இன்றைய சிந்தனைக்கு-42:

பிறர் உடல் அல்லது உள்ளத்தைப் புண்படுத்தாமை மட்டும் அஹிம்சை அல்ல. சாதாரணமாக இதை அஹிம்சையின் வெளிப்படைத் தத்துவம் எனலாம். உண்மையான அஹிம்சை விருப்பு வெறுப்பற்ற நிலையில் உள்ளது. – காந்தியடிகள்

"சத்யாக்கிரகம்" – பரதன் குமரப்பா

‘சத்தியாக்கிரகம்’ என்ற வார்த்தையின் பொருள் உண்மையை உறுதியாகக் கடைப்பிடிப்பது என்பதாகும். சத்தியமே காந்திஜிக்குக் கடவுள். ஆகையால் சத்தியாக்கிரகம் என்ற சொல், கடவுளிடம் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு அதற்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களுடைய வாழ்க்கைமுறை என்று பொதுவாகப் பொருள் படுகிறது. எனவே உண்மையான சத்தியாக்கிரகி கடவுள் பக்தனாவான்.

இப்படிப்பட்ட ஒருவன் இவ்வுலகில் தீயகாரியங்களை எதிர்க்காமல் இருக்கமுடியாது. உலகில் அநீதி, கொடுமை, சுரண்டல், ஆக்கிரமிப்பு ஆகியவை இருப்பதை அவன் காண்கிறான். தன்னிடமுள்ள சக்திகளைஎல்லாங்கொண்டு அவைகளை அவன் எதிர்க்க வேண்டியிருக்கிறது. இப்புனிதப்போரில் அவனுடைய நன்கூரமாயிருப்பது சத்தியம் அல்லது பரம்பொருள். எல்லா உயிர்களும் ஒன்றென உணர்வதுதான் இவ்வுலகத்தில் சீரிய உண்மையாகையால் அன்புடன் எல்லோருக்கும் தொண்டு செய்வதன் மூலமே அதாவது அஹிம்சையின் மூலமே சத்தியத்தை அடையமுடியும். ஆகவே சாதரணமாகப் புரிந்துகொள்ளப்படுகிற குறுகிய பொருளில் சத்தியாக்கிரகம் என்பது ஆன்ம சக்தி அல்லது அஹிம்சையின் மூலம் தீமையை எதிர்ப்பதாகும்.

மஹாத்மா காந்தியின் ‘சத்தியாக்கிரகம்’ (தமிழ் மொழிபெயர்ப்பு) நூலுக்கு திரு பரதன் குமரப்பா அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதி.
நன்றி: காந்திய இலக்கிய சங்கம், மதுரை.

காந்தி ஜெயந்தி நினைவுகள்

இன்று காந்திஜீயின் பிறந்த நாள் இந்தியா மட்டுமன்று, உலக முழுவதும் கொண்டாடப் படுகிறது. இப்புனித நாளில் அந்த உத்தமருக்கு மலர் அஞ்சலி செலுத்திவிட்டு, அவருடைய ஒப்பற்ற எழுத்துக்களில் சிலவற்றை படித்துவிட்டு, அவற்றில் அற்புதமான சிலவற்றை என்னுடைய வலைப்பூக்களில் பதிவு செய்திருக்கிறேன் – யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

திரு க.சந்தானம் அவர்கள் எழுதிய “காந்தி காட்டிய வழி” என்ற குறுநூலிலிருந்து சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு:

“இறைவனிடம் ஆழ்ந்த பக்தியுண்டானால், அவனைப் பற்றித் தியானிப்பதும், அவனிடம் பிரார்த்தனை செய்வதும் சகஜ ஒழுக்கங்களாகின்றன. தினந்தோறும் அதிகாலையிலும், மாலையிலும் எங்கிருப்பினும் காந்தியடிகள் பஜனை செய்யத் தவறமாட்டார். அப்பொழுது எவர் விரும்பினாலும் அதில் சேர்ந்து கொள்ளலாம். அப்பொழுது பகவத் கீதையிலிருந்து சுலோகங்களும், துளசிதாஸ், சூர்தாஸ், கபீர், நரசி மேத்தா முதலிய பக்த சிகாமணிகளின் கீர்த்தனைகளும் பாடப்படும். பிற்காலங்களில் குரான், பைபிள் முதலிய மற்ற மதங்களிலிருந்தும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. ஆனால் அவர் தமது பஜனையை ஒரு கட்டாயச் சடங்காகச் செய்யவில்லை. பஜனை மூலம் ஆன்மா மலமொழிந்து தூய்மை பெறுவதொன்றே நோக்காக இருந்ததால், தனி நபருக்கோ, சமூகத்திற்கோ, நாட்டிற்கோ எவ்விதக் கோரிக்கையும் செய்து பிரார்த்திப்பதில்லை.

உடலுக்குக் கதிரவன் ஒளியும், பரிசுத்த வாயுவும் போலவேதான், ஆன்மாவிற்கு பக்தியும், தியானமும், பஜனையும். ஆனால் அவைகளே வாழ்க்கையாக மாட்டா. பக்தியையும், பஜனையையுமே வாழ்க்கையின் முக்கிய அலுவல்களாகக் கொண்டிருக்கும் மத சம்பிரதாயங்களைக் காந்தியடிகள் ஏற்கவில்லை. மடங்கள், பீடங்கள், சந்நியாச விடுதிகளைக் காந்தியடிகள் ஆதரிக்கவில்லை. இவ்வுலகில் தனது உடல், மனம், உள்ளங்களால் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து மதம் எவருக்கும் விலக்கு அளிக்க முடியாது என்று கருதினார். பணிபுரிந்துகொண்டே மனிதன் நூறாண்டு வாழ விரும்பவேண்டும். ‘தூய முறையில் செய்யும் கருமத்தால் பந்தம் ஏற்படாது’ என்று கூறுகிறது ஈசாவாஸ்ய உபநிடதம். இதோடு ‘உனது கடமை கருமம் செய்வதே; அதன் பலனை விரும்புவதல்ல. கருமத்தின் பலனைக் கருதாதே; கருமத்தைக் கைவிடாதே’ என்ற பகவத் கீதையின் உபதேசத்தையும் காட்டி, அவற்றைத் தமது வாழ்க்கைக்கும் மதத்திற்கும் மூலக்கொள்கைகளாகக் கொண்டார்.

காந்தியடிகள் சிறந்த கர்மயோகி. பகவத் கீதையின் முக்கிய உபதேசம் கர்மயோகமே என்றும், மற்ற ஞான, ராஜயோக பக்தி யோகங்கள் அதற்குப் பேருதவியளிக்கும் அங்கங்கள் என்றும் லோகமான்ய திலகர் செய்த வியாக்கியானத்தை காந்தியடிகள் முற்றிலும் ஆமோதித்தார். திலகர் பலவித அரசியல், கல்விப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், உண்மையில் ஒரு தத்துவ ஞானி, தீர்க்கதரிசி. காந்தியடிகளோ, பல துறைகளில் புரட்சிகரமான எண்ணங்களை வெளியிட்டபோதும், கர்ம வீரராக வாழ்ந்தார்.

நன்றி: “காந்தி காட்டிய வழி”, எழுதியவர்: க.சந்தானம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.