சூரியின் டைரி-65: தென்றலாய் வருடியவை – நீதியே மன்னவன் உயிர் நிலை

சூரியின் டைரி-65: தென்றலாய் வருடியவை – நீதியே மன்னவன் உயிர் நிலை
இனிய உதயம் மாத இதழை பல ஆண்டுகளாக நான் வாங்கிப் படித்து வருகிறேன்.  இதில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பேட்டி.  படைப்பாளிகளுடனான ஆழமான, விரிவான பேட்டி வேறு எந்த இதழிலும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும்.  தற்போது இந்த இதழில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2013 ஜனவரி இதழில் புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதியுள்ள புதுமை வேட்டலா? புரட்டு வித்தையா? என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது. 
நாளிதழ் ஒன்றில் யாரோ எழுதிய சிலப்பதிகாரம் காலத்திற்கு ஏற்றதாக இல்லை, சிலம்பின் பேருண்மைகள் நிலயல்ல என்று எழுதியுள்ளார். அதை மறுத்து மிகத் தெளிவாக, மேற்கோள்களுடன் சிலப்பதிகாரத்தின் சிறப்பினை அற்புதமாக நிலை நாட்டியுள்ளார்.  இது தமிழார்வர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை.
ஆய்வு என்ற பெயரில் வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதுவது தற்போது வழக்கமாகி விட்டது.
இந்தக் கட்டுரையிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு பகுதியினை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.  மீண்டும் கேட்டும் கொள்கிறேன்.  இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்துப் பாருங்கள்.
நமது இலக்கியங்கள், காப்பியங்கள் , நீதி நூல்கள்  அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த, சீர்மை செய்திடவே படைக்கப் பட்டவையாகும்.
அல்லவை செயார்க்கு அறங்கூற்றாதல்;  என்றும் அறத்தின் மீது, எல்லாக் காலத்திலும் ஆள்வோர்க்கு அச்சம் இருந்திட வேண்டும்.  அஃது இல்லாமல் போனதால்தான் இன்றைய அரசியலில் அவலங்கள், அநீதிகள், அக்கிரமங்கள், அயோக்கியத்தனங்கள் அரங்கேறுகின்றன.
தவறிழைத்த பாண்டியனைக் கண்ணகி தண்டிக்கவில்லை; யாரும் கொலை செய்யவில்லை. நீதியை அறத்தை உயிராகக் கொண்டவன் அவனாதலின் நீதி தவறினோம் என்று உணர்ந்தவுடன், அக்கணமே உயிர் பிரிந்தது. மிகவுயர்ந்த சாவு இது. நீதியே மன்னவன் உயிர் நிலையாயிற்று.
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
 செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது
என்றார் இளங்கோ.
கண்ணகியும் காப்பிய நிறைவுக்குமுன், வாழ்த்துக் காதையில்,
தென்னவன்  தீதிலன் தேவர்கோன்  தன்கோவில்
 நல்விருந்தாயினன்  நானவன்  தன் மகள்
என்று சான்றளிக்கிறார்.
புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
இனிய உதயம்  மாத இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

சூரியின் டைரி-64: தென்றலாய் வருடியவை வணக்கத்திற்குரிய வாத்தியார்!
ஆனந்தவிகடன் 2013 ஜனவரி இரண்டாம் நாள் இதழில் வெளியான 2012 டாப் 10 மனிதர்கள் பகுதியிலிருந்து:
தடகள விளையாட்டுகளில், தமிழ் வீரர்களைச் சர்வதேச உயரத்துக்கு இட்டுச்செல்லும் ஏகலைவன், சென்னையைச் சேர்ந்த நாகராஜ்.  கேரள அரசின் கோடிக்கணக்கான நிதி உதவியுடன் செயல்படும் பி.டி.உஷா அகாடமியில் இருந்து, இதுவரை உருவானது இரண்டு சர்வதேசத் தடகள வீரர்கள் மட்டுமே.  ஆனால், எந்த அரசு உதவிகளும் இல்லாமல், நாகராஜ் இதுவரை 24 சர்வதேச வீரர்களை உருவாக்கி இருப்பது மகத்தான சாதனை. அதில் 14 பேர் சர்வதேச சாம்பியன்கள். 100க்கும் அதிகமானோர் தேசியத் தடகள சாம்பியன்கள்.  இவை அனைத்தையும் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், தேசத்தின் மீதும், விளையாட்டின் மீதும் உள்ள காதலால் செய்கிறார் நாகராஜ்.  மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு அலைந்து திரிந்து, தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேடிப் பிடித்து வந்து, பயிற்சி அளிப்பதை, கடந்த 25 ஆண்டுகளாக ஒரு தவம் போல் செய்து வரும் நாகராஜின் கனவு, தமிழ் நாட்டில் இருந்து பல ஒலிம்பிய்ன்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். நடக்கும் நாகராஜ்!
திரு நாகராஜிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
ஆனந்தவிடனுக்கும் மனமார்ந்த நன்றிகள்

சூரியின் டைரி-63: கவலை தருபவை – செல்போன் மற்றும் கணினிக் கழிவுகள்

சூரியின் டைரி-63: கவலை தருபவை –   செல்போன் மற்றும் கணினிக் கழிவுகள்
ஆனந்தவிகடன் 2013 ஜனவரி ஒன்பதாம் நாள் இதழில் மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதிவரும் தொடர்கட்டுரை ஆறாம் தினையிலிருந்து ஒரு பகுதி மட்டும்:
பனை ஓலையில் இருந்து, காகிதத்தில் எழுதுவதை எதிர்ப்பது மடமை.  காகிதத்தினால் அழியும் காடுக்ளைப் பார்த்து, கணினி உபயோகத்திற்கு மாறுவதை குறை சொல்வது முட்டாள்தனம்.  ஆனால், ரோஜாப்பூ சேலைக்குப் பொருத்தமாக சிவப்பு நிற செல்போன், கறுப்பு ஜீன்ஸுக்குப் பொருத்தமாக மஞ்சள் நிற லேப்டாப் என ஹேர்பின், ரிப்பன் போல வருடத்துக்கும் ஒரு மின்சாதனப் பொருள் என நுகர்வதால் குவியும் கணினிக் கழிவுகளைக் கண்டிப்பாக எதிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
அந்தக் கழிவுகள் அனைத்தும் மண்ணுக்குத்தான் செல்கிறது.  கொஞ்ச நஞ்சம் அல்ல… கிட்டத்தட்ட 8,000 டன் பயன்படுத்து, தூர எறி எனும் புதிய வணிகச் சித்தாந்தத்தில் அமெரிக்கா மட்டும் 3 மில்லியன் டன் கணினிக் கழிவைப் பூமியில் கொட்டுகிறது.  உலகத்தின் குப்பைக்கூடமாக ஆகி வருவது இந்தியாவும், சீனாவும்தான்.  ஈயம், செம்பு, பாதரசம், பல்லாடியம், கோபால்ட்… கலந்து கொட்டப்படும் இந்தப் பேசாத செல்போன் கழிவுகள் பூமித்தாய்க்குச் செரிக்காது தோழா!
விதை மட்டும் அல்ல, கணினி துவங்கி சலவை சோப் வரை எந்தப் பொருளையும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்று சொல்லியோ, சந்தைக்குப் புதிது என்றோ விற்பனைக்கு வரும் எதையும் உபயோகிக்கும் முன்னர் ஒரு முறைக்கு மூன்று முறை சிந்தியுங்கள் நண்பர்களே!
சில புதுசுகளைக் காட்டிலும், பல பழசுகள் பாதுகாப்பானவை. அறிவியல் என்பது புதுமையில் மட்டும் இல்ல, பழ்மையிலும் உறைந்து இருக்கிறது.

நன்றி: மருத்துவர் சிவராமன் மற்றும் ஆனந்தவிகடன்

சூரியின் டைரி-61: தென்றலாய் வருடியவை – டாக்டர் வர்கீஸ் குரியன்

சூரியின் டைரி-61: தென்றலாய் வருடியவை டாக்டர் வர்கீஸ் குரியன்
டாக்டர் வர்கீஸ் குரியன் தனது 90வது வயதில் காலமானபோது, உயிர்மை 2012 டிசம்பர் மாத இதழில், ஷாஜி எழுதிய பால் வீதியில் ஒரு பயணம் என்ற அஞ்சலிக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் புகழ்கொண்ட அமுல் என்ற வணிகப் பெயரையும், அதன் வணிக சாம்ராஜ்யத்தையும் 63 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தில் உருவாக்கி வளர்த்தெடுத்தவர் டாக்டர் வர்கீஸ் குரியன்.  அமுல் என்றால் ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் என்று பொருள் (Anand Milk Union Limited). உருவாகி சில மணி நேரத்திற்குள்ளேயே கெட்டுப் போகக்கூடிய ஒரு பொருளை வைத்துக்கொண்டு பலகோடி மக்களின் ஏழ்மையை, ஒரு தனிமனிதனால் எப்படித் தீர்க்க முடியும் என்பதற்கு உலகில் இருக்கும் ஒரே உதாரணம், டாக்டர் வர்கீஸ் குரியந்தான்!  ஒரு தனிமனிதனால் ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்க முடியும் என்று நிரூபித்த ஒரே இந்தியரும் அவர்தான் என்று திட்டவட்டமாகச் சொல்வேன்.
டாக்டர் வர்கீஸ் குரியன் அமுலின் உரிமையாளரோ, முதலீட்டாளரோ ஆக ஒருபோதும் இருந்தவரல்ல.  ஒரு அரசு ஊழியராக இருந்துகொண்டே ஒரு சமூகத் தொழில் முனைவராக அவர் முன்வந்தபோது நிகழ்ந்த அதிசயம்தான் அமுல்!  அமுல் ஒரு மாபெரும் கூட்டுறவு சங்கம்! 16,200 கிராமிய கூட்டுறவ் சங்கங்களின் கூட்டமைப்பு அது. 32 லட்சம் பொதுமக்கள்தான் அதன் உரிமையாளர்கள்!  ஆண்டில் 12,000 கோடியின் மொத்த விற்பனையுடன், பாலையும், பால் பொருட்களையும் பதப்படுத்தி விற்கும் உலகின் தலைசிறந்த நிறுவனமாக இன்று அமுல் திகழ்கிறது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் தொடங்கி வெண்ணெய், குழந்தைகளுக்கான பால் சத்துணவுகள், பால் கட்டி, பால் பொடி, தயிர், நெய், பாலாடை, பனிக்கூழ், பால் குளிர்பானங்கள், ஆரோக்கிய பானங்கள், உறைவிக்கப்பட்ட பால், பால் மொரப்பா, பால் அடிப்படையிலான பலகாரங்கள் மற்றும் மிட்டாய்கள் போன்றவற்றின் உற்பத்தியிலும் விற்பனையிலும் அமுலுக்கு நிகராகயிருக்கும் நிறுவனங்கள் உலகில் குறைவே.  அமுலில் டாக்டர் வர்கீஸ் குரியன் ஆரம்பித்த செயல் பெருவெள்ளம் (Operation Flood) திட்டத்தின் வாயிலாகத்தான் இந்தியா முழுவதும் பால் கூட்டுறவு சங்கங்கள் உருவானது.  அதனூடாக உலகில் மிக அதிகமாகப் பாலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியது!
உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதற்கான மிகக்குறைந்த காரணங்களில் ஒன்று!  எல்லாமே டாக்டர் வர்கீஸ் குரியனின் சாதனைகள்.  மாத சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியரின் அன்றாட வேலைகளின் பகுதியாக நினைத்துக் கொண்டே இதையெல்லாம் செய்து முடித்தார் அவர்!
நன்றி : திரு ஷாஜி மற்றும் உயிர்மை மாத இதழ்

சூரியின் டைரி-61: நோகவைத்தவை – காவிரிப் பிரச்னை

சூரியின் டைரி-61:  நோகவைத்தவை – காவிரிப் பிரச்னை
குமுதம் தீராநதி 2013 ஜனவரி இதழில் வெளியான செ.சண்முகசுந்தரம் எழுதிய வறண்ட காவிரியில் தொலைந்த மனிதம் என்ற மிகச் சிறப்பான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்:
———-
காவிரி டெல்டா மாவட்டங்களில் அடிப்படை வாழ்வாதாரம் சீர்குலைவுக்கு ஆளாகத் தொடங்கி பல்லாண்டுகளாகி விட்டன.  தொடர்ச்சியான நதிநீர்ப் பிரச்னை.  தமிழ் நாட்டை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளின் உதாசீனம், பாசனக் கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் வைத்திருக்கும் போக்கு, விளை நிலங்களை விரைவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட்.  வேறு வேலை வாய்ப்புகளைத் தேடி இடம் பெயரும் டெல்டா விவசாயத் தொழிலாளர்கள், விளை நிலங்களை மனைகளாக வாங்கிப் போட்டு விட்டு சாப்பாட்டுக்கு மைசூர் பொன்னியை எதிர்பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகளை புழுப்பூச்சிகளைப் போல் பார்க்கும் அரசு, வங்கி அதிகாரிகள், பிரச்னை வந்தால் மட்டுமே அது பற்றி சிந்தனை கொள்ளும் தமிழக, கர்நாடக ஆளும் வர்க்கங்கள், இரு மாநிலங்களிலும் மக்களை உசுப்பிவிடும் சுய நலக் கட்சிகள், மௌனமாகிப் போன மனசாட்சி கொண்ட இரு மாநில மக்கள், வேடிக்கை பார்க்க்கும் மத்திய அரசு, தனது அதிகாரம் வெற்று வேட்டாகிப் போவதை இயலாமையுடன் நோக்கும் உச்ச  நீதி மன்றம், களவாடப்படும் குளங்கள், ஏரிகள்.  யாரிடம் போய் முறையிடுவது?
….
பாமணி ஆற்றில் தண்ணீர் வந்து, தம்மங்குறிச்சி வாய்க்காலில் மோட்டார் போட்டு இறைத்துவிட்டு, அதன் நான்கு கிலோமீட்டர் தொலைவுள்ள மருதங்காவெளியின் வானம் பார்த்த பூமிக்கு கொண்டு வந்து, இரவில் வாய்க்கால் வரப்பில் படுத்து, பாம்புகளுடன் பழகி, சொற்பத்தண்ணீரையும் வயலுக்குப் பாய்ச்சிய அனுபவங்கள் என்  நினைவில் நிழலாடுகின்றன. சமீபத்தில் அப்பகுதிக்குச் சென்றிருந்தபோது, அவ்விளை நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் மனகளாயிருந்தன. வாய்க்கால் தூர் வார வராத அதிகாரி அவ்விளை நிலங்களை அளந்து மனைக் கற்கள் போட ஓடோடி வருகிறார்.  என்ன தேசம் இது?
நன்றி: திரு செ.சண்முகசுந்தரம் மற்றும் குமுதம் தீராநதி 

சூரியின் டைரி-60: தென்றலாய் வருடியவை – குப்பை கிடங்குகளாய் மாறிய ஏரிகளைச் சீரமைத்த அருண் கிருஷ்ணமூர்த்தி

சூரியின் டைரி-60: தென்றலாய் வருடியவை குப்பை கிடங்குகளாய் மாறிய ஏரிகளைச் சீரமைத்த அருண் கிருஷ்ணமூர்த்தி
தினமலர் மதுரைப் பதிப்பு ஜனவரி ஒன்பதாம் நாள் இதழிலிருந்து:
சிறுவயதிலேயே ஏரி, பறவைகள் பிடிக்கும்.  சென்னை கீழ்கட்டளை ஏரியில் பறவை, மீன், ஆமை இருந்தன.  பின் குப்பைக் கிடங்காக மாறியதால், ஏரியை சீரமைக்கும் எண்ணம் ஏற்பட்டது.  நன்கு படித்து, கூகுள் நிறுவனத்தில் வேலை செய்தேன். 
வேலை பார்க்கும் போதே ஆந்திராவின் குருனாதன் செருவு ஏரி, சென்னையின் லக்ஷ்மி புஷ்கரம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுவதும் தூர் வாரி, சுற்றிலும் வேலியிட்டு, நண்பர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு சீரமைத்தேன்.  ஆர்வத்தால் கூகுள் நிறுவ்ன வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமும் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டேன். 
….
ஏரிகளை சீரமைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்ததற்காக, சர்வதேச இளைஞர் சங்கமும், சுவிட்சர்லாந்தின் ரோலக்ஸ் நிறுவனமும் விருது அளித்து பெருமைப்படுத்தின. 
விருதிற்கான பணத்திற்குப் பதில், கீழ்கட்டளை ஏரியை ம்றுசீரமைக்கும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கக் கேட்டேன்.  நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவித்தது.  விரைவில் பணி துவங்கும்.  மொபைல்: 9940203871

மனமார்ந்த பாராட்டுக்கள்: திரு அருண் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு
நன்றி:  தினமலர் நாளிதழ் 

சூரியின் டைரி-59: நோக வைத்தவை

சூரியின் டைரி-59:   நோக வைத்தவை
ஆனந்த விகடன் டிசம்பர் இருபத்தாறாம் நாள் இதழின் தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி:
வெளி நாட்டு வியாபாரி… உள் நாட்டு துரோகம்!
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அங்குள்ள வியாபார நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காகவும் லாபி செய்வதற்கென்றே அங்கு லாபியிஸ்ட்கள் இருக்கிறார்கள். அந்த நாட்டின் அதிபிரம்மாண்டமான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மட்டுமல்ல… கம்ப்யூட்டர் நிறுவனங்களும், பிரபல மருத்துக் கம்பெனிகளும்கூட இந்தியச் சந்தையை ஆக்கிரமிப்பதற்காக, பணத்தை இறைத்து லாபி செய்திருக்கும் செய்தி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருந்தே ஆதாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது.
இதில், இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைக் குளிரிவிப்பதற்கான செலவும் அடங்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி.
….
ஆண்டாண்டு காலமாக அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்துவிட்டு, சுய உழைப்பாலும், மூலதனத்தாலும் பல இந்தியக் குடிமக்கள் சொந்தமாக வியாபாரம் பார்க்கத் தலைப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் மறுபடியும் அவர்களை எல்லாம் அடிமைகள் ஆக்குவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் மத்திய் அரசு செய்கிறது என்பதுதான் வலிமிக்க நிஜம்.
அமெரிக்க லாபி செலவில், இந்தியாவுக்குள் அளிக்கப்பட்ட லஞ்சமும் உண்டா?  இதற்கு, வழக்கமான வழுக்கல் பதிலைத் தந்துள்ளது காங்கிரஸ்.  அப்படி எல்லாம் இருக்காதாம்.  ஒருவேளை இருந்து விட்டால், சட்டம் தன் கடமையைச் செய்யுமாம்!  நாட்டை ஏலம் விடும் மொத்த வியாபரிகள் சிக்கல் வ்ந்தால் சொல்லும் கெட்ட வார்த்தை அல்லவா இது!
….
நன்றி:  ஆனந்தவிகடன்


சூரியின் டைரி-58: குமுற வைத்தவை: விலைவாசி ஏன் உயர்கிறது?

சூரியின் டைரி-58:  குமுற வைத்தவை: விலைவாசி ஏன் உயர்கிறது?
ஆனந்தவிகடன் டிசம்பர் இருபத்தாறு இதழில் டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய வந்தே விட்டது வால்மார்ட் என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்:
இன்று பொருட்களின் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா?
ஆன்லைன் சூதாட்ட வர்த்தகம், சேவை வரி, சுங்க வரி, உற்பத்தி வரி, வாட் வரி, வருமான வரி என சகல திசைகளில் இருந்தும் தாக்கும் விதவிதமான வரிகள்தான். ஒரே பொருள் பத்து பேரிடம் கைமாறி வரும்போது பத்து இடங்களிலும் அதற்கு வரி விதிக்கப் படுகிறது. அந்த வரிவிதிப்புகள்தான் பொருட்களின் விலையை அதிகரித்துவிடுகிறது.
அரிசி விலை ஏன் உயர்கிறது? விவசாயிகள் பெயரில் பெரும் நிறுவனங்களின் ஆட்கள் விவசாயிகளிடமிருந்து ஒட்டு மொத்தமாக நெல் கொள்முதல் செய்து அதை அரசு குடோனில் இருப்புவைக்கிறார்கள். இந்த இருப்பைக்காட்டினால் வெளி நாட்டு வங்கிகள் மிகக் குறைந்த வட்டியில் கடன் அளிக்கும். நாடு முழுவதும் ஆஙகாங்கே இப்படி நெல்லைப் பதுக்கிவைக்க, ஒரு கட்டத்தில் தட்டுப்பாடு அதிகரிக்கும்.  விலை கடுமையாக இருக்கும். நெல்லை அதிக விலைக்கு விற்பார்கள்.  லாபத்துக்கும் லாபும். இடையே இருப்பைக் காட்டி மிகக் குறைந்த வட்டியில் கடன் வாங்கி அதிலும் லாப்ம்.  இவை மிகச் சில உதாரணங்கள் மட்டுமே.  இன்னும் இப்படி நிறையக் குள்றுபடிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்..
தவறு என்று தெரிந்தும் அதை ஏன் ஊக்குவிக்கிறது மத்திய அரசு?  சாதாரண வியாபாரிக்குத் தெரிந்த உண்மை, மெத்தப் படித்த பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் தெரியாதா? மிக நன்றாகத் தெரியும்…….
.

அந்நியரின் உரத்துக்கு மண்ணைப் பலியாக்கினோம், பாழாய்ப்போனது விவசாயம். இப்போது கிழக்கிந்தியக் கம்பெனி பாணியில் ஊடுருவியிருக்கும் வால்மார்ட்டுக்கு    நம்மவர்களின் வணிகத்தையும் பலி கொடுக்கப் போகிறோமா?!

நன்றி: திரு சஞ்சீவிகுமார் மற்றும் ஆனந்தவிகடன். 

தவறான நபர்கள் கையில் இந்த நாடு சிக்கிக் கொண்டு என்ன பாடு படுகிறது?  தங்கள் சுய நலத்திற்காகவும், வெளிநாட்டான் தங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும், தங்கள் சொந்த நாட்டிற்கும், மக்களுக்கும் இவர்கள் இழைக்கும் அநீதிகளை என்னென்று சொல்வது?


வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்காக மட்டும் சென்ற நான்காண்டுகளில் ரூபாய் நூற்றம்பது கோடி லஞ்சம் கொடுத்துள்ளது என்பதும், அதைத் தொடர்ந்து அவர்கள் மட்டுமல்ல அவர்களைப் போன்ற மற்ற நிறுவனங்களும் இதுபோல் நிறைய செலவு செய்துள்ளன என்ற் செய்திகளும் குமுற வைக்கின்றன, நெஞ்சைக் கொதிக்க வைக்கின்றன.


இந்த நிறுவனங்களெல்லாம் நம்மைக் கொத்திக் கூறுபோடக் காத்திருக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும்

இந்தத் தீய சக்திகளிடமிருந்து இந்த நாடு என்று மீளுமோ?  கிழக்கு இந்தியக் கம்பெனி என்று வியாபாரத்திற்காக வந்த ஒரு நிறுவனம் இந்த நாட்டை நூற்றுக் கணக்கான ஆண்டுகள் அடிமைப்படுதியதை எப்படி அவ்வள்வு எளிதாக நாம் மறந்துவிட்டோம்?




சூரியின் டைரி–57: தென்றலாய் வருடியவை – வழிகாட்டும் திம்பக்கு!

சூரியின் டைரி 2013 ஜனவரி ஆறாம் நாள் – தென்றலாய் வருடியவை: வழிகாட்டும் திம்பக்கு!
என் வலைப்பூக்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது.  பொதுவாக மனம் எதிலும் ஒட்ட மறுக்கிறது.  ஈடுபாடு இல்லாமல் ஏனோதானோ என்று வாழ்ந்துகொண்டிருக்கிறேன். போராடித்தான் சிறு செயலையும் செய்ய வேண்டியிருக்கிறது.
அப்படி ஒரு போராட்டத்தின் முடிவாக இந்தப் பதிவு:
பெரிதாக ஏதோ சொந்த சரக்கைப் பதியப் போவதில்லை. இன்னும் இருக்கிறேன், கதை முடிந்துவிடவில்லை என்று காட்ட, நான் படித்தவற்றில் மனதில் படிந்த சிலவற்றை மட்டும், சுருக்கமாக இங்கே பதிவு செய்கிறேன்.
படித்த இதழ், ஆனந்தவிகடன் டிசம்பர் இருபத்தாறாம் நாள் இதழ்.
மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் தொடர் கட்டுரை, ஆறாம் திணையிலிருந்து:
திம்பக்கு சூழலிலும் விவசாயத்திலும் பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ள ஆந்திர அமைப்பு.  தினையும் வரகும் பயிராக்கி பெருமளவில் பயன்படுத்திகிறார்களாமே? என்று நான் தேடிப் போன ஊர் இது.  திம்பக்கு பகுதிக்குள் நுழைந்ததும் அவர்கள் ஏற்படுத்தியிருந்த மாற்றம் பிரமிக்க வைத்தது. கிட்டத்தட்ட நூறு கிராமங்கள். ஏறத்தாழ முப்பதாயிரம் மக்களை வறண்ட விவசாயத்தில் இருந்து மீட்டு (இந்தியாவின் இரண்டாவது பெரிய மிக வறட்சி மாவட்டம் அனந்தப்பூர்1) அவர்கள் வாழ்வியலை உயர்த்தியதுடன், அருகில் உள்ள வறண்ட மூன்று மலைகளைப் பசுமைப் பூங்காவாக்கி இருக்கின்றனர் திம்பக்கு மக்கள்.  ஊரே தினையையும், ராகியையும் வரகையும்தான் மூன்று வேளையும் சாப்பிடுகிறது.  அங்கு ஓர் உணவு விடுதிக்குப் போனால் சாம்பார், ரசம், தயிர், கோவைக்காய் பொரியல் என்று முழுச்சாப்பாடும் தினை அரிசியில் போடுகிறார்கள்.  இன்று இந்தியா முழுவதும் அந்த மக்கள் இயற்கை விவசாயத்தில் எந்த ரசாயனக் கலப்பும் இல்லாத அந்த சிறு தானியத்தை மிகக் குறைவான, சரியான விலையில் விற்று தங்கள் வாழ்வை உயர்த்தி வருகின்றனர்…..
படிக்கப் படிக்க மன மகிழ்வையும், பிரமிப்பையும் ஏற்படுத்திய கட்டுரை இது.  இதை அனைவரும் படித்து மகிழவேண்டும், சிந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறு பகுதியை மட்டும் பதிகின்றேன்.  மொத்தத்தில் இந்தத் தொடர் கட்டுரை விடாமல் தொடர்ந்து படித்து மகிழ, பயன் பெற வேண்டிய ஒன்று.
மருத்துவர் சிவராமன் அவர்களுக்கும் ஆனந்தவிகடனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்.


சூரியின் டைரி-56: "சோனா"

சில நாட்களுக்கு முன், காலையில் நண்பர் அலெக்சிடமிருந்து ஒரு அழைப்பு.  “எங்கே இருக்கிறீர்கள்? நண்பர் சோனா இன்று காலையில் காலமாகிவிட்டதாக, நண்பர் செல்வராஜ் சொன்னார்.  நீங்கள் கோட்டையூரிலிருந்தால், நாம் இருவரும் ஒன்றாகச் சென்றுவரலாமே என்பதற்காகத்தான் கூப்பிட்டேன் என்றார்.  அதிர்ச்சியிலிருந்து மீள  எனக்கு  சில நொடிகள் ஆயின.  பின்னர் அவரிடம்  நான் சென்னையில் இருப்பதாகச்  சொல்லிவிட்டு, என்ன ஆயிற்று என்று விசாரித்தேன்.  அவருக்கும்  தெரியவில்லை.  ஒரு மாதமாக  உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்ற அளவில் மட்டும் தெரிந்துகொள்ள முடிந்தது.   சென்று வந்தபின், விபரங்களைக் கூறுங்கள் என்று அலெக்சிடம் கேட்டுக்கொண்டேன்.  ஆனால் இன்று வரை அலெக்சிடமிருந்து தகவல் இல்லை, நானும் போன் செய்து கேட்டுக் கொள்ளவில்லை.  என்றாலும் என் மனதில் அவர் பற்றிய சிந்தனைகள் ஓடின.


சோனா ஒரு வித்தியாசமான மனிதர்.   ஒரு புத்தக விற்பனையாளர் என்று அறிமுகமானார்.  பின்னர் நான் ஹோமியோபதி பயின்றபோது, சக மாணவர் என்ற முறையிலும், பின்னர் நாங்கள் ஒரு ஹோமியோபதி இயக்கத்தை தோற்றுவித்தபோது நான் பொதுச்செயலர் என்ற முறையிலும், அவர் பொருளாளர் என்ற முறையிலும் நெருக்கமானார்.  இயக்கக் கூட்டம் அவரது வீடான ஜீவா இல்லத்தில்தான் பெரும்பாலும் நடைபெறும்.  சில ஆண்டுகளுக்குப்பின் அந்த இயக்கத்தைவிட்டு, நான் வெளியேறும்படி ஆயிற்று;  அடுத்த சில மாதங்களில் அவரும் வெளியேறினார்.


அதன் பின்னர் நான் மனித மேம்பாட்டு அமைப்பில் முக்கிய பொறுப்பிலிருந்தபோது அவர் உறுப்பினராகச் சேர்ந்தார்.  நான் காரைக்குடியில் மாநில அளவிலான புத்தகக் கண்காட்சி நான்கு ஆண்டுகள்  கம்பன் மண்டபத்தில் நடத்தியபோது,  அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்.  நான் அந்த அமைப்பிலிருந்தும் ஒரு காலகட்டத்தில் வெளியேறும் சூழ்நிலை உருவானது.  அதன் பின்னர் அவரது தொடர்பு குறைந்தது.


அவர் காரைக்குடி நகரத்தார் பிரிவைச் சேர்ந்தவர்.  என்னைவிட பல வயது இளையவர்.  அவர் வேலை என்று எதுவும் இல்லாமல், பெயரளவில் புத்தக வியாபாரம், புத்தகங்கள் சேர்ப்பது, அப்புறம் எல்லாவற்றையும்விட ஆச்சரியமான விஷயம் அவர் காரைக்குடி நகர இந்திய பொதுவுடமைக் கட்சியின் பொருளாளராக இருந்தது.  பெற்றோர் மூலமாகவோ, அல்லது திருமணத்தின் மூலமாகவோ கிடைத்த பணத்தை, அரசு ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் கொடுத்து, சிறிதளவு வருமானம் தேடிக்கொண்டார். 


 திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியிருந்தபோதும், அவர்கள் இல்லத்தில் குழந்தைப் பேறு இல்லாதது ஒரு பெரிய குறையாக இருந்தது.  பொதுவாக அவரைவிட அவரது துணைவியார் தோற்றத்தில் அவரைவிட வயது முதிர்ந்தவராகத் தென்பட்டார். அவர்களுக்கிடையில் பெரிய நெருக்கம் என்று சொல்ல வாய்ப்பில்லாததுபோல் பொதுவாக நண்பர்கள் அனைவரும் உணர்ந்தனர்.  ஆனால் நான் இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான ஒன்று, அவரது துணைவியார் எங்கள் அனைவரிடமும் நன்றாகப் பேசினார், பழகினார், அவர் வீட்டில் நாங்கள் இயக்கக் கூட்டங்கள் நடத்தியபோது உறுதுணையாக இருந்தார்.  எனவே எங்களைப் பொறுத்தவரை அவர் மதிப்பிற்குரியவராக இருந்தார். 


பின்னர் ஒருநாள் சில ஆண்டுகளாக அவரும், அவரது துணைவியாரும் சேர்ந்து வாழவில்லை என்ற தகவல் கிடைத்தது.  அவரது வீடு, அவர் சேர்த்த புத்தகங்கள் என்று எல்லாமே அவரது துணைவியார் உடையதாகியது.  அவர் தனது பெற்றோருடன் வசித்தார் என்ற அளவில் அறிந்திருந்தேன்.  சில முறை அவருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது அன்னையார் வெறுப்பேற்றுவது போல் பேசினார்; எனவே அதையும் நிறுத்த வேண்டியதாயிற்று.


என் பெண்ணின் திருமணத்திற்குப்  பிறகு தற்செயலாக அவரை எங்கோ வழியில் சந்தித்தேன்.  நான் அவரை திருமணத்திற்கு அழைக்காதது குறித்து வருத்தப்பட்டார்.  அவருடைய முகவரி கிடைக்காதது, மற்றும் மகளின் திருமணச் சுமைகளில் மூழ்கியிருந்ததால் விடுபட்டுப் போயிற்று என்று கூறி அவரிடம் என் வருத்தத்தைத் தெரிவித்தேன்.  அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது.


நாங்கள் நண்பர்கள் சிலர் பேசிக் கொள்கையில் சோனா பற்றி ஒரு கருத்து பொதுவாக அனைவரிடமும் இருந்தது.  அது அவர் எதிலுமே ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக இருந்தார் என்பதும், அதுபோல் அவருடைய புரிதலும் ஆழமாக இல்லை என்பதும்.  எத்தனை குறைகள் இருந்தாலும் என்னிடம் அன்போடு பழகியவர்; பல சமயங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்; எங்கள் வீட்டிலும் அனைவரிடமும் உரிமையோடும் அன்போடும் பழகியவர் என்றமுறையில் அவரது மரணம் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.  அடுத்தபடி அவரை எடைபோட நான் யார்?  நான் என்னவோ பெரிதாக வாழ்ந்த்துவிட்டதாகவோ, சாதித்துவிட்டதாகவோ கூறமுடியாது என்கிறபோது அவரை எடைபோடும் தகுதி எனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 


சமயத்தில் நினைத்துப் பார்க்கையில் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுவது பைத்தியக்காரத்தனமோ என்று தோன்றுகிறது.  இதையொத்த கருத்தை லியோ டால்ஸ்டாய் கூறியதாக எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது.  ஏன், என்னுடைய வாழ்க்கையையே எடுத்துக் கொள்கிறேன்; வாழ்க்கையில் புரியாத விஷயங்களே அதிகமாக இருப்பதுபோலவும்,  பல சமயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்பதுபோலவும், ஏன், எதற்கு என்று புரியாமலேயே பலவற்றை செய்திருக்கிறேன் என்பதையும்  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்; அதுவே உண்மை.


சோனாவின் நிழற்படம் எனகாவது இருக்குமா என்று தெரியவில்லை.  தேடிப் பார்த்து கிடைத்தால் இதில் பதிவு செய்யவேண்டும்.           

சூரியின் டைரி-55: தாகூரின் நாவல், "தி ரெக்" (The Wreck)

ஒரு மாதத்திற்கு மேல் உடல்நிலை சரியில்லாமல், தற்போதுதான் உடல்நிலை சிறிது, சிறிதாக தேறி வருகிறது.  ஒருமாதமாக பெரும்பாலும் படுக்கையிலேயே சிரமப்பட்டு பொழுதைக் கழித்தேன்.  எதுவும் செய்ய இயலவில்லை.  உணவும் செல்லவில்லை.  ஏற்கனவே நான் ஒரு சர்க்கரை நோயாளி.  சர்க்கரை நோயாளிகளின் முக்கிய பிரச்சினை அவர்கள் உண்ணும் உணவை சக்தியாக, ஆற்றலாக மாற்றும் திறன் குறைவாக இருப்பது; அதன் விளைவாக, உடல் உறுப்புக்கள் அவை செயல்பட தேவையான ஆற்றல் இல்லாமல், அரைகுறையாக செயல்படுவது.  அதிலும் உடல் எடையில் மூன்று சதவிகிதமே உள்ள மூளை, உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றலில் பதினேழு சதம் எடுத்துக் கொள்ளும்.  சர்க்கரை வியாதி + உணவை ஏற்கா நிலையில் மூளையின் செயல்பாடு எவ்வளவு பாதிக்கப்படும் என்று சொல்லத் தேவையில்லை.  முக்கியமாக ஒரு மந்த நிலை, எதிலும் ஈடுபாடின்மை, மனத் தளர்ச்சி போன்றவை எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்.  தினசரி செய்தித்தாளைக் கூட படிக்க ஈடுபாடில்லை.  தினமும் போடும் ‘சுடோக்கை’ கண்டுகொள்வதே இல்லை.  சாதாரணமாக எனக்கு மிகவும் பிடித்த,  இரண்டு மூன்று வரிகளில், ரத்தினச் சுருக்கமாக பயனுள்ள ஆரோக்கியத் தகவல்களைத் தரும் சென்னை டைம்ஸ் கூட ஈர்க்கவில்லை.  
நிலைமை கவலை அளிப்பதாக இருந்தது.  நாவல் ஏதாவது படித்தாலென்ன?  நாவல் என்றால் சுவாரசியமாக இருக்கும்.  எனவே நான்கைந்து புத்தகங்களை எடுத்தேன்.  அதிலொன்று, தாகூரின் புகழ் பெற்ற நாவல்.  படகு விபத்தால் ஏற்படும் இடமாற்றங்கள், குழப்பங்கள் என்று கதை விறுவிறுப்பாகச் செல்லும்.  பள்ளி நாட்களின் சுருக்கமான பதிப்பைப் படித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். மேலும் அந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு, தமிழில் வெளிவந்த “மாதர் குல மாணிக்கம்” என்ற திரைப்படத்தையும் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.  படகு விபத்திற்குப் பதிலாக, அரியலூர் ரயில் விபத்து;  அப்புறம் வேறு சில மாற்றங்கள்.  தாகூரின் கதையில் ஒரு மணப்பெண் விபத்தில் பலியாவாள்;  தமிழில் இரண்டு புதுமண ஜோடியும் பிழைக்கும்;  மணப்பெண்கள் இருவரும் இடம் மாறுவர்;  இறுதியில், சிக்கல் எப்படி அவிழ்கிறது, அந்தப் பெண்கள் இருவரும் தங்கள் கணவன்மாரை எப்படிச் சென்றடைகின்றனர் என்பது கதை.
தெரிந்த கதையை இருந்த போதும் அந்த நாவலைத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் முழுமையான – சுருக்கப்படாத அந்த நாவலைப் படிக்கவேண்டும்; தாகூரின் எழுத்து வண்ணம், வர்ணனைகள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல்தான்.  அந்தக்கால வங்காளத்தைக் கண் முன் கொண்டு வருகிறார்.  அற்புதமான வர்ணனைகள்.  குறிப்பாக, கங்கையாற்றில் கதாநாயகனும், கதாநாயகியும் காசிப்பூர் வரை பயணம் செய்வது; ஒவ்வொரு இரவு ஆற்றங்கரையில் ஒரு கிராமத்தில் படகு நிற்பது; அந்த நேரம் வேண்டிய பொருட்களை பயணிகள் வாங்குவது, சமைப்பது, மற்றும் அந்த கிராம மக்களைப் பற்றிய வர்ணனை.
ஒரு மெகா சீரியல் எடுத்தால், அதுவும் தாகூரின் எழுத்துப் படி, சிதையாமல், உருவாக்கப் பட்டால் மிகவும் நன்றாயிருக்கும்.  ஏற்கனவே, வங்க மொழியிலோ, இந்தியிலோ எடுக்கப்பட்டிருந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை.  நானூற்றுப் பதினாலு பக்கங்கள் கொண்ட நாவலை மூன்று நாட்களில் படித்து முடித்தேன்.  அருமையான நாவல்.  ஒரே குறை ‘க்ளைமாக்ஸ்தான்’.  அப்பா தாங்க முடியாத அளவிற்கு, தலை சுற்றும் அளவிற்கு திருப்பங்கள். நம்மூர் மெகா சீரியல்கள் தேவலாம் என்றாகிவிட்டது. 
இந்தக் குறையை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் சுவையான நாவல்.  1926-ஆம் வருடம் முதற் பதிப்பு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.  கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் வங்காள மாநிலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்கு பதமாக ஒரு பருக்கை இந்நாவல்.
என்னைப் பொறுத்தவரை தாகூருக்கு மிகவும் நன்றி.  மனம் துவண்டு, செய்வதறியாது இருந்த நிலையில் இந்நாவல் ஒரு டானிக் போல செயல்பட்டது என்றால் மிகையில்லை.           

சூரியின் டைரி-54: நல்ல சாவு

அது என்ன நல்ல சாவு?  பயங்கரமான சாலை விபத்திலோ, குருரமான தீ விபத்திலோ, இல்லை படுக்கையில் மாதக் கணக்கில் கிடந்து நாறி,  அன்பு வைத்திருந்த மனைவி மக்கள் எல்லாம் வெறுத்து, இவன் ஒழிய மாட்டானா என்று ஏங்கும் நிலை-இதெல்லாம் நிச்சயமாக நல்ல சாவு இல்லை.  தூக்கத்திலேயே எந்த வித தொல்லையும் இன்றி உயிர் பிரிவது மிகச் சிறந்த சாவு என்று நினைக்கிறேன்.  காலையில் காப்பியுடன் மனைவி எழுப்ப, ஒன்றுமே சலனமில்லாமல், கட்டையாகக் கிடக்க, அலறி அடித்து, டாக்டர் வந்து பார்த்து, சாரிங்க! அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிவாக்கில் உயிர் பிரிந்துவிட்டது என்று சொல்கிறார் அல்லவா, அதுதான் நல்ல சாவு.  இன்னும் நல்ல சாவு என்றால், நமக்கு மட்டும் அறிகுறிகள் காட்டும், நாம் சுதாரித்து நாம் செய்யவேண்டிய கடமைகளை விரைவாக முடித்து, கணக்கு வழக்குகளையெல்லாம் தெளிவாக ஒப்படைத்துவிட்டு, சிக்கல்களையோ, பிரச்சினைகளையோ குடும்பத்தாருக்கு விட்டுச் செல்லாமல் இருப்பது. முக்கியமாக, பெரும் மருத்துவச் செலவை உண்டாக்காமல் இருப்பது.

எனது உறவினர் ஒருவரின் தந்தை இரவில் உடல் நலம் திடீரென மோசமாக, அவசர அவசரமாக, வாடகைக்கார் பிடித்து, மதுரை சென்று, அங்கே புகழ் பெற்ற தனியார் மருத்துவ மனையில் பெரும் பணம் செலவு செய்து, அவரைக் காப்பாற்றி வீடு கொண்டு சேர்த்தார்.  ஆனால், இரண்டு மாதம் கழித்து, நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவர் அலுத்துக் கொண்டார்: “நான் தப்புப் பண்ணீட்டேன்! அன்றைக்கே அவரைச் சாக விட்டிருக்கவேண்டும்.  தற்போது படுத்த படுக்கையாய் இருக்கிறார். சொல்வதைக் கேட்பதில்லை.  கண்டதையும் தின்றுவிட்டு, படுக்கையை நாறவைக்கிறார்.  பிள்ளைகள் எல்லாம் அருவருப்புப் படுகிறார்கள்.  அவருக்குப் பாடு பார்பதற்குள் உயிரே போய்விடுகிறது.  அவர் சீக்கிரம் போய்ச் சேர்ந்தால் போதும் என்றிருக்கிறேன்.”

நான் என் தினசரிப் பிரார்த்தனையில்: “பிறவிப் பயனை அடைதல் வேண்டும்; முழுமை பெறவேண்டும்; மகத்தான சாதனைகள் படைத்திடல் வேண்டும். உரிய நேரம் வந்ததும், மன நிறைவோடு, சிரித்த முகத்தோடு, உன் திருவடிகளை வந்தடைதல் வேண்டும்.

இப்பிறவியை நல்லபடியாக முடித்திடல் வேண்டும்; அல்லல் படாமல், அவதிப் படாமல், அசிங்கப் படாமல், துன்பப் படாமல், துயரப் படாமல், கேவலப் படாமல் முடித்திடல் வேண்டும்.  அடுத்த பிறவியிலாவது முற்றிலும் தூயவனாகப் பிறந்து, முற்றிலும் தூயவனாக வாழ்ந்து, முற்றிலும் தூயவனாக முடித்திடல் வேண்டும்.

எஞ்சியுள்ள காலத்திலாவது உடல் உபாதைகள், மன உபாதைகள், நோய்கள், பிணிகளிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, கடன்கள், கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, மன நிறைவுடனும், மன நிம்மதியுடனும், மன மகிழ்வுடனும், சீரும் சிறப்புடன் வாழ நல்லருள்  புரிவாய் இறைவா”  என்று வேண்டிக் கொள்வேன்.

ஒரு மாதம் படுக்கையில் கிடந்து, நாய் படாத பாடு பட்டு எழுந்த பிறகு, தற்போது என் பிரார்த்தனை மிகவும் சுருங்கிவிட்டது.  சாதனைகள், புடலங்காய்கள், மன நிறைவு, மன மகிழ்வு இவற்றையெல்லாம் கடாசி விட்டு, “இயலாமை, முதுமை, தள்ளாமை, பிணி என்று படுக்கையில் விழுமுன், அடுத்தவர்களுக்கு சுமையாகு முன், இந்த உடலை உதறிவிட்டு, நின் திருவடிகளை நல்லபடியாக வந்தடைதல் வேண்டும்; வேறு ஒன்றுமே எனக்கு வேண்டாம்” என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.  நோய்களும், கஷ்டங்களும் மனிதனை எந்த அளவுக்கு பக்குவப் படுத்துகின்றன!

இறைவன் என் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கிறானா என்று பார்க்கலாம்.    

சூரியின் டைரி-53: மானாமதுரை

மானாமதுரை  இரயில்  நிலையத்தின்  புதிய  முகப்பு 
முதல் பிளாட்பாரத்தில் மழை கொட்டுகிறது 

முதல் பிளாட்பாரத்தின் கடைசியில்தான் 
டிக்கட் பரிசோதகர்களின் அறை  
தம்பிமார் பயின்ற 
ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி 
வைகை மேம்பாலத்திலிருந்து ஊருக்குள் நுழையாமல்  பைபாஸ் சாலை வழியே புதிய பேருந்து நிலையம் செல்லும் பாதை – அண்ணா சிலை 

புதர்தான் என்றாலும் வைகைக் கரையில் ஒரு அழகிய காட்சி 

வைகை ரயில் பாலமும், 
எங்கு பார்த்தாலும் மண்டிக் கிடக்கும் புதரும் 

வைகை சாலைப் பாலத்திலிருந்து ஒரு காட்சி 

மானாமதுரை கீழ்கரை – ஒரு காட்சி 
அருள்மிகு பூர்ண சக்ர  விநாயகர் கோவில்

அருள்மிகு  ஆதிபராசக்தி  திருக்கோவில்  
அருள்மிகு சாஸ்தா ஆலயம் 

மானாமதுரையின் முக்கிய கோவிலான அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சோமநாதர் திருக்கோவில் – வைகை ஆற்றங்கரையில் 

வைகை ஆற்றுத் தரைப்பாலம் – பெரும்பாலும் ஆற்றில் தண்ணீர் இல்லாதபடியால் இப்பாலம் வழியே எளிதில் அக்கறை செல்லலாம் 

வைகை சாலைப்பாலத்தில் வாகனங்கள் செல்கின்றன 
எனது பள்ளி இறுதித் தேர்வு முடியவும், இரயில்வேயில் பணிபுரிந்த என் தந்தைக்கு திருநெல்வேலியிலிருந்து, மானாமதுரைக்கு மாற்றலாகவும் சரியாக இருந்தது.  நான் விடுமுறையில் திருச்சியில் என் சித்தப்பா வீட்டிலிருந்தேன்.  வீடு மாற்றியதே எனக்குப் பின்னர்தான் தெரியும்.   1965  ஆண்டு ஜூன் மாதம் என்று நினைக்கிறேன்.  ஒருநாள் அப்பாவிடமிருந்து ஒற்றைவரிக் கடிதம் வந்தது. இரவு ராமேஸ்வரம் பாசெஞ்சரில் அவருடன் நான் மானாமதுரை   செல்லவேண்டும். இதுபோன்ற ஒற்றைவரிக் கடிதம் அவர் கோபத்தில் இருக்கிறார் என்பதை தெளிவாக்கியது. எனக்கு சித்தப்பாவைவிட்டு பிரிந்து செல்ல விருப்பமில்லை; சித்தப்பாவிற்கும் என்னை அனுப்ப மனமில்லை. இருப்பினும் வேறு வழியின்றி திருச்சி இரயில் நிலையம் சென்றோம். சித்தப்பா என்னிடம் சொன்னார்: அப்பா கேட்டால் சொல்லிவிடு துணிமணி எதையும் எடுத்து வரவில்லையென்று. சீப்பை ஒளித்து வைத்துக் கல்யாணத்தை நிறுத்துவதைப் போல். என்னைப் பார்த்ததும், ஏறி உள்ளே உட்கார் என்று ஒரு உறுமல் கட்டளை. நான் சப்தநாடியும் ஒடுங்க, அந்த ரயில் பெட்டியில் ஏறி காலியாக இருந்த ஒரு ஓரத்தில் அமர்ந்தேன். சித்தப்பா ஏதோ சொல்ல முயல, அவரை ஒரு கடி, அதோடு அவர் சரி. ரயில் புறப்பட்டது. மேலே லக்கேஜ் ரேக்கில் ஏறிப் படுத்துக் கொள்கிறாயா என்று கேட்டு, விரிப்பையும் விரித்துக் கொடுத்தார்.  நான் ஏறிப் படுத்தேன்.  சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டேன்.  இரவு  முழுவதும்  தந்தை டிக்கட் பரிசோதனை செய்யும் தன் பணியைப் பார்க்கப்  போய்விட்டார்.   
அதிகாலை மூன்று மணி அளவிருக்கும்.  தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி மானாமதுரை வருகிறது; இறங்கவேண்டும்; தயாராகு என்றார் தந்தை. விடியாத ஒரு வேளையில் மானாமதுரையில்  வந்திறங்கினேன்.  டிக்கட் பரிசோதகர்களின் பெட்டிகள் வைக்கும் அறையில், இரண்டு, மூன்று பெட்டிகளை இழுத்துப் போட்டு, படுத்துறங்கு; விடிந்தவுடன் எழுப்புகிறேன்; வீட்டிற்குச் செல்லலாம் என்றார் தந்தை.  உறங்கினேன்.  அவர் மீண்டும் என்னை எழுப்பியபோது, நன்றாக விடிந்திருந்தது.  பல் தேய்த்து, அருமையான காப்பி ஒன்றைப் பருகிவிட்டு, (அப்போதெல்லாம் மானாமதுரையில் இரயில்வே சிற்றுண்டியகம் இருந்தது; அங்கே சிறப்பான காப்பி கிடைத்தது), அப்பாவுடன் வீட்டை நோக்கி நடந்தேன்.
வைகை ஆறு மானாமதுரையை மேல் கரை, கீழ்கரை  என்று இரண்டாகப் பிரித்திருந்தது.  ரயில் நிலையம், எங்கள் வீடு போன்ற முக்கிய பலவும் மேல் கரைதான்.  கீழ் கரை ஞாயிறன்று அப்பாவுடன் சந்தையில் காய்கறி வாங்கச் செல்வது, பின்னர் கட்டப்பட்ட அமுது தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்க்கச் செல்வது,  நண்பர்களுடன் செல்லமுத்து கடையில் புரோட்டா சாப்பிடச் செல்வது  என்று மிகக் குறைந்த தொடர்புதான்.
மேல்கரையில் ரயில் நிலையத்துடன் ஊர் முடிகிறது.  அல்லது ரயில் நிலையத்திலிருந்துதான் ஊர் ஆரம்பமாகிறது.
பிரதான சாலையில் அப்பாவுடன் வீட்டை நோக்கி நடந்தேன். சரியான பட்டிக்காடு. நெல்லை மாநகருக்குப்பின், மானாமதுரை அவ்வாறு தோன்றியதில் வியப்பில்லை. அடுத்த ஐந்தாண்டுகளை அந்த ஊரில் எப்படிக் கழிக்கப் போகிறேன் என்று நினைக்கவே கஷ்டமாக இருந்தது.  பத்து நிமிட நடைக்குப்பின் ஒருவழியாக வீட்டை அடைந்தோம்.  ஒரு பழைய வீடு.
இப்படித்தான் மானாமதுரை வாழ்கை ஆரம்பித்தது.  1970-ஆம்  ஆண்டு அந்த ஊரை விட்டுக் கிளம்பி, காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் குடிபுகுந்தது வரை உள்ள வாழ்க்கையை தற்போது பதிவு செய்ய முடியாது. நான் பதிவு செய்யப்போவது 2011 அக்டோபரில் மீண்டும் மானாமதுரையைச் சென்று பார்த்தது பற்றித்தான்.  அதாவது நாற்பது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மானாமாதுரையைப் பார்த்தது பற்றி.
மதகுபட்டியிலிருந்து சிவகங்கை   சென்று, பின் அங்கிருந்து மானாமதுரை செல்ல திட்டம்.  ஆனால் நேரடியாக மானாமதுரை பேருந்தே கிடைக்க, நேராக மானாமதுரைக்கே    சீட்டு வாங்கினேன்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பயணத்திற்குப் பின் மானாமதுரை கீழ்கரை, வைகைப் பாலம், மேல்கரை என்று பேருந்து செல்ல, மேல்கரை அடைந்தவுடன் ஊருக்குள் செல்லாமல், பைபாஸ் சாலை வழி வெளியே சென்றது.  இது முதல் மாற்றம்.  புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்தின் மறுபகுதியில் புதிதாக முளைத்திருந்த சாலையில் இருந்தது.  அருகே இரண்டு பெரிய சினிமா தியேட்டர்கள், மற்றும் பல கடைகள் என்று ஊர் வளர்ச்சி பெற்றிருந்தது.
பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில் என்பதை முதலில் உணர்ந்தேன். அதன் பின் ஊருக்குள் நடந்தேன்.  பிரதான சாலையில் பெரிதான  மாற்றம் ஒன்றுமில்லை. தம்பிகள் பயின்ற ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி. சீனியப்பா என்ற பெயரில் பல நிறுவனங்கள் (சினிமா தியேட்டர் உட்பட).  நாங்கள் அங்கிருந்த காலத்தில் பெரிய மரக்கடை வைத்திருந்தார்கள்.  தற்போது நிறைய மரக்கடைகள் மற்றும் தியேட்டர்.  நான் சற்றும் எதிர்பாராத ஒன்று பெரிய குழந்தைகள் மையம் ஒன்று டோப்ளர் ஸ்கேன் வசதியுடன்!
அடுத்து நிறைய குட்டிக் குட்டி கோவில்கள்.  (படங்களைப் பதிவு செய்துள்ளேன்.)  நகரின் முக்கிய கோவிலான அருள்மிகு ஆனந்தவல்லி சமேத  சோமநாதர் திருக்கோவில்.  எதிரே வைகை ஆற்றின் தரைப்பாலம்.  கிட்டத்தட்ட தூர்ந்து போயிருந்தது.  கோவிலைத் தாண்டி சென்றபோது வைகை ஆற்றின் மேலுள்ள பெரிய பாலம்.  அதற்கு முன் அண்ணா சிலை.  பாலத்திலிருந்து பார்த்தபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  நாங்கள் வாழ்ந்த காலத்தில் வைகை ஆற்றுப் படுக்கை, மெரீனா பீச்சைப் போன்று வெள்ளைமணல் கொழிக்கும் எங்களது மாலைப் பொழுதை உவகையுடன் கழிக்கும் இடம்; குழந்தைகள் கொட்டமடிப்பது, விளையாடுவது;  தற்போது முற்றிலுமாக தூர்ந்து, புதர் மண்டியிருந்தது.  ஆறே சுருங்கிவிட்டதுபோன்ற உணர்வு.
நான் தட்டெழுத்து, சுருக்கெழுத்துப்  பயின்ற லக்ஷ்மி தட்டெழுத்துப்பள்ளி காணாமல் போயிருந்தது. புகுமுக வகுப்பில் இருமுறை தோற்று,  கல்லூரியில் பட்டப்படிப்பிற்கு இடம் கிடைக்காமல், அந்த ஆண்டை வீணாக்காமல் உருப்படியாக தட்டெழுத்து, சுருக்கெழுத்து வகுப்பில் சேர்ந்தேன். ஆனால் ஏதோ காலம் வீணாகி விடக்கூடாது என்று பொழுதுபோக்காக படித்த அவைதான் என் வாழ்வின் ஆதாரமாயின.  குடும்பம், பிள்ளைகுட்டி, அவர்களது படிப்பு, திருமணம் என்று அனைத்திற்குமே உதவியது அந்தப் படிப்புதான். இறுதியில் எனது சிறு சிறு கனவுகளை   நனவாக்கவும், எனக்கு ஓரளவு பெயரும் புகழும் கிடைக்கவும் அவையே ஆதாரமாயிருந்தன என்பதுதான் வாழ்க்கையின் வினோதம்.  

நண்பர்கள் யாரும் கண்ணில் படவில்லை.  தொடர்பே இல்லாமல் போயிருந்தது.

வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில், பிரதான சாலையில், குண்டு காதர் கடையில் அப்பா எங்களுக்கு நொறுக்குத்தீனி வாங்கி வருவார். அந்தக் கடை காணாமல் போயிருந்தது.  அதுபோல் காலையில் அருமையான, சுவையான தேநீர் வழங்கும் சைவப் பிள்ளை கடையும் காணாமல் போயிருந்தது.   

நாங்கள் கடைசியாகக் குடியிருந்த தெற்கு ரத வீதியிலுள்ள வீட்டில் முகப்பில் மட்டும் சிறிய மாற்றம்.  முகப்பில் கேம்ப் காட்டில் படுத்துக் கொண்டு புத்தகம் படிப்பது, வேடிக்கை பார்ப்பது, உறங்குவது என்று எவ்வளவு நாட்களை கழித்திருக்கிறேன்.  எதிரே இருந்த கிருஷ்ணா மெடிக்கல்ஸ் காணாமல் போயிருந்தது.  எங்களூர் பாராளுமன்ற உறுப்பினர் தா.கிருட்டிணன் அவர்களது கடை.  திறந்து வைக்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வந்திருந்தார். என் படுக்கையில் இருந்து பார்த்தால், கல்லாப் பெட்டியில் யார் என்று தெரியும்.  பல நாட்கள் எங்கள் எம்.பி. உட்கார்ந்திருப்பார்.  இளைஞர்களெல்லாம் சான்றிதழுக்காகப் படையெடுப்பர்.  பொறுமையாக ஒவ்வொருவருக்கும் தனது லெட்டர் பேடிலிருந்து ஒரு தாளைக் கிழித்துக் கொடுப்பார்.  அவர்கள் ஓடோடிச் சென்று டைப் அடித்து வாங்கி வருவர்.  அவரும் பொறுமையாக அனைவருக்கும் கையெழுத்திட்டுக் கொடுப்பார்.  பின்னாளில் சட்ட மன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் வளர்ந்தார். அதன் பின் பல்லாண்டு கழித்து,மதுரையில் அவர் கொலையுண்ட செய்தி  வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.
கடைசியாக மானாமதுரை ரயில் நிலையம்.  ஒருகாலத்தில் எப்போதும் ஜேஜே என்றிருக்கும்.  இராமேஸ்வரம், சென்னை, மதுரை, விருதுநகர் என்று நான்கு புறமும் ரயில் பாதைகள் பிரிந்து செல்லும் ஒரு முக்கிய ரயில் நிலையமாக விளங்கியது, காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட ரயில்கள். மண்டபம்-பாம்பன் இடையே தரைப் பாலம் வந்த பிறகு, ரயிலின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இன்று மிகக் குறைந்த ரயில் சேவைகளுடன் பரிதாபமாக் காட்சியளித்தது.  புதிய கட்டிடம், புதிய சிறந்த முகப்பு என்று எல்லாம் இருந்தும் பழைய சிறப்பில்லை.  நல்ல காப்பி கூட கிடைக்கவில்லை.  நாராயணன் என்று ஒருவர் புத்தகக் கடை வைத்திருந்தார். அங்கு நான் பல புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்.  கமுதக்குடியில் பாதிரித் தோட்டத்தில் இருந்து, ஆப்பிள் கொய்யா என்று விதையே இல்லாத, மிகச் சுவையான கொய்யா வரும். எல்லாம் மறைந்துவிட்டது.
ஒருவித ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினேன்.
பின் குறிப்பு: 
புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தியேட்டரில் காலை பதினோரு மணி காட்சி “எங்கேயும் எப்போதும்” என்ற படம் பார்த்தேன்.  படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர் மட்டுமே படம் பார்த்தோம்! தீபாவளிக்கு முந்திய சிலநாட்கள் என்பதால் கூட்டமே இல்லை.                       அது மட்டுமே இப்பயணத்தில் சற்று ஆறுதலான விஷயம்!      

சூரியின் டைரி-52: சித்தப்பா, சித்தப்பா!

நேற்று ஞாயிற்றுக்கிழமை. காலை ஆறு மணி அளவில் வீட்டை விட்டுக் கிளம்பி கோட்டையூர் இரயில் நிலையம் அடைந்தேன். திருச்சி செல்லும் இரயில் ஆறு மணி நாற்பத்தைந்து நிமிடத்திற்கு வந்தது.  அது எனக்கு மிகவும் பிடித்த இரயில். கூட்டமிருக்காது.  சௌகர்யமாக, சிறிதும் டென்ஷன் இல்லாமல், மனதையும், உடலையும் தளர்த்தி ஜன்னல் வழியே காலைப் பொழுதைக் கண்டு மகிழ்வது; ஊன்றிப் படிக்கவேண்டும் என்று வெகு நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்த புத்தகத்தைப் படிப்பது; எனது கேனன் கேமராவினால் இயற்கையை அள்ளுவது; சுடோக்குப் போடுவது; கொறிப்பது, பழைய நினைவுகளை அசைபோடுவது  என்று மனம் போனபடி ஒரு இரண்டு மணி நேரப் பொழுதைச் சுகமாகக் கழிப்பது –  இத்தனையும் வெறும் பதினான்கு ரூபாய்க்கு.(பேருந்துக் கட்டணம்: ரூபாய் இருபத்தொன்பது – முப்பத்துமூன்று!).

நேற்று நான் திருச்சி சென்றது என் பிரியமான சித்தப்பாவின் கருமாதியில் கலந்துகொள்ள. அவரது இறுதிக் காலத்தில் அவரைக் காணமுடியாமல் போனதும், அவரது உடலைக் கூட பார்க்க முடியாமல் போனதும் ஒரு சோகம்தான். கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த எதற்கும் கலங்காத, அசராத அவரது வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன். (இறுதிவரை பெரிய நோய்நொடி எதுவும் இருந்திருக்கவில்லை.)

என்னைப் பொறுத்த வரையில், சிறு வயதிலிருந்தே என் மேல் பேரன்பு கொண்டிருந்தார். பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் திருச்சி சென்று அவரோடிருப்பது ஒரு சுகமான அனுபவம். ஊரெல்லாம் சுற்றுவோம்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு விடுதியில் விதம் விதமான தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பார்.  சினிமாவிற்கு கூட்டிச் செல்வார். இனிதாக உரையாடுவார்.  ஒளிவு மறைவு இல்லாமல் என்னிடம் பல செய்திகளைச் சொல்வார்.  அந்த வயதில் இவற்றைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கமுடியும்? 


அவருக்கு ஒருவயது ஆனபோது அவரது தந்தையார் மறைந்தார்.  இரண்டு வயது ஆனபோது அன்னையார் காலமானார்.  கிட்டத்தட்ட ஒரு அனாதைபோல அவரும், எனது தந்தையாரும் (அவரைவிட ஐந்தாறு வயது பெரியவர்) குழந்தையே இல்லாத, பணக்காரப் பெரியம்மா வீட்டில் வளர்ந்து ஆளாகினர்.  கணவனை இழந்த அந்தப்பாட்டிதான் இவர்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கியது.  சித்தப்பா மேல் பாட்டிக்கு அளவு கடந்த பிரியம்.  அவர் பெறாத பிள்ளை சித்தப்பா.  சித்தப்பாவின் திருமணத்திற்குப் பல ஆண்டுகள் முன்னரே பாட்டி காலமானார்.  விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இவர்கள் அனைவரும் தங்களுக்குத்தான் வரப்போகிறது என்று எண்ணியிருந்த அத்தனை சொத்துக்களும், பாட்டியின் கணவர் வழி உறவினர்களுக்கு சட்டப்படி போய்ச்சேர்ந்தது.  

இருப்பினும் இரயில்வேயில் வேலை கிடைத்து, பணக்காரக் குடும்பத்தில், வசதி வாய்ப்புடன் திருமணம் ஆனது.  நன்றாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் இனிதாக இருந்திருக்க வேண்டிய தன் வாழ்க்கையைச் சிக்கலாக்கி, பிரச்சினை மேல் பிரச்சினைகள் உருவாக, தேவையில்லாத துன்பங்களை எல்லாம் எதிர்கொண்டார்.  எனது சித்தியின் மனம் நோகவைத்தார். அவருண்டு அவரது வேலையுண்டு என்று இருந்திருந்தாலே ஓரளவு வசதியாக வாழ்ந்திருக்கலாம்.  வட்டிக்குக் கொடுத்து வாங்குகிறேன், சைடு பிசினஸ் செய்கிறேன் என்று கண்டவர்களையும் நம்பி பெரிதும் நஷ்டப் பட்டார். தவறான ஆட்களுக்கெல்லாம் ஜாமீன் கையெழுத்துப் போட்டார்; அதனாலும் நிறையத் துன்பம். பின்னர் அவரே வட்டிக்கு வாங்கும் நிலை வந்தது, அதுவும் ஈட்டிக்காரர்களிடம்.  அவர்களிடம் சிக்கிக் கொண்டு அவர் பட்டபாட்டை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.  வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்வார்கள்.  அக்கம் பக்கம் எல்லாம் மூக்கு வியர்க்கும்.  சித்தி ஒரு சிறிய ஜாமீன் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.  அவர்களது நிலபுலம் எல்லாவற்றையும் அழித்து, அவர்களது நகைகளை அழித்து, அதன் பிறகு இந்த ஈட்டிக்காரர்களிடம் சிக்கிக் கொண்டது.

ஒரு முறை நான் சென்றிருந்தபோது, அவரிடம் கையில் பணம் இல்லை.  ஒரு எட்டிக்காரரிடம் கூட்டிப் போனார்.  அவரிடம்  நூறு ரூபாய் கடன் வாங்கினார்.  என் பொருட்டு என்றுதான் சொல்லவேண்டும். பத்து ரூபாய் மாத வட்டியைக் கழித்துக் கொண்டு, தொண்ணூறு ரூபாயைக் கொடுத்தான் அந்த ஈட்டிக்காரன்.  பிராமிசரி நோட்டில் மொட்டைக் கையெழுத்து வாங்கிக்கொண்டான்.  சுமார் இரண்டு வருடம் மாதாமாதம் பத்து ரூபாய் வீதம் அவனே அலுவலகம் தேடி வந்து வட்டியை வசூலித்துச் சென்றான் (இருநூற்று நாற்பது ரூபாய்!). சித்தப்பா கடனையடைக்க எந்த முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.  பின்னர் வட்டியையும் கொடுக்கவில்லை.  இறுதியில் நீதிமன்றத்தில் இக்கடன் பொருட்டு, அவரது சம்பளம்  ‘அட்டாச்’  செய்யப்பட்டு, அந்த வழியில் கிட்டத்தட்ட இரண்டாயிரம்  வரை செலவு.  தொண்ணூறு ரூபாய்க் கடன்! இது ஒரு சிறிய உதாரணம்.

இறுதியில் எல்லாவற்றிலிருந்தும் சிரமப்பட்டு தலையைக் கழற்றிக்கொண்டார். ஆனால் பின்னர் இது அவரது குழந்தைகளின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. சித்தியும் புற்றுநோய் கண்டு காலமானார். அங்கிருந்த இதுபோன்ற கொடுமையான சூழலைக் காண விரும்பாது, அங்கே போவதை படிப்படியாக நிறுத்திக் கொண்டேன்.  அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன்.  அவர்களுக்கு அன்பும், ஆதரவும் தேவைப்பட்ட தருணத்தில், சுயநலமாக, நான் ஒதுங்கிவிட்டேன்.  குற்ற உணர்வு கொல்கிறது.  எனது முதிய நண்பர் ஒருவர் கூறுவார்: “I  have  no  regrets  in  life”.  ஆனால் எனது வாழ்க்கையோ FULL OF REGRETS; OF THINGS DONE AND NOT  DONE.


வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களால், எச்சரிக்கை உணர்வுடன்  சில கடமைகளைச் சிறப்பாகச் செய்ய முடிந்தது.  அப்போதெல்லாம் பெருமையுடன் என்னைப் பாராட்டுவார்.  எவ்வளவு பொறுப்புணர்வுடன் வாழ்கிறான் என்று என்னைப் பற்றி பலரிடமும் சொல்லிப் பெருமைபடுவார். 

நேற்று அவரது பேரப்பிள்ளைகளைப் பார்த்தபோது எனது மன வருத்தம் சிறிது குறைந்தது.   ஒரு பேரன் பொறியியல் பட்டம் பெற்று, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து, தற்போது அமெரிக்காவில்.  இரண்டாவது பேரன் பொறியியல் பட்டப் படிப்பை முடிக்கும் தருவாயில்.  இரண்டு பேத்திகள் நன்றாகப் படித்து, நல்ல வேலையில்.  இன்னொரு பேத்தி பட்டப்படிப்பில்.  அவரது ஒரே மகனும் இரயில்வேயில் ஓரளவு நல்ல நிலையில்.  சித்தப்பாவின் ஆன்மா ஓரளவு சாந்தி அடைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  கடைசிக் காலத்தில் என்னைப் பார்க்க வேண்டும் என்று என் பெயரை அடிக்கடிக் கூறிக்கொண்டிருந்தார் என்று அங்கிருந்தவர்கள் சொன்னபோது என் குற்ற உணர்வு இன்னும் அதிகமாகியது.  என்ன செய்ய?  எல்லாம் முடிந்துவிட்டது.

இதமான அவரது அன்பு என்றும் மறக்க இயலாதது.  அவரது வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டவை: 

செய்யக் கூடாதவை: 

1. வட்டிக்குக் கடன் வாங்குவது, அதிலும் கந்து வட்டிக்கு.
2. யாருக்கும் எந்த நிலையிலும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது.
3. மனைவியின் நகைகளை எக்காரணம் கொண்டும் எடுக்கக்கூடாது.
4. கோளாறான ஆட்களை விட்டு விலகியிருப்பது.
5. சீட்டாட்டம் போன்ற எந்தச் சூதாட்டத்திலும் ஈடுபடாமல் இருப்பது.

என் அன்பான சித்தப்பா என் கல் மனதை மன்னித்திருப்பார் என்று நம்புகிறேன்.          

சூரியின் டைரி-51: மேலூரில் சந்திப்போம்

(இடமிருந்து வலம் – நிற்பது) தம்பிகள்: நெல்லை, சந்துரு, விசு, சோமாஸ்.
(அமர்ந்திருப்பது – நான், அம்மா, அப்பா,  சித்தப்பா) 

நேற்று காலை சீக்கிரமே எழுந்து உற்சாகத்துடன் திருப்போரூர் புறப்பட்டேன்.  தம்பிமார் நெல்லையப்பனையும், விசுவையும் சந்திக்கப் போகிறோம், அவர்களுடன் நாள் முழுவதையும் கழிக்கப்போகிறோம் என்று ஒரே குஷி.  நாங்கள் மூவரும் சேர்ந்தால் ஒரே அரட்டையும், கும்மாளமும், சிரிப்பும்தான்.  அதிலும் வீட்டார் யாருமின்றி மூவரும் தனியே என்றால் கேட்கவே வேண்டாம்.

நெல்லையின் வீட்டை நோக்கி நடந்தேன்.  எதிரிலேயே நெல்லையும், விசுவும் வர அப்படியே காலாற நடந்தோம்.  திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோவிலில் ஒரே கூட்டம்.  புரட்டாசி மாதப் பிறப்பு என்பதாலேயோ என்னவோ. அருகில் ஒரு சிறிய மெஸ்.  அங்கே இட்லியும், கல்தோசையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு வீடு சென்றோம்.  பேசிக்கொண்டே இருந்தோம்.  இடையிடையே கொறித்தல் வேறு.  அப்புறம் நான் தகவிறக்கம் செய்து, குறுந்தகட்டில் சேமித்து  வைத்திருந்த, நெல்லை விரும்பிவாசிக்கக் கூடிய பல சேதிகளை, அவன் கணினியில் பதிவு செய்தேன்.

 மதிய உணவை முடித்துவிட்டு, அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது, அந்த செய்தி வந்தது.  திருச்சியில் எங்கள் அன்பிற்குரிய சித்தப்பா, என் தந்தையாரின் ஒரே தம்பி, காலமானார் என்பது.  சில நாட்களுக்கு முன் அவரது மகன், திருச்சி விசு, நீண்ட நாட்களுக்குப் பிறகு, தொலைபேசியில் பேசினான்.  அப்போது அவன் சித்தப்பா முடியாமல் இருப்பதாகவும், என்னை பார்க்க வேண்டும் என்று என் பெயரை அடிக்கடி சொல்வதாகவும் கூறினான்.  இருபத்து மூன்றாம் தேதி நான் திருச்சி வழியே ஊர் திரும்ப டிக்கட் பதிவு செய்திருந்தேன்.  அவனிடம் அதைக் கூறி அன்று மதியம் சித்தப்பாவைப் பார்க்கலாம் என்று கூறியிருந்தேன்.  அதற்குள் இப்படி ஆகும் என்று எண்ணியிருக்கவில்லை.  மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கடந்த ஆறுமாத காலமாகவே அவரைப் பார்க்க வேண்டும் என்று நாட்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்துவிட்டேன்.  வாழ்க்கையில் இதுபோல் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று பலமுறை பல முக்கியமானவற்றை கோட்டை விட்டிருக்கிறேன் என்பதை நினைக்கையில் வேதனையாக இருக்கிறது. 

என் மேல் மிகவும் அன்பு செலுத்திய, என்னைப் பற்றி உயர்வாக எண்ணிய ஓரிரு ஜீவன்களில் ஒன்று மறைந்துவிட்டது.  என்னால் அவரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது, அவரது கடைசி ஆசையைக்கூட பூர்த்தி செய்யமுடியாமல் போய்விட்டது. அடுத்து உடனே திருச்சி சென்று, அவரது உடலையாவது பார்க்க சந்தர்ப்ப சூழ்நிலை சரியாக இல்லை.  தற்செயலாக எனது கைபேசியைப் பார்த்தபோதுதான் தெரிந்தது திருச்சி விசு அன்று காலை எட்டு மணி அளவில் சித்தப்பா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். 

நாங்கள் மூவருமே திருச்சி செல்லும் நிலையில் இல்லை.  தம்பி திருச்சி விசு தொலைபேசியில் பேசியபோது, அதை வருத்தத்துடன் அவனிடம் தெரிவித்துவிட்டு, மூவரும் கருமாதியில் கலந்துகொள்கிறோம் என்று கூறினோம்.  நல்லவேளை, என் தங்கை காந்திமதி உடனே திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்று விட்டாள் என்ற சேதி கிடைத்தது.  எங்கள் குடும்பத்தின் சார்பில் ஒருவராது கலந்துகொள்ள முடிந்ததே என்று ஆறுதலாக இருந்தது.

நேற்றிரவு அவரைப் பற்றிய நினைவுகள் மனதில் ஓடின.  அவருடன் நான் அதிக நாட்கள் கழித்தது என்னுடைய பதினோராம் வகுப்பு கோடை விடுமுறையில்தான்.  கிட்டத்தட்ட ஒரு மாதம் அவருடன் இருந்தேன்.  இருவரும் சினிமா பார்ப்பது, தினமும் ஒரு ஹோட்டலில் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது  என்று ஒரே ஜாலியாக பொழுதைக் கழித்தோம்.  இத்தனைக்கும் அவர் அப்போது பணச்சிக்கல்களில் மாட்டியிருந்தார்.  எனக்காக கடன் வாங்கியாவது, என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினார்.  அன்றைய நாளில் அதன் தாக்கம் எனக்கு முழுமையாகப் புரிந்திருக்கவில்லை.  சித்தப்பா என்பதைவிட அவர் ஒரு இனிய நண்பராகவே இருந்தார்.  அதன்பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பார்ப்பது குறைந்தது.

சென்ற ஆண்டு நெல்லை, விசு மற்றும் நான் அவரை திருச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரச் செய்தோம்.  சித்தப்பா, என் அப்பா எல்லோருமே முன்னாள் இரயில்வே ஊழியர்கள். தம்பி திருச்சி விசு தற்போது ரயில்வே ஊழியன். அதனாலோ என்னவோ எங்களுக்கு ரயில்கள், ரயில் நிலையங்கள் மீது ஒரு ஒட்டுறவு இன்றும் இருக்கிறது.   அவர்கள் வீடு ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்ததால் சிரமமில்லாமல் அவர் ரயில் நிலையத்திற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எங்களுடன் மகிழ்ச்சியுடன் கழித்தார். அப்போது நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.  அவற்றில் சிலவற்றை எங்கே பதிவு செய்கிறேன்.        

மேலும் என் தந்தையாரின் அறுபதாவது பிறந்த நாளை மிக, மிக எளிமையாக (அடுத்த வீட்டுக்காரருக்கே தெரியாத அளவு) ஓசூரில்  நடத்தினோம்.  (அப்போது என் தந்தையார் என் பெரிய தம்பி, சோமாசுடன் ஓசூரில் இருந்தார்).  அந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட ஒரே உறவினர் சித்தப்பாதான்.  அப்போது ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்ட படத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.

இனி அவரை எப்போது சந்திக்கப் போகிறேன்? எனக்கு தற்போது அறுபத்து இரண்டு வயது.  உடல் முழுக்க நோய்கள்.  இன்னும் எனக்கு எவ்வளவு நாட்கள் இருக்கிறது என்று தெரியவில்லை.  எப்படியிருந்தாலும் அதிகமாய் இருக்க வாய்ப்பில்லை.  “மேலூரில் சந்திப்போம், சித்தப்பா” என்று மனதிற்குள் கூறிக்கொண்டேன். அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.   

சூரியின் டைரி-50: "சாருமுகம்"

நேற்று திடீரென என் பால்ய கால நண்பன் ஆறுமுகத்தின் நினைவு வந்தது.

நெல்லை டவுணில் (நெல்லையில் ‘டவுன்’ என்று எழுதுவதில்லை.   மூன்று சுழி ‘ண” தான் பயன்படுத்துவார்கள்.) அம்மன் சன்னதி நேராக வந்து கீழப் புதுத்தெருவில் மோதும்  இடம்தான் எங்கள் வீடு.  இடது பக்க எதிர் வரிசையில் ஆறுமுகத்தின் வீடு.  அப்போது எனக்கு பல நண்பர்கள் இருந்தபோதும் அவன்தான் மிக நெருக்கம். புத்தகங்கள் மீதிருந்த ஈடுபாடு இதற்கு முக்கிய காரணம். தவிர,  இரண்டு பேருக்கும் எழுதவேண்டும் என்ற ஆசையும்  உண்டு.  

நான் “அமுதம்” என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழைத் துவங்கினேன்.  அவன் அதில் முழு மூச்சுடன் ஒத்துழைத்தான். அப்போது நான் மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு  படித்துக் கொண்டிருந்தேன்.  எங்கள் பள்ளி பிரச்சினையில் சிக்கி, அரசு மானியம் நின்று, ஆசிரியர்களுக்கு சம்பளமும் நிற்க, பெரும்பாலான ஆசிரியர்கள்  வேலையைவிட்டு விலக, மாணவர்களும் வேறு பள்ளிகளுக்குச் செல்ல, என்னைப்போல் ஒரு சிலர் மட்டும் பள்ளியில் வகுப்புகள் சரியாக நடைபெறாமல், பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தோம்.  கையெழுத்து இதழ்கள் நடத்துவது போன்ற பொழுதுபோக்குகளுக்கு பள்ளியில் நிறைய அவகாசம் கிடைத்தது.   ஆனால் ஆறுமுகமோ நகரில் நல்ல பள்ளிகளில் ஒன்றான, சாஃப்டர் உயர்நிலைப்பள்ளியில் ஏழாவது  படித்துக் கொண்டிருந்தான். அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கொலை செய்யப்பட சமயம் அது (நவம்பர் 1963).  அதைப் பற்றியும், “கார் ஒட்டி வந்தது யார்?” என்ற சிறுகதையும் வேறு சில துணுக்குகளும் நான் எழுதினேன்.  அவன் அவன் பங்கிற்கு துக்கடாக்களாக நிறைய எழுதினான், “சாருமுகம்” என்ற பெயரில். (அவனது இனிஷியல் ‘S’) .  எங்கள் வகுப்பிலும், அவன் வகுப்பிலும் இதழைப் படிக்கக் கொடுப்போம். இரண்டு மூன்று இதழோடு “அமுதம்” நின்றுபோனது. காரணம் நினைவில் இல்லை. 

பதினோராம் வகுப்பிற்கு (அப்போது பள்ளியிறுதி வகுப்பு – SSLC) அவன் படித்த பள்ளியிலேயே நானும் படிக்கச் சென்றேன். அப்போது எங்கள் நட்பு இன்னும் நெருக்கமானது. அவன் வாங்கும் புத்தகங்களை எனக்குப் படிக்கக் கொடுப்பான். நானும் கொடுப்பேன். புத்தகங்கள் பற்றி கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும். ஆனால் அந்த ஆண்டு கோடை விடுமுறையிலேயே என் அப்பாவிற்கு மாற்றலாகி நான் மானாமதுரை சென்றுவிட்டேன்.  வருடம் ஒரு முறை நெல்லை செல்லும்போது அவனைப் பார்ப்பேன்.  அதன் பிறகு தொடர்பு படிப்படியாகக் குறைந்துபோனது. திடீர் திடீரென்று என்  வாழ்வில் வந்து குதிப்பான், காணாமல் போவான்.  

நான் காரைக்குடி வந்து, அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம் ஒரு நாள், எப்படியோ என் முகவரியைக் கண்டுபிடித்து எனக்கு கடிதம் எழுதினான்.  அதில் நினைவில் இருக்கும் ஒரு வரி: “என் இலக்கிய தாகத்தைத் தூண்டியவனல்லவா நீ!” நான் உடனே பதில் எழுதினேன்.  ஆனால் அவன் அதன் பிறகு தொடரவில்லை. 

பல ஆண்டுகள் கழித்து மதுரையில் அரசு ஊழியனாக மனைவி, மகளுடன் அரசு குடியிருப்பில் இருப்பதாக எழுதியிருந்தான்.  ஒருநாள் அதிகாலை அவன் வீட்டிற்குச் சென்று பார்த்தேன்.  அது ஒரு வேலை நாளாக இருந்தபடியால், நான் அதிக நேரம் தங்கவில்லை. ஒரு காப்பி குடித்துவிட்டுக் கிளம்பிவிட்டேன்.  அதன் பிறகு ஒரீரு கடிதப் பரிமாற்றம். அப்புறம் முற்றிலுமாக நின்றுபோனது.

நான்கைந்து வருடங்களுக்கு முன் எனக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.  பேசியது ஆறுமுகத்தின் மகள். எனக்கு ஒரே ஆச்சரியம். எனது எண் எப்படிக் கிடைத்தது என்று. திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் இருப்பதாகக் கூறினாள்.  மதுரையில் நான் பார்த்த சின்னப்பெண் பெரியவளாகி, திருமணமாகி அமெரிக்காவில்! காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்று எண்ணிக்கொண்டேன்.  அவளது உறவினர் ஒருவர் எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு முயல்வதாகவும், நெல்லையில் ஒரு அரசியல்வாதி இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தால், காரைக்குடியில் உள்ள ஒரு ஆடிட்டர் மூலம் வேலைவாங்கித் தருவதாகச் சொன்னாராம். கொடுக்கலாமா என்று என்னைக் கேட்டாள்.   கொடுக்க வேண்டாம், யாரையும் நம்பவேண்டாம், எனக்குத் தெரிந்தவரை அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று கூறினேன்.  அப்போது அவள் ‘கேஷுவலாக’  “மாமா, உங்களுக்குத் தெரியுமா, அப்பா இப்போது இல்லை என்று கூற, நான் திகைத்துப் போனேன்.  எனக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.  “என்னம்மா, சொல்கிறாய்?” என்று கேட்டேன்.  ஒரு சில வருடங்களுக்கு முன், அவளது திருமணம் பேசி முடித்திருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஒருநாள் இரவில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, அன்றே ஆறுமுகம் இறந்துவிட்டான்.  என்னைவிட, இரண்டு மூன்று வயது சிறியவன்.  என்னால் நம்பவே முடியவில்லை.  எனது வருத்தத்தை அவளிடம் தெரிவித்தேன்.  

அவனது நிழற்படமோ, அவன் எழுதிய கடிதங்களோ எதுவுமே என்னிடமில்லை. நினைத்தால் வருத்தமாக இருந்தது.  என்னுடைய இலக்கிய ஆர்வத்தை வளர்த்தவன் அவன் என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன். அதன் பிறகு அவனை நான் மறந்துவிட்டேன்.  ஏனோ நேற்று அதிகாலை அவனது நினவு வந்தது.  என் வாழ்க்கையில் என்னுடன் பயணித்தவர்களில் அவனும் ஒரு முக்கியமானவன் என்று நினைக்கிறேன்.  

சூரியின் டைரி-49: காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 ஐந்தாம் நாள்

பேராசிரியை  ஆவுடையம்மாள்  தயாளனின்
வினாடி-வினா  நிகழ்ச்சி

போட்டிக் கட்டுரைகளை திருத்தும்
பேராசிரியர் பழனி ராகுலதாசன்

நண்பர்கள் இராமகிருஷ்ணனும்,
ஸ்ரீவித்யாராஜகோபாலனும்

வேதாத்திரி மகரிஷி புத்தக ஸ்டாலில்
நண்பர் செல்வராஜ் மற்ற அன்பர்களுடன்

என்னைக்  கவர்ந்த இன்னொரு ஸ்டால்

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களது
நூல்களும், வீடியோ டிவிடிகளும்

ஆங்கில நூல்கள் நிறைந்ததும், இருப்பதிலேயே பெரியதுமான  
லியோ பதிப்பக ஸ்டால்

சத்ய சாய் பாபா நூல்கள்

என் மனத்தைக் கவர்ந்த காலச்சுவடு ஸ்டால் – பல கோணங்களில்

நாதம் கீதம் பதிப்பகத்தின் ஸ்டால்
நேற்று  (பிப்ரவரி 15 , 2011)  மாலை ஐந்து மணி அளவில் காரைக்குடி கம்பன் மணி மண்டபம் சென்றேன், புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ள.  முகப்பில் பேராசிரியர் மு.பழனி ராகுலதாசன் அவர்களையும், பேராசிரியை ஆவுடையம்மல் தயாளன் அவர்களையும் பார்த்தேன். என்னைப் பார்த்ததும், உங்களுக்கு நூறு வயசு, உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம் என்றனர்.  (யாரைப் பார்த்தாலும் இதே போல் சொல்கின்றனர், பொருள்தான் விளங்கவில்லை எனக்கு). பேராசிரியர் ராகுலதாசன் அவர்கள் பதிப்பித்து வந்த ஒரு நான்கு-பக்க மாத இதழ், ‘பாரதி ஞானம்’  எனக்கு மிகவும் பிடித்தது.  பின்னர் அது பல்வேறு காரணங்களால் நின்று போய்விட்டது. 
பேராசிரியை ஆவுடையம்மல் தயாளன்  பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தார்.  ஒன்பது ஆண்டுகளாக இந்தப் பொறுப்பு அவர்களிடம் உள்ளது.  ஒவ்வொரு சரியான பதிலுக்கும் அங்கேயே ஒரு நல்ல புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.  (படம் மேலே). 
தம்பி நெல்லையப்பனுக்காக கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைத் தொகுப்பு, கு.அழகிரிசாமியின் சிறுகதைத்தொகுப்பு, லா.ச.ராமாமிருதத்தின் சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றைத் தேடினேன்.  எங்குமே கிடைக்கவில்லை. தமிழில் சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை சேர்த்துக் கொண்டிருந்தான்;  அவனிடம் ஏறகனவ பல நல்ல சிறுகதைத் தொகுப்புகள் இருப்பதை நான் அறிவேன்.  இறுதியில் அவனுக்காக முத்துக்கள் பத்து வரிசையில் ஆ.மாதவனின் பத்து சிறுகதைகள், எம்.வி.வெங்கட்ராமின் பத்து சிறுகதைகள்   ஆகிய இரண்டு நூல்களையும் வாங்கினேன்.  (ஒவ்வொன்றும் ரூபாய் ஐம்பது; தள்ளுபடி போக ரூபாய் நாற்பத்தைந்து).  (அம்ருதா பதிப்பக வெளியீடு – கதைகளைத் தேர்வு செய்தது:  திருமதி திலகவதி ஐ.பி.எஸ்.).
இந்தி, ஆங்கிலத் திரைப்படங்கள் மற்றும் டாக்குமெண்டரிகள் கடையில் ஆங்கில இலக்கியம் படித்த என் மகளுக்காக   சர் லாரன்ஸ்  ஒலிவியர் இயக்கிய ஷேக்ஸ்பியரின் ‘ஹேம்லட்’,  ‘ஜூலியஸ் சீசர்’,  ரிச்சர்ட் பர்ட்டன், எலிசபெத் டைலர் மற்றும் ரெக்ஸ் ஹாரிசன் நடித்த ‘கிளியோபாத்ரா’,  மற்றும் ‘ஜோன் ஆஃப்   ஆர்க்’  டிவிடிகள் வாங்கினேன்.  ஒவ்வொன்றும் தள்ளுபடி போக ரூபாய்  ஐம்பத்தைந்து.  இந்தியில் குரு தத், ரித்விக் கடாக் இயக்கிய மிகச் சிறந்த திரைப்படங்கள், சத்யஜித் ரேயின் வங்காள மொழித் திரைப்படங்கள், அற்புதமான அறிவியல், சரித்திர டாக்குமெண்டரிகள் அந்தக் கடையில் இருந்தன.  சத்யஜித் ரேயின் ‘தி அப்பு த்ரைலாஜியும்’  (The Apu Trilogy – Pather Panjali , Aparajito and Apur Sansar), ‘The Gods Must be Crazy ‘  முதல் பாகமும் வாங்கினேன்.
பிப்ரவரி மாத  காலச்சுவடும், உயிர்மையும் வாங்கினேன்.
சுற்றிவருகையில் நண்பர் ஸ்ரீவித்யாராஜகோபாலன் அவர்களைப் பார்த்தேன்.  முன்தலை வழித்து, பின் ஜடை வளர்த்து, ஐதீக பிராம்மணராகக்  காட்சியளித்தார். எங்களது அலுவலகத்தில் இணை இயக்குனராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.  புத்தகங்களின் காதலர்.  அவரது சொந்த நூலகம் காரைக்குடியில் பெயர் பெற்றது.  இந்து ஆங்கில நாளிதழிலும், தினமணியிலும் அதைப் பற்றிய கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த புத்தகத் திருவிழாக் குழுவின் துணைத் தலைவர்.

அடுத்து நண்பர் திரு மு.இராமகிருஷ்ணன்  அவர்களைப் பார்த்தேன்.  எங்கள் அலுவலகத்தில் துணை இயக்குனராகப் பணிபுரிபவர்.  அவரும் ஆரம்ப காலங்களில் புத்தகத் திருவிழாவை நடத்த நாங்கள் பட்ட சிரமங்களை நினைவு கூர்ந்தார்.        

சூரியின் டைரி-48: காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 இரண்டாம் நாள்

நேற்று (12 .2 .11) கோவில்களுக்குச் சென்றுவிட்டு, கம்பன் மணி மண்டபம் போய்ச் சேரும்போது மதியம் பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது.  முகப்பில் மாணவர்களுக்கான போட்டி நடத்திவிட்டு  அமர்ந்திருந்த நாச்சியப்பன் தம்பதிகளைப் பார்த்தேன்.  அவர்கள் என்னை அன்புடன் வரவேற்றனர்.  திருமதி தேவி நாச்சியப்பன், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் புதல்வி.    சிறிது நேரம் அவர்களிடம் அளவளாவிவிட்டு, உள்ளே சென்றேன்.  இந்த வருடம் புதிதாக காலச்சுவடு, உயிர்மை மற்றும் தினமணி ஸ்டால்களைக்  கண்டேன்.  மிகச் சிறப்பாக இருந்தது மதுரை மீனாக்ஷி பதிப்பகத்தாரின் ஸ்டால். அற்புதமான பல புத்தகங்கள். சுந்தர ராமசாமி அவர்களது ஜே.ஜே.சில குறிப்புகள் மற்றும் அவர்களது அனைத்துப் படைப்புகளுமே இருந்தன.   ஆனால் புத்தகங்களின் விலைதான் அச்சுறுத்துவதாக இருந்தது.
என்னுடைய பிரச்சினை என்னவென்றால் ஏற்கனவே வாங்கிவைத்திருக்கும் புத்தகங்களை நான் குடியிருக்கும் வாடகை வீட்டில் வைக்க இடமில்லாது, புளி மூட்டை போன்று மூட்டை கட்டி பரண்மேல் போட்டிருந்தேன்.  அவற்றை எடுப்பதோ, படிப்பதோ அல்லது எந்த மூட்டையில் எந்தப் புத்தகம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதோ மிக மிகச் சிரமம்.  அடுத்து புத்தகம் படிக்கும் போதே என்னையும் அறியாமல் கண்கள் சொருக, தூக்கம் வருகிறது.  முதுமையின் தாக்கத்தை உணர்கிறேன்.  எல்லாவற்றிற்கும் மேலாக ஓய்வு பெற்றபின், மாத வருமானம் குறைய, விலைவாசியும், செலவுகளும் கன்னாபின்னாவென்று எகிற, ஒவ்வொரு பைசாவையும் எண்ணி செலவழிக்க வேண்டிய நிலை. என் போன்ற புத்தகப் பிரியர்களுக்கு இவை பெரிய தண்டனைதாம்.  இனி  புத்தகம் வாங்குவதென்றால் பழைய புத்தகக் கடைகளைத்தான் நாடவேண்டும் போலிருக்கிறது.
எனினும் வெறும் கையேடு திரும்ப மனமில்லாது காலச்சுவடு கடையில் பழைய இதழ்கள் பத்து ரூபாய் வீதம் ஆறு இதழ்கள் வாங்கினேன்.  அதேபோல் உயிர்மை கடையில் ஒரு பழைய இதழ் மட்டுமே இருந்தது.  அவர்கள் ஆண்டு வாரியாக  பைண்ட் செய்து வைத்திருந்த பழைய இதழ்களின் தொகுப்பு ஒன்று இரு நூறு ரூபாய்.  பின்னால் பார்த்துக் கொள்வோம் என்று விட்டுவிட்டேன்.
மணிவாசகர் பதிப்பகம் ஸ்டாலில் முனைவர் வெற்றி மெய்யப்பன் அவர்களது திருவுருவப்படம் என்னை வரவேற்றது.  காரைக்குடியில் முதல்முதலாக புத்தகத் திருவிழா நடத்த பிரயத்தனப் பட்டபோது அமைப்புக் குழுவின் தலைவர் பொறுப்பேற்று, முழு ஆதரவையும் நல்கி, மற்றும் பல வகைகளிலும்  பேருதவி புரிந்த அவரை அன்போடும், நன்றி உணர்வோடும் நினைத்துப் பார்த்தேன்.  எல்லாவற்றிற்கும் மேலாக அவரது செல்வாக்கும், சொல்வாக்கும் இல்லாவிடில் கம்பன் மண்டபம் கிடைத்திருக்காது.  மணிவாசகர் பதிப்பகத்தில் அய்க்கண் அவர்களது நான்கு சிறுகதைத் தொகுப்புகளைப் பார்த்தேன்.  ஒரு தொகுப்பு ரூபாய் எழுபத்தைந்து.  திருவிழா முடிவதற்குள் முன்னூறு ரூபாய்க்கு நான்கு தொகுதிகளையும் ரூபாய் முன்னூறு கொடுத்து வாங்கிவிடுவது என்று எண்ணிக் கொண்டேன்.
ஸ்ரீ இராமகிருஷ்ணா மடம் ஸ்டாலில் திருமதி காயத்திரி வெங்கடகிருஷ்ணன் அவர்களைப் பார்த்தேன்.  அவர்களும் என்னை அன்போடு வரவேற்றார்கள்.  அவரது கணவர் சிதம்பரத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் கடையைப் பார்த்துக் கொண்டு அங்கே இருப்பதாகக் கூறினார்.  தற்போது தமிழ்நாட்டில் எல்லா முக்கிய ஊர்களிலுமே புத்தகத் திருவிழா நடத்துவது என்பது வழக்கமாகிவிட்டது.  அதனால் பல சமயங்களில் ஒரே தேதிகளில் இரண்டு ஊர்களில் புத்தகத் திருவிழா நடைபெறும் நிலை.  அங்கே ஒரு பக்திப் பாடல் டிவிடி மட்டும் என்பது ரூபாய்க்கு வாங்கினேன்.  என்னிடம் அநேகமாக இராமகிருஷ்ணா மடத்தின் முக்கிய பதிப்புகள் அனைத்துமே இருக்கிறது.
அடுத்து தமிழ்நாடு அறிவியல் பேரவை ஸ்டாலில் நண்பர், முனைவர் கே.ரகுபதி அவர்களைப் பார்த்தேன்.  கருத்து ரீதியாக அவர் இடதுசாரி, இறை நம்பிக்கை இல்லாதவர்; நானோ ஒரு ஆன்மீகவாதி.  எனினும் என்னிடம் அவர் மிகவும் அன்பும், மரியாதையும் காட்டுவார்.  அங்கே துளிர் இதழ் ஒன்று மட்டும் ஐந்து ரூபாய்க்கு வாங்கினேன்.
அடுத்து ஒரு ஸ்டாலில் உடல் நலம் பேண பல   ‘சார்ட்டுகள்’, ஒவ்வொன்றும் ஒன்பது ரூபாய் விலையில் வைத்திருந்தார்கள்.  பழங்களின் சத்து மதிப்பீட்டுப் பட்டியல், காய்கறிகளின் சத்துப் பட்டியல், கீரைகளின் சத்துப் பட்டியல், நீரிழிவு நோய்க்கான உணவு முறைகள்  என்று மொத்தம் ஐந்து பட்டியல்கள் ரூபாய் நாற்பத்து ஐந்திற்கு வாங்கினேன்.  இதற்கிடையில் நண்பர், கவிஞர் ஜனநேசன் வந்து அன்புடன் வரவேற்றார்.
இன்னொரு ஸ்டாலில் ஆங்கிலப் படங்களின் டிவிடிகள் ஒரு அற்புதமான தொகுப்பு.  அவர்களின் பட்டியல் இல்லை.  பொறுமையுடன் ஒவ்வொரு டிவிடியாகப் புரட்டிப் பார்க்க என்னால் முடியவில்லை.  சரி, பின்னால் பார்த்துக் கொள்வோம் என்று நகர்ந்துவிட்டேன்.

மற்றபடி நிறைய குழந்தைகளுக்கான நூல்கள், தமிழ் சா ஃ ட்வேர், டிவிடிக்கள் கடைகள், வேதாத்திரி மகரிஷி அவர்களின் நூல்கள், ஜக்கி வாசுதேவ் அவர்களின் நூல்கள், வீடியோ டிவிடிகள், நிறைய புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல் தொகுப்புகள், தமிழ், ஆங்கில அகராதிகள் விதம் விதமாக  என்று அனைவரையும் கவரும் வண்ணம் பல்லாயிரம் நூல்கள்.   

எனது வலைப்பூவில் பதிவு செய்வதற்காக சில படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  (பேட்டரிகள் அதற்குள் காலை வாரிவிட்டன.   சரி, மறுபடியம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று நகர்ந்தேன். எடுத்த படங்களில் சில மேலே.)

வெளியே வரும்போது முகப்பில் பேராசிரியர் முனைவர் அய்க்கண் அவர்களையும் (எங்கள் பகுதியின் புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் புத்தகத் திருவிழா அமைப்புக்குழுத் தலைவர்), நண்பர் பி.வி.சுவாமி அவர்களையும் (நாலெஜ் புக் ஹவுஸ் உரிமையாளர் மற்றும் அமைப்புக் குழுத் துணைத் தலைவர்), டாக்டர் ஏ.செல்வராஜ் அவர்களையும்  (ஹோமியோபதி மருத்துவர் மற்றும் கலைநிகழ்ச்சிகளின் பொறுப்பாளர்) சந்தித்துப் பேசினேன்.  சுவாமி அவர்கள் தொடக்கவிழாவில் காரைக்குடியில் புத்தகத் திருவிழா அமையக் காரணமாக  இருந்த என்னை நினைவு கூர்ந்ததைக் குறிப்பிட்டார்.  அவர்கள் அனைவரிடம் அவர்களது அன்பிற்கு நன்றி கூறி விடை பெற்றேன்.  மீண்டும் ஒரு நாள் புத்தகத் திருவிழாவிற்குச் செல்லவேண்டும்.  பார்க்கலாம்.    

சூரியின் டைரி-47: காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 தொடக்க விழா

 நேற்று மாலை ஒரு வழியாக காரைக்குடி புத்தகத் திருவிழா அழைப்பிதழை நண்பர் சுவாமி அவர்களது அலுவலகத்தில் பெற்றேன்.  ஆனால் அதைப் பதிவு செய்வதற்குள் எனது கணினியில் நீண்ட காலமாக இருந்த பழுதொன்றை நீக்க நண்பரொருவர் வந்துவிட்டார்.  பழுது நீக்கப்படுவதற்குள் எனது பொறுமை போய்விட்டது.  எனவே இன்று தொடக்க விழா முடிந்தபின் இன்று தொடக்க விழா அழைப்பிதழைப் பதிவு செய்கிறேன்.  வெறும் தகவலாக இருந்து விட்டுப்போகட்டும் என்று. (பதிவு மேலே).

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை தொடக்க விழாவில் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. கலந்துகொண்ட  நண்பர்களிடம்  விவரங்கள் கேட்டிருக்கிறேன்.  வந்தவுடன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் எவ்வாறு அமைந்தன என்பதனைப் பதிவு செய்கிறேன்.  

சூரியின் டைரி-46: காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 தொடக்க விழா

நேற்று செக்காலை  சிவன் கோவிலுக்குச் சென்றிருந்தேன்.  வாசலில்   காரைக்குடி புத்தகத் திருவிழா 2011 பற்றிய பெரிய அளவிலான விளம்பரத்தைக் கண்டேன் (படம் மேலே). கோவிலுக்குச் சென்று திரும்பியதும் நண்பர் அலெக்சிடமிருந்து  அலைபேசி அழைப்பு வந்தது.  என்னிடம் சில முகவரிகளைக் கேட்டார்.  அவற்றைத் தந்தபின் அவை எதற்காக என்று கேட்டபோது சொன்னார், புத்தகத் திருவிழா தொடக்கவிழா அழைப்பிதழ்களை சில முக்கியமானவர்களிடம்  சேர்க்கும் பொறுப்பு, செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் அவரிடம் தரப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
அவரிடம் ஆவலுடன் தொடக்கவிழா நிகழ்ச்சி நிரல் பற்றி கேட்டேன்.  அவர் கூறிய தகவல்களின் படி,  நாளை, பிப்ரவரி 11-ம்   நாள் மாலை 5.30 மணிக்கு  கம்பன் மணிமண்டபத்தில் தொடக்க விழா நடைபெறவிருப்பதையும், அதில் தவத்திரு குன்றக்குடி அடிகளார், தினமணி ஆசிரியர் (பெயர் மறந்து விட்டது), பலகலைக் கழக துணைவேந்தர் ஒருவர் (பெயர் மறந்து விட்டது), செக்ரி  இயக்குனர் முனைவர் வெ.யக்ஞராமன், செக்ரி இணை இயக்குனர் முனைவர் ந.பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொள்ளவிருப்பதைத் தெரிவித்தார்.
இன்று அழைப்பிதழின் நகல் ஒன்றை இரவலாகப் பெற்று அதை ஸ்கேன் செய்து இங்கே பதிவு செய்யலாம் என்று முயன்றேன்.  முடியவில்லை.
நாளை மாலை தொடக்கவிழாவில் பார்வையாளராகக் கலந்துகொண்டு புகைப்படங்கள் எடுத்தும், பேசப்படும் முக்கிய கருத்துகளைக் குறித்துக் கொண்டும் வருவது,  பின்னர் அவற்றை இங்கே பதிவு செய்யலாம் என்று எண்ணியுள்ளேன்.    

சூரியின் டைரி-45: காரைக்குடி புத்தகத் திருவிழா 2011

சில நாட்களுக்கு முன் நண்பர், கவிஞர் ஜனநேசன் அவர்களை வீதியில் சந்தித்தேன்.  அப்போது அவர் காரைக்குடி புத்தகத் திருவிழா இம்மாதம் 11-ம் நாள் தொடங்குகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியினைக் கூறினார்.  நேற்று காரைக்குடி சென்றபோது பார்த்த மேலே உள்ள விளம்பரம் அதனை உறுதி செய்தது.  என் தம்பியர் இருவரையும்  தொலைபேசி மூலம் புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ள அழைத்தேன்.  இனி புத்தகத் திருவிழா பற்றி அடுத்தடுத்து வரும் செய்திகளை இங்கே பதிவு செய்கிறேன்.

மேலே உள்ள விளம்பரத்திற்கு உதவிய ஜனப்பிரியா டிபார்ட்மெண்டல் ஸ்டோர்  பற்றி ஒரு கருத்தையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்.  மருந்துகள், காஸ்மெடிக் சரக்குகள், ஹார்லிக்ஸ், போன்வீட்டா போன்ற பெவேரேஜ்கள், தமிழ் மருந்துகள்  மற்றும் பலசரக்குச் சாமான்கள் எல்லாம் இங்கே குறைந்த விலையில் கிடைக்கிறது.  உதாரணமாக நான் மாதாமாதம் டிப்ரோடீன் (DProtin)  என்ற பாலில் இட்டு உண்ணும் புரதச்சத்து பானப்பொடி வாங்குகிறேன்.  மருந்துக் கடைகளில் வாங்கினால் MRP படி பில் தந்து பணத்தைக் கறந்துவிடுவார்கள்.  நீங்கள் அவர்களிடம் MRP என்பது அதிக பட்ச விலையே தவிர குறைந்த பட்ச விலையில்லை  என்று போராடினால் ஒரு வேளை ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ குறைப்பார்கள்.  ஜனப்பிரியாவில் எதுவுமே கேட்காமல், ஒரு டிப்ரோடீன் (DProtin) பாட்டிலுக்கு நாற்பது ரூபாய் குறைத்துக் கொடுத்தார்கள்! (MRP ரூபாய் 285 /-; அவர்களது விலை ரூபாய் 245 /-)   என்னால் நம்பவே முடியவில்லை.  சந்தேகப்பட்டு அவர்களிடம் கேட்டதில் அவர்கள் கடையில் எல்லாமே  குறைந்த பட்ச லாபத்திற்கு விற்பதாகக் கூறினார்கள்.  இது போல பல பொருட்களின் விலையையும் சோதித்துப் பார்த்திருக்கிறேன்.  அவர்கள் கூறுவது உணமைதான்.  காசு காசு என்று பேயாய் அலையும் இந்நாளில் நேர்மையாக, customer -freindly ஆக கடை நடத்தும் ஜனப்பிரியா நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.   

சூரியின் டைரி-44: Airtel DTH இணைப்பு, ஒரு புலம்பல்

நான் ஒரு டிவி  பைத்தியமோ,  அல்லது  மெகா சீரியல் பைத்தியமோ  அல்ல.  எப்போதாவது டிவி பார்ப்பேன்: செய்திகள் அல்லது  ஆங்கிலப் படங்கள், சமயத்தில் நகைச்சுவை நிகழ்ச்சிகள்.  ஆனால்  நான்  டிவி பார்க்க உட்கார்ந்தவுடன் யாராவது வந்து ரிமோட்டைப் பிடுங்கி சேனலை மாற்றி விடுவார்கள்.  நானும் எழுந்து போய்விடுவேன்.  ரிமோட்  பட்டனைத் தட்டி  யாராவது  விநாடிக்கொரு  தடவை  சேனல் மாற்றும்போது  டிவியின் மேலேயே வெறுப்பு  வந்துவிடும்.
எங்கள் வீட்டில்  லோகல்  கேபிள்  டிவி இணைப்பு  இருந்தது.  ஊரெங்கும்  விதவிதமாக  DTH  இணைப்பு  வந்தபிறகு  கேபிள் டிவி இணைப்பிலிருந்து  மக்கள் விடுபட,  கேபிள் டிவிக்காரர்கள் பாடு திண்டாட்டமாகி வருகிறது.  அவர்கள்  வேறு வழியின்றி  சேனல்களைக் குறைக்கத் தொடங்கி விட்டனர்.  என் வீட்டில்  ஸ்டார் ப்ளஸ் மெகா சீரியல்களைத் தொடர்ந்து பார்த்து வந்தனர்.  திடீரென  அந்த சேனல் இணைப்பு துண்டிக்கப்பட,  DTH  இணைப்பு  பெறும்படி  எனனை நச்சரிக்க  ஆரம்பித்தனர்.  வேறு வழியின்றி  நானும்  உடன்பட்டேன்.
எங்கள் வீடு கோட்டையூர் ஸ்ரீராம் நகரில்  உள்ளது.  ஸ்ரீராம் நகரில் டீலர் யாரும் இல்லை என்றும்,  காரைக்குடி சென்றுதான்  இணைப்பு பெறவேண்டும் என்று கூறினர்.  காரைக்குடி சென்றபோது எதிர்பாராத விதமாக  ராஜா  பேப்பர்  ஸ்டோர்   உரிமையாளர் நண்பர்  ராஜா அவர்கள் எதிர்பட்டார்.  அவர் எனது இனிய நண்பர்.  நான் எப்போது எந்த உதவியை நாடினாலும் உடனே அக்கறையோடு உதவுபவர்.  அவரிடம் சொன்னேன்.  அரை மணியில் விபரங்கள், பல்வேறு DTH  இணைப்பு பற்றி தகவல்கள்,  சேகரித்துத் தந்தார்.
சென்னையில் என் உறவினர் வீட்டில்  Airtel DTH  இணைப்பு இருந்தது.  அவர்கள் பரிந்துரையின் பேரில் அதைத் தேர்ந்தேன்.  நண்பர் ராஜா அவரது  கடைக்கு அருகிலேயே  உள்ள,  அவர்க்குத் தெரிந்த ஏர்டெல் DTH  டீலரான   கல்யாணி ஸ்டோருக்கு  அழைத்துச்  சென்றார்.  இது நடந்தது  அக்டோபர்  21-ஆம் நாள்.  எனக்கு DTH  பற்றி  எதுவும் தெரியாததால்  கடைக்காரர் கூறியதைக் கேட்டுக் கொண்டேன்.  அவர்  ஏர்டெல்லின்  குறிப்பேட்டினைத் (Brochure)  தந்தார்.(கீழே பதிந்துள்ளேன்).  செட்  டாப்  பாக்ஸ்,   டிஷ் அன்டென்னா மற்ற இதர உபகரணங்களுடனும்,  ஏழு மாத  South Super Value Pack மற்றும் இரண்டு Regional Pack பெற ரூபாய் 1970 /-  (ஆயிரத்து எழுநூற்று தொண்ணூறு)  மட்டும்  தரவேண்டும் என்று  Airtel DTH குறிப்பேட்டில் தன் கையினால் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார்.   பின்னர்  நண்பர் ராஜா  அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க  தொகையை  ரூபாய்  1750 /-  ஆகக் குறைத்தார்.
அதிக சேனல்கள் பெற குறிப்பேட்டில் உள்ள தொகையைக்  காட்டினார்.  அதிலிருந்து  நான்  இரண்டு  பேக்குகளைத் தேர்ந்தேன்.  அவை:  இங்கிலீஷ் ப்ளஸ் பேக்  – பத்து ஆங்கிலச் சேனல்கள் கொண்டது. மேலும்  மாதம்  ரூபாய் ஐம்பது  தரவேண்டும்.  அடுத்து  இன்ஃபோடைன்மென்ட்   பிரிவிலிருந்து ,  டிஸ்கவரி பிளஸ் பேக் (டிஸ்கவரி சேனல் மற்றும் அனிமல் பிளானெட்) மேலும்  மாதம்  இருபது ரூபாய் அதிகம் தரவேண்டும்.  ஆக  இந்த  கூடுதல் சேனல்களுக்காக,  மாதம் ரூபாய்  எழுபது x ஏழு மாதம் =  ரூபாய்  490/-;  ஆக  மொத்தம்  ரூ.2240 /-  செலுத்தி,  ரசீது  பெற்றுக் கொண்டேன்.(இந்த விபரங்களைத் தெளிவாக ரசீதில் எழுதியுள்ளனர்; அந்த ரசீதை ஸ்கேன் செய்து கீழே பதிந்துள்ளேன்.) 
இணைப்பு தரப்பட்டது.  இணைப்பு தர வந்தவர்கள் டிப்ஸ் வேண்டுமெனக் கேட்க,  நூறு ரூபாய் கொடுத்தேன்.  அவர்கள் போனபிறகு நண்பர் தெரிவித்த தகவல் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.  செட் டாப் பாக்சுடன்  அவர்களே அதற்குரிய பேட்டரிகளைத் தரவேண்டும்.  ஆனால் வந்தவர்களோ பேட்டரிகளைத் தராமல், என்னுடைய பேட்டரிகளைப் போட்டு இயக்கினர்.  அது மட்டுமன்றி,  டிவி ரிமோட்டை  ஏர்டெல் ரிமோட்டுடன்  மேச் செய்யவில்லை.  அதனால்  டிவியை இயக்க எனக்கு இரண்டு ரிமோட்  தேவைப்படுகிறது.  மற்றவர்கள் எல்லாம்  ஏர்டெல் ரிமோட்டை  மேச் செய்து,  அதன் மூல மட்டுமே  டிவியை இயக்கி வருவதை அறிந்து கொண்டேன்.  டீலரிடம் கேட்டபோது  பேட்டரிகள் விட்டுப்போய் விட்டது என்று கூறி  இரண்டு பட்டேரிகளைக் கொடுத்தார்.  ரிமோட்டுகளை மேச் செய்வது பற்றி தனக்கு எதுவும் தெரியாது; அதுகுறித்து  ஏர்டெல் அவர்களுக்கு எந்த விதத் தகவலோ அல்லது பயிற்சியோ அளிக்கவில்லை என்றார்.
அடுத்த  குளறுபடி,  இணைப்பை  செயல்படுத்த  கிட்டத்தட்ட  48 மணி நேரம் ஆனது.   அதுவும் நான் பலமுறை தொலைபேசியில் பேசிய பின்னரே.  டீலர்  ஒரு தேவகோட்டை  ஏர்டெல் சர்வீஸ் ப்ரோவைடர்  நம்பரைக் கொடுத்து அவர்களுடன் பேசும்படி கூறினார்;  தானும் பேசுவதாகச் சொன்னார்.  ஒவ்வொரு முறை  அந்த தேவகோட்டை நம்பருடன் தொடர்பு கொள்ளும்போது  ஒவ்வொருவர் பேசுவார்.  அவருக்கு  ஆதியோடந்தமாக  எல்லாவற்றை  சொல்லி  விளக்கியபின்,  சிறிது நேரத்தில் இணைப்பு கிடைத்துவிடும் என்று இழுத்தடித்தார்கள்.  இணைப்பு வந்தபின்னரும் பிரச்சினை  தீரவில்லை.  அதிக பட்ச  சேனல்களின் இணைப்பு தரப்படவில்லை.
ஒரு வாரம் சென்றபின்,  இறுதியாக அதிக பட்ச இணைப்புகள் தரப்பட்டது.  ஆனால் அவற்றில் இரண்டு சேனல்கள் விடுபட்டன.  அதுபற்றிக் கேட்டால் ஏர்டெல் நிறுவனத்திற்கு இமெயில் அனுப்புகிறேன் என்று பதில் வரும்.   அடுத்த பத்து நாட்களில்  டீலரிடமும்,  தேவகோட்டையில்  உள்ள  சர்வீஸ் ப்ரோவைடருடனும்  மொத்தம்  இருபது, முப்பது முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறேன்;  அப்போதைக்கு ஏதாவது பதில் சொல்வார்கள்.  ஆனால்  எதுவும் நடக்க வில்லை. 

ஒருநாள் இரண்டு பேர் டீலர் அனுப்பியதாக வந்து ரிமோட்டுகளை மேச் செய்ய முயன்றனர்.  அவர்களுக்குத் தெரியவில்லை.  தொலைபேசியில் விசாரித்து மறுபடியும் முயன்றனர்.  அப்போதும் அவர்களால் மேச் செய்ய இயலவில்லை.  ஒருநாள் கடைக்கு இரண்டு ரிமொட்டுகளையும்  கொண்டுவாருங்கள்; தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார்.  அவர் மூலம் மேச் செய்யலாம் என்று கூறிச் சென்றனர். அதோடு அது சரி. 
வேறு வழியின்றி, Airtel DTH  வாடிக்கையாளர் பிரிவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, குறையைப் பதிவு செய்தோம்.  தினமும் ஏதோ ஒரு கால் சென்டரிலிருந்து மெக்கானிக்கலாக யாராவது தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரிப்பர்.  ஒவ்வொரு முறையும் ஒருவர் தொடர்பு என்பதால் எனது சோகக் கதையை ஒவ்வொரு நாளும் திருப்பித் திருப்பிச்  சொல்வேன்.  நடவடிக்க எடுப்பதாக உறுதி கூறுவார்.  ஒரு குறுஞ்செய்தி  வரும்.  ஒரு எண்ணைக் கொடுத்து தொடர்புகொள்ளச் சொல்வர்.  மறுபடியும் ராமாயணம் போல் கதையைச் சொல்லவேண்டும்.  மாலைக்குள் வீடு தேடி வந்து,  ரிமொட்டுகளை மேச் செய்வார்கள் என்று கூறப்படும்.  ஆனால் இன்று வரை யாரும் வரவில்லை.
ஒருநாள் ஒரு  குறுஞ்செய்தி  வந்தது. 2011   மே  மாதம்  வரை சந்தா பெற்றுக் கொள்ளப் பட்டதாகவும்,  எனது கணக்கில் பணம் மிச்சமில்லை என்றும்.  உடனே தொடர்பு கொண்டு, இரண்டு சேனல்கள் தரப்படாததைப் பற்றிச் சொன்னால், சரியான பதில் கிடைக்காது.  ஒருமுறை  பேசியவர்  உங்கள் டீலரிடம்தானே  பணம் கொடுத்தீர்கள்; அவரைப் போய்க்  கேளுங்கள்  என்று  எரிந்து விழுந்தார்.  பேசியவர்கள்  அனைவருமே  Airtel DTH   என்றே  தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.  எனவே இவர்களெல்லாம் யார், இவர்களுக்கென தனி அடையாளமோ, ஊரோ, பெயரோ கிடையாதோ,  யார் எதைச் சொன்னார்கள் என்பதைக் கண்டுகொள்வதே சிரமம்.

இந்த 35 நாட்களில்  கிட்டத்தட்ட  100 முறை  தொலைபேசியில் பேசியிருப்பேன்.  இதற்கிடையில்  ஒருநாள் ஒரு அழைப்பு வந்தது,  ஏர்டெல் சேவை திருப்தியாக இருக்கிறதா என்ற வினவலுடன்.  எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.   யார் மேலும் நம்பிக்கையில்லாமல்   நொந்து போய் இருக்கிறேன்.

இடை இடையே அதிகப்படி சேனல்கள் வேண்டுமா, வேண்டுமெனில் அதற்கு கட்டணம் எப்படி செலுத்துவது போன்ற குறுஞ்செய்திகள் வந்துகொண்டேயிருக்கிறது; நான் அவற்றை கண்டுகொள்வதே இல்லை.  ஏற்கனவே பணம் கட்டிய சேனல்களே வராதபோது மேலும் பணம் செலுத்த நான் என்ன பைத்தியமா?  என்ன ஆனாலும் சரி, பல்லைக் கடித்துக்கொண்டு இந்த ஏழு மாத காலம் முடியும் வரை காத்திருந்துவிட்டு, அடுத்து தொடர்வதா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும்.  

எல்லாவற்றிற்கும் சிகரமாய்,  இன்று ஏர்டெல்லிலிருந்து  ஒரு குறுஞ்செய்தி வந்தது.  உடனடியாக  ரூபாய்  முன்னூறு செலுத்தாவிடில், இணைப்பு துண்டிக்கப்படும் என்று.  ஒன்றுமே புரியவில்லை; தலையைச் சுற்றியது.  டீலரான கல்யாணி ஸ்டோருடன்  தொடர்பு கொண்டேன்.  இதுபோன்று பலருக்கு தவறாக குறுஞ்செய்தி வந்திருக்கிறது;  அதைப்பற்றிக் கவலை கொள்ளவேண்டாம்;  இணைப்பு துண்டிக்கப்படாது என்று உறுதி கூறினார்.   ஏழு மாதத்திற்கான  மொத்த பணம் கட்டி  முப்பத்தைந்து நாட்கள்   ஆகிறது.  பழைய பிரச்சினைகள் தீரவில்லை;  புதிய பிரச்சினை உருவாகி உள்ளது.  எப்போது இணைப்பு துண்டிக்கப்படுமோ தெரியவில்லை.   ஏன் இவ்வளவு குளறுபடி?  எங்கே பிரச்சினை? ஒன்றும் புரியவில்லை.  இன்னும் எத்தனை குழப்பங்கள் காத்திருக்கின்றதோ? 
மன உளைச்சலைப் போக்கிக் கொள்ள  என் வலைப்பூவில்  பதிந்துள்ளேன்.  உங்களில் யாருக்காவது இதுபோன்ற  மோசமான அனுபவம் இருக்கிறதா?  இல்லை  எனக்கு மட்டும்தான் இந்த நிலையா?  அனுபவசாலிகள் தயவு செய்து  சொல்லமுடியுமா?                    

சூரியின் டைரி-43: அதிர்ஷ்டமும், துரதிருஷ்டமும்

சில நாட்களுக்கு முன் விஜய் டிவியில்  திரு கோபிநாத் அவர்கள் நடத்தும்  நீயா, நானா நிகழ்ச்சியில் அதிர்ஷ்டம் பற்றிய கலந்துரையாடலில் ஒரு பகுதியைப்  பார்த்தேன்.  வீட்டில் ஆளுக்கு ஆள்  சானல்  மாற்றிக்கொண்டே இருந்ததாலும், நான் இடை இடையே வெளியே செல்ல நேர்ந்ததாலும், நிகழ்ச்சியை முழுமையாகப் பார்க்க முடியவில்லை.  பார்த்தது மிகக் கொஞ்சம்தான்.  (உங்களில் யாருக்காவது இந்த டிவி ரிமோட்டைக் கண்டுபிடித்தவரை கழுத்தை நேரிக்கவேண்டும்போல் எப்போதாவது தோன்றியிருக்கிறதா?  அப்படித் தோன்றியிருந்தால்  நீங்கள்  தனியில்லை)  இருப்பினும், உறக்கம் வராத அன்று இரவில்  என்   மனதில் அதிர்ஷ்டம் பற்றிய சிந்தனை ஓடியது.
அதிர்ஷ்டம் என்றால் என்ன?  உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா?
இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.   அதிர்ஷ்டம் மட்டுமல்ல, துரதிருஷ்டமும் இருக்கிறது.  நாம் எதிர்பாராமல் ஏதாவது நல்லது நடந்தால், அதிலும் பெரிய அளவில் நடந்தால், அதிர்ஷ்டம் என்று மகிழ்கிறோம்.  இது சமயத்தில் நம் திறமைக்கும், உழைப்பிற்கும் மீறியதாக இருக்கலாம்.  துரதிருஷ்டம்?  திறமை, தகுதி, ஈடுபாடு, கடும் உழைப்பு இருந்தும் பலரால் எதையும் சாதிக்க முடிவதில்லை, வாழ்வில் முன்னேற முடிவதில்லை;  அல்லல் படுகிறார்கள், அவதிப்படுகிறார்கள்,  துன்பப் படுகிறார்கள், துயரப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள்.  ஏன்?  அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை அல்லது அது அவர்களின் துரதிருஷ்டம்.
இருக்கட்டும்.  அது ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அதிருஷ்டமும், பலருக்கு துரதிருஷ்டமும் நேருகிறது?  கடவுள் தனக்கு வேண்டியவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும்,  வேண்டாதவர்களுக்கு துரதிருஷ்டத்தையும் தருகிறாரா?  நான்  அப்படி  நினைக்கவில்லை.
இன்னும் சற்று ஆழமாகச் சிந்தித்தேன்.  ஒருவருடைய முன்வினைப்பயன் – முந்திய பிறவிகளிலோ அல்லது இந்தப் பிறவியிலோ – செய்த வினைகளின் பயனாக, அதிர்ஷ்டமும், துரதிருஷ்டமும் (நல்லதும், கெட்டதும்) நேர்கிறது.  இவ்வுலகில் எதுவுமே தற்செயலாக நிகழ்வதில்லை.  நாம்  முன்னர் செய்த நல்வினைகளின் பலனாக அதிர்ஷ்டங்களையும், தீவினைகள் அல்லது தவறுகளின்  பயனாக துரதிருஷ்டங்களையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.  எல்லாமே  Cause and Effect.  There is nothing arbitrary or accidental about it.  இது என்னைப்போல் உங்களுக்கும் மறுபிறவித் தத்துவம்,  கர்மா தத்துவம் போன்றவற்றில் நம்பிக்கை  இருந்தால்  ஏற்புடையதாக இருக்கும்.  

இது எனது முதல் பிறவியோ அல்லது கடைசிப் பிறவியோ அல்ல என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.  அதுபோல்  என்  வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளுக்கு நானே காரணம்;  அறிந்தோ அறியாமலோ நான் செய்த முன்வினைகள் – இபபிறவியிலோ அல்லது  முந்திய பிறவிகளிலோ செய்த முன்வினைகளே காரணம்.  ஆகவே நான் கடவுளையோ அல்லது வேறு யாரையோ குறைசொல்வதில் அர்த்தமில்லை.  சுவாமி விவேகானந்தர் கூறியதன் பொருள் தற்போது நன்றாகப் புரிகிறது:  You are the maker of your own destiny.

அதிருஷ்டம், துரதிருஷ்டம், அல்லது விதி என்பதெல்லாம் முன்வினைப்பயனே.  விதி, விதி என்று வீணாகிப் போய்விட்டோம் என்பர் சிலர்.  இந்தக் கண்ணோட்டம் Fatalistic என்று சிலர் சொல்லலாம். ஆனால் இதில் ஒரு Positive Side இருக்கிறது.  நல்வினைகளால் நற்பயன்களும் (அதிருஷ்டங்களும்),  தீவினைகளால் தீய பயன்களும் (துரதிருஷ்டங்களும்)  நேருமென்றால், நாம் ஏன் தீயவற்றைச் செய்யவேண்டும்.  நாம் நல்லதை மட்டுமே ஏன் செய்யக்கூடாது?  தற்போது நாம் நல்லதையே செய்தால்  பின்னர் நமக்கு  விளைவதெல்லாம் நல்லதாகவே இருக்குமல்லவா? நல்லதையே செய்ய  இது  ஒரு  INCENTIVE  என்று நாம் ஏன் கொள்ளக்கூடாது?  இதுதான் என்னுடைய கருத்து.  ஆனால்  அதிருஷ்டத்திற்காக பச்சைக்கல் மோதிரம் அணிதல்,  பெயரை மாற்றிக் கொள்ளுதல், பெயரில் சில எழுத்துக்களை சேர்த்துக் கொள்ளுதல்  அல்லது வேறு எதையாவது செய்யவேண்டும் என்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை.  இதில் மாற்றுக் கருத்து இருந்தால் முன்வைக்கலாம்; கேட்க நான் தயாராக இருக்கிறேன்.       

சூரியின் டைரி-42: மொழிகளும் உச்சரிப்பும்

இந்த  வார  ஆனந்த விகடனில்  வாலியின், “நினைவு  நாடாக்கள்”,  சாரு நிவேதிதாவின்  “மனங்கொத்திப் பறவை” (தொடர்)  மற்றும்  எஸ்.ராமகிருஷ்ணனின்  சிறுகதை, “ஜெயந்திக்கு  ஞாயிறு  பிடிப்பதில்லை”  படித்தேன்,  மகிழ்ந்தேன்.
சாரு நிவேதிதா  மரியோ பர்கஸ் யோசா (Mario Vargas Llosa)   என்ற  நோபல்  பரிசு  பெற்ற  லத்தீன்  அமெரிக்க  எழுத்தாளர்  பற்றி  எழுதியிருந்தார். எழுத்திற்கும், உச்சரிப்பிற்கும்  மாறுபாடான  அந்த  ஸ்பானியப்  பெயரை வாசிக்கச் சிரமப்பட்டிருப்பேன்;  நல்லவேளை,  அவரே  பெயரை  ஆங்கிலத்திலும்,  அதன்  சரியான  உச்சரிப்பைத்  தமிழிலும்  கொடுத்திருந்தார்.  இருப்பினும்  உச்சரிப்பை  உறுதி செய்துகொள்ள  வலையில்  Pronouncenames.com   என்ற  இணையதளத்திற்குச்  சென்று  தேடினேன்.    பயனின்றி, பிறகு  Forwo.com  என்ற  ஆடியோ  வசதியுள்ள  இணையதளத்திற்குச்  சென்று  தேடினேன்.  அது  “மரியோ  பர்கஸ்   ஜோஸா”   என்று  மிகத்  தெளிவாக  உச்சரித்தது.  ‘ஜான்’  என்ற  பெயரை  ‘யோவான்’  என்று  உருவேராக்கம் செய்ததுபோல்,   சாரு  ‘ஜோசாவை’  ‘யோசா’  என்று  தமிழ்ப் படுத்தியிருக்கிறார்  என்று  புரிந்துகொண்டேன்.  (FORWO.COM  சென்றால்  எந்த  மொழி  வார்த்தையாய்   இருந்தாலும்  அதன்  சரியான  உச்சரிப்பைத்  தெரிந்துகொள்ளலாம்).
என்னைப்  பொறுத்தவரை  மனிதர்களின் பெயர்களை  உருவேறாக்கம்   செய்யவேண்டிய  அவசியமில்லை.  அப்படியே  உச்சரிப்பது,  எழுதுவதன்  மூலம்  நிறைய  குழப்பங்களைத்  தவிர்க்கலாம்.  ஜான்  ஏன்  யோவானாக  வேண்டும்?  மேத்யூ  ஏன்  மத்தேயு  ஆக  வேண்டும்?  ஆனால்  பல  மொழிகளில்  இந்த  மாற்றங்கள்  செய்யப்படுகின்றன.
ஒரு சுருக்கெழுத்தாளன்   என்ற  முறையில்  இந்த  உச்சரிப்பு  மாறுபாட்டை  எப்போதும்  எரிச்சலுடன்  கவனித்து  வந்திருக்கிறேன்.  சுருக்கெழுத்தில்  நாங்கள்  உச்சரிப்பின்  படியே  எழுதுவோம் (Phonetic Spelling).   பின்னர்  தட்டச்சு  செய்யும்போது,  வழக்கில்  உள்ள  ஸ்பெல்லிங்கை  பயன்படுத்துவோம்.  உதாரணமாக,  இருமல் – COUGH ,  சுருக்கெழுத்தில்,  K -O -F.
மொழிகளின்  இந்தக்  குறைபாடுகள்  நிறையப் பேரை  உச்சரிப்பின்படி  எழுதவேண்டும்  என்று  போராடும் உந்துதலைத் தந்திருக்கிறது.  அல்லது  குறைந்த  பட்சம்  இந்தக் குறைபாட்டை  கேலி செய்ய,  சாட  வைத்திருக்கிறது.   உதாரணமாக,  பெர்னார்டு ஷா  ‘GHOTI ‘  என்று  எழுதி,  அதை  ‘FISH ‘  என்று வாசிப்பாராம்.   அவர் கூறிய விளக்கம்:  ‘Cough’  என்ற  வார்த்தையில்  இறுதியில் வரும்  ‘GH’,   ‘ஃப்’  என்றும்,   ‘WOMEN’  என்ற  வார்த்தையில்  இரண்டாவது  எழுத்தாக வரும்  ‘O ‘ ,  ‘இ’  என்றும்,   ‘Nation ‘  என்ற  வார்த்தையில்,  ‘ti ‘ என்ற எழுத்துக்கள்  ‘ஷ்’ என்றும் உச்சரிக்கப்படுகின்றன.  ஆகவே  ‘GHOTI’  என்று  எழுதி  ‘FISH’  என்று  உச்சரிக்கலாம்.
புகழ் பெற்ற  அமெரிக்க  அதிபர்  தியோடார்  ரூஸ்வெல்ட்  அமெரிக்க  ஆங்கிலத்தை  உச்சரிப்பிற்கும், எழுத்திற்கும்  வேறுபாடு  இல்லாத  மொழியாக்க  வேண்டும்  என்று  விரும்பினார்.  அதிகாரபூர்வமாக  இந்த சீர்திருத்தத்தை  அவர்  செயற்படுத்த  முற்பட்டபோது,  கடும்  எதிர்ப்புக் கிளம்ப,  அதைக்  கைவிட்டார்.  இரண்டு முறை  குடியரசுக் கட்சியின் சார்பில்  போட்டியிட்டு  மாபெரும் வெற்றிபெற்ற  அவர்,  மூன்றாம் முறை  போட்டியிட  முயன்றபோது தன் கட்சியின் ஆதரவைப் பெறமுடியாமல்,  சுயேட்சையாக, கலைமான் (Bull Moose)  சின்னத்தில்  போட்டியிட்டுத்  தோற்றார்.  அப்போது  அவரது  பரம  வைரியான  அமெரிக்க  நாளிதழ்  ஒன்று,  அவரது  தோல்வியைப்  பெரிதாக,  “THRU”  என்று  தலைப்பிட்டு  எழுதியது.
         
ஒருகாலத்தில்  எனக்கு  பிற மொழிகளைக் கற்கும்  ஆர்வமும்,  நேரமும்,  வாய்ப்பும்  இருந்தது.  அப்போது  இந்தி,  ஜெர்மன்,  ரஷ்யன்,  பிரஞ்சு  மற்றும்  வங்காள  மொழிகளைக்  கற்க  முற்பட்டேன்.  முதல் மூன்று மொழிகளிலும்  முதற்படியைக் கடந்து,  தேர்ச்சி  பெற்றேன்.  ஆனால் அதன் பின்னர் தொடர முடியவில்லை.
பகவான்  இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும்  சுவாமி  விவேகானந்தர்  மேலுள்ள  ஈடுபாட்டால்,  பாலாஜி  பப்ளிகேஷன்ஸ்  வெளியிட்டிருந்த  ‘வங்காளம்  கற்போம்’  என்ற நூலை  வாங்கி,  நானே  கற்கமுயன்றேன். சந்தேகம் வரும்போதெல்லாம்  அலுவலகத்தில்  எனக்கு  அடுத்த  அறையில் இருந்த  நண்பர்,  முனைவர் முகர்ஜி  அவர்களிடம்  கேட்டுக்கொள்வேன்.  வங்காள மொழியிலும் உச்சரிப்புப் பிரச்சினை இருந்தது.  அதில்  ‘வ’ மற்றும்  ‘அ’  என்ற  எழுத்துக்களும்,  ஒலிகளும்  கிடையாது.  ‘வ’  என்பதை  அவர்கள்  ‘ப’  என்றும்,  ‘அ’  என்பதை  அவர்கள் ‘ஒ’ என்றும் உச்சரிப்பர்.
இந்த விஷயத்தில் பிரஞ்சு மொழி இன்னும்  மோசம்.  பத்து எழுத்துக்களை  எழுதினால்,  அதில்  ஐந்து எழுத்துக்கள் (சமயத்தில்)  உச்சரிக்கப் படுவதில்லை, அவை Silent என்பதால்.  வார்த்தையின்  இறுதியில்  வரும்  ‘S ‘  மற்றும்  ‘T’  அந்த மொழியில்  உச்சரிக்கப் படுவதில்லை.
ஜெர்மானிய  மொழி  ஓரளவிற்கு  ‘Phonetic ‘  மொழிதான்.  ஆனால்  பிரஞ்சு  மொழியைப்  போல  ‘definite article ‘  (the) மற்றும்  indefinite article   (a , an) தொடர்ந்து வரும்  வார்த்தையின்  பாலைப் பொறுத்து   (Gender)   ‘der’ (ஆண்பால்), ‘die ‘ (பெண்பால்  மற்றும்  பலவின்பால்) ,  ‘das’ (அஃறிணை)  என்று  மாறுபடும்.  அதுவும் வேற்றுமை உருபுகளைப்  பொறுத்து  ‘dem ‘, ‘den ‘  என்று  மேலும்  மாறுபடும்.  சுருங்கச் சொன்னாள்  ஜெர்மன் மொழி இலக்கணம்  ஆளைக் கொன்றுவிடும்.  ஜெர்மானிய அறிஞர்  மாக்ஸ் முல்லர்  உலகிலேயே  ஜெர்மானிய மொழி போல்  உச்சரிப்பிற்கும், எழுத்திற்கும்  மாறுபாடு இல்லாத – PHONETIC LANGUAGE –  நேர்த்தியான  மொழி  கிடையாது  என்று  பெருமையுடன் எண்ணியிருந்தார்.  உலகிலேயே  இந்த வகையில்  நேர்த்தியான, முழுமையான  மொழி  சமஸ்கிருதம்  (A Perfect Phonetic Language) என்பது நிறைய பேருக்குத் தெரியாது.  (சுயநலத்தினாலும்,  அதன் சிறப்பு சிதைந்துவிடக் கூடாது  என்ற  பயத்தினாலும்  அந்த  மொழி  மூடி மறைக்கப்பட்டது.  சாதாரண மனிதர்கள்  அதைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.  அதனால் அந்த  மொழி  இன்று  அழியும் நிலையில் உள்ளது.)
சம்ஸ்கிருத மொழியைப் பற்றி அறிந்த பின், அதன் மேல் ஈடுபாடு கொண்டு,  மாக்ஸ் முல்லர்  அதை  முறைப்படி  கற்றுக்கொண்டார்.   வேதங்களையும்,  உபநிடதங்களையும்  பயின்றார்;  பிரமித்துப் போனார்.  மொழியின் அருமையையும்,  இந்திய  சிந்தனைகளின்  மேன்மையையும்,  அற்புதத்தையும்  வியந்து  போற்றினார்.  தமது  நூல்கள் மூலம்  இந்தியச் சிந்தனைகளின் மேன்மைகளை  உலகறியச்  செய்தார்.  ஒரு மிகச் சிறந்த  INDOLOGIST   ஆக  விளங்கினார்.  சென்னையிலுள்ள  ஜெர்மானியத் தூதரகம்  ‘மாக்ஸ் முல்லர்  பவன்’  என்று  பெயரிடப்பட்டுள்ளது.
சம்ஸ்கிருத  மொழியின்  இந்த  முழுமைத் தன்மை,  சிறப்புத் தன்மை காரணமாக,  எழுத்துக்களே  இல்லாத  காலம் தொட்டு  இன்று வரை  நமது  ஆன்மிகப்  பொக்கிஷங்கள்  –  வேதங்கள்,  உபநிடதங்கள் – வாய் மொழியாகவே  தலைமுறை  தலைமுறையாக  மனனம் செய்யப்பட்டு,  சிதையாமல்  காக்கப்பட முடிந்தது என்ற பேருண்மையை  இங்கே  குறிப்பிட்டாக வேண்டும்.  சிந்தித்தால்  இது  எவ்வளவு  பிரமிப்பான விஷயம்  என்று  புரியும்.  லட்சக்கணக்கான  சொற்றொடர்களை  ஒலி  சிதையாமல்,  வார்த்தைகள்  இடம்  பிறழாமல்  மனனம் செய்து  மனத்தில்  பதிவு  செய்துகொண்டு,  அதை  அடுத்த தலைமுறை,  அதற்கடுத்த தலைமுறை  என்று  காப்பாற்றி  வந்திருப்பது  சாதாரண  விஷயமல்ல.

மனிதர்களுடைய  குறைபாடுகள்  (Imperfections)  அவர்களது மொழிகளையும்  பற்றிக்கொள்வதில்  வியப்பொன்றுமில்லை.  மொழி மட்டுமல்ல,  வேறு எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும்  முழுமை (Perfection)  என்பது  ஒரு  இலக்கு  அல்லது  வெறும்  கனவு  என்றுதான்  நினைக்கிறேன்.  அதனால்தான்  என்னவோ  எனது  இடதுசாரி  நண்பர்கள்  “NOTHING   ABSOLUTE ”  என்கிறார்கள் போலும்.        

சூரியின் டைரி-41: சிற்றிதழ்கள்

சிற்றிதழ்களின்    அரிய இலக்கிய  சேவை  பற்றி  இந்தவலைப்பூவில்  ஏற்கனவே  பதிவு செய்துள்ளேன்.  தமிழ்மணியில்  கலாரசிகன்  அவர்கள்  ‘புதிய  ஆசிரியன்’  பற்றி  எழுதியதை  அப்படியே   பதிவு  செய்திருந்தேன்,  அவரது  கருத்துக்கள்  என்  உணர்வுகளை  அப்படியே  பிரதிபலிப்பதாக  இருந்ததால்.  சிற்றிதழ்கள்  பற்றி  நிறைய  எழுதலாம்.  என்னுடைய  சொந்த  அனுபவத்திலிருந்து  சிலவற்றை  இங்கே பதிவு செய்யலாம்  என்று  எண்ணுகிறேன்.
காரைக்குடி  புத்தகத்  திருவிழா  நடத்துவதில்  முக்கிய  பொறுப்பு முதல் நான்கு  ஆண்டுகள்  என்வசம்  இருந்தது.  அந்தகால கட்டத்தில்  சிற்றிதழ்களுக்கென்று  ஒரு  கண்காட்சியோ  மாநாடோ நடத்த பெரிதும்  விரும்பினேன்.  ஆனால்  பல  தடைகள்,  சிரமங்கள்.  அப்போது  நண்பர்,  கவிஞர்  ஜனநேசன்  அவர்கள்  காரைக்குடி  புத்தகத்  திருவிழாவின்  ஒரு  பகுதியாக  சிற்றிதழ்களின்  கண்காட்சியை  நடத்தலாம்  என்று  ஆலோசனை  கூறினார்.  அதன்படி  2005  ஆண்டு  காரைக்குடி  புத்தகத் திருவிழாவுடன்  சிற்றிதழ்  கண்காட்சியையும்  இணைந்து  நடத்தினோம்.  ஒன்பது நாட்கள் நடைபெற்ற  புத்தகத்  திருவிழாவின்  ஒவ்வொரு  நாளையும்  ஒவ்வொரு  சிறப்பு தினமாக நடத்தும் பழக்கத்தை  வைத்திருந்தோம்.  (ஆசிரியர் தினம்,  மாணவர் தினம்,  மகளிர் தினம்,  சாதனையாளர் தினம்,  அறிவியல் தினம்  என்று).  அந்த  ஆண்டு  ஒருநாளை  ‘சிற்றிதழ்  தினமாகக்’  கொண்டாடினோம்.
திரு  பொள்ளாச்சி  நசன்  அவர்களைத் தொடர்பு கொண்டு,  அவரை  அன்று  சிறப்பு விருந்தினராக  கலந்து கொள்ள  அழைத்திருந்தோம்.  அவரும்  இசைவு தெரிவித்து,  சிற்றிதழ்களின் முகவரிகளையும் கொடுத்து உதவினார்.  நாங்கள்  அந்த முகவரிகள் அனைத்திற்கும் அழைப்பு அனுப்பினோம்.  எதிர்பாராதவிதமாக  சிற்றிதழ்களின்  மாநாடு  அதே நாளில்  தமிழகத்தின்  வேறு  பகுதியில்  நடைபெற்றதால்  பலர் கலந்துகொள்ள முடியவில்லை.  திரு பொள்ளாச்சி  நசன்  அவர்களும் வரமுடியவில்லை.  இருப்பினும்  கிட்டத்தட்ட  முப்பதிற்கும்  மேற்பட்ட  சிற்றிதழ்கள்  அதில் கலந்துகொண்டன.  ‘திசை எட்டும்’  மொழிபெயர்ப்பு மாத இதழின்  ஆசிரியரான  திரு  குறிஞ்சி  வேலன்  அவர்கள்  அன்று  சிறப்பு  விருந்தினாராகக் கலந்துகொண்டு  மகிழ்வித்தார்கள்.   சிற்றிதழ் கண்காட்சி மிகச்  சிறப்பாக  அமைந்தது.  ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  அவற்றைப்  பற்றி  அறிந்துகொள்ளும்  வாய்ப்பும்  கிடைத்தது.  வந்திருந்த சிற்றிதழ்களின்  பிரதிநிதிகளும்  மகிழ்ச்சியையும்  நன்றிகளையும்  தெரிவித்து  விடைபெற்றனர்.  மறக்க முடியாத  ஒரு  அனுபவமாக  அது  அமைந்தது.  நண்பர் கவிஞர் ஜனநேசன் அவர்களுக்கும், உதவிய மற்ற அன்பர்களுக்கும், ஆர்வத்தோடு கலந்துகொண்ட சிற்றிதழ்களுக்கும்  எனது மிகத் தாமதமான  நன்றிகள்.  Better late than never!
நிறைய  சிற்றிதழ்கள் விற்பனையாகின.  என்  பங்கிற்கு  நானும்  சிறிது வாங்கினேன்.  பல  அன்பர்கள்  அன்பளிப்பாகத்  தங்கள்  சிற்றிதழ்களை  எனக்கு  பேரன்புடன்  வழங்கினர்.  அலுவலகத்திலும் சரி,  பொது வாழ்விலும்  சரி,  குடும்பத்திலும்  சரி,   குருவி  தலையில்  பனங்காய்  என்பதுபோல்  எனக்கு  நிறைய சுமைகள், பொறுப்புகள்;  பேராசையால்  அளவிற்கு மேல்  எடுத்துப்  போட்டுக்கொண்டு செயல்படும்போது, சிலவை  பின்னர்  பார்த்துக் கொள்ளலாம்  என்று  விடுபட்டுப்  போய்விடும்.  அப்படி  விடுபட்டுப்போன  ஒன்றுதான்  இந்தச்  சிற்றிதழ்களைப்  படித்து  அவர்களுக்கு  எனது  நன்றிகளையும்,  கருத்துக்களையும்  தெரிவித்துகொள்வதும்.  மேலும்  சில  இதழ்கள்  பார்த்த  மாத்திரத்திலேயே  என்னைப்  பெரிதும்  கவர்ந்தன.  அவைகளுக்கு  எனது  சந்தாவை  அனுப்பி  அவைகளுக்கு  ஆதரவு  தெரிவிப்பதுடன்,  அவற்றை  படித்து  இன்புறவும்  செய்யலாம்  என்று  நினைத்திருந்தேன்.  இன்றுவரை  அதில்  எதுவுமே  நடைபெறவில்லை.  ஆனால்  கலந்துகொண்ட  சிற்றிதழ்கள்  பல  நன்றிக்கடிதம்  எழுதின,  தங்கள்  இதழில்  காரைக்குடி  புத்தகத்  திருவிழாவைச்  சிலாகித்து, எனக்கு  நன்றி  கூறி  கருத்துக்களை  வெளியிட்டிருந்தனர். இத்தனை  ஆண்டுகளுக்குப்பின்  பெட்டி  பெட்டியாக  நான்  சேர்த்து  வைத்திருந்த  புத்தகக்  குவியல்களையும்,  இதழ்களையும்,  மற்ற  ஆவணங்களையும்  பிரித்தெடுக்கும்போது  அந்த  சிற்றிதழ்களில்  சில  வெளிவந்தன.  அவற்றை  பிரித்துப்  படிக்கும்போது  மனம்  கனத்தது,  நெஞ்சில் நெருஞ்சிகள்  உறுத்தின.  திருநாளைப்போவாராக வாழ்ந்திருக்கிறேன், எப்படிப்பட்ட  வாய்ப்புக்களை  இழந்திருக்கின்றேன்  என்று  வேதனைப்படுகிறேன்.  இருக்கட்டும்.  அந்த  இதழ்களில்  ஒன்றான  ‘காளான்’  என்ற  ஒரு  அற்புதமான  இதழ்  பற்றி  பின்வரும்  நாட்களில்  பதிவு  செய்யலாம்  என்று  எண்ணுகிறேன்.           

சூரியின் டைரி-33: வள்ளலார் பிறந்ததினம்

இன்று 2010-ம் வருடம் அக்டோபர் மாதம் ஐந்தாம் நாள்.  இன்று பிரதோஷம்.  ஊரிலிருந்தால் நகர சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டிருப்பேன்.  இங்கு சென்னையில் நான் இருக்கும் இடத்திலிருந்து  சிவன் கோவில் தேடி அலைய முடியாது.  மேலும் நாளை ஊர் கிளம்பியாக வேண்டும்.  வேலைகள் நிறைய முடித்தாக வேண்டும்.


அடுத்து இன்று வள்ளலார் பிறந்ததினம் என்று நாட்காட்டி கூறுகிறது.  வள்ளலார் என்ற அந்த சொல்லைப் பார்த்ததும் மனமெல்லாம் நெகிழ்கிறது.  வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளல் அல்லவா அவர்!  

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி 
தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி!



தம்பி நெல்லையப்பனுடன் ஒருமுறை வடலூர் சென்றிருந்தேன்.  அங்கு தொடர்ந்து  ஒலித்த மேலே உள்ள மந்திரம் என் மனதில் ஆழப் பதிந்து விட்டது.  அங்கே ஒருவர் திருவருட்பாக்களை நெக்குருகப் பாடினார்.  காதில் தேன் பாய்ந்தது.  அங்கே குறிப்பிட்ட பகுதி  தாண்டி செல்ல புலால் உண்ணாதவர்க்கே அனுமதி என்றார்கள்.  அன்றே நினைத்தேன் புலால் உண்பதை நிறுத்தவேண்டுமென்று.  ஆனால் முடியவில்லை.


சில மாதங்களுக்கு முன் திருப்போரூர் சென்றிருந்தபோது,  வள்ளலார் அடிபற்றி வாழும் மகான் ஒருவரை அங்கு கண்டேன்.  அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே புலால் உண்பீர்களா என்பதுதான்.  அந்த நிமிடமே இனி புலால் உண்பதில்லை என்று முடிவெடுத்தேன்.  இறையருளால் இன்றுவரை உறுதியாக இருக்கிறேன்; இனியும் இருப்பேன் என்று நம்புகிறேன்.


வடலூர் பற்றியும், வள்ளலார் பற்றியும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை என் அரைகுறை நினைவிலிருந்து இங்கே பதிவு செய்கின்றேன்.  


வடலூரில் தைப்பூச ஜோதி கண்டேன் – அங்கே
வள்ளலார் ஏற்றிவைத்த நீதி கண்டேன்.


வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளல் கண்டேன்
தேடிய கருணை கண்டேன்
தெய்வத்தின் காட்சி கண்டேன் 
பாடிடும் அருட்பாவில் நெஞ்சமே உருகக் கண்டேன்
நாடிடும் அன்பர்க்கெல்லாம் நலமே பெருகக் கண்டேன்


ஏழுகால பூஜையிலே என்னையே நான் மறந்தேன்
ஏழுதிரை விலகிடவே இன்பமே நானறிந்தேன்.
சூழ வந்த வினைகளெல்லாம் ஓடுகின்ற மாயம் கண்டேன்
சுடர் விடும்  மெய்ப்பொருளாய் ஜோதிஎனும் தீபம் கண்டேன்.


குறைந்த பட்சம் இன்று முழுக்க யார் மீதும் கோபம் கொள்ளக்கூடாது, காழ்ப்புணர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது,  யாரையும் வெறுக்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டேன்.  ஆனால் காலையில் செய்தித்தாளை எடுத்ததும் அதற்குச் சோதனை வந்தது.  அரசியல்வாதியின் மகன் ஒருவன் அரசுப் பேருந்து ஊழியர் ஒருவரை அடித்ததாகவும்,  அதையடுத்து பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ததாகவும் அதனால் மக்கள் அவதிக்குள்ளானதகவும்  செய்தி.  வள்ளலாரை நினைந்து  ஒருவாறு மனச் சமாதானம் செய்துகொண்டு,  ஆத்திரத்தை கைவிட்டேன்.   இன்று முழுவதும் இயன்றவரை அந்த மகானை, கருணையின் திருஉருவை,  நினைவில் கொண்டு செயல்படுவேன். 

சூரியின் டைரி-32: மாயையும் நானும்

எல்லாம்  மாயை,  எல்லாம்  பொய்;   வாழ்வே  மாயம்,  மண்ணாவது  திண்ணம்  என்று  வேரில்  வெந்நீர்  ஊற்றும்  தத்துவங்களுக்கு,   நம் உற்சாகத்தை,  நம்பிக்கையை,  செயல்  ஆற்றலைக்  குறைத்து,  நம் முயற்சிகளுக்கு  முட்டுக்கட்டை  போடும்  சிந்தனைகளுக்கு  இந்நாட்டில் பஞ்சமில்லை;  மாயாவாதம்தான்  பாரதத்தைச் சீரழித்து,  இந்தியர்களை  வெள்ளையர்களின்  அடிமையாக்கி  வைத்தது  என்று  மாயாவாதத்தைக்  கடிவோர் உண்டு.
இது  தவறு;  மாயை  என்றால் என்ன  என்பதைச் சரியாகப்  புரிந்துகொண்டு,  வாழ்க்கைப்  பாதையைச்  சரியாக  அமைத்துக் கொண்டால்  பிறவிப்பயனை  அடையலாம் என்பது  எதிர்வாதம்.
இருக்கட்டும்,  மாயை  என்றால்  என்ன? உண்மையைப் பொய்யாகவும்,  பொய்யை  உண்மையாகவும்,  இருப்பதை  இல்லாததாகவும்,  இல்லாததை  இருப்பதாகவும்  காட்டும்;  ஒன்றுமில்லாததை  அதுவே  எல்லாம்  என்பது  போலவும்,  முக்கியமானதை  ஒன்றுமில்லாதது போலவும்  காட்டும் வல்லமை  மிக்கது  மாயை.  பந்தம்,  பாசம்  போன்ற  பலவற்றாலும்  நம்மைப்  பிணைப்பது  மாயை.  வாழ்வின்  மேலான  குறிக்கோளை  மறக்க வைத்து,  நம்மை  அறியாமை  இருளில்  மூழ்க  வைப்பது  மாயை.  நம் அறிவுக்கண்ணை  மறைத்து,  நம்மைக் குழம்ப வைத்து,  தடுமாறவைத்து,  தவிக்கவைத்து,  தவறிழைக்கவைத்து,  தண்டனையில் சிக்கவைத்து,  பாதை  மாறவைத்து,  நம் வாழ்வை  சீரழிக்கும்  ஆற்றல்  கொண்டது  மாயை என்றெல்லாம்  கூறப்படுகிறது.  சரி  இருந்துவிட்டுப் போகட்டும்;  மாயையை  எவ்வாறு  அடையாளம்  கண்டுகொள்வது?  அதை  எவ்வாறு  வெல்வது?
 அது  அவ்வளவு  எளிதல்ல. பெரும்  ஞானிகளும்,  மகான்களும், முனிவர்களும்கூட  மாயையிலிருந்து  மீளமுடியாமல், கட்டுண்டு, தடுமாறியிருக்கின்றனர்  என்று  படிக்கிறோம். மாமுனிவர்  வசிஷ்டர்  வாயால்  பிரம்ம ரிஷி  என்று  போற்றப்பட்ட  விசுவாமித்திர  முனிவர்  மாயையில் சிக்குண்டு தடுமாறவில்லையா?  பூமியில்  பிறந்த  அனைத்து  உயிர்களுக்கும்  மாயை  ஒரு மாபெரும்  தடைகள்;  ஒவ்வொருவரும்  முழுமை  பெற  தடையைக்  கடன்தேயாக வேண்டும்; மாயை என்பது அச்சுறுத்தும்  ஒரு  தவிர்க்கமுடியாத  தேர்வு;  இதில் தேராவிடில்  வாழ்க்கையில் தோற்றவராவோம்.
சீதையைப்  பிரிந்து,  துயருற்று  ஸ்ரீ ராமன்  கண்ணீர்  விட்டதை, பிரம்மமே  மாயையால்  கட்டுண்டு  அழுதது  என்பார்  ஸ்ரீ  ராமகிருஷ்ண பரமஹம்சர்.  வராக அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு,  அசுரனை வதம் செய்தபின்னும்,  வீடு திரும்பாமல்,  மாயையால் கட்டுண்டு  பன்றியாகத்  தன் குட்டிகளுடன்  திரிந்தார்.  தேவர்கள் அவரிடம் வந்து  தேவலோகம் திரும்பவேண்டியும்,  அவர்  செவிசாய்க்கவில்லை.  இறுதியில்  சிவபெருமான்  தோன்றி  தனது  சூலாயுதத்தால்  அந்தப் பன்றியை வீழ்த்த,  மாயை  எண்ணிச்  சிரித்தவாரே  மகாவிஷ்ணு  வைகுண்டம்  திரும்பினார்  என்று  படித்திருக்கிறேன்.  இதையெல்லாம் என்னும்போது  மாயையின்  வலிமையை  உணர முடிகிறது.
என் வாழ்வில் மாயை  எப்படியெல்லாம்  விளையாடியிருக்கிறது!  குறிப்பாக, எனது  போது  வாழ்க்கையில்.  என்  வாழ்வின்  ஒரு  கட்டத்தில்  என்னையுமறியாமல்  பொதுவாழ்வில்  நாட்டம் கொண்டு,  ஈடுபட  ஆரம்பித்தேன்.  ‘ஈடுபட’  என்பது  மிகச்  சரியான  வார்த்தை.  ஏனெனில்  ஏதாவது ஒன்று  மனதிற்குப் பிடித்து, அதைப்  பற்றி விட்டால்  அதிலேயே மூழ்கிவிடுவேன்; பைத்தியமாகிவிடுவேன்.  இது என்னுடைய பெரிய குறைபாடு.  இதனால்  நான்  அடைந்த  கஷ்டங்கள்,  துன்பங்கள், துயரங்கள், மன வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல.  
அலுவலக மனமகிழ் மன்றம்,  அலுவலக உணவகம்,  ஆரோக்கிய நிலையம்  என்ற  ஒரு  ஹோமியோ  பயிலகம் மற்றும்  சேவை  மையம்;  அப்ரோச்  எனும்  தூய  ஹோமியோபதி  பிரச்சார சங்கம்,  FASOHD   எனும்  மனித  மேம்பாட்டு  அறிவியல்  பேரவை  ஆகியவை  நான்  செயல்பட்ட  அமைப்புகள்.  இவையனைத்தும்  ஒன்றன் பின்  ஒன்றாக,  ஒவ்வொன்றும்  ஒரு  கால கட்டத்தில்  என்  வாழ்வில்  வந்தவை.  எதிலுமே  என்னால்  நிலைத்திருக்க முடியாமல்  வெளியேறவேண்டிய  கட்டாயம்  ஏற்பட்டது.  ஒரே  பைத்தியமாக  இருந்துவிட்டு – செயல்பட்டுவிட்டு – சாதனைகள் புரிந்துவிட்டு –  ஆளைவிட்டால் போதும்  என்று  துண்டைத் தோளில் உதறிப் போட்டு வெளியேறி இருக்கிறேன்.
என் மனைவி  என்னைக்  கேலி செய்வாள்:  “எதிலாவது நிலைத்து இருந்திருக்கிறீர்களா?  எல்லாவற்றையும்  பாதியிலேயே விட்டுவிட்டு  வெளியேறி விடுகிறீர்களே;  நீங்கள்  பொது  வாழ்க்கைக்கு  லாயக்கில்லாதவர்”   “ஒன்று  இந்த  எல்லை,  அல்லது  அந்த  எல்லை;  எல்லோரையும்போல்  ‘நார்மலாக’  இருக்கக்கூடாதா?”  உண்மைதான்,  நான்  ஒரு  துருவ சஞ்சாரி.
ஒன்றன்பின்  ஒன்றாக, உதைவாங்கி ஒன்றைவிட்டு  வெளியேறி –  சிறிய  இடைவெளிக்குப்பின்  அடுத்தது –  என்று  உலா வந்திருக்கிறேன்.  ஆனால்  எல்லா  இடத்திலும்  ஒரே கதைதான்.  சிந்திப்பேன் ஒவ்வொரு முறையும்:   என் தவறென்ன?  நான்  என்ன  செய்திருக்கவேண்டும்?    மாயையின் மயக்கமா?  கடும் பற்றா?  சகிப்புத்தன்மை இன்மையா?  தேர்ந்த அமைப்பு  சரியில்லையா?
ஒரு நாள்  திடீரென்று  ஒரு  வாசகம் என் மனதில் பட்டது, சுட்டது:  “Maya is nothing but Name and Form ”   மனதில் ஒலித்த  இந்த  வாசகத்தை  என்  பொது வாழ்க்கையில் பொருத்திப் பார்த்தேன்.  அநேகமாக  எல்லா அமைப்புகளிலும் இந்தப்  பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறேன்.  உயிரைக் கொடுத்து, சிந்தித்து, செயலாற்றுபவர் ஒரு புறம்;  அவர்கள் ஓரம் கட்டப்படுவர், காணாமல் போய்விடுவர்.  எதுவும் செய்யாமல் எல்லாவற்றையும் தனதாகக்  காட்டிக்கொண்டு,  எல்லாவற்றிலும் தம் பெயரைப் பதித்துக் கொண்டு, மேடைகளை ஆக்கிரமித்து,  புகைப்படங்களில் நிறைந்து,  தாமே எல்லாம்  என்பதுபோல்  வலம் வரும் கூட்டம் மறுபுறம்;  இதுதான் உண்மை;  இதுதான் நாட்டுநடப்பு;  பெயர் மயக்கம்,  புகழ் மயக்கம்,  மேடை மயக்கம்,  தன் மயக்கம் என்று இப்படிப்  பல மயக்கங்கள் மனிதனுக்கு என்று மாயை நான் மொழி பெயர்த்தேன்.  எதிலும் பெயர் வராமல்,  முக்கியத்துவம் பெறாமல்,  மேடையை ஒதுக்கி,  புகைப்படம், காட்சி என்று வரும்போது காணாமல் போதல் போன்ற வழிமுறைகளைப்  பின்பற்றினேன்.  ஏனெனில்  நான் பொது வாழ்க்கைக்கு வந்தது பெயருக்கும் புகழுக்காகவும் அல்ல;  என் வாழ்வில் ஒரு நிறைவில்லாமல் இருந்தது;  பொது வாழ்க்கையில் பலருக்கும் பயன்பட வாழ்க்கையில் அது கிடைப்பதாக உணர்ந்ததால் பொது வாழ்க்கையில் தொடர்ந்தேன். அதன் பின்  என்னால் சிறப்பாகச் செயல்பட முடிந்தது;  நிறைய சாதிக்க முடிந்தது;  மன நிறைவு கிடைத்தது.   இதில் வேடிக்கை  என்னவெனில்  பெயரும், புகழும் என்னைத் தேடி வந்தது.  ஆனாலும்  இறுதியில் கடைசி அமைப்பிலிருந்தும் வெளியேறவேண்டிய நிலை.  எனது வழிமுறைகள் போதவில்லை.  இன்னும் ஏதோ தேவைப்பட்டது.  மாயைக்குப்  பல பரிமாணங்கள்  உள்ளதென்பதை அப்போதுதான்  உணர்ந்தேன். மாயையை முற்றிலுமாக அறிந்து,  அதிலிருந்து மீண்டாலன்றி,  துன்பம்தான்.    தற்போது நான் எந்தப் பொது அமைப்பிலும் இல்லை.
ஆனால்  ஒன்று – என் முயற்சிகள், செயல்பாடுகள்   அனைத்தும்   வீண்  என்றோ, அதனால் எனக்கு   எந்தப் பயனும் இல்லை  என்றோ  நான் கருதவில்லை.   நிச்சயமாக  ஒவ்வொரு அமைப்பிலும் நான்  வளர்ந்திருக்கிறேன்;  பாடம் கற்றிருக்கிறேன்;  கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பித்திருக்கிறேன்.  இவை  போதாவா?
விவேகானந்தரின்  வாசகம் ஒன்று  நினைவிற்கு வருகிறது:  “Man is not travelling from error to truth but smaller truth to higher truth .”   என் பொதுவாழ்க்கையும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.  அதை  பெருமையை நோக்கிய ஒரு பயணமாகக் கருதினால் (Search for the Ultimate Truth), மன வேதனை குறைகிறது,  ஆறுதல்   கிடைக்கிறது, தொடர்ந்து நடைபோட  உத்வேகம் பிறக்கிறது.

 

சூரியின் டைரி-31: செப்டம்பர் பதினொன்று சிந்தனைகள்

முதலாவதாக, இந்த செப்டம்பர் பதினொன்று அன்று விநாயகர் சதுர்த்தி.  சென்னையில் மகள் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினேன்.  பிறகு உறவினர் வீட்டிற்குச் சென்றேன்.  அங்கும் மோதகம் உண்டு விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்.  தமிழ்நாட்டில் எந்த ஊருக்குச் சென்றாலும் வீதிக்கு வீதி, மூலைக்கு மூலை ஒரு சிறிய வினயாகர் கோவிலாவது இருக்கும்.  பல இடங்களில் கூரையும் இருக்காது, கதவும் இருக்காது.   எந்த நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் பிள்ளையார் சுழியுடன், பிள்ளையாரை வணங்கி ஆரம்பிப்பது நமது மரபு.  ஒரு உருண்டை மாவிலோ, சானத்திலோ பிள்ளையாரை உருவாக்கி விடலாம்.  பிள்ளையார் என்றாலே  இந்த எளிமைதான்  எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது.   

சென்னையில் வினயாகர் சதுர்த்தியை முன்னிட்டு பல இடங்களில் சாலையோரம் ஐந்தடி, பத்தடி உயர வண்ண வினயாகர் சிலைகள் அலங்கரித்தன.  மகாராட்டிரத்தைப்போல் தமிழ்நாட்டிலும் விநாயகர் வழிபாடும், குறிப்பாக வினயாகர் சதுர்த்திக் கொண்டாட்டமும் சிறப்பாகிக் கொண்டே போகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். 

இரண்டாவதாக,  இந்த செப்டம்பர் பதினொன்று அன்றுதான்  தன்னையாரும் எதுவும் செய்துவிடமுடியாது என்ற அகந்தையில், இறுமாப்பில் இருந்த வல்லரசான அமெரிக்காவின் ஆணவத் தலையில் இடி விழுந்த நாள்.  இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்து அல்-கொய்தா  அமெரிக்காவை அரளச் செய்த நாள்.    ஆப்கானிஸ்தானில் சோவித் ரஷ்யாவிற்கு  எதிராக அமெரிக்கா வளர்த்துவிட்ட  அல்கொய்தா  அவர்கள் தலையிலேயே மண்ணைப்போட்ட  நாள்.  அதன் பின்னரும் படிப்பினை பெறாமல், இந்தியா போன்ற நாடுகளில் பயங்கரவாதம் தலை விரித்தாடுவதைக்  கண்டுகொள்ளாமல், பயங்கரவாத நாடான பாகிஸ்தானுக்கு இன்றுவரை மேலும் மேலும்  ஆயுத தளவாடங்கள் வழங்கிவருவதும், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு துணை புரிகின்றது என்ற உண்மையை இன்னும் உணராததும்தான் வேதனையான உண்மை.  “வரலாற்றிலிருந்து  நான் கற்றுக் கொண்ட உண்மை, அதிலிருந்து யாரும் எதுவும் கற்றுக் கொள்வதில்லை என்பதுதான்” (I have learnt from History that people seldom learn anything from it) என்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது.   நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும்,  வழிமுறைகள் தவறாக இருந்தால் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்ற மாபெரும் உண்மையை யாரும், குறிப்பாக  ராஜிய பாரம்  சுமக்கும் எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.  இது உலகத் தலைவர்கள் அனைவருக்குமே பொருந்தும். 
மூன்றாவதாக மஹாகவி பாரதியின் பிறந்த நாள். சமீப காலமாக  பாரதி பற்றிய நூல்களைத் தேடித் தேடி  படித்துவருகின்றேன்.  தற்போது பாரதி கட்டுரைகளைப் படித்து வருகிறேன்.  பழனியப்பா  பிரதர்ஸ் பதிப்பித்து வெளியிட்டுள்ள  இந்த அருமையான 571 பக்கங்கள் கொண்ட இந்த அற்புதமான நூல் (விலை ரூபாய் தொண்ணூறு மட்டும்)  அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று, குறிப்பாக பாரதி அன்பர்கள்.  பாரதியின் மேன்மையான சிந்தனைகள் சிலிர்க்க வைக்கின்றன.  இதிலிருந்து பாரதியின் சில சிந்தனைகளை மட்டுமாவது இந்த வலைப்பூவில்  பின்னர்  பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.  (பாரதியின் படைப்புகள் அனைத்தையும்  நாட்டுடமையாக்கிய தமிழக அரசிற்கு நன்றி!).  தற்போது அவரது ஒரே ஒரு சிந்தனையை மட்டும் இங்கே பதிவு செய்து இதை நிறைவு செய்கிறேன்: 

கோவிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி;  தெய்வத்தை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி;  பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள் புரியும்.  துளிகூட, ஓர்  அணுகூட  மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன்.”

சூரியின் டைரி-30: ஆசிரியர் தின சிந்தனைகள்

இன்று நாடெங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.  முனைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவர், நாட்டின் முதற் குடிமகன், புகழ் பெற்ற சிந்தனையாளர் என்ற அடையாளங்களை விட ஒரு ஆசிரியர் என்பதையே பெருமையாக நினைத்தார்.  அதன்படி  அவரது  பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  இந்த நன்னாளில் நாட்டின் வருங்காலச் சிற்பிகளை உருவாக்கும் உன்னத வாய்ப்பைப் பெற்றுள்ள  ஆசிரியப் பெருந்தகைகளுக்கு எனது பணிவான வணக்கங்களும், ஆசிரியர் தின வாழ்த்துக்களும்.
இத்தருணத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி பற்றிய என்னுடைய சிந்தனைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.    
நமது பாரம்பரிய மிக்க சமுதாயத்தில் அன்னை தந்தையோடு குருவையும் தெய்வமாக வணங்கும் பழக்கம் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டால்  அன்றைய நமது கலாச்சார மேன்மைக்கும், இன்றைய சரிவிற்கும்  காரணம் புரியும்.  ஆதர்ஷ ஆசிரியர்களும் சரி, லட்சிய மாணவர்களும் சரி, இன்றைக்கு அருகிப் போய்விட்டார்கள்.  கல்வியே தரம் தாழ்ந்து, ஒரு கேவலமான வியாபாரமாகி விட்டது.  ஆனால் இன்றைக்கும் மேன்மையான ஆசிரியர்களும், அவர்களைப்போற்றும் மாணவர்களும் இல்லாமலில்லை.  எண்ணிக்கைதான் குறைந்துவிட்டது.
மனிதமேம்பாட்டு அறிவியல் அமைப்பில் இருக்கும்போது நண்பர்களுடன் விவாதித்திருக்கிறேன்.  ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க நல்ல ஆசிரியர்கள் தேவை;  நல்ல ஆசிரியர்கள் இல்லாமல் நல்ல மாணவர்கள் இல்லை; நல்ல மாணவர்கள்தான் நல்ல பிரஜைகள் (குடிமகன்கள் என்ற வார்த்தைக்கு இன்று அர்த்தம் வேறு, ஆகவேதான் பிரஜைகள்);  நாளை நாட்டின் முக்கிய பொறுப்புகளை வகிக்கப் போகிறவர்கள்; நாட்டின் உயர்வு அவர்கள் கையில்தான்.  இந்த எண்ணத்தில்தான் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும்,  பல்கலைக்கழகங்களுக்கும் சென்று,  சீரிய சிந்தனைகளை விதைக்க, விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறிய அளவில்,  ஏதோ எங்களால் இயன்றவரை முயன்றிருக்கிறோம்.   ஆசிரியர்களோடும், மாணவர்களோடும் கலந்துரையாடி, கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வோம்.  எங்கள் அமைப்பிலேயே பல லட்சிய ஆசிரியர்கள் இருந்தார்கள்.
கல்வித்துறையில் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும் கால்வைத்த பிறகு கல்வித்துறை மிக மோசமான நிலையை அடைந்து விட்டது.  சொல்லிக்கொள்ளலாம், ஆண்டுக்கு அதிக பட்ச பொறியாளர்களை, பட்டதாரிகளை உருவாக்குகிறோம் என்று.  அப்படி உருவானவர்கள் வெளிநாடுகளில் பல சாதனைகள் படைத்து, நாட்டுக்குப் பெருமை தேடித் தருகிறார்கள், நிறைய அந்நியச் செலாவணி ஈட்டித் தருகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.   ஆனால் கல்வியின் அடிப்படை வெறும் அறிவைப் புகட்டுவது,  சாதனையாளர்களை உருவாக்குவது  மட்டுமல்ல, உயர் பண்புகளை ஊட்டுவதும் தானே.  அப்படிப் பண்பாளர்களை உருவாக்கி இருக்கிறோமா?  எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் பொய், பித்தலாட்டம், அநியாயம், அராஜகம், லஞ்ச லாவண்யம்; நேர்மையான வழியில் சம்பாதிக்க வழிகள் இருந்தாலும், பேராசையால் எப்படியாவது குறுக்கு வழியில் நிறையப் பணம் குவிக்கவேண்டும், அளவில்லாத சொத்து சேர்க்கவேண்டும் என்ற மனப்பான்மையல்லவா எங்கும் மேலோங்கியிருக்கிறது. 

நான் ஆசிரியர்களை மட்டும் ஏதோ குறைகூறுகிறேன் என்று எண்ணவேண்டாம்.  இது ஒரு முக்கிய சமுதாயப்  பிரச்சினை.  இதன் அடிப்படை என்ன?  இந்தச் சரிவிலிருந்து மீள  என்ன வழி?  என்று அனைவரும் ஆழமாகச் சிந்தித்துச், செயல்படவேண்டிய தருணம் இது.  இதற்கு மேலும் கீழே போக முடியாது. 
கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டி வதைக்கும் இந்நாளில் ஆசிரியப் பணிக்கு வருபவர்களெல்லாம் விரும்பி, லட்சியத்தோடு அந்தத் துறைக்கு வருகிறார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்.  ஏதோ ஒரு வேலை, இதுதான் கிடைத்தது, என்பதுபோல் ஆசிரியத் துறையில் உள்ளவர்கள்தான் இன்று அதிகம்.  அதிலும் என் தலையெழுத்து, இதில் வந்து மாட்டிக் கொண்டேன் என்று சொல்பவர்களும் நிறைய இருக்கிறார்கள்.  பெரும்பாலும் கையூட்டு இல்லாமல் எந்த வேலையும் இல்லை என்பதும் இன்றைய நிலை.  பெரும்பாலும் லட்சக் கணக்கில் கொடுத்து வேலைக்கு வருகிறார்கள்.  இப்படிப்பட்டவர்கள் எப்படி மாணவர்களுக்கு லட்சிய ஆசிரியர்களாக அமையமுடியும், நல்ல வழிகாட்ட முடியும், உயர் பண்புகளை ஊட்டமுடியும்?    நாட்டின் நலனில், எதிர்காலத்தில் அக்கறை உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டும்.   

சூரியின் டைரி-29: கண்ணன் வந்தான், கண்ணன் வருவான்!

நேற்று தொலைக்காட்சியில் காலை நேரத்திற்கேற்ற நல்ல பக்திப் பாடல் கேட்கலாம் என்ற எண்ணத்தில் சேனல் மாற்றம் செய்துகொண்டே வந்தேன்.  எதிர்பார்த்ததுபோல் மனதிற்குப் பிடித்த பாடல் கிடைத்தது.  ராமு திரைப்படத்தில் வரும் “கண்ணன் வந்தான், எங்கள் கண்ணன் வந்தான்” ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.  பாடலில் லயித்தேன், மனம் கசிந்தேன்.  பாடல் முடிந்தபின்னும் மனம் அந்தப் பாடலிலேயே இருந்தது.  பொறி தட்டியது.  நேற்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி.
கண்ணன் திருவடி எண்ணுக மனமே என்று மனதை ஓடவிட்டேன்.  கண்ணனின் லீலைகள் மனத்திரையில் ஓடின.
கோகுலத்தில் பிஞ்சுப் பாலகனாக வெண்ணை திருடி, குறும்புகள் செய்து கோபியர்கள் மனம் கொள்ளைகொண்ட கோபிகிருஷ்ணன்;  ஆயர்பாடிச் சிறுவர்களோடு ஆநிறை மேய்த்து, விளையாடிக் களித்த கோபாலகிருஷ்ணன்; ராதையின் பேரன்பில் கட்டுண்ட ராதாகிருஷ்ணன்;  வேங்கடத்தைக் குடையாகப் பிடித்த வேங்கடகிருஷ்ணன்; வாழ்க்கையே ஒரு மாயா  பஜார் என்று  காட்டிய மாயக்கண்ணன்;  பார்த்தனுக்கு மட்டுமன்றி, பாருலகோர் அனைவருக்கும் மாயையிலிருந்து விடுபட கீதை உரைத்த கீதகிருஷ்ணன்; வாழ்க்கை முழுவதையும் ஒரு யோகமாக வாழ்ந்துகாட்டிய யோகேஷ்வர் கிருஷ்ணன்;  எதிலும் வெற்றி, எல்லாவற்றிலும் வெற்றி என்று வெற்றி கொண்ட ஜெயகிருஷ்ணன்;  மெய்யடியார் குறை தீர்க்க ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்த ராமகிருஷ்ணன்;  ஆதி அந்தமற்ற அனந்தகிருஷ்ணன்; கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி! 
பாரதிக்கு கண்ணன் – மெய்க்காதலன், உயிர்க்  காதலி, தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆருயிர்த் தோழன், ஆதர்ஷ சேவகன்.  கண்ணதாசனுக்கு கானம் பாடிய ஸ்ரீ கிருஷ்ணன்.
என் சிறுவயதில் என் அன்னை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று மாக்கோலமிட்டு, கண்ணனின் பிஞ்சுப் பாதங்கள் வீட்டுக்குள் வருவதுபோல் வழி நெடுக பாதச்சுவடுகளைப் பதித்தது, ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் படைத்த  தின்பண்டங்கள் பிரசாதமாக, அவற்றை உண்டு மகிழ்ந்தது எல்லாம் நினைவில் ஆடின.
எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குமோ, அப்போதெல்லாம் அதை அழித்து, தர்மத்தை நிலை நாட்ட மீண்டும் மீண்டும் வருவேன் என்று கீதையில் ஆறுதல் வார்த்தைகள் நல்கினான். அவன்  இன்று அராஜகமும், அக்கிரமும், அநியாயமும், அடாவடித்தனமும் மலிந்து அதர்மத்தின் உச்சத்தில் வாழ்கிறோம்.  இதற்கு மேலும் எங்களால் தாங்க முடியாது.  கண்ணா!  நீ வரமாட்டாயா, இந்தக் கம்சர்களை வதம் செய்யமாட்டாயா, எங்கள் உள்ளத்தைத்  தூய்மைப்படுத்தி, கோவிலாக்கி, அதில் நீ வந்து குடியேற மாட்டாயா , எங்கள் மனக் குழப்பங்கள், மடமைகள் நீக்கி நாங்கள் முழுமை பெற வழிகாட்ட  மாட்டாயா  என்று மனம் ஏங்குகிறது.
கண்ணன் வருவான்!
நிச்சயம் வருவான்!! 
அவன் வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருப்போம்!!!