தேவாரம்-11:

திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன்
சீருடைக் கழல்கள் என்று எண்ணி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்
ஓடியும் உறைப்பனாய்த் திரிவேன்;
முருகமர் சோலை சூழ் திருமுல்லை
வாயிலாய்! வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய்;
பாசுபதா! பரஞ்சுடரே!

சுந்தரமூர்த்தி நாயனார்

தேவாரம்-10:

பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.

– திருநாவுக்கரசர்

தேவாரம்-9:

குருகாம் வயிரமாம் கூறும் நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளேதானாம்
பருகா அமுதமாம் பாலில் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாகனுமாம்,
உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணாம்
கருகாவூர் எந்தைதானே.

– திருநாவுக்கரசர்

தேவாரம்-8:

தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.
– திருஞானசம்பந்தர்

தேவாரம்-7:

மண்ணில் நல்ல வண்ணம் வாழலும் வைகலும்
எண்ணின் நல்ல கதிக்கியாதுமோர் குறைவிலைக்
கண்ணின் நல்லஃதுரும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

-திருஞானசம்பந்தர்

தேவாரம்-6: "தோடுடைய செவியன்…"

தோடுடைய செவியென் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி எனுள்ளங் கவர்கள்வன்
ஏடுடைய மலரான்முனை நாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனென்றே.

தேவாரம்-5:

நீருளான் தீ உளான் அந்தரத்துள்ளான்
நினைப்பவர் மனத்துளான் நித்தமாஎத்தும்
ஊருளான் எனதுரை தனதுரையாக
ஒற்றை வெள்ளேருகந் தேறியஒருவன்
பாருளார் பாடலோ டாடலறாத
பண்முரன் றஞ்சிறை வண்டினம்பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்

இருக்கையாப் பேணிஎன் எழில்கொல்வதியல்பே.

யாருள் பிரபஞ்சம் தொகுத்தும், வகுத்தும் ஒன்றித்திருக்கிறதோ, அவர் உயிர்களுக்கு இறைவன். குறுக்கும் நெடுக்குமாக அவர் வியாபித்திருக்கிறார். அவர் அழிவற்றவர். எல்லார் உள்ளத்திலும் அவர் வீற்றிருக்கிறார்.
– சம்பந்தர் தேவாரம்.
நன்றி: தர்ம சக்கரம், ஆனி மாத இதழ், சர்வஜித் வருடம், சக்கரம் 56, ஆறாம் 6.
(திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன வெளியீடு)

தேவாரம்-4: "பொன்னவன்…"

பொன்னவன் பொன்னவன்
பொன்னைத்தந்து என்னைப் போகவிடா
மின்னவன் மின்னவன்
வேதத்தின் உட்போருளாகிய
அன்னவன் அன்னவன்
ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன்
என் மனத்து இன்புற்று இருப்பானே!
– சுந்தரர் தேவாரம்

தேவாரத் திருப்பதிகம்-3

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நிழலே.
– திருநாவுக்கரசர்

தேவாரத் திருப்பதிகம்-1:

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படாம் நடலை இல்லோம்
ஏமாப்பும் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
– திருநாவுக்கரசர்

தேவாரம்-1: "காதலாகிக் கசிந்து…"

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

தேவாரம்-1: "காதலாகிக் கசிந்து…"

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.