நண்பர் கண்ணனது மணிவிழா:













சென்ற சனிக்கிழமை என்னுடன் பணிபுரிந்த நண்பர் திரு கண்ணன் அவர்களது மணிவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. சாதாரணமாக நான் கூடியவரை எல்லா விழாக்களையும் தவிர்த்துவிடுவேன். எனக்கு மிக நெருக்கமானவர்களது விழாக்களில் மட்டுமே கலந்துகொள்வேன். அலுவலகத்தில் ஒருவொருக்கொருவர் உறுதுணையாக, நட்பாகக் பழகியதை மறக்கமுடியாமல் ஸ்ரீரங்கம் சென்று அவரது மணிவிழாவில் கலந்துகொண்டேன்.

அங்கே பல அலுவலக நண்பர்களை நீண்ட நாட்களுக்குப்பின் கண்டு அளவளாவ முடிந்தது. குறிப்பாக, பல ஆண்டுகள் சந்திக்காத நண்பர், விஞ்ஞானி, முனைவர் எம்.ஹரிஹரன் அவர்களைக் காணமுடிந்தது.

காலை ரயிலில் சென்று மாலை ரயிலில் திரும்பியதால் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது. ரயிலிலும் சரி, திருச்சி ரயில் நிலை ஏ.சி. வெயிட்டிங் ஹாலிலும் சரி நிறையப் படித்தேன். ஏனோ நான் வீட்டில் இருக்கும்போது இந்த அளவில் பாதி கூட படிக்க முடிவதில்லை. மொத்தத்தில் ஒரு மகிழ்ச்சியான பயணம், மகிழ்ச்சியான அனுபவம்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஸ்ரீரங்கம் கோபுரங்களை எனது கேமராவில் க்ளிக்கினேன். அப்பா, ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றி எத்தனை கோபுரங்கள்! ஸ்ரீரங்கத்தைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு: காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், பூலோக வைகுண்டம் எனப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட 108 திவ்விய தேசங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இது. ஒரே வருத்தம் கால அவகாசம் சரியாக இல்லாமையால் கோவிலுக்குள் சென்று, ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கம் பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. இருக்கட்டும், அடுத்தமுறை கவனமாகத் திட்டமிட்டு கண்டிப்பாக தரிசனம் பெறவேண்டும்.

இந்த விழாவில் எடுத்த சில படங்களை மேலே பதிவு செய்துள்ளேன்.

கண்ணன் தம்பதிகள் சகல நலம் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்!

நண்பர் கிருஷ்ணன் அவர்களது மணிவிழா






இன்று நண்பர், சாமி.கிருஷ்ணன் அவர்களது மணிவிழா. எனது மணிவிழா முடிந்து பத்து நாட்களில் இன்னொரு மணிவிழா!

முனைவர் சாமி.கிருஷ்ணன் எங்கள் அலுவலகத்தில் உலோக அரிமானப் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி. நான் அந்தப் பிரிவில் பணியாற்றியபோது எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

அவர் அன்னை-அரவிந்தர் மீது பற்றுக் கொண்டவர். எனது ஈடுபாடோ ஸ்ரீஇராமகிருஷ்ணர்-அன்னை சாரதாதேவி-சுவாமி விவேகானந்தர் மீது. நாங்கள் நேரம் கிடைக்கும்போது ஆன்மீகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

வருடத்தில் மூன்று-நான்கு முறை பாண்டிச்சேரி சென்று அரவிந்த ஆஸ்ரமத்தில் தங்குவார். போகும்போதெல்லாம் என்னையும் அழைப்பார். இறுதியில் ஒருநாள் அவருடன் சென்றேன். தங்குவதற்கு ஆஸ்ரம சர்வதேச விடுதியில் அறை பதிவு செய்திருந்தார். அங்கே அவருடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.

அரவிந்தரின் மாபெரும் காப்பியமான சாவித்ரியைப் பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டேன். மில்டனின் ‘பேரடைஸ் லாஸ்டுக்கு’ (Paradise Lost) இணையான ஒரு பெருங் கவிதை. பேராசிரியர் நட்கர்னி அவர்களது தொடர் உரைகளை கேட்டு பிரமித்தேன், இன்புற்றேன். தினம் இரண்டு சிறப்புரைகள் என்று தொடர்ந்து பத்து நாளோ-பதினைந்து நாளோ நடைபெற்றது. நான் இரண்டு நாட்கள் மட்டுமே தங்கியிருந்ததால் நான்கு சிறப்புரைகளை மட்டுமே கேட்க முடிந்தது. மறக்க முடியாத ஒரு அற்புத அனுபவம் அது.

மேலும் என்னை அவர் ஆரோவில்லுக்கு அழைத்துச் சென்றார். அங்கே அன்னையின் ஆலயத்தில் (Matri Mandir) தியானம் செய்தோம். மற்றுமொரு மறக்கமுடியாத அனுபவம் இது.

பெரிய இடைவெளிக்குப் பின் நண்பர் கிருஷ்ணன் அவர்களை சந்தித்தது, அதுவும் அவரது மணிவிழாவில் சந்தித்தது மகிழ்ச்சியைத் தந்தது. மேலும் பல நண்பர்களை அங்கே கண்டேன். அங்கே எடுத்த சில படங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.

நண்பர் கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சகல நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

எனது மணி விழா (சஷ்டியப்தபூர்த்தி)

கிரிகோரியன் கேலண்டர்படி (Gregorian Calendar) நான் சென்ற அக்டோபர் இருபத்தோராம் நாள், அறுபத்து ஒன்றாவது வயதில் அடி எடுத்து வைத்துவிட்டேன். ஆனால் நம்மவர்கள் நட்சத்திரக் கணக்குப்படி, தமிழ் கணக்குப்படி, அறுபது ஆண்டுகள் என்ற சுழற்சி. எனவே அறுபது வயது முடிந்தபின் பிறந்த அதே வருடம் மறுபடியும் வரும்.

நான் பிறந்த ‘விரோதி’ வருடம் மறுபடியும் வந்திருக்கிறது. விரோதி வருடம் ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தேன். அன்று தீபாவளி. தற்போது நவம்பர் பதினான்காம் நாள் எனது ஜன்ம நட்சத்திரம்.

என் பிள்ளைகள் மணிவிழா எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லாததற்கு காரணங்கள் உண்டு.

1. அந்தக் காலத்தில் அறுபது வயது வரை வாழ்வது பெரிய சமாச்சாரம். இன்று அறுபது, எழுபது என்பது சர்வ சாதாரணம். எனவே அறுபது வயதுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

2. சொத்துபத்து, வசதி வாய்ப்பு உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கொண்டாடலாம். தங்கள் பேரன் தும்மல் போட்டால்கூட அதைக் கொண்டாடலாம். என்னிடம் சொத்து பத்து எதுவும் கிடையாது. எனவே நான் கொண்டாடுவதில் அர்த்தமில்லை.

3. வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்கள் மணிவிழாவில் எடுப்பதில் அர்த்தம் இருக்கிறது. என் வாழ்வில் அது போன்ற சாதனைகள் எதுவம் இல்லை. எனவே நான் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை.

மாற்றுக் கருத்து: என் பிள்ளைகள் என் திருமணத்தைப் பார்க்கவில்லை. தற்போது அதைப் பார்க்க ஒரு வாய்ப்பு. ஹோமம் வளர்த்து, மந்திர ஜபங்கள் ஒலிக்க, தோஷங்கள் நீங்கி, வாழ்வின் கடைசிப் பக்கங்களை நிம்மதியாகக் கழிக்கலாம்.

எனவே இறுதியில் மிக எளிய விழாவிற்கு உடன்பட்டேன். அவ்வளவுதான். அதற்கப்புறம் அது படிப்படியாக விரிந்துகொண்டே போய் பெரிதாகிவிட்டது. மாட்டிக்கொண்டோம் என்ற உணர்வுதான் இருந்தது.

விழா முடிந்தபின் இந்த உணர்வு முற்றிலுமாக மறைந்து மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. நம் மேல் பேரன்பு கொண்டவர்கள், நெருக்கமானவர்களுடன் கூடி உறவாடியது மனதிற்கு உற்சாகமாக இருந்தது.

அன்பை அபரிமிதமாக வெளிப்படுத்த, அன்பைப் பரிமாறிக்கொள்ள, அனைவருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. கலந்துகொண்டு அன்பைப் பொழிந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

விழாவில் எடுக்கப்பட்ட சில படங்களை இங்கே பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.