்லை.  நாராயணன் என்று ஒருவர் புத்தகக் கடை வைத்திருந்தார். அங்கு நான் பல புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்.  கமுதக்குடியில் பாதிரித் தோட்டத்தில் இருந்து, ஆப்பிள் கொய்யா என்று விதையே இல்லாத, மிகச் சுவையான கொய்யா வரும். எல்லாம் மறைந்துவிட்டது.
ஒருவித ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினேன்.
பின் குறிப்பு: 
புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தியேட்டரில் காலை பதினோரு மணி காட்சி “எங்கேயும் எப்போதும்” என்ற படம் பார்த்தேன்.  படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர் மட்டுமே படம் பார்த்தோம்! தீபாவளிக்கு முந்திய சிலநாட்கள் என்பதால் கூட்டமே இல்லை.                       அது மட்டுமே இப்பயணத்தில் சற்று ஆறுதலான விஷயம்!      

சூரியின் டைரி-28: அகில இந்தியப் பயணம்-5

தில்லியிலிருந்து  எப்போது கிளம்பினோம் என்பது நினைவில்லை.  ஆனால் நாங்கள் அதிகாலை தாஜ்மஹாலிலிருந்தோம்.  பார்வையாளர்களுக்கு கதவு திறக்கப்பட்டதும் முதல் ஆட்களாக நாங்கள் உள்ளே சென்றோம்.  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை நேரில் பார்க்கிறோம் என்பதை நினைக்க மகிழ்ச்சியாக இருந்தது.  உடன் பயணித்த நண்பரில் கோடாக்  கிளிக் த்ரீ காமெராவில் சில படங்கள் எடுத்தோம்.  அங்கிருந்த புகைப்படக்காரர்கள் பணம் கொடுத்தால் படம் எடுத்துத் தபாலில் அனுப்பவதாகக் கூற, அதிலும் ஒன்று படம் எடுத்துக் கொண்டேன்.  அந்தப் படம் மேலே.  தாஜ் மகாலின் உள்ளே ஷாஜஹான் மற்றும் மும்தாஜின்  கல்லறைகள்.  ஆனால் உண்மையான கல்லறைகள் அடித்தளத்தில் என்று அதையும் காட்டினார்கள்.  பின்புறம் யமுனை நதி.  அதில் அப்போது தண்ணீர் இருந்ததாக நினைவில்லை. 


அடுத்தது மதுரா.  சிலர் மட்டுமே கோவிலுக்குச் சென்றார்கள்.  நான் என்ன காரணத்தினாலோ செல்லவில்லை.  பிருந்தாவன் செல்ல பெரும்பான்மையோருக்கு விருப்பமில்லாததால் அங்கு நாங்கள் செல்லவில்லை.

 குருஷேத்திரத்தில் சூரி 
அடுத்துப் பயணம் எனக்குக் கோர்வையாக நினைவில்லை.  குருஷேத்திரம் சென்றோம்.  மகாபாரத யுத்தம் நடந்த இடம் என்று கூட்டிக்கொண்டுபோய்க்  காட்டினார்கள்.  அங்கே படம் எடுத்துக் கொண்டேன்.    அடுத்த வரும் வழியில் பெரிய தடாகம்.  குருஷேத்திரப் பல்கலைக்கழகம் என்று பேருந்தில் இருந்தபடியே பார்த்தவாறு சென்றோம்.

நாசிக் பஞ்சவடி.  அங்கும் தீர்த்தமாடல். அடுத்தது  மும்பை.  மும்பையில் தமிழ்ச்ச் சங்கத்தில் தங்கினோம்.   மகாலட்சுமி கோவிலுக்குச் சென்று வழிபட்டோம்.  அடுத்தது ஒரு மசூதியைக் காட்டினார்கள்.  கடல் பின்வாங்கும்போது மட்டும் அதனுள் செல்லலாம்.  அது போன்ற அமைப்பு.  பிரபல ஓபராய் ஷெராட்டன் ஹோட்டல்,  தாஜ்மஹால்  ஹோட்டல்,  கேட் வே  ஆஃப் இந்தியா.  இந்திய நுழைவாயிலிலிருந்து படகுப்பயணம்.  அப்போது எடுத்த படங்களில் ஒன்று மேலே.
மறுநாள் அதிகாலை கிளம்பி புனே, கோல்ஹாபூர்.  ஹரிஹர் என்ற ஊரில் பேருந்து பிரேக் டௌன்.    ஒரு நாள் பொழுது வீணானது.  பயணம் முழுதிலும்  இரவு பேருந்து ஓட்டப்படுவதில்லை.  அன்று இரவு மட்டும் பேருந்து தொடர்ந்து ஒட்டப்பட்டு, அதிகாலை பெங்களூர்  அடைந்தோம்.  அங்கே காலை உணவு.  எல்லோருக்கும் ஒரே சோர்வு.  யாருக்கும் பெங்களூரில் சுற்ற திராணியில்லை, விருப்பமுமில்லை.  அநேகமாக எல்லோருமே பெங்களூரை ஏற்கனவே பார்த்திருக்கலாம்.  எனவே விதான் சபாவை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு தமிழ்நாட்டை நோக்கி,  வீடு நோக்கி விரைந்தோம்.  வழியில் கரூர் என்று நினைக்கிறேன்.  மதியம்.  காவிரியில் நீராடி, இரவு மதுரை வந்தடைந்தோம்.
எவ்வளவோ இனிய அனுபவங்கள், காட்சிகள்.  ஆனால் அவற்றில் பல நினைவிலிருந்து காணாமல் போய்விட்டன.  வழியில் சகபயணி ஒருவரை குரங்கு கடிக்க, அதனால் மருத்துவமனை தேடி, பயண திசை மாறி, சிகிச்சை பெற்று, அப்புறம் பயணம் தொடர்ந்தோம்.  வழியில் பல இடங்களில் விபத்துக் காட்சிகள்.  அப்போதெல்லாம் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன் விபத்தில் சிக்கியவர்களுக்காகப்  பிரார்த்தனை.    முப்பத்து இரண்டு ஆண்டுகள் கடந்தபின் நினைமட்டுமே நம்பி இந்தக் குறிப்புகளை எழுதியுள்ளேன் என்பதை அன்பர்கள் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  ஏதாவது விடுபட்டுப்போனது நினைவிற்கு வந்தால் அதனைப் பின்னர் பதிவு செய்கிறேன்.  நன்றி, வணக்கம்!

சூரியின் டைரி-27: அகில இந்தியப் பயணம்-4

தில்லியில்  இரண்டாம் நாள்  தீன்மூர்த்தி பவன்.  பாரதத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு வாழ்ந்த இல்லம்.  இன்று  அவரது நினைவு இல்லம்.  கட்டணம் செலுத்தி வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்தோம்.  அவரது படுக்கையறையில் அவர் இறுதியாக  வாசித்த நூல்கள் படுக்கை அருகிலேயே இருந்தன.  தீன்மூர்த்தி பவனில் நான் எடுத்துக் கொண்ட படம் மேலே.
அடுத்தது குதுப்மினார். பத்தாம் நூற்றாண்டிலேயே துருப்பிடிக்காத தூண்களைக் கட்டியவர்கள் இல்லையா நாம் என்று பெருமையுடன்  தி.சா.ராஜூ குறிப்பிட்டுச் சொன்ன தூண்கள் இங்கேதான். உலோகத் துறையில் நாம் எவ்வளவு சிறந்த நிலையில் இருந்தோம் என்பதற்கு இன்றும் சான்றாக இருக்கிறது.  மேலே செல்வதற்குப் பெரிய கியூ.  எனவே மேலே செல்லமுடியவில்லை.  அங்கே எடுத்துக் கொண்ட படம் மேலே. 

இந்தியா  கேட்டில்  எடுத்துக்  கொண்ட  படம்  காணவில்லை.   ராஷ்ட்ரபதி பவனுக்கு முன் நான் நிற்கும் படம் மேலே.  பல படங்களில் நான் ஒரு ஓலைத் தொப்பி அணிந்திருப்பதைப் பார்க்கலாம்.  ஏப்ரல்-மே மாதமில்லையா, அதற்காக நான் ஹைதராபாத்தில் வாங்கிய தொப்பி அது.  சக பயணி ஒருவர் தொப்பியுடன் உங்களைப் பார்த்தால் கேரி  கூப்பர் போலிருக்கிறது என்று கிண்டலடித்தார்.

நாங்கள் செங்கோட்டைக்குச் சென்றபோது எனக்கு உடல் நிலை  சரியில்லை.  எனவே கோட்டைக்குள் செல்லவில்லை.  அதனால் எதுவும் பார்க்க முடியாமல் போனது.  ஆனாலும் கோட்டையின் முன் நின்று ஒரு படம் எடுத்துக்கொண்டேன்.  (அது மேலே).

அன்று மாலை என்னுடன் காரைக்குடியில் பணிபுரிந்த பாரத் பிரசாத் என்ற நண்பர் கல்வி அமைச்சகத்தில் செக்ஷன் ஆபீசராக இருந்தார்.  ராமகிருஷ்ணபுரத்தில் அவரது வீட்டைத் தேடி கண்டுபிடித்தேன்.  அவர் வீட்டில் சிறப்பாக வெஜிடபிள் புலாவ் சாப்பிட்டேன். அடுத்த நாள் அவருடன் சாந்தினி சௌக் சென்று சிறு சிறு பொருட்கள் வாங்கினேன்.      


 அடுத்த நாள் அதிகாலை தாஜ் மகாலைக் காணப் புறப்பட்டோம்.  அது  அடுத்த பதிவில்.

சூரியின் டைரி-26: அகில இந்தியப் பயணம்-3

இரவில்  தில்லிக்குச்  சற்று  வெளியே  ஒரு  பெட்ரோல்  பங்கில்  உறக்கம் .  பொழுது  புலருமுன்  கிளம்பினோம்.  பொழுது புலரும் அந்த இனிய காட்சியை என்னால் மறக்க முடியாது. புது தில்லியின் அந்த பரந்த வெளிகளில், இதமான இளம் பனியில்  நடை பழகுவோர், குதிநடை புரிவோர் என்று ஆங்காங்கே மக்கள்.  முதலில் ராஜ் காட் சென்று காந்தி மகானது சமாதியில் வழிபட்டோம்.  அடுத்து நேரு, சாஸ்திரி சமாதிகள் முடித்து தங்குமிடமான ஹிந்து மகா சபாவிற்குச் சொந்தமான ஒரு இடம்.  குளித்துக் காலை உணவை முடித்து பிரதமர் இல்லம் சென்றோம்.  அங்கே பார்வையாளர்களை தனித்தனி குழுக்களாக அமரச் செய்தனர் பாதுகாவலர்கள்.  ஒவ்வொரு குழு அருகிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் வந்து நிற்க புகைப்படம் எடுக்கப்பட்டது.  எங்கள் குழு அருகே அவர் வந்ததே தெரியாது.  புகைப்படம் அதற்குள் எடுத்து முடித்துவிட்டார்கள்.  படத்தை மதுரை வந்துதான் பார்த்தேன்.  (எங்களுக்கு முன்னதாக படம் மதுரை வந்துவிட்டது).  (அப்படம் மேலே).
அடுத்து திருமதி இந்திரா காந்தியின் இல்லம்.  தேர்தலில் தோற்று அப்போது அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை.  முன்னால் பிரதமர் என்ற அந்தஸ்து மட்டும்தான்.  ஆனால் அங்கும் பார்வையாளர் கூட்டம், பிரதமர் இல்லம்போல்.  சிறிது நேரத்தில் அவர் வந்து எங்களது குழு மேலாளரிடம் சிரித்துப் பேசினர், விசாரித்தார்.  ஸ்ரீநகர் சென்று வந்ததைக் கேட்டதும், பஹல்காம்  சென்றீர்களா என்று கேட்டார்.  அடுத்த முறை கண்டிப்பாகப் பாருங்கள், பார்க்க வேண்டிய இடம் என்றார்.  நாங்கள் அழைத்துச் சென்றிருந்த புகைப்படக்காரர் மூன்று முறை படம் சரியாக எடுக்க முடியாமல் கோட்டை விட, அதற்கு மேல் அவகாசமில்லாமல்,  ‘ஸாரி!’ சொல்லிவிட்டு, சிரித்தபடியே அடுத்த கூட்டத்தை நோக்கி நகர்ந்தார் இந்திரா.
அடுத்தது காந்தி நினைவு வளாகம்.  கோட்சேயால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடம்.  அங்கே அந்த இடத்தில் வரைந்து வைத்திருந்தார்கள்.  புரியாமை, சகிப்புத்தன்மையின்மை, வன்முறை, தீவிரவாதம் இப்படிப்பட்ட கொடுமைகளால் உலகில் எவ்வளவு துன்பம்.  சிறு சிறு கூட்டங்கள் மனித சமுதாயத்தையே அச்சுறுத்தும் கொடுமை, அதற்குப் பதில் தரமுடியாத துயரம்.  இந்தக் கொலைகாரர்களுக்கு  ஆதரவாக சில மேதைகள்.  வன்முறையாளர்களின்  மனித உரிமை பற்றி இந்த அறிவாளிகள், பெரியவர்கள்   பேசும்போது, இந்தத் தீவிரவாதிகளால் நேரடியாகப்  பாதிக்கப்பட்டவர்கள்,  இந்த தீவிரவாதச் சம்பவங்களால் அல்லலுறும் அப்பாவிப் பொதுமக்கள் இவர்களுக்கெல்லாம் உரிமை எதுவும் கிடையாதா என்று கேட்கத் தோன்றுகிறது.
அடுத்த நாள் தில்லி செங்கோட்டை, குதுப்மினார், தீன்மூர்த்தி பவன்.  இதை நாளைப் பதிவு செய்கிறேன்.     

சூரியின் டைரி-25: அகில இந்தியப் பயணம்-2

அயோத்தியா.  சர்ச்சைக்குரிய பூமி.  நாங்கள் ஒரு மதியம் அங்கு போய்ச் சேர்ந்தோம். நுழையும் இடத்திலேயே ஒரு பெரிய கோவில்(படம் மேலே). நாங்கள் தங்கிய இடம் நகரத்தார் சத்திரம்.  அது  ஒரு பழங்காலக் கட்டிடம்.  பொருட்களை வைத்துவிட்டு  சரயூ நதியில் தீர்த்தமாடச் சென்றோம்.  அங்கே கரையோரம் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது.  அகண்ட காவிரியை நினைவு படுத்தும் பெரிய  ஆறு.  அதில்  புதிய பிரம்மாண்டமான  சாலைப் பாலம்.  அங்கிருந்து பிர்லா மந்திர் என்று நினைக்கிறேன்.  சலவைக் கல்லில் ஆன  ராமர் ஆலயம்.  அப்போது சொன்னார்கள்.  அயோத்திய முழுவதும் இது போன்று பல பேர் கோவில்களையும், சாத்திரங்களையும் கட்டி வைத்துள்ளனர்.  யாத்ரீகர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் இலவச உணவு.  அப்படியென்றால் தேவையில்லாமல் ஏன் பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டத் துடிக்கிறார்கள்?  புரியவில்லை.  அடுத்து  அங்கேதான் சென்றோம் – பாபர் மசூதி.   கதவு சாத்தப்பட்டு  அரக்கு சீல் வைத்திருந்தார்கள் வெளியிலிருந்தே பார்த்தோம்.  அருகே பந்தலில் அகண்ட நாம பஜன் – ராமர்  மேல் பக்தர் கூட்டம் பஜனை செய்துகொண்டிருந்தது.  எவ்வளவோ ஆண்டுகளாக இடைவிடாமல், தினமும் இருபத்து நான்கு மணி நேரமும் பக்தர் கூட்டம் மாறி மாறி வந்து பஜனை செய்வதாக.  எப்படியாவது பாபர் மசூதியை அழித்து, அங்கே ராமர் கோவிலைக் கட்டவேண்டும் என்று அவர்கள் போராடுவதாகச் சொன்னார்கள்.  (பின்னர் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில் மசூதியை அழித்தே விட்டார்கள்.  அதனால் எத்தனை வன்முறைகள்.  உலக அரங்கில் இந்தியாவின் பெயர் எவ்வளவு தாழ்ந்தது!  மக்களின் அறியாமையும், கண்மூடித்தனமான பக்தியையும் பயன்படுத்திக் கொண்டு அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் பயன் படுத்திக் கொள்கிறார்கள்.  அவர்களுக்கு தங்கல் சுய லாபம்தான் முக்கியம், வேறு எதுவே முக்கியமில்லை. மற்ற விளைவுகளைப் பற்றி அவர்கள் நினைப்பதும் இல்லை, கவலைப் படுவதும் இல்லை.  இது இந்த நாட்டின் சாபக் கேடு.
அடுத்து பதான்கோட் வழியே ஜம்மு சென்றோம் என்று நினைக்கிறேன்.  ஜம்முவில் இரவு தங்கல்.  எனக்கும் என்னுடன் வந்த இரு அன்பர்களுக்கும் தோசை சாப்பிடும் ஆசை வர, ஜம்முவில் கிடைக்கும் என ஒருவர் கூற, நாங்கள் தென்னிந்தியா உணவு கிடைக்கும் விடுதியைத் தேடி அலைந்து ஒரு வழியாகக் கண்டுபிடித்து, தோசை ஆர்டர் செய்தோம்.  புளித்த தோசை, ரெடிமேட் தேங்காய் சட்னி, தண்ணீர் சாம்பார் என்று ஒரு பாடாவதி டிஃபனை  சாபிட்டோம்.  
மறுநாள் காலை  அரசு மினிப்பேருந்தில் இரண்டு பிரிவாகப் பிரிந்து ஸ்ரீநகருக்குப்  பயணமானோம்.   வழியில் உத்தம்பூரில் சீஸ் வடை சாப்பிட்டு, வாழ்வில் முதல்முறையாக பேருந்தில் வாந்தி எடுத்தேன்.  கடுகு எண்ணெயில் செய்த வடை.  ஒரே எண்ணெய் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுவதால் எல்லோருக்கும் ஒத்துக்கொள்வதில்லை என்று சொன்னார்கள்.  வழியில் பாசுமதி அரிசி உணவு.  ஸ்ரீ நகர் சென்றபோது இருட்டிவிட்டது.  ஜீலம் நதிக்கரையில் ஒரு விடுதியில் டார்மிட்டரியில் முன்பதிவு செய்திருந்தார்கள்.  கம்பளி வாடகைக்குக் கொடுத்தார்கள்.  எனினும் அந்தக் கோடையிலும் குளிர் கொன்று எடுத்துவிட்டது.
அடுத்த நாள் காலை வெந்நீரில் குளித்துவிட்டுக் கிளம்பினோம்.  அதற்குள் சீதோஷ்ணநிலை மாறி சுகமான இளம் வெயில்.  ஷிகார் எனப்படும் சிறு படகுகளில் இருவர் இருவராக  பயணம் செய்தோம்.  சுகமான அனுபவம்.  (படம் மேலே)  ஜீலம் நதியில் தொடங்கி தால் ஏரிக்குப் படகு சென்றது.  இரண்டுக்கும் நீர் மட்ட வேறுபாடு காரணமாக இரட்டை மதகுகள்.  முதல் மதகு    திறக்கப்பட்டவுடன் படகுகள் உள்ளே செல்லும்.  அந்த மதகு மூடப்படும்.  நீர் மட்டத்தை மாற்றி அடுத்த மதகைத் திறப்பர்.  படகுகள் ஏரிக்குள் செல்லும்.
வழியெங்கும் படகு வீடுகள்.  எல்லாமே படகில்தான்.  சுத்தம் என்றால் என்னவென்று கேட்கும் நிலை.   ஏரி நடுவில் ஒரு பூங்கா. (நேரு பூங்கா?)  அங்கே ஒரு சிற்றுண்டி விடுதி.  அங்கே தேநீர்  அருந்தினோம். பின்னர் அங்கிருந்து ஷாலிமார் பாக் எனப்படும் ஷாலிமார் பூங்காவிற்குச் சென்றோம்.  படகு சவாரியை முடித்துவிட்டு விடுத்திக்கு வரும்போது மாலையாகி விட்டது.  ஏதாவது வாங்கலாம் என்று சக பயணிகளுடன் கடைவீதிக்குச் சென்றோம்.  நான் ஒன்றும் வாங்கவில்லை. வேடிக்கை பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டேன்.  அங்கே ஒரு வியாபாரியின் வீட்டில் குங்குமப்பூ தேநீர் அருந்தியதை  மறக்க முடியாது.
அடுத்த நாள் காலை ஜம்மு செல்ல, வேரிநாக் எனப்படும் ஜீலம் நதி உற்பத்தியாகும் இடம் வழியே சென்றோம்.  ஒரு தடாகத்திலிருந்து ஊற்றாக நதி உருவாகிறது.  வழியெங்கும் சிற்றோடைகள் சேர பெரிய நதியாக உருவெடுக்கிறது.  (அந்தத் தடாகத்தின் அருகே எடுத்த படம் மேலே).  ஜம்முவில் இராத் தங்கல்.  மறுநாள் காலை தில்லி பயணம்.  அதை நாளை எழுதுகிறேன்.          

சூரியின் டைரி-24: அகில இந்தியப் பயணம்-1

1978 ம் வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் என்று நினைக்கிறேன்.  மதுரையிலிருந்து பேருந்தில் காஷ்மீர் ஸ்ரீநகர் வரை 23 நாட்கள் பயணம் என்று மதுரை ஸ்ரீகுமரன் ட்ராவல்ஸ் ஏற்பாடு செய்திருந்தனர்.  அவர்கள் முப்பது நாற்பது முறை இதுபோன்ற பயணங்கள் நடத்தியிருக்கின்றனர் என்று அறிந்து, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த யாத்திரையில் கலந்துகொள்வது என முடிவெடுத்தேன்.  அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை.  இந்த பயணத்தில் முக்கியமான குறை ஒரு நல்ல கேமராவும், ஒரு குறிப்பேடும் எடுத்துச் செல்லாததும், எதையுமே உடனுக்குடன் பதிவு செய்யாததும்.  எத்தனையோ இனிய காட்சிகள், சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்.  பதிவு செய்யாததால் பெரும்பாலானவை விடுபடுகின்றன.  முற்றிலும் நினைவிலிருந்தே இந்த அனுபவங்களை எழுதுகிறேன். ஆகவே தவறுகள் இருக்க வாய்ப்புண்டு, பொறுத்தருள்க! 


முதல் நாள் இரவே மதுரை சென்று வடக்குச் சித்திரை வீதியில் (?) இருந்த அவர்கள் அலுவலகத்திற்குச் சென்றேன். அடுத்தாற்போலிருந்த   விடுதியில் தங்கினேன். காலை நான்கு மணிக்கு முன்னதாக எழுந்து குளித்துத் தயாரானேன்.  கேரளாவிலிருந்து ஒரு சூப்பர் டீலக்ஸ் பேருந்து வந்திருந்தது. (அந்தப் பேருந்தின் முன்னே  ஏதோ ஒரு  ஊரில்  எடுத்துக்கொண்ட படம் மேலே)  இரண்டு ஓட்டுனர்கள். இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.  காலை ஐந்து மணிக்கு மதுரையைவிட்டு பேருந்து கிளம்பியது.  கிளம்பும்போதே ட்ராவல்ஸ் உரிமையாளர் (அவரும் எங்களுடன் பயணித்தார்) கூறினார்.  இனிமையான பயணத்தை முடித்து நல்லபடியாக ஊர் திரும்ப இறைவனைப் பிரார்த்திப்போம் என்று.  இறை நம்பிக்கை உள்ளவர்கள் அவரது பிரார்த்தனையில் கலந்துகொள்ளலாம் என்றார்.  “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற முழக்கத்தோடு பேருந்து கிளம்பியது.  வழியில் எங்காவது விபத்துக்களைக் கண்டாலும் உடனே இந்த வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம்தான்.

திருச்சியில் காலை உணவு.  மதிய உணவு வந்தவாசியில்.  அங்கிருந்து காஞ்சீபுரம்.  காமாட்சி அம்மன் கோவில் நடை திறக்க தாமதமாகும் என்பதால் வெளியிலிருந்தே கும்பிட்டுவிட்டு, திருத்தணிக்குக் கிளம்பினோம்.  திருத்தணி தேவஸ்தான விடுதியில் பொருட்களை வைத்துவிட்டு, திருத்தணி முருகனை வழிபாட்டு வந்தோம்.  இரவு உணவிற்குப்பின் உறக்கம்.  அதிகாலை குளித்துவிட்டுக் கிளம்பினோம்.  நேரே காளஹஸ்தி.

இங்கே நான் ஒன்றைக் குறிப்பிடவேண்டும்.  அப்போதெல்லாம் எனக்கு பக்தி என்று பெரிதாக எதுவும் இல்லை.  எல்லாமே அரைகுறைதான்.  காளஹஸ்தியில் வழிபாட்டிற்குப்பின் வெளியே வரும்போது எங்களுடன் வந்த அன்பர் ஒருவர்  கோபுரங்களில்  (பிரகாரத்தில்?) காமசூத்திரத்தின் அறுபத்து நான்கு கலைகளும் சிற்பங்களாக இருப்பதாகக் கூறவே அதைப் பார்க்க தனியே ஒரு கூட்டம் சேர்ந்தது.

காலை உணவு காளஹஸ்தியில்.  அங்கிருந்து நெல்லூர்.  அங்கு மதிய உணவு.  ஆந்திரா காரம் என்றால் என்னவென்பதை அங்கேதான் உணர்ந்தேன். மற்றபடி  பொடி அரிசி, சுவையான காய்கறிகள்  என்று சிறப்பான சாப்பாடு.  அங்கிருந்து இரவு தங்க நாகார்ஜுனசாகர் அணைக்கட்டில் ஒரு திறந்தவெளி மணடபத்தில் தங்கல். உணவும் அங்கேயேதான்.

காலை எழுந்து, துங்கபத்திரா நதியில் புனித நீராடி, காலை உணவு முடித்துக் கிளம்பினோம்.  நேரே ஹைதராபாத் சாலார் ஜங் அருங்காட்சியகம்.  பிரமிக்கவைக்கும் ஒரு  அரும்பொருள் திரட்டு.  முழுமையாகக் காண்பதற்கு எங்களுக்கு நேரம் போதவில்லை.  அடுத்து சார்மினார்.  சார்மினார் என்றால் நான்கு கோபுரங்கள் என்று பொருள்.  உலகப் புகழ்பெற்ற இதை அனைவரும் அறிந்திருப்பீர்கள், படங்களில் பார்த்திருப்பீர்கள்.  நாங்கள் மேலே செல்லவில்லை.

இரவு வழியில் எங்கோ தங்கினோம்.  மறுநாள்  ஏதோ ஓடையில் குளித்தோம்.  அடுத்து என் நினைவிற்கு வருவது காசி நகரை நோக்கிய பயணம்.  இருள் சூழ ஆரம்பித்திருந்தது. பெரிய, அகண்ட சாலை.   வழியில் பல சாலை உணவு விடுதிகள் (இன்றைய ‘தாபாக்கள்?’).  ஒவ்வொரு உணவு விடுதியின் முன்னும் நிறைய கயிற்றுக் கட்டில்கள். லாரி ஓட்டுனர்கள் இரவில் தூக்கம் வந்தால் ஏதாவது ஒரு உணவு விடுதியின் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கிவிட்டு, விழித்தபின் அங்கேயே உணவருந்திவிட்டு பயணத்தைத் தொடர்வது வழக்கம் என்று சொன்னார்கள்.  இரவு ஒன்பது மணி சுமாருக்கு காசியை அடைந்தோம். அங்கே முத்துக்குமாரசாமி மடம் என்று நினைக்கிறேன்; அங்கே தங்கினோம்.   காசி, வாரணாசி, பனாரஸ் என்று பல பெயர்களில் வழங்கும் இந்துக்களின் மிகப் புனித நகர்.  அங்கே இறந்தால்  மறுபிறவியில்லை    என்ற நம்பிக்கை.  கங்கைக் கரையில் பல படித்துறைகள்.  ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ‘காட்’ (ghat) என்று பெயர்.  அரிச்சந்திராகாட், தசாஸ்மேவகாட்   என்று பல படித்துறைகள்.  நான் கடவுள் திரைப்படத்தில் பல வருகின்றன.

மறுநாள் காலை புனித கங்கையில் குளித்துவிட்டு, படகு சவாரி.  ஆலய தரிசனங்கள்.  வழிபாடுகள்.  தர்ப்பணம் செய்வோர் தர்ப்பணம்.  அப்புறம் காசியில் சிறப்பாகக் கிடைக்கும் காசிப்பட்டு போன்ற பொருட்களை வாங்க சிறு சிறு குழுக்களாகக் கிளம்பினர்.  நாங்கள் ஒரு சிறு குழு குதிரை வண்டியில்  வாரணாசி ரயில் நிலையம் சென்றோம்.   வழியில் சாலப் பராமரிப்பு நடந்துகொண்டிருந்தது.  அங்கே  ‘உங்கள் வரிப்பணம், இங்கே செயல்படுகிறது’  என்று  அறிவிப்புப் பலகை.

அடுத்த நாள் சாரநாத் சென்றோம்.  புத்த பிரான்  நிறுவிய சங்கம்.  புகழ்பெற்ற சாரநாத் ஸ்தூபி.  வற்றலாற்றுப் பாடத்தில் படித்த பலவற்றை கண்கூடாகக் கண்டோம்.

காசியில் இரண்டு நாளோ, மூன்று நாளோ  குமாரசாமி மடத்தில்(?) தங்கினோம்.  அடுத்து அலஹாபாத்.  நேரு குடும்பத்தினரின் ஆனந்த பவனத்தில் அருங்காட்சியகம்.  (அங்கே எடுத்த படம் மேலே)  திருவேணி சங்கமம் நோக்கிச் சென்றோம்.  புனித நதிகளான கங்கையும், யமுனையும் அதோடு கண்ணுக்தெரியாத சரஸ்வதியும் ஆக மூன்று நதிகளின் புனித சங்கமம். புனித நீராடல்.  வழிபாடு.

அடுத்து ஹரித்வாரம்.  ஹரித்வாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கட்டிய சத்திரத்தில் தங்கல்.  (பெருமாள் செட்டி சத்திரம்?)  கங்கைக் கரையில் அந்த சத்திரம்.  கட்டிடடத்தின்  இரும்புக்கிராதியிட்ட   அடித்தளத்தில் கங்கை நதி வீட்டிற்குள்ளேயே வருகிறது.  அந்தக் கோடையிலும் தொட்டால் கைகள் விறைத்துவிடும் அளவிற்கு நீர் ஜில்லென்று இருந்தது.  பணி உருகி நீராக வருவதால் இருக்கலாம்.  ஹரித்துவாரில் ‘ஹரி கி பைரி’ (மகாவிஷ்ணுவின் திருவடிகள்) என்ற மிகப் புனிதமான இடத்தில் கங்கையில் குளித்தோம்.  கரை முழுவதும் கடைகள்.  ஹரித்துவார் எனக்கு மிகவும் பிடித்தது.  (பின்னர் பல ஆண்டுகள் கழித்து அருகாமையில் பல நாட்கள் தாங்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான்காண்டுகளுக்கு முன் மூன்றாம் முறையும் அங்கே செல்லும் அரிய வாய்ப்புக் கிட்டியது.)
அங்கிருந்து  ரிஷிகேஷத்திற்கும்,  லக்ஷ்மண்  ஜூலாவின் மறுபுறமிருந்த ஆலயத்திற்கும் சென்று வந்தோம்.  வழியில் சிவானந்தரின் அஷ்ராமத்தை வெளியிலிருந்தே பார்த்தோம்.  கால அவகாசம் கருதியும், யாருக்கும் அதிலே ஆர்வமில்லாததாலும்  உள்ளே சென்று பார்க்கவில்லை.  இரவு உணவிற்கும், உறக்கத்திற்கும் மறுபடியும் ஹரித்துவார்.(மேலே முதல் படத்தில் லக்ஷ்மண்ஜூலாவில்  சூரியும் ஒரு சக பயணியும்)  
அடுத்து சர்ச்சைக்குரிய  அயோத்தியா.  இப்பதிவு நீண்டுவிட்டபடியால் இங்கே நிறுத்திக்கொண்டு, நாளை புதிய பதிவாகத் தொடர்வேன்.  (இரண்டாவது படத்தில் அயோத்யாவில்  ஒரு  கோவில்).

 

பயணங்கள்-14:

பயணங்கள்-13: திருப்போரூர்

திருப்போரூர்   பேருந்து   நிலையம் 

உடற்பயிற்சி செய்யும் நெல்லையப்பன்

நெல்லையப்பன் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி!

அருள்மிகு கந்தசாமி கோவில் திருக்குளமும், அதன் நடுவில் மண்டபமும்

அருள்மிகு கந்தசாமி கோவில் திருக்குளமும், அதன் மண்டபமும் (இன்னொரு கோணத்தில்)

குளத்தங்கரை  விநாயகர்

அருள்மிகு கந்தசாமி கோவில் நுழைவாயில்

அருள்மிகு கந்தசாமி கோவிலினுள் நுழைந்ததும் அங்கே சிதம்பர சாமிகளுக்கு சிறிய ஆலயம்

அருள்மிகு கந்தசாமி கோவில் ஸ்தல விருக்ஷம் வன்னி மரமும், அதன் சிறப்பைப் பற்றிய விளக்கமும்

சிதம்பர சுவாமிகளின் திரு உருவப்படம் (கோவிலுக்கு வெளியே)

அருள்மிகு கந்தசாமி கோவில் தேர்

அருள்மிகு கந்தசாமி கோவில் அருகே சான்றோர் தெரு – என்னவொரு அற்புதமான பெயர்!

பிரணவமலை முன்வாயில்

பிரணவமலை வாயிலில் நினைவுச் சின்னம்

பிரணவமலை நுழைவாயில் மண்டபம்

அருள்மிகு கைலாசநாதர் கோவிலுக்குச் செல்லும் மலைப்பாதை

மலைப்பாதையில் நம் சிந்தனைக்கு-1

மலைப்பாதையில் நம் சிந்தனைக்கு-2

அருள்மிகு கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் சிறு சிறு ஆலயங்கள்

நெல்லையப்பன் மலைப்பாதையில் எனக்குமுன் படியேறுகிறான்

அருள்மிகு கைலாசநாதர்-பாலாம்பிகை ஆலயம்


அருள்மிகு கைலாசநாதர் ஆலயப் பிரகாரத்தில் சிதம்பர சுவாமிகளின் திருவுருவப்படம்

ஸ்ரீ சிதம்பர சுவாமிகளின் சமாதி

அருள்மிகு கைலாசநாதர் கோவிலின் பின்புறம் பக்தர் ஒருவர் கட்டிய வீடு

மலைமேல் அருள்மிகு கந்தசாமியின் வேல் வடிவம்

பிரணவமலையிலிருந்து கீழே ஒரு தோற்றம்
பிரணவ மலையிலிருந்து அருள்மிகு கந்தசாமி கோவிலின் தோற்றம் 

என்னருமை நெல்லையப்பன் திருப்போரூர் வந்த பிறகு பலமுறை அங்கு சென்று அவனோடிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  அதுமட்டுமல்ல, அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.  அந்த ஊரின் உயிர்நாடியே ஊரின் நடுவேயுள்ள  அருள்மிகு கந்தசாமி கோவிலும் அதன் தெப்பக்குளமும்தான்.  OMR என்று அனைவரும் குறிப்பிடும் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள நகரமும் அல்லாத, கிராமமும் அல்லாத ஒரு சிற்றூர்.  அங்கிருந்து சென்னை 40 கிலோமீட்டர். மாமல்லபுரம் 16 கிலோமீட்டர்.  செங்கல்பட்டு 25 கிலோமீட்டர்.  திருக்கழுக்குன்றம் 18 கி.மீ.


பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெறும் பனங்காடாக இருந்த இடத்தில் ஒரு பெரிய கோவிலை, அருள்மிகு கந்தசாமி கோவிலையும், அருகிலிருந்த சிறு ஓடையை ஒரு பெரிய திருக்குளமாகவும் உருவாக்கியவர் சிதம்பர சுவாமிகள் என்ற ஒரு தவ முனிவர்.  அதுமட்டுமல்ல சாலையின் மறுபுறமுள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் வழங்கப்படும்  சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர்-பாலாம்பிகை கோவிலை வடிவமைத்ததும் அவர்தான்.  இந்தக் கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்கப்பாதை அமைத்து அதில் சமாதியடைந்ததாகச் சொல்லப்படுகிறது.  அந்த வாயிலைச் சுற்றி சங்கிலி வெளி அமைக்கப்பட்டுள்ளது.  அருகே அவரது திருவுருவப்படம்.

பிரணவமலையில் நான் பார்த்திராத-அதுவரை கேள்விப்பட்டிராத ஒன்றைக் கண்டேன்.  கோவிலின் பின்புறம் இடிக்கப்பட்ட யாகசாலையின் செங்கல்கள் நிறையக் கிடக்கின்றன.  அங்கு வரும் பக்தர்கள் அந்த செங்கல்களை தனியே ஒரு இடத்தில் அடுக்கி, தங்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றனர்.    அந்த வேண்டுதல் நிறைவேறும் இன்று பலருக்கு நம்பிக்கை இருப்பதை அங்கிருந்த நிறைய செங்கல் அடுக்குகள் (படம்) பறைசாற்றின.  


சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் சந்நிதித் திருமுறை என்ற பெயரில் 726 பாடல்கள் பாடியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதிலிருந்து  ஒரு  பாடல்.

அன்னம் அளிக்குமூர் அன்டினரைக்  காக்குமூர் 
சொண்ண  மழைபோற்  சொரிய்மூர்  –  உண்ணினர்க்குத்
தீதுபிணி  தீர்க்குமூர்  செவ்வேள்  இருக்குமூர்

ஓது  திருப்போரூர்  எம்மூர்.       


அருள்மிகு கந்தசாமி கோவில் முருகப்பெருமானின் திருக்கோவில்.  ஒருநாள் மாலை அங்கு சென்று வழிபட்டேன். அந்தக்  கோவிலின்  ஸ்தல  விருக்ஷம்  வன்னி  மரம்.  வன்னி மரத்தின் மேன்மைகள் பற்றிய ஒரு விவரப் பலகை பிரகாரத்தில் இருந்தது (படம்). ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு ஸ்தல விருக்ஷம்.  ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பிராணி வாகனம்.  முருகனுக்கு மயில், கணபதிக்கு சுண்டெலி என்று.  நம் முன்னோர்கள் எல்லா உயிர்களையும் – மரங்கள், பிராணிகள் எல்லாவற்றையும் – வணங்க சூக்சுமமாக  நமக்குக் கற்பித்திருக்கிறார்கள். நாம் இயற்கையின் ஒரு அம்சம்.  மரம், மனிதன், பிராணி – எல்லாவற்றையும் ஒருமைபடுத்தி, அத்வைதம் (Advaita – Non-dualism),  எல்லாம் ஒன்றே, ஒன்றின் பல அம்சங்கள்  என்ற மேன்மையான தத்துவத்தை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.   நினைக்கவே பெருமையாக இருக்கிறது. வழிபட்டுவிட்டு வெளியே வரும்போது மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது.

கோவில் கடைகளில் பொரி பாக்கெட் விற்கிறார்கள்.  அதை வாங்கி குளத்திலுள்ள மீன்களுக்குப் போடுகிறார்கள்.  கூட்டம் கோட்டமாக மீன்கள் வந்து அவற்றைத் தின்பதை பார்த்து ரசிக்கிறார்கள்.

நெல்லையப்பனுடன் அதிகாலையிலும், பின்மாலைப்பொழுதிலும் திருக்குளத்தைச் சுற்றி வருவது இனிய, சுகமான அனுபவம்.   அதுபோல் அதிகாலையில் பிரணவமலை சென்று அந்த எளிமையான, அமைதியான, யாருமே இல்லாத, ரம்மியமான  சூழலில் இயற்கையோடு லயிப்பது ஒரு அற்புதமான அனுபவம்.

ஒருநாள் அதிகாலை நானும் நெல்லையப்பனும் நடைபழகும்போது, எதிரே ஒரு முதியவர் ஆடுகள், நாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றிற்கு உணவளித்துக் கொண்டே வந்தார். அவர் பின்னே அந்தப் பிராணிகளும் நெருக்கமாகச் சென்றன.  நெல்லையப்பனுக்கு அவர் ஏற்கனவே பரிச்சயமாகி இருந்தார்.  அவரை வணங்கிவிட்டு, என்னை அறிமுகப்படுத்தினான்.  நானும் அவரை வணங்கினேன்.  அவர் வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலாரைப் போற்றுபவர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும் என்ற நெறிப்படி வாழ்பவர்.  என்னை அவர் கேட்டார்: “ஐயா, நீங்கள் புலால் உண்ணுவீர்களா?”  என்னால் அவருக்கு நேரான பதில் சொல்லமுடியவில்லை.  சைவக் குலத்தில் பிறந்த நான், நண்பர்கள், சந்தர்ப்பங்கள் காரணமாக அசைவ உணவை எப்போதாவது உண்ணுவேன்.  நிறைய முறை அசைவம் சாப்பிடுவதில்லை என்று முடிவெடுப்பேன்; பின்னர் சில காலம் கழித்து ஏதாவது ஒரு சூழ்நிலையில் பிறழ்வேன்.  இம்முறை, அந்த நிமிடம் முதல் அசைவம் உண்பதில்லை, முட்டைகூட சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்தேன். எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் பிறழாமல் இருப்பேன் என்று உறுதியுடன் நம்புகிறேன்.  நெல்லையப்பன் ஏற்கனவே அவரைப் பார்த்தபின் அந்த முடிவில் உறுதியாக இருந்தான், பின்பற்றி வருகிறான்.
 

நெல்லையப்பன் ஒவ்வொரு முறையும் ஒரு உணவகத்திற்கு அழைத்துச் செல்வான்.  மூன்று அல்லது நான்கு சிறந்த எளிமையான உணவகங்கள்.  சுவையான உணவு, நியாயமான விலையில்.  (சென்னையில் ஒரு உணவு விடுதியில் ஒரு தோசைக்கு முப்பத்து இரண்டு ரூபாய் பில்லைப்பார்த்து எனக்கு மயக்கமே வந்துவிட்டது.  என்ன பாடாவதி எண்ணெயில் சுட்டதோ, அன்று முழுவதும் வேறு எதுவுமே என்னால் சாப்பிடமுடியவில்லை; உணவைப் பார்த்தாலே வெறுப்பு).  போஜனப்பிரியனான என்னால் அங்கு சாப்பிட்ட கல்தொசையை மறக்க முடியாது.  அதுபோல் வேறெங்கும் உண்டதில்லை.  (ஒரு காலத்தில் என்னுடைய புனைப்பெயர்களில் ஒன்று: “போ.ஜனப்பிரியன்”  என்பது).

தாம்பரம், கோயம்பேடு, பிராட்வே, சைதாப்பேட்டை, தி.நகர் ஆகிய இடங்களிலிருந்து திருப்போரூருக்கு நேரடி பேருந்து சேவை உள்ளது.  கிழக்கு தாம்பரத்திலிருந்து நான் சென்றதால் சோழிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து நேரடியாக திருப்போரூருக்கோ அல்லது கேளம்பாக்கம் சென்று அங்கிருந்து மாமல்லபுரம் பேருந்திலோ அல்லது வேனிலோ (தலைக்கு ஐந்து ரூபாய்) திருப்போரூர் சென்றுவிடலாம்.  ஒரு முறை ஆசைக்காக கொளுத்தும் வெயிலில்  குளிரூட்டப்பட்ட பேருந்தில் கோயம்பேட்டிலிருந்து கேளம்பாக்கம் சென்றேன். (கட்டணம் ரூபாய் முப்பத்து எட்டு.  மொத்தமே பத்துப் பதினைந்து பேருடன் மிகச் சுகமான, மறக்க இயலாத  பயணம்).  அதுபோல  சோளிங்கநல்லூரிலிருந்தும்  இரண்டு மூன்று முறை குளிரூட்டப்பட்ட பேருந்தில் கேளம்பாக்கம் வரை பயணம் செய்தேன் (கட்டணம் ரூபாய் இருபத்து மூன்று). சோளிங்கநல்லூர் சிக்னலில் நிற்கும்போது பத்து நிமிடத்தில் கேளம்பாக்கத்திற்கு ஐந்து பேருந்து செல்வதைக் கண்டிருக்கிறேன்.  அவ்வளவு பேருந்து வசதி.

திருப்போரூரிலிருந்து குன்றத்தூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், காஞ்சீபுரம் ஆகிய ஊர்களுக்கு  நேரடி பேருந்து வசதி உள்ளது.  

திருப்போரூரில் எடுத்த சில படங்களை மேலே பதிவு செய்திருக்கிறேன். திருப்போரூரிளிருந்து மாமல்லபுரம், சிங்கப்பெருமாள் கோவில், சோளிங்கநல்லூர் அருள்மிகு மகா பிரத்தியங்கரா தேவி கோவில் சென்று வந்தேன். மாமல்லபுரம் சென்று வந்ததைப்பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்.  மற்றவற்றைப் பற்றி தனியே எழுதுகிறேன்.  அடுத்து எப்போது திருப்போரூர் செல்லலாம் என்று எதிர்நோக்கியிருக்கிறேன்.

பயணங்கள்-12: சிவகங்கைச் சீமை

நண்பர் செந்தில் அவரது பஜாஜ் பாக்சருடன்

மொபைலில் பேசும் நண்பர் செந்தில்

மருதுபாண்டியர் நகர்அரசு அலுவலகங்கள் வளாகம்

கல்லூரி நுழைவாயில்

கல்லூரி உட்புறம்

கல்லூரி முகப்பு

கல்லூரி அடிக்கல்இதில் அந்த நீளமான மன்னர்களின் பெயரை
என் தந்தையார் சொல்லிக்காட்டும்போது சிரிப்பு வரும்.



அரண்மனை வாயில்

ராணி வேலு நாச்சியார் சிலை


அரண்மனைக் கட்டிடங்கள்


அரண்மனைக்கு எதிரேயுள்ள தெப்பக்குளம்

சிவகங்கை பேருந்து நிலையம்

சிவகங்கை இரயில் நிலையம்


சந்திரன் கடை

திருமதி சந்திரன்

நகரச் சிவன் கோவில்

சிவகங்கைக்கும் எனக்கும் அப்படி ஒன்றும் ஒட்டுதலோ, உறவோ, பாசமோ கிடையாது, அங்கே உள்ள ராஜா துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் ஒரு ஆண்டு பயின்றேன் என்பதைத்தவிர. கல்லூரியில் சென்று பயின்றது என்பது அந்த ஓராண்டு மட்டும்தான். மற்றதெல்லாம் அஞ்சல் வழியேயும், தனிப்பட்ட முறையிலும் பயின்றதுதான். எனவே கல்லூரி வாழ்க்கை என்றால் என்னைப் பொறுத்தவரை அந்த ஓராண்டு மட்டும்தான்.

அந்தக் கல்லூரி வாழ்க்கையில் பெருமைப்படவோ, நினைத்து மகிழவோ எதுமே இல்லை என்பது வருத்தமான ஒன்று. (கல்லூரி நல்ல கல்லூரிதான், ஆசிரியர்களும் திறமையானவர்கள்தான். அதில் ஒன்றும் குறையில்லை.) என் வாழ்வின் இருண்ட நாட்களில் கழிந்தது அந்த ஓராண்டு. முழுக்க முழுக்க அறியாமையில் மூழ்கியிருந்த காலம். (இப்போது என்ன கிழித்துவிட்டாய் என்று கேட்டுவிடாதீர்கள். பெரிதாகச் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை என்றாலும் தற்போது வெளிச்சத்தைத் தேடுகிறேன் என்றாவது சொல்லிக்கொள்ளலாம்.)

அந்தக் கல்லூரியை விட்டு வெளியே வந்து நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. இருந்தபோதும், சில நாட்களாக சிவகங்கை செல்லவேண்டும், அங்கே பயின்ற கல்லூரி, பழகிய இடங்கள், சுற்றிய தெருக்கள்இவற்றையெல்லாம் ஒரு முறை பார்க்க வேண்டும், அவற்றைப் பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது.

எப்போதும் எனக்கு உறுதுணையாய் இருந்து, இது போன்ற என் சில்லரைக்கனவுகளை நிறைவேற்றிவைக்கும் எனது அருமை நண்பர் செந்தில் எனக்கு உதவ முன்வந்தார். சென்ற வெள்ளியன்று, அவருடன் அவரது பஜாஜ் பாக்சர் வண்டியில் சிவகங்கை சென்றோம். காலை ஏழு மணி அளவிலேயே கிளம்பிவிட்டோம்.

திருப்பத்தூர் சாலை வழியே சிவகங்கையின், தமிழக அரசின் அலுவலகங்கள் அனைத்தும் அமைந்த மருதுபாண்டியர் நகரில் நுழைந்தோம். (க்ளிக்) அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒரே வளாகத்தில் இருப்பது எவ்வளவு வசதியானது! யாரோ உருப்படியாகச் சிந்தித்து திட்டமிட்டு செய்துள்ளனர். பாராட்டவேண்டிய செயல்.

அடுத்து நேராகக் கல்லூரிக்குச் சென்றுவிட்டோம். தற்போது அது அரசினர் கல்லூரி. புதிய தோரண நுழைவாயில். (க்ளிக்) உள்ளே அதே பழைய கருங்கல் கட்டிடம். (க்ளிக்) அலுவலகம், வகுப்புக்கள், விலங்கியல்தாவரவியல் கட்டிடம்இவற்றிலெல்லாம் மாற்றமில்லை. மற்றபடி கிட்டத்தட்ட எல்லாமே மாறிவிட்டிருந்தது. கல்லூரி திறக்க இன்னும் நாள் இருந்ததால், விண்ணப்பப் படிவங்கள் வாங்கவருவோர் தவிர வேறு யாருமில்லை.

வாயிலில் மன்னர் சிலை. (க்ளிக்) சிவகங்கை மன்னர் ஷண்முக ராஜா அவர்கள் தனது தந்தையார் மன்னர் துரைசிங்க ராஜ அவர்களது நினைவாக உருவாக்கிய கல்லூரி. நான் பயின்றபோது பேராசிரியர் B.S.தண்டபாணி அவர்கள் கல்லூரி முதல்வர். அவர் ஒரு ஷேக்ஸ்பியர் அதாரிட்டி. அவர் ஷேக்ஸ்பியர் நடத்தி அதைக் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள். (எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. நான் அங்கு பயின்றது புகுமுக வகுப்பு மட்டுமே.)

நினைவைப் புரட்டிப்பார்க்க எங்களது விலங்கியல் பேராசிரியர் O.N.குருமணி அவர்கள், பேராசிரியர் இராமானுஜ ஐயங்கார் அவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் திருவாளர்கள் சந்திரன், சந்திரசேகரன், துளசிதாஸ், கே.வி.கணபதி, இலக்குமணப்பெருமாள் அவர்களது உருவம் மனக்கண் முன்னே ஓடியது. நிறைய பெயர்கள் மறந்துவிட்டன. எழுத்துலகில் தடம்பதித்த கவிஞர் மீரா, பேராசிரியர் தர்மராஜன் போன்றோர் அப்போது அக்கல்லூரியில் பணிபுரிந்தனர். உடன் பயின்ற நண்பர்கள் முகங்கள் நினைவில் ஓடியது: என் வகுப்பிலேயே பயின்ற சிவப்பிரகாசம் (பின்னாளில் இவர் பள்ளி ஆசிரியர்), பெரியதிருவடி (பின்னாளில் ஆங்கிலப் பேராசிரியர்), காந்திமதிநாதன் (எனக்கு ஒரு வருடம் சீனியர். பின்னாளில் சென்னை அக்கவுன்ட் ஜெனரல் அலுவலக அலுவலர்).

அடுத்து சிவகங்கை அரண்மனைக்குச் சென்றோம். முகப்பு சிறப்பான மாற்றம் செய்யப்பட்டு புதுப்பிக்கப் பட்டிருந்தது. உள்ளே உள்ள அரண்மனைக் கட்டிடங்களும் அப்படியே இருந்தன. சிவகங்கையை ஆண்ட மன்னர்களின் காலம் வரிசைப்படி கல்வெட்டில். (க்ளிக்) வெளியே ராணி வேல் நாச்சியாரின் வீரச் சிலை. எதிரே காந்தி சிலை. இன்னொருபுறம் நேதாஜி சுபாஸ் போஸ் சிலை. (க்ளிக்). ( சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தனதுசிவகங்கைச் சீமைஎன்ற திரைப்படத்தின் வழியே உலகறியச் செய்தார். மிகவும் அற்புதமான திரைப்படம் அது. நினைக்கும்போது இன்றும் இனிக்கும் பாடல்கள்! )

அருகில் பேருந்து நிலையம். எந்த மாற்றமும், முன்னேற்றமும் இல்லாமல் நகருக்குத் திருஷ்டிப்பரிகாரமாய். தொடர்ந்து நேரே இரயில் நிலையம். மூன்றுநான்கு கிலோமீட்டர் தூரத்தில். தினமும் மானாமதுரையில் ஒரு கிலோமீட்டர் + சிவகங்கையில் நான்கு கிலோமீட்டர் என்று காலை ஐந்து கிலோமீட்டர், மாலை ஐந்து கிலோமீட்டர் என்று தினமும் பத்து கிலோமீட்டர் நடப்போம். இதில் காலையிலும் முகத்தில் வெயில், மாலையிலும் முகத்தில் எதிர் வெயில்.

மேலும் நாங்கள் படித்தபோது தேசிய மாணவர் படைப் பயிற்சி கட்டாயம். அதிகாலை பேரேடிற்கு முதல்நாள் இரவே ரயில் நிலையத்தில் வந்து தங்கிவிட்டு, அதிகாலைக் குளிரில் கிணற்றில் குளித்துவிட்டு, சீருடையுடன், தூக்கமுடியாத கனமுள்ள காலணிகளை அணிந்துகொண்டு, இருட்டில் ஓடுவோம். நாய்களெல்லாம் துரத்தும். தாமதமானாலோ மைதானத்தை மூன்று முறை சுற்றவேண்டும். கலந்துகொள்ளாமல் விட்டால், பின்னர் ஈடுகட்டரூட் மார்ச்” – ஒரு நாள் முழுவதும். தேர்வு நுழைவுச் சீட்டை வாங்க தேசிய மாணவர் படை அலுவலகத்தில் கையெழுத்துப் பெறவேண்டும். இப்படி நிறைய கழுத்தறுப்புகள். தேசிய மாணவர் படை, அதன் அதிகாரிகள்இவற்றின் மேல் அப்போது எனக்கு கடும் வெறுப்பு. நல்லகாலமாக, தற்போது இந்தக் கட்டாயப் பயிற்சி இல்லை.

பழைய கட்டிடங்கள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டு, புதிய கட்டிடங்கள், வசதிகள். (இரண்டு ATM உட்பட)(க்ளிக்). நிலையத்திற்கு எதிரேசந்திரன் கடை“. இரண்டையும் என்னால் மறக்கமுடியாது.

நாங்கள் ஒரு பத்துப் பதினைந்து பேர் தினமும் மானாமதுரையிலிருந்து காலை ரயில் கோச்சில் சிவகங்கை வந்து, கல்லூரியில் பயின்றுவிட்டு, மாலை ரயில் கோச்சில் மானாமதுரை திரும்புவோம். காலை ஏழு மணிக்கு மானாமதுரையை விட்டு ரயில் கிளம்பும். எனவே வீட்டை விட்டு குறைந்தது அரை மணி முன்னதாகவே கிளம்பிவிடுவோம். மாலை ஏழு மணிக்கு ரயில் மானாமதுரை வந்து சேரும்.

பல நாட்கள் காலை சாப்பிடாமல் வந்துவிட்டு, சந்திரன் கடையில் இட்லி, சட்னி, சாம்பார் என்று வெளுத்துக் கட்டியிருக்கிறேன். மிகவும் சுவையாக இருக்கும். எஞ்சின் டிரைவர், கார்டு என்று ரயில் ஊழியர்கள் பலரும் மானாமதுரையை விட்டுக் கிளம்பு முன்னரே தொலைபேசியில் ஆர்டர் செய்வர். கோச் சிவகங்கை வரும்போது, அவர்கள் ஆர்டர் செய்து உணவு அவர்களுக்குத் தயாராக ரயில் தேடி வந்துவிடும். அவ்வளவு புகழ் பெற்றது. சந்திரனும், அங்கு பணிபுரிந்த அழகிரியும் எங்களிடம் பிரியமாக இருப்பார். தற்போது சந்திரன் அவர்கள் இல்லை. அவரது துணைவியார் கல்லாப்பெட்டியில். (க்ளிக்). அழகிரி பின்னாளில், கடைக்கு வந்துபோன அலுவலர் யாரின் உதவியாலோ, ரயில்வே ஊழியராகி, ஓய்வு பெற்று, தனது கிராமத்தில் வசிப்பதாக அந்த அம்மையார் கூறினார். கடை தற்போதும் அதே புகழோடு. (வடை, டீ சாப்பிட்டோம்).

மீண்டும் அரண்மனை வழியே கோவிலைக் காணக் கிளம்பினோம். வழியில் ஒரு புதிய கோவில். கௌரி விநாயகர் ஆலயம். சென்று வழிபட்டேன். அடுத்து சிவகங்கைப் பெரிய சிவன் கோவில். (க்ளிக்). வெளியிலிருந்தே வழிபட்டுவிட்டு தொடர்ந்தோம். ஸ்ரீராம் தியேட்டர் கண்ணில்படவில்லை. தற்போது இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. அதில் நிறைய படம் பார்த்திருக்கிறேன்.

சிவகங்கையை விட்டு காலை பதினோரு மணியளவில் கிளம்பினோம். திரும்பும் வழியில் யோகி சுத்தானந்த பாரதியார் நிறுவிய பள்ளி, அவரது சமாதி, அவர் வாழ்ந்த சோழபுரம் ஆகியவற்றைக் காணும் பேறு கிட்டியது. அதைப் பற்றித் தனியே எழுகிறேன்.

பயணங்கள்-11: மாமல்லபுரத்து பல்லவகாலச் சிற்பங்கள்
































இரண்டாவது நாளும் அதிகாலையிலேயே புறப்பட்டு மாமல்லபுரம் சென்றுவிட்டோம். இம்முறை கடற்கரைக்குச் செல்லாது, அருள்மிகு ஸ்தல சயனப் பெருமாள் கோவிலிலிருந்து தொடங்கினோம். 108 திவ்ய தேசங்களில் ஒன்று108 திருப்பதிகளில் ஒன்றுமாமல்லபுரம். திருமங்கையாழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பெற்ற கோவில். மேலும் மாமல்லபுரம் பூதத்தாழ்வார் அவதரித்த திருத்தலம் போன்ற செய்திகள் கோவிலின் மதிலில் தரப்பட்டிருந்தது. நரசிம்ம பல்லவரின் காலத்திற்கு முன்பே இந்த ஊர் ஒரு சிறந்த வைணவத் தளமாக விளங்கியிருக்கிறது.

ஏற்கனவே மாமல்லபுரத்து இன்றைய சிற்பங்கள்நவீன சிற்பங்கள்பற்றி எழுதியிருந்தேன். தற்போது பல்லவ காலத்து வரலாற்றுச் சிற்பங்களைக் கண்டோம். அவற்றை என் கேமராவில் பதிவு செய்தேன். (அந்தப் படங்களை மேலே தந்துள்ளேன்).

தொடர்வதற்குமுன் வரலாற்றையும் சற்று புரட்டிப் பார்க்கலாம். பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகவும், மாமல்லபுரத்தைத் தங்கள் முக்கிய துறைமுகமாகவும் கொண்டு ஆண்டு வந்தனர். மகேந்திர பல்லவனும், அவரது மகன் நரசிம்ம பல்லவனும் ஆண்ட காலம் பல்லவர்களின் பொற்காலம். மகேந்திர வர்மன் கிறிஸ்து பிறப்பதற்கு 630 முதல் 580 வருடம் வரையும், நரசிம்ம வர்மன் கிறிஸ்து பிறப்பது முன் 668 ஆண்டு முதல் 630 ஆண்டு வரையும் வாழ்ந்தனர் என்று வரலாறு கூறுகிறது. நரசிம்ம பல்லவன் மற்போரில் சிறந்தவன், மாமல்லன் என்று போற்றப்பட்டவன். அவனது பெயராலேயே இந்த ஊர் அமைந்தது. சிற்பக்கலையில் தலை சிறந்து விளங்கியது மாமல்லபுரம். இயற்கையாகவே நிறைய குன்றுகளும், பாறைகளும் அமைந்திருந்தது ஒரு காரணம்.

கடல் மலை, அர்த்த சேது, மல்லாவரம், மலை, மாமல்லை போன்ற பல பெயர்களால் விளங்கியது மாமல்லபுரம்.

வரலாற்றுப் புகழ் பெற்ற யுவான் சுவாங் மாமல்லபுரத்தைப் பற்றியும் பல்லவர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். மேலும் மேலைநாட்டு வரலாற்று அறிஞர்கள் பெர்குசன், போகல் மற்றும் டவ்வீன் ஆகியோரும் மாமல்லையின் சிறப்பைப் பற்றி எழுதியுள்ளனர். சீனம், பாரசீகம், ரோமாபுரியைச் சேர்ந்த காசுகள் மாமல்லையில் கிடைத்துள்ளது, மாமல்லை ஒரு புகழ் பெற்ற வெளிநாட்டுத் துறைமுகமாக விளங்கியதை உறுதி செய்கிறது.

மேலே உள்ள சிற்பங்கள் மாமல்லபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. ஏனெனில் மாமல்லையின் பெறும் பகுதியைக் கடல் கொண்டதாக வரலூறு கூறுகிறது. ஏழு கோவில்களில் ஆறு கோவில்கள் காணாமல் போய்விட்டன. கடலுக்குள் இன்னும் எவ்வளவு அறிய பொக்கிஷங்கள் மறைந்திருக்கின்றனவோ!

பயணங்கள்-10: மாமல்லபுரம்

நெல்லையப்பன் கடற்காற்றை சுகமாக அனுபவிக்கிறான்.


















நெல்லையப்பன் திருப்போரூர் வந்தபிறகு சென்ற ஏப்ரல் மாதம் நான் இரண்டாம் முறையாக அங்கு சென்றேன். அப்போது நெல்லையப்பன் சொன்னான்: மாமல்லபுரம் பதினான்கு கிலோமீட்டர்தான். அதிகாலையில் என் வண்டியிலேயே போய்விடலாம் என்று. நானும் நல்ல வாய்ப்பு என்று சரி சொன்னேன்.

அதிகாலையில் எழுந்து காலைக்கடன் முடித்து, டீ குடித்துவிட்டு, நாங்கள் திருப்போரூர் அவுட்டரைக் கடந்தபோது மணி ஐந்து. மாமல்லபுரம் கடற்கரையை நாங்கள் வந்தடைந்தபோது விடிந்தும் விடியாமலும் இருந்தது. ஆனாலும் பார்வையாளர் கூட்டத்திற்குக் குறைவில்லை. சூரிய உதயக் காட்சியைக் காண அனைவரும் காத்திருந்தோம். கதிரவன் உதயமானதும் எனது கேனன் கேமராவில் பதிவு செய்தேன்.

என்ன ஒரு குறை என்றால் கடலோரக் கோவிலின் கோபுரங்கள் மஞ்சள் கலர் டார்ப்பாலினால் பாதி மூடப்பட்டிருந்தது. மாமல்லபுரம் என்றாலே அந்தக் கோபுரங்களின் படங்களைத்தான் நினைப்போம். வெளியிடப்பட்ட அந்தப் பகுதியைச் சுற்றிலும் ஒரே குப்பை கூளம்; குறிப்பாக எங்கு பார்த்தாலும் பாலிதீன் கழிவுகள். திருவள்ளுவரின் காவலில் மக்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். கடற்கரையோரம் நடப்போமென்றால் எங்கு பார்த்தாலும் குப்பை, மேலும் திறந்த வெளி கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்துவதை உணர முடிந்தது. உலகப் புகழ் பெற்ற, வரலாற்றுப் புகழ் பெற்ற, உலகம் முழுவதும் பலர் வந்து பார்க்கும் இடத்தைக்கூட நம்மால் துப்புரவாக வைத்துக் கொள்ளமுடியவில்லை. வேதனைதான்!

எவ்வளவுதான் பார்த்தாலும் அலுக்காத கடலைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, சுகமான கடற்காற்றை அனுபவித்துவிட்டு, சாலையோரமிருந்த சிற்பக்கூடங்களிளிருந்த சிற்பங்களைப் படம் பிடித்தேன். கடற்கரையிலேயே நிறைய நேரத்தைச் செலவிட்டபடியால் மற்ற இடங்களைப் பார்க்க நேரமில்லாமல் போனது. பரவாயில்லை, மறுபடியும் வரலாம் அருகில்தானே என்று சமாதானம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்.

இந்தத் தடவை பிடித்த படங்களில் சிலவற்றை மேலே பதிவு செய்துள்ளேன். (நேற்றிரவுமாமல்லபுரத்து இன்றைய சிற்பங்கள்என்ற பெயரில் தற்காலத்திலும் சிற்பிகள் வடித்துக் குவிக்கும் சிற்பங்கள் பற்றி மூன்று பதிவுகள் செய்துள்ளேன். மகேந்திர வர்மன், நரசிம்ஹ வர்மன் காலத்து, வரலாற்றுப் புகழ் பெற்ற சிற்பங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.)

பயணங்கள்-9: மாமல்லபுரத்து இன்றைய சிற்பங்கள்-3:
























மாமல்லபுரம் பல்லவர் காலத்தில் சிற்பக்கலையில் தலைசிறந்து விளங்கியதும், மாமல்லையின் பெறும் பகுதியை கடல் கொண்டதும், இன்று எஞ்சியிருப்பது சொற்பமே என்றும் அறிவோம். ஆனால் எஞ்சியிருப்பவை நம்மை பிரமிக்க வைக்கின்றன. கல்லில் வடித்த கவிதையாக அவை விளங்குகின்றன. சிற்பக்கலை மாமல்லையில் இன்றும் தலை சிறந்து விளங்குகிறது. நிறைய சிற்பக்கூடங்கள்! சிற்பிகள்!! நெல்லையப்பனுடன் அவனது பைக்கில் நகர் வலம் வந்து, அங்கே சாலையோர சிற்பக்கூடங்களில் கண்ட புதிதாக வடிக்கப்பட்ட இன்றைய சிற்பங்களில் சிலவற்றை மூன்று தொகுதியாக இங்கே தருகிறேன். அவை என்னைக் கவர்ந்ததுபோல் உங்களையும் கவரும் என்று நம்புகிறேன். மாமல்லைக்கு தனது பைக்கில் அழைத்துச் சென்று இந்த அறிய வாய்ப்பினை நல்கிய நெல்லையப்பனுக்கு உளமார்ந்த நன்றிகள்!

பயணங்கள்-8: மாமல்லபுரத்து இன்றைய சிற்பங்கள்-2:






















மாமல்லபுரம் பல்லவர் காலத்தில் சிற்பக்கலையில் தலைசிறந்து விளங்கியதும், மாமல்லையின் பெறும் பகுதியை கடல் கொண்டதும், இன்று எஞ்சியிருப்பது சொற்பமே என்றும் அறிவோம். ஆனால் எஞ்சியிருப்பவை நம்மை பிரமிக்க வைக்கின்றன. கல்லில் வடித்த கவிதையாக அவை விளங்குகின்றன. சிற்பக்கலை மாமல்லையில் இன்றும் தலை சிறந்து விளங்குகிறது. நிறைய சிற்பக்கூடங்கள்! சிற்பிகள்!!

நெல்லையப்பனுடன் அவனது பைக்கில் நகர் வலம் வந்து, அங்கே சாலையோர சிற்பக்கூடங்களில் கண்ட புதிதாக வடிக்கப்பட்ட இன்றைய சிற்பங்களில் சிலவற்றை மூன்று தொகுதியாக இங்கே தருகிறேன். அவை என்னைக் கவர்ந்ததுபோல் உங்களையும் கவரும் என்று நம்புகிறேன்.

மாமல்லைக்கு தனது பைக்கில் அழைத்துச் சென்று இந்த அறிய வாய்ப்பினை நல்கிய நெல்லையப்பனுக்கு உளமார்ந்த நன்றிகள்!

பயணங்கள்-7: மாமல்லபுரத்து இன்றைய சிற்பங்கள்-1:





















மாமல்லபுரம் பல்லவர் காலத்தில் சிற்பக்கலையில் தலைசிறந்து விளங்கியதும், மாமல்லையின் பெறும் பகுதியை கடல் கொண்டதும், இன்று எஞ்சியிருப்பது சொற்பமே என்றும் அறிவோம். ஆனால் எஞ்சியிருப்பவை நம்மை பிரமிக்க வைக்கின்றன. கல்லில் வடித்த கவிதையாக அவை விளங்குகின்றன. சிற்பக்கலை மாமல்லையில் இன்றும் தலை சிறந்து விளங்குகிறது. நிறைய சிற்பக்கூடங்கள்! சிற்பிகள்!!

நெல்லையப்பனுடன் அவனது பைக்கில் நகர் வலம் வந்து, அங்கே சாலையோர சிற்பக்கூடங்களில் கண்ட புதிதாக வடிக்கப்பட்ட இன்றைய சிற்பங்களில் சிலவற்றை மூன்று தொகுதியாக இங்கே தருகிறேன். அவை என்னைக் கவர்ந்ததுபோல் உங்களையும் கவரும் என்று நம்புகிறேன்.

மாமல்லைக்கு தனது பைக்கில் அழைத்துச் சென்று இந்த அறிய வாய்ப்பினை நல்கிய நெல்லையப்பனுக்கு உளமார்ந்த நன்றிகள்!

பயணங்கள்-6: "திருக்குற்றாலம்" (படங்கள் மட்டும்)



































பயணங்கள்-5: "திருக்குற்றாலம்"

“ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே, குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே” என்ற சி.எஸ்.ஜெயராமனின் குரல் இன்றும் செவியில் ஒலிக்கிறது. சென்ற ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு கிரகப்ரவேசம், ஒரு கல்யாணம் இவற்றைச் சாக்காக வைத்துக்கொண்டு திருக்குற்றாலம் சென்று வந்தேன் நெல்லையப்பனுடன். என்னவோ தெரியவில்லை இதுவரை அதைப்பற்றி எழுத முடியாமல் தள்ளிக்கொண்டே போய்விட்டது. “Better Late Than Never”.

“திங்கள் முடி சூடும் மலை, தென்றல் விளையாடும் மலை” என்று தென்பொதிகை மலை பற்றி நிறையச் சொல்லலாம். திருகூட ராசப்பக் கவிராயரின் “திருக்குற்றாலக் குறவஞ்சி” என்று என்னென்னவோ நினைவில் வந்தது.

நெல்லையில் வாழ்ந்த காலத்தில் நினைத்தால் குற்றாலம். சீசன் காலங்களில் குடும்பத்துடன் குற்றாலம் சென்று ஒரு வாரம் வரை தங்கி மகிழ்ந்திருக்கிறோம். தற்போது பல ஆண்டுகளுக்குப்பின் குற்றாலம் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.

தங்குவதற்கு வசதியாக கீழ்த் தளத்திலேயே நல்ல அறை கிடைத்தது. பொருட்களையெல்லாம் அறையில் போட்டுவிட்டு நானும் நெல்லையும் சுற்றக் கிளம்பிவிட்டோம்.

“உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையுங்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தா உன்குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே”

எனக் குற்றாலநாதரை இறைஞ்சி மாணிக்கவாசகர் பாடிய பாடல் கூத்தர் கோவில் வாசலில் கண்ணில் பட்டது.

மெயின் ஃ பால்ஸ் எனும் முக்கிய அருவியைச் சுற்றிவந்தோம். பின் ஐந்தருவிப் பாதையில் காலாற நடந்தோம். எழில் கொஞ்சும் இயற்கை அழகைச் சொல்லி மாளாது. எனது கேமெராவில் இஷடப்படி சுட்டுத்தள்ளினேன்.

மறுநாள் விசுவும் எங்களோடு சேர்ந்துகொண்டான். அப்புறம் கேட்பானேன். ஐந்தருவிக்குச் சென்று குளித்தோம். அங்கேயும் படங்கள்.

குற்றாலக் கடைவீதியில் நிறைய பொருட்கள். வீட்டிற்கு வேண்டுவன, குறிப்பாக ஜாதிக்காய் ஊறுகாய், வாங்கினோம். எனக்குத் தெரிந்து ஜாதிக்காய் ஊறுகாய் வேறெங்கும் கிடைப்பதில்லை. மேலும் சுவையான உணவு.
முன்னிரவில் அறையில் அரட்டைக் கச்சேரி.

அடுத்த நாள் மனமின்றி குற்றாலத்தைவிட்டு ஊருக்குக் கிளம்பினோம். குற்றாலத்தில் எடுத்த படங்களில் சிலவற்றை மட்டும் மேலே தனியே பதிவு செய்துள்ளேன்.

பயணங்கள்-3: "இராமேஸ்வரம் & தனுஷ்கோடி"

மானாமதுரை இரயில் நிலையத்தில் சூரியும், விசுவும்

மானாமதுரை இரயில் நிலையத்தில் நெல்லையும் , விசுவும்


நல்ல
‘கம்பெனி’ இருந்தால் எந்தப் பயணமும் சுவையாய் இருக்கும். எனது இந்தப் பயணத்தில் என்னுடன் துணை வந்தவர்கள் என் தம்பிகள், நெல்லையும், விசுவும். நாங்கள் மூவரும் சேர்ந்தாலே ஒரே சிரிப்பும், கொண்டாட்டமும்தான். இந்தப் பயணத்திலும் அப்படித்தான்.

எங்களுடன் வந்த நான்காவது நபர் என்னுடைய கேனன் பவர்ஷாட் A590 காமெரா. கோட்டையூர் இரயில் நிலையத்தில் நெல்லையைப் படம் பிடித்தேன். தொடர்ந்து கிட்டத்தட்ட ஐந்நூறு படங்கள்! அவற்றில் சிலவற்றை மட்டும் கீழே அடுத்த பதிவாக தனியே போட்டிருக்கிறேன்.

விசு திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் பாசெஞ்சரில் வர, நாங்கள் இருவரும் கோட்டையூரில் சேர்ந்துகொண்டோம். கோட்டையூர்-இராமேஸ்வரம் இரயில் கட்டணம், சொன்னால் நம்ப மாட்டீர்கள், வெறும் ரூபாய் இருபத்து ஆறு மட்டுமே! பேருந்தில் கட்டணம் இரண்டு மடங்குக்கும் மேல்.

இந்த ‘நெடிய’ பயணத்திற்கு எங்களை வழியனுப்ப அருமை நண்பர் செந்தில் காரைக்குடி இரயில் நிலையம் வந்திருந்தார்.

அடுத்து வந்த முக்கிய இரயில் நிலையம் சிவகங்கை. எனது ஓராண்டு கல்லூரிப் படிப்பு அந்த ஊரில்தான். ஓராண்டு மானாமதுரை-சிவகங்கை-மானாமதுரை என்று அலைந்திருக்கிறேன். வேறு குறிப்பிடத்தக்கது இரயில் நிலையத்திற்கு வெளியே, நேரெதிரே உள்ள சந்திரன் ஹோட்டல்தான். எவ்வளவு நாள் அங்கே சுவையான இட்லி, சட்னி, சாம்பார் என்று வெளுத்துக் கட்டியிருக்கிறேன்.

அடுத்து வைகையாற்று பாலம் தாண்டியதும், மானாமதுரை. அந்த வைகை ஆற்றுப்படுகையில் எத்தனை மாலைகள் நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி நடத்தியிருக்கிறேன். சுருங்கச்சொன்னால் அந்த ஆற்றுப் படுகைதான் எங்களது பீச். என் வாழ்வின் ஐந்து ஆண்டுகள் மானாமதுரையில் கழிந்தது. தற்போது எந்த விதத் தொடர்பும் இல்லாமல் போனது. நண்பர்களெல்லாம் எங்கே இருக்கிறார்களோ தெரியவில்லை.

டீ, வடை என்று நொறுக்குத்தீனிகள் உள்ளே செல்ல, பரமக்குடி, இராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம் கேம்ப் தாண்ட, மண்டபம் வந்தது. ஆவலுடன் எதிர்பார்த்த மண்டபம்-பாம்பனுக்கிடையே கடலின் மேல் செல்லும் பாம்பன் இரயில் பாலமும், பிரம்மாண்டமான அன்னை இந்திரா காந்தி சாலைப் பாலமும் வந்தன. ஆசை தீர படம் பிடித்துக் கொண்டேன். மிகவும் ‘த்ரில்லிங்காக’ இருந்தது. ஒரு உண்மையை இங்கே சொல்லியாக வேண்டும். கடல் என்றாலே இப்போதெல்லாம் மனதில் ஒரு பயமும் சேர்ந்துதான் வருகிறது. ஒன்றும் தெரியாத அப்பாவி போல, அமைதியாக, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பல லட்சம் உயிர்களை கொள்ளை கொண்ட சுனாமிக்குப் பிறகுதான் இந்நிலை. சிறுவயதில் திருச்செந்தூர் கடலில் போட்டிபோட்டு நெடிய தூரம் கடலில் சென்றது நான்தானா என்று நினைக்க வேண்டியுள்ளது.

இராமேஸ்வரம் இரயில் நிலையம். இங்கே உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுவது, ஒரு நெடிய ஆலமரத்தின் கீழே வீற்றிருக்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின் திரு உருவந்தான். 1985-ல் இரண்டாவது பிளாட்பார விரிவாக்கம் செய்ய தோண்டும்போது கிடைத்த விக்கிரகம் என்று குறிப்பு எழுதப் பட்டிருந்தது.

லாட்ஜில் பொருட்களைப் போட்டுவிட்டு, அருள்மிகு இராமநாத சுவாமியை வெளியிலிருந்தே கும்பிட்டுவிட்டு, கடல் நோக்கி நடந்தோம். வழியில், குஜராத்தி போஜனாலயாவில் சுவையான, சத்தான, மத்திய உணவு. வெளியில் வரும்போதுதான் கவனித்தேன்: நுழைவாயிலில் ஒரு சிறிய வெண்பளிங்கினாலான ஸ்ரீ சிவசக்தி ஆலயம்.

இராமேஸ்வரம் கடல் (அக்னி தீர்த்தம்), அதன் அருகிலேயே ஸ்ரீ சங்கர மேடம், ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளி அம்மன் ஆலயம்.

அருள்மிகு இராமநாத சுவாமி கோவிலின் கிழக்கு வாயிலின் எதிரேவிவேகானந்தா பாஸ்கரம்‘. இராமநாதபுரம் மகாராஜா சேதுபதியின் இந்த விருந்தினர் மாளிகையில்தான் சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். இன்று அது ஒரு நினைவுச் சின்னம்.

மாலை பாம்பன் சென்று, அன்னை இந்திரா காந்தி பாலத்தில் பாதிவரை நடந்தோம். அதற்குள் சீக்கிரம் இருட்ட ஆரம்பித்துவிட்டது. உயரமான அங்கிருந்து, இரயில் பாலம், அதன் நடுவில் கப்பல்களுக்காகப் பிரிந்து வழிவிடும் தூக்கு பாலம். கண்கவரும் வண்ண வண்ண அஸ்தமனக் காட்சிகளை காமெராவுக்குள் பிடித்தேன்.

மறுநாள் அதிகாலை எழுந்து, குளித்து, கடற்கரைக்குச் சென்றோம். காலையில் சூரிய உதயம் காண மிகவும் ரம்மியமாக, இனிமையாக இருந்தது. வசதியாக மேடை அமைத்து, அதில் உட்கார கரும்பளிங்கு பெஞ்சுகளும் இருந்தன. இயற்கையை ரசித்தவாறே அரட்டை. அப்புறம் கடற்கரையில் பித்ருக் கடன்களை முடித்துக் கொண்டோம்.

பிறகு 22 தீர்த்தமாடல், (தீர்த்தமாட கோவிலுக்குக் கட்டணம் ரூபாய் 25 + நீர் இறைத்து ஊற்றுபவருக்கு தலைக்கு ரூபாய் 50) அருள்மிகு இராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தரிசனம், வழிபாடு. அடுத்து அதிரசம், தட்டை பிரசாதம் கொறிப்பு.

கிழக்கு வாயில் வழியே ஸ்ரீ இராமநாத சுவாமி சன்னதியில் நுழையுமுன், சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து இலங்கை வழியே தாயகம் திரும்பிய உடன், இராமேஸ்வரத்தில் ஆற்றிய உரை கல்வெட்டில் பொறித்திருந்தார்கள் (தமிழிலும், ஆங்கிலத்திலும்). மேலும் அவர் கோவில் பணியாளர்களைப் பாராட்டி விருந்தினர் கையேட்டில் பதித்திருந்த குறிப்பும் கல்வெட்டில் பதித்திருந்தார்கள்.

வெளியே வந்ததும் தேவஸ்தான கேண்டீனில் காலை உணவு.

ரூபாய் 250 கொடுத்தால் ஆட்டோக்காரர்கள் நம்மை எட்டு இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். ஸ்ரீ கோதண்டராமர் ஆலயம், கந்தமாதன பருவதத்தில் இராமர் பாதம், சீதா தீர்த்தம், இராமர் தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம், ஸ்ரீ நாகநாதர் கோவில் (குழந்தை வரம் வேண்டுவோருக்காக), சாக்ஷி ஆஞ்சநேயர் கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இலவச இணைப்பாக, ஒன்பதாவது இடம், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்த வீடு.

மத்திய உணவிற்குப் பின், கோவில் வாசலிலிருந்து புறப்படும் மூன்றாம் நம்பர் பஸ்சில் தனுஷ்கோடி சென்றோம். பேருந்து தனுஷ்கோடியில் கடற்படை கண்காணிப்பு மையம் வரை மட்டுமே செல்கிறது. (கட்டணம் ஐந்து ரூபாய் மட்டும்) அங்கே இரண்டு சிறிய கடற்படை கட்டிடங்கள் தவிர ஏழெட்டு ஓலைக் குடிசைகள். ஓலைக் குடிசையில் தேநீர் மற்றும் சிற்றுண்டிக்கடை, நினைவுப் பொருட்கள் (சங்கு, பாசி மாலை போன்றவை) கடை. ஒரு நினைவுச் சின்னம் குறிப்பிடத்தக்கது: 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் நாள் இரவு கடல் விழுங்கிய இரயிலில் பயணம் செய்து பலியான அனைத்து உயிர்களுக்கும் – 111 பயணிகள் + நான்கு இரயில்வே சிப்பந்திகள். என்ன நடந்தது என்று சொல்வதற்குக் கூட யாரும் உயிர் பிழைக்கவில்லை.

அங்கிருந்து அரிச்சல் முனை, முற்றிலும் அழிந்துபோன தனுஷ்கோடி சென்றோம். வாஹனம் பழைய லாரி. பின் புறம், இரு பக்கமும் பலகை அடித்து வைத்திருந்தார்கள். அதில்தான் உட்கார வேண்டும். தலைக்கு ரூபாய் நூறு மட்டும். அரிச்சல்முனையில் இந்தியப் பெருங்கடலும், வங்காள விரிகுடாக் கடலும் இணைகின்றன. ஒரு சிறிய சமதளப் பரப்பு. அங்கு யாரும் இல்லை. கால் மணி நேரம் கீழே இறங்கி வேடிக்கை பார்த்தோம். ஸ்ரீலங்கா அந்த முனையில் இருந்து பதினெட்டு கிலோமீட்டர் தூரம் என்று சொல்கிறார்கள். பைனாக்குலரில் பார்த்தால் குருசடைத் தீவுகளில் ஒன்றான கச்சத் தீவு தெரியும் என்று சொன்னார்கள். கடல் சிறிது கொந்தளித்தாலும் அந்த இடம் காணாமல் போய்விடும். அரிச்சல்முனை பின் நோக்கி வந்துவிடும்.

திரும்புகையில் அழிந்துபோன தனுஷ்கோடி இரயில் நிலையம், ஒரு சிதைந்த சர்ச், சில குடியிருப்புகளின் சிதைவுகள் கண்டோம். அங்கும் சில குடிசைகள் மட்டுமே. அங்கு பத்துப் பதினைந்து குடிசைகள் கண்டோம். இரு புறமும் கடல். ஒரு குடிசை வாசலில் ஒரு வயதுக் குழந்தை ஒன்று தனியாக மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தது! பயமெல்லாம் நமக்குத்தான். அங்கும் பயணிகளுக்காக சில கடைகள்.

நாங்கள் தனுஷ்கோடி கடற்படை கண்காணிப்பு மையத்திற்கு வந்தபோது சூரியன் கடலில் மறையத் தயாராகிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கடற்கரை மண்ணில் அமர்ந்து வேடிக்கை. எங்கள் பேருந்து வந்தது. இராமேஸ்வரம் திரும்பினோம்.

மறுநாளும் காலை சீக்கிரம் எழுந்து காலாற இராமேஸ்வரம் கடற்கரையில் நடை பயின்றோம். கடற்கரை பெஞ்சில் அமர்ந்து அரட்டை. அக்னி தீர்த்தம் செல்லும் வழியில் ஒரு வீட்டு வாசலில் காஃபிக் கடை. சிவப்பழமாக ஒரு பெரியவர் அருமையான காஃபி கலந்து கொடுத்தார். நெல்லை போன்ற ஸ்ட்ராங் காஃபி பிரியர்களுக்குப் பிடித்த காஃபி.

காலை உணவிற்குப் பின் மீண்டும் அருள்மிகு இராமநாத சுவாமி கோவிலுக்குள் சென்றோம். முதல் நாள் பிரகாரங்கள் சுற்ற முடியவில்லை. எனவே பிரகாரங்கள் சுற்றி, பிரகாரத்தில் உள்ள மூர்த்திகளை வணங்கி வந்தோம். பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தைப் பார்த்தோம், படம் பிடித்தோம். ஒரே மாதிரியான 1212 தூண்கள். பிசிறில்லாமல் ஒரே மாதிரியாக எப்படிச் செய்தார்கள் என்று வியந்தோம். (கீழே படத்தைப் பார்க்கவும்).

அடுத்து மேலக் கோபுரம். இரு புறமும் ஸ்ரீ விநாயகரும். ஸ்ரீ பாலசுப்பிரமணியரும். வழிபட்டோம்.

மதியம் 1.55-க்கு எங்கள் ரயில். இராமேஸ்வரம்-திருச்சி பாசெஞ்சர். ஸௌகரியமான, கூட்டமில்லாத, வசதியான, கால்நீட்டி அமர, செலவு குறைந்த பயணம். மாலை 6.40 மணிக்கு கோட்டையூர் வந்து சேர்ந்தேன். மறக்க முடியாத பயணம். நெல்லை சொன்னான்: “முல்லா! இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இது போல எங்காவது சென்று வரவேண்டும்.” “ஆஹா! கண்டிப்பாக” என்றேன் நான்.

பயணங்கள்-4: "இராமேஸ்வரம் & தனுஷ்கோடி படங்கள்"

இராமேஸ்வரம்தனுஷ்கோடி பயணக் கட்டுரை மேலே. பயணத்தின் போது எடுத்த ஒரு சில படங்கள் கீழே.

பாம்பன் ரயில் பாலமும் அன்னை இந்திரா சாலைப் பாலமும்.
ரயில்
பாலத்தில் எங்கள் ரயில் செல்ல அதிலிருந்து நான்
க்ளிக்கியதுஇந்தப் படம்.

அன்னை இந்திரா காந்தி பாலம். மண்டபத்தையும்
பாம்பனையும் இணைக்கும் கடல்மீது அமைந்துள்ள
சாலைப்
பாலம்.

இராமேஸ்வரம் இரயில் நிலையத்தினுள்
நுழைந்ததும்
நாம் காண்பது ஆலமரத்தடியில்
வீற்றிருக்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியின்
சிறு
ஆலயம். திரு உருவச்சிலை நவம்பர் 1985
ஆம்
ஆண்டு இரண்டாவது பிளாட்பாரத்தைத்
தோண்டும்போது
கிடைத்தது.

இராமேஸ்வரம் இரயில் நிலையத்தின் முன்வாயில்.
குதிரைவண்டிகளும்
, ஆட்டோக்களும். பேருந்து
இரயில்
நிலையத்திற்கு வராது. சிறிது
தூரம்
நடந்து சென்று, தனுஷ்கோடியிலிருந்து
கோவில்
செல்லும் பேருந்தில் செல்லவேண்டியதுதான்.

டாக்டர் .பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் இராமேஸ்வரத்தில்
வாழ்ந்த இல்லம் (புதுப்பிக்கப்பட்டுள்ளது)

இராமேஸ்வரத்தில் அமெரிக்காவிலிருந்து தாயகம்
திரும்பிய
சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்த
சேதுபதி
மகாராஜாவின் விருந்தினர் இல்லம்.

அருள்மிகு ராமநாத சுவாமி ஆலயத்தின்
மேற்கு
வாயிலின் இடது புறமுள்ள
ஸ்ரீ
விநாயகர் சன்னதி.

அருள்மிகு இராமநாத சுவாமி ஆலயத்தின் மேற்கு
வாயிலின்
வலது புறம் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர்
சன்னதி
.

அருள்மிகு இராமநாத சுவாமி கோவிலிலுள்ள
சேது மாதவ தீர்த்தம்.

அருள்மிகு இராமநாத சுவாமி கோவிலின்
மேற்கு
வாயில்.

அருள்மிகு இராமநாத சுவாமி ஆழத்தின் பிரசித்தி
மூன்றாம் பிரகாரம் பற்றிய கல்வெட்டு.

இராமேஸ்வரம் திருக்கோவிலின் பிரசித்தி
பெற்ற
மூன்றாம் பிரகாரம். 1212 தூண்கள் கொண்டது.

அமெரிக்காவிலிருந்து இலங்கை வழியாக
திரும்பிய சுவாமி விவேகானந்தர் இராமேஸ்வரம்
தீவில்
ஆற்றிய உரை கோவிலினுள் கல்வெட்டாக
(
ஆங்கிலத்திலும் , தமிழிலும்)

பார்வையாளர் கையேட்டில் சுவாமி விவேகானந்தர்
கோவில்
சிப்பந்திகளைப் பாராட்டி எழுதிய குறிப்பு
கல்வெட்டில்
.

இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி ஆலய
கிழக்குக்
கோபுரம்.

இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி ஆலயம்
முக்கிய
கிழக்கு வாயில்.

குஜராத்தி பவன் நுழைவாயிலில் உள்ள
வெண்
பளிங்கிலான ஷிவாபார்வதி ஆலயம்

அருள்மிகு உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில்.
அக்னி தீர்த்தம் அருகில்.

அக்னி தீர்த்தம். (இராமேஸ்வரம் கடற்கரை). அருள்மிகு
இராமநாத
சுவாமி கோவிலின் கிழக்கு வாயிலிலிருந்து
ஐந்து
நிமிட தூரம்.

இராமேஸ்வரம் கடற்கரை (அக்னி தீர்த்தம்)
அருகிலுள்ள சங்கர மடம்.

கந்தமாதன பர்வதம். இங்கே ராமர் பாதம்
அமைந்துள்ளது
.

ஸ்ரீ கோதண்டராமர் கோவில், தனுஷ்கோடி
செல்லும்
வழியில். 1964 புயலில் அழிந்துபோய்
மறுபடியும் உருவாக்கப்பட்ட கோவில்.

தனுஷ்கோடி கடற்படை கண்காணிப்பு முகாமிற்கு
அருகிலுள்ள
கடற்கரை.


1964
டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு கடல் விழுங்கிய ரயிலில், ரயில்வே நிர்வாகக் கணக்குப்படி 111 பயணிகளும் நான்கு ரயில்வே ஊழியர்களும் பலியாகினர். அவர்களுக்காக தனுஷ்கோடி கடற்படை கண்காணிப்புப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள நினைவுச் சின்னம். அதுவும் சிதைவடையும் நிலையில் இருக்கிறது.

அரிச்சல்முனைக்கு சென்ற எங்கள் லாரி. இது போன்ற லாரிகளுக்குக் கட்டணம் ரூபாய் ஆயிரத்து முன்னூறு. கிட்டத்தட்ட தலைக்கு நூறு ரூபாய். இவை தவிர ஜீப்புகளிலும் போகலாம். கட்டணம் ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு. ஆனால் ஐந்தாறு பேர் மட்டுமே செல்லமுடியும்.

அரிச்சல் முனை. ஸ்ரீலங்கா இங்கிருந்து 18 கி.மீ. மட்டுமே.
இந்தியப்
பெருங்கடலும் வங்காள விரிகுடாக் கடலும்
சந்திக்கும்
இடம். ஒரு சிறிய ஆளில்லா சமதள மணற்பரப்பு.

தனுஷ்கோடி ரயில்வே ஸ்டேஷன் 1964 வீசிய புயலில்
முற்றிலுமாக அழிந்து போனதுஎஞ்சியுள்ள
சிதிலமடைந்த அடையாளங்கள்

தனுஷ்கோடி கடற்படை கண்காணிப்பு முகாமிலிருந்து
ராமேஸ்வரம் கோவில் வரை செல்லும் மூன்றாம் எண்
பஸ்
. கட்டணம் ரூபாய் ஐந்து மட்டும்.

சூரிய அஸ்தமனக் காட்சி – அன்னை இந்திரா காந்தி சாலைப் பாலத்திலிருந்து எடுத்தது.

பயணங்கள்-1: "அழியாநிலை"

அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் நான்கு கிலோமீட்டரில் அழியாநிலை என்றொரு சிற்றூர். (என்ன ஒரு அற்புதமான பெயர்! அழியாநிலையை அடைவதுதானே வாழ்வின் குறிக்கோள்!) அங்கே நெடுஞ்சாலை அருகே ஒரு அற்புதமான சிறிய ஆஞ்சநேயர் கோவில். பல ஆண்டுகளுக்கு முன் எதிர்பாராதவிதமாக அந்தக் கோவிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்புக்கிட்டியது. உபயம் இனிய நண்பர், முனைவர் வே.சுந்தரம் அவர்களும், எங்கள் நிறுவன இயக்குனர் முனைவர் மீ.இராகவன் அவர்களும், மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பும். (அவர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்).

அங்கு சென்று வழிபட வேண்டும் என்று ஆசை கைகூடாமல் நழுவிக் கொண்டே இருந்தது. நேற்று அருமை நண்பர் எம்.செந்தில்குமார்Justify Full தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் என்னை அங்கு அழைத்துச் சென்று என் ஆசையை நிறைவேற்றி வைத்தார். (அவரும் அவரது குடும்பத்தார் அனைவரும் இறையருளால் சகல நலமும் பெற்று நீடுழீ வாழ்க!)

காலை ஒன்பது முப்பது மணி அளவில் என் வீட்டை விட்டுக் கிளம்பினோம். அழகாபுரி, கண்டனூர், புதுவயல், கல்லூர், கீழாநிலைக்கோட்டை, கே.புதுப்பட்டி, ஆளப்பிறந்தான் (!) என்று போகும் வழியில் சிற்றூர்கள்.

கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற அவ்வையின் பொன்னுரைப்படி வழிநெடுக சிறிய, பெரிய கோவில்கள். (அதிலும் பெரும்பாலும் அம்மன் கோவில்கள். எல்லாம் வல்ல பரம்பொருளை அன்னையின் வடிவில் காண்பது எவ்வளவு எளிதாக இருக்கிறது! அன்னை வழிபாடு நம்மவர்களிடையே எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது!!)

வழவழப்பான அகண்ட தார்ச் சாலை. இயற்கைக் காட்சிகள். இதமான சுகமான வெயில், நண்பர் செந்திலின் அன்பைப்போல. எனது கேமெராவில் மனதிற்குப் பிடித்ததையெல்லாம் பிடித்துக்கொண்டு அங்கங்கே நிறுத்தி நிதானமாகச் சென்றோம். (நண்பர் செந்தில் முப்பத்து ஒன்பது கிலோமீட்டர் (optimum speed) வேகத்தில் வண்டியை சீராக, அலுங்கல் குலுங்கல் இல்லாமல் ஓட்டிச் சென்றார். பல விதத்திலும் இனிமையாக இருந்தது அப்பயணம்.

வழியில் கல்லூருக்கு முன், சற்றும் எதிர்பாராத பெரிய நவீன உணவகம்ஸ்ரீமயூரி உணவகம். நடுக்காட்டில் அப்படி ஒரு உணவகம் இருந்தது நம்பமுடியாமல் இருந்தது. கொறித்துவிட்டு, தேநீர் அருந்திவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தோம்.

பதினோரு மணியளவில் அழியாநிலை ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலை அடைந்தோம். அருமையான இயற்கைச் சூழல். உள்ளேயே பூஜைப் பொருட்கள் கடை, சிற்றுண்டிச்சாலை, தண்ணீர் வசதி. முதலில் ஸ்ரீ செல்வ விநாயகரை வணங்கி, ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயரை வழிபடச் சென்றோம். (எங்கே செல்வ விநாயகரைப் பார்த்தாலும் எனக்கு வினோத்தின் நினைவு வரும் – அவன் பெயரின் பிற் பகுதி ‘செல்வகணேஷ்’).

அங்கே ஸ்ரீ ஆஞ்சநேயரின் திரு உருவச் சிலை இரண்டு. திறந்த வெளியில் சுமார் இருபத்தைந்து அடி உயரமான பிரம்மாண்டமான பஞ்சமுக ஆஞ்சநேயர் ஒன்று. கோவிலினுள் சுமார் பத்தடி உயரமான ஆஞ்சநேயர் வடிவமொன்று. இரண்டுமே மனதை விட்டு அகலாது இருக்கின்றன. அங்கே இருந்த ஒரு மணி நேரமும் மனதிற்கு மிகவும் இதமாகவும், இனியதாகவும் இருந்தது. அங்கே ஒரு தியான மண்டபமும் உண்டு. சிறிது நேரம் தியானம் செய்தோம். பூஜை முடிந்து தினமும் காலை பன்னிரண்டு மணி அளவில் பிரசாதமும் தாராளமாக வழங்கப் படுகிறது.

நின்னருளாலே நின் தாள் பணிந்து என்றபடி, ஸ்ரீ ஆஞ்சநேய பகவானே அடுத்த மாதம் குடும்பத்துடன் உன்னை தரிசிக்க அருள் புரிவாய் என்று வேண்டி வந்தேன்.

பயணத்தின் முக்கிய நோக்கம் நிறைவேறியபின் வழி நெடுக மேகக் கூட்டங்கள், மரம் செடி கொடிகள் என்று கண்ணில் பட்டதையெல்லாம் கேமெராவினால் சுட்டேன். குறிப்பிடத்தக்க இரண்டு கீழாநிலைக்கோட்டை கோவில்கள் இரண்டும், சிதிலமடைந்த கோட்டை ஒன்றும். (ஏன் இப்படி சிதைந்து கிடக்கிறது அதன் வரலாறு என்ன? விசாரிக்க வேண்டும்).

கீழாநிலைக்கோட்டையில் நண்பர் செந்தில் ‘இளவட்டக்கல்லை’ தூக்க முயல்வதை படம் பிடித்தேன். (‘இளவட்டக்கல்’ என்பது சினிமாக்காரர்களின் கப்சா என்று எண்ணியிருந்தேன் .)

கே.புதுப்பட்டியில் ஸ்ரீ மாங்குடி சாத்தையனார் கோவில். ஸ்ரீ மாங்குடி சாத்தையன் வல்லம்பர்களின் குல தெய்வம் என்றும், வல்லம்பர்கள் வீட்டில் மாங்குடி என்றோ சாத்தையா என்றோ பெயர்சூட்டப்பட்ட பிள்ளைகள் இருப்பார்கள் என்று என்னுடன் பணி செய்த நண்பர் கருப்பையா கூறியது நினைவிற்கு வந்தது.

மதியம் ஒன்றரை மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம். (போக வர சுமார் எழுபது கிலோமீட்டர்.) மறக்கமுடியாத இப்பயணத்தில் எடுத்த சில படங்களை இங்கே கீழே பதிவு செய்திருக்கிறேன்.

பயணங்கள்-2: "அழியாநிலை" பயணக் காட்சிகள்

அழியாநிலை ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர்

நண்பர் செந்தில் அவரது வாகனத்துடன்

சிதிலமடைந்த கீழாநிலைக்கோட்டை

செந்தில்இலவட்டக்கல்லைதூக்க முயல்கிறார்.

கீழாநிலைக்கோட்டையில் மண் குதிரைகள்என் பழைய நண்பர்கள் சிலரை நினைவு படுத்தின.
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில், கீழாநிலைக்கோட்டை

ஸ்ரீ அரியநாயகி அம்மன் திருக்கோவில், கீழாநிலைக்கோட்டை



அழியாநிலைக் கோவில் நுழைவாயில்





ஸ்ரீ மாங்குடி சாத்தையன் கோவில், கே.புதுப்பட்டி