யோகசித்தி-75: கற்ற பயன்-2:

புலனை வென்றோனே விரிநூல் அளந்தாலும்
உள்ளத் துணர்வே உயர்வு.

வெள்ளம் வெள்ளமாக நூற்பெருக்கை மூளையால் அளந்தாலும், தனது உள்ளத்தில் எழும் கடவுள் உணர்வே உயர்ந்த அறிவாகும்.

யோகசித்தி-74: கற்ற பயன்-1:

கற்ற  வழியாற்றக்  கற்றோனே  கற்றோனாம்;
மற்றவன்  கற்ற  மேடம். 

நமக்கு  வேண்டுவது  அனுட்டானக்  கல்வி.  கல்வியுடன் பயிற்சியும் நிகழ வேண்டும்.  பாட்டும் குரலும் போலக்  கல்வியும் பயிற்சியும்.  கற்றவழியே நின்றோழுகக் கற்றவனே கல்விமான்.  கற்றும் அதன் வழி நில்லாது முரணாக வாழ்பவன் படித்த முட்டாள்  ஆவான்.

யோகசித்தி-73: கல்வி-5:

ஈகையுள் ஈகையாம் இன் கல்வி; பெற்றவனுக்கே
உழி எங்கும் இசை.

தீரர் வளரும் இனிய கல்வியளித்தலே ஈகைகளிற் சிறந்தது. அத்தகைய கல்வி கொடுத்தவனுக்குப் பெரும் புகழாகும். அதைப் பெற்றவனுக்கும் எங்கு சென்றாலும் புகழாகும்.

யோகசித்தி-72: கல்வி-4

மெய்யும் அறிவுடனே மேலாம் உறுதிபெறாப்
பொய்க்கல்வி யாலென் புகழ்?

அறிவுடனே, உடலும் மேலான உறுதிபெற வேண்டும். அப்படி இல்லாது மூளைச்சுமை ஏற்றும் கல்வி பொய்க்கல்வி. அதனால் என்ன சிறப்பு உண்டாகும்?

யோகசித்தி-71: கல்வி-3

ஆற்றல் மிகப்பெருக்கி  ஆளாக்கும்  கல்வியினைப்
போற்றுக  வீரர்  பொலிந்து.
நாட்டில் ஞானவீரரும், தருமவீரரும், கருமவீரரும் பெருக வேண்டும்.  வழியென்ன?  நாட்டிற்கேற்ற கல்விமுறை வகுத்தல்.  கல்வி எப்படி இருக்கவேண்டும்?  ஒவ்வொரு மாணவன் உள்ளத்தும், ஆதார சக்கிரங்களிலும் பொதிந்து கிடக்கும் ஆற்றலை, சக்தியை, புலமையை மிகவும் பெருக்கி, அவனை வீட்டிற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் நலமுற வாழும் ஆளாக்கவேண்டும்.  அத்தகைய கல்வியை வீரர் எழுந்து போற்றவேண்டும்.  உண்மையான கல்வியைப் பரப்பும் வீரர் பொலிய வேண்டும்.  

யோக சித்தி-70: கல்வி-2:

இயற்கை வளத்தோங்கி இயற்புலனைத்  தூண்டும்
இயல்பான  கல்வி  இனிது.

கல்வி எப்படி இருக்கவேண்டும்?  இயல்பாயிருக்க வேண்டும்.  அதாவது, உள்ளத்தில் உள்ள  அறிவூற்றைத்  திறந்து  அதனின்று  கல்வியறிவு  மலரும்படி செய்யவேண்டும்.  வித்தினின்று  கனிமரம்  துளிர்த்தெழுவது  போல,  ஆத்மசத்தினின்று  அறிவு  முளைத்தெழுந்து,  கலைக்கிளை  பரவிச் செழித்து,  சமுதாயத்திற்கு  இன்பக் கனிகளைத் தரவேண்டும்.  

யோக சித்தி-69: கல்வி-1

அறிவு  தொழிலொழுக்கம்  ஆண்மை  அழகாம்
திறமான  கல்வித்  திரு.

மேற்சொன்னவாறு  உள்ளிருந்து  அறிவைக் கல்லிஎடுப்பதே  கல்வியாம்.  மனிதனைப் பூரணப்படுத்தும்  திறமை வாய்ந்த கல்வியின் ஐந்துயிர்களாவன:-  (1)  அறிவு: தன்னறிவு, நூலறிவு; (2) தொழில்:  வறுமையற்று வாழ ஒரு நல்ல தொழில் திறமை; (3) ஒழுக்கம்: ‘அறவியலிலும் ‘,  ‘நடையியலிலும்’  காணும்  நல்லொழுக்கம்; (4) ஆண்மை: உடல் மனவுறுதி, ஆட்சித்திரமை, காரியத் திறமை, தைரியம் முதலிய வீரத் தன்மைகள்; (5) அழகு: இசை, காவியம், ஓவியம் ஆகிய அழகுக் கலைவளம்.

நல்லறிவு, நல்லொழுக்கம், நற்றொழில்வளம், நல்லாற்றல்,  நற்சுவையின்பம்  – இவையே கல்வியின் ஐந்துறுப்புக்கள்.  இவற்றில் ஒன்று குறைந்தாலும் கல்வி முற்றுப் பெறாது. …

கல்விக்கு, எண்ணெழுத்து கண்ணெனத் தகும்; தன்னறிவு தலைஎனத் தகும்; ஒழுக்கம் உலமெனத் தகும்;  ஆற்றல் உடலெனத் தகும்;  அழகுக் கலை வடிவெனத் தகும்.   மன இருள் ஒழிக்கும் மாசிலா ஞானம், பெரியார் சொல்லும் அரிய  நூற் பயிற்சி, உலகியல், வானியல், உயிரியல் அறிவு, ஆடை உணவிற்காகிய  நற்றொழில்,  வைரவுடலம் வைக்கப் பெறுதல், வீரத் திறமை, வித்தகப் பெருமை, அழகுக் கலைகள், அருட்பணி வளமை,  ஆருயிர்க்கு அன்பு இவை சீரிய கல்வியாம்.  

யோக சித்தி-68: அறிவு-5

நம்பு; நினை; முயல்; நாடொருமை;  ஞானமாம்
இன்பம்  பெருகும்  இனிது.
நான் சுத்தான்மா என்று நம்பு;  உறுதிகொள்;  அதையே நினை;  உள்ளார்ந்து தியானி.  முதலில் தியானம் ஓடாது, சித்தம் அலையும்.  சித்தத் திரைகளை வைராக்கியத்தாலும், பயிற்சியினாலும் அடக்கமுயல்;  சாதனம் செய்.  வேறு நினைப்புகளை விலக்கி, ஒருமை நாடு;  உள்ளே ஏகாக்கிரப்படு.  மனம் வெளிச்சென்றால் கவலை;  உட்குவிந்தால் களிப்பு.  மனம் உள்ளத்தில் நிலைத்தால் நான் ஆன்மா என்ற ஞானம் உண்டாகும்.  அதன் இன்பம் நாளுக்கு நாள்  இனிதாகப் பெருகும்.

யோக சித்தி-67: அறிவு-4

யானும்  உலகும்  அறிவுண்மை  இன்பமயம் 
ஏனச்சம்  என்றெண்ணிப்  பார்.

சுத்தான்மா நான்;  விசுவான்மா  உலகம்.  இரண்டும்  உண்மை, அறிவு, இன்ப நிறைவு, சச்சிதானந்த மயம்.   எதுவோ  அதுவாயிருக்கும்  ஒன்றைக்கண்டு அச்சமேன்?  சிங்கத்தை சிங்கம்  அஞ்சுமா?  அச்சம்  ஏன்?  எதை  யார்  அஞ்சுவது?  நினைத்துப்  பார்த்தால்  அச்சத்திற்கு இடமேயில்லை.   

யோக சித்தி-66: அறிவு-3

போக்குவரவற்ற பொருள் ஆன்மா;  நான்அதுவென்றே
ஏக்கமற்று இன்புற்று இரு.

இங்கு வந்து வாழ்ந்து செல்வதெல்லாம் இயற்கையுடலே, வினைச்சுமையே.  நான் ஆன்மா;  ஆன்மா போக்குவரவற்றுத்  தானே  தானாகத்  தாக்கற்றிருக்கும் நிலைப்பொருள்.  ‘அதுவே நான்’  என்று அறிந்து தெளிக.  அந்த  அறிவால்  உலகின் முக்குண விகாரங்களால்  வரும் ஏக்கம், கவலை, அச்சம்  அற்று,  எப்போதும் தன்னுளே தானாக, உள்ளத்தில் உள்ளபடி  இருந்து  இன்புறுக.   

யோக சித்தி-65: அறிவு-2

எங்குற்றோம்  என்னசெயல்  அங்கேக  என்றறிவோன் 
கங்குற்  கடற்  கடந்தோன்  காண்.

கங்குற்  கடற்   என்றால்  இருட்கடல்;  அஞ்ஞானக்கடல்.    aஅதைத்  தாண்டினாலே சுகம்  உண்டாகும்.  யார்  அதைத்  தாண்டவல்லவன்?  ‘இந்த உலகில் நாம் ஒரு  பட்சி  போலப்  புகுந்துள்ளோமே, எங்கிருந்து  நாம்  வந்தோம்?  என்ன  செய்ய  வந்தோம்?  பிறகு  நாம்  எங்கு  செல்லப் போகிறோம்?’  என்று  தன்னைத்  தானே  வினாவி,  ஆத்மவிசாரஞ் செய்து உண்மை  அறிவோனே  அறியாமை  எனும்  இருட்கடலைத்  தாண்டியோனாவான். 

யோக சித்தி-64: அறிவு-1

அறவின்பம்,  வாழ்வின்  அழகின்பம்  எல்லாம் 
அறிவின்ப  ஊற்றின்  அமிழ்து.  

அறவழி நடந்தால் இன்பமுண்டாகும்.  “அறத்தால்  வருவதே  இன்பம்”.  அந்த  இன்பவாழ்வில் ஓர் அழகின் இன்பம் பொலியும்.  இந்த அறவின்பத்தையும்,  அழகின்பத்தையும் வளர்க்கும்  அமுதம்  ஒன்றுள்ளது.  அதுவே அறிவின்பம்  என்கிற  ஊற்றின் அமுதம்.   அறிவின்பம் இல்லாத  அஞ்ஞானிகளுக்கு அறத்தால் வரும் இன்ப  வாழ்வில்லை. 

யோக சித்தி-63: பொதுநலம்-4:

பொதுநலம்  அற்பம்  பெரியதென்று  எண்ணாமல்  அன்புசெயு 
நுட்ப  அறிவுடைமை  நோன்பு.

மனிதன் ஒரு நோன்பு நோற்க வேண்டும்;  எது சிறந்த நோன்பு?  அன்பு செய்வதே;  அன்பு எவ்வாறு செய்யவேண்டும் ?  ‘இது அற்பம்,  சிறியது,  எளியது;  அது  பெரியது,  வலியது,  வளமை  பெற்றது’  என்று  எண்ணாமல்,  வேறுபாடில்லாமல்,  சர்வ சமரச நோக்குடன்  அன்பு செய்யவேண்டும்.  அன்பு நோன்பே  இன்ப  நோன்பாம்.   

யோக சித்தி-62: பொதுநலம்-3

ஈசன்  திருமொழியை  எவ்வினத்தார்  சொன்னாலும்
ஆசையுடன்  கேட்ப  தறிவு.

சர்வாத்ம சமரசத்திற்கு  சர்வ மத சமரசம்  துணை செய்யும்.  அருட்புலவர்  வாக்கெல்லாம்  ஈசன்  திருமொழிகளே.  அவை  உள்ளத்திலுள்ள  சுத்தான்மாவினின்றே  மலர்கின்றன.  அத்திருவாக்குகளை  எங்கே,  எவ்வினத்தார்,  எம்மதத்தார்  சொன்னாலும்  ஆசையுடனே,  ஆர்வமுடனே  விரும்பிக்  கேட்பதே  அறிவாகும்.        

யோக சித்தி-61: பொதுநலம் -2

எத்துணை  ஆராய்ந்து  இவ்வுலகிற்  அன்புசெயல்
அத்துணை  ஆன்ம  விரிவு.

ஆன்மா  ஓர்  உடலிலேயே  குறுக்கக்கூடாது;  உலகளாவ விரிந்து  விளங்கவேண்டும்.  அதற்கு  வழியென்ன?  இவ்வுலகை  இறைவன்  ஆலயமாக,  அவன்  அருளாடரங்கமாகக்  கருதி  அதிலுள்ள  உயிர்களுக்கு  அன்புசெய்தல்,  அந்த அன்புத் தொண்டினைக்  காலத்திற்கேற்றதாக  ஆராய்ந்து,  வகையறிந்து,  அமைதியாகச்  செய்யவேண்டும்.  எவ்வளவுக்கெவ்வளவு  அத்தகைய  உலகளாவிய  அன்பு  செய்கிறோமோ,  அவ்வளவுக்கவ்வளவு ஜீவான்மா  அகிலான்மாவாக  விரிந்து  விளங்கும்.       

யோக சித்தி-60: பொதுநலம் -1

பிறர்க்கென  வாழும்  பெரியாரைச்  சேருந்
துறக்குமுங்  காணாச்  சுகம்.

துறக்கமாவது  சுவர்க்கம், மோக்ஷம்.  அதன்  இன்பம்  பெரிதுதான்.  அதை  விடப்  பெரிய  இன்பம்  ஒன்றுள்ளது;  அதுவே,  எல்லா உயிர்களையும்  தான்  என்றெண்ணி  அன்பு  செய்யும்  ஆனந்தம்!  அந்த  இன்பம்  யாரைச்  சேரும்?  தன்னலம்  விட்டுப்  பிறர்  நலமே  போற்றி,  அறப்பணி செய்து  வாழும்  பெரியாரையே  அந்த இன்பம்  தானாக  வந்தெய்தும். 

யோக சித்தி-59: அறநெறி-5

மூவழுக்கு  நீங்குகவே,  முத்தூய்மை  ஓங்கிநர
தேவர்களும்  வாழ்க  செழித்து.

மனிதனை இன்பநிலை  சேராது  தடுப்பான  பழமையான  மூன்று  அழுக்குகள்:-  மோகவெறி,  மாயாபாசம், தன்னல  அகந்தை.  இவை  நீங்குக.  எப்படி  இவற்றை  நீக்குவது?  முத்தூய்மை,  அதாவது  மன, மொழி,  மெய்த் தூய்மை  ஓங்கவேண்டும்.   இவ்வாறு  மலமொழிந்து  அமலமானோர்  தேவராவார்.  அத்தகைய  சுத்த  தேவர்  குலம்  உலகிற்  செழித்தோங்குக! 

யோக சித்தி-58: அறநெறி-4

வசை  சினவஞ்ச  வழக்கற்றுத்  தீய
நசையற்று  நானுற்று  வாழ்.

மனத்தைக்  கெடுக்கும்  தீமைகளைக்  காண்மின்:-

1 .  வசை:  பிறரைப் பழித்தல்,  சொல்லாற்  புண்படுத்துதல்,  மரியாதைக் குறைவாய்ப்  பேசுதல்,  பண்டமொருபுரம் இருக்கப்  பழியோருவர்  மேற்  சுமத்துதல் எல்லாம்  வசையாம்.
2 . சினம்:  கோபம்;  இதனால் குணங் கெடும்,  மனங் கெடும், நரம்பு தளரும்,  ஆயுட்  கெடும்,  ஆற்றல்  கெடும்.
3 . வஞ்சம்:  கபடம், சிறுமை,  பொய், கொடுமை, மாயம்,  பிறரை  ஏமாற்றல் வஞ்சனையாம்.
4 . வழக்கு:  பொய் வழக்கு,  வியாஜ்ஜியம்,   வம்பு  இவற்றால்  அமைதி  கெடும்.
5. தீயநசை: துராசை,  காமக்குரோதாதிகள் இவையெல்லாம்  நீங்கவேண்டும்.
இவை  நீங்க  என்ன  வழி?

நாணுறல் :    அடக்கம், கௌரவம், மரியாதை,  விநயம்,  பிறர் பழியும், தன் பழியும்  அஞ்சல்,  நோகாது நோவுறுத்தாது,    பிறர் மனம் சுளிக்காது,  சீர்மையுடன் நடத்தல்.  வெட்டெனப் பேசாமை,  சூதுவாதின்மை,  நாய்ச்சினம்,  நரிவஞ்சம்,  பாம்புச் சீற்றம்,  அகங்கரிப்புகள் இன்றி  பெருந்தன்மை பிடித்தொழுகல் முதலியன நாண் எனப்படும்.  நாகரிகத்தின் நல்லுயிர் நாணே. 

யோக சித்தி-57: அறநெறி-3

கொலைபுலை,  கூத்தி,  குடிகளவு  சூதாம்
வலுத்த  நரக  வழி.
மனித வாழ்வைத்  துன்பகரமாகக  வழியாவன  ஆறு  இழிநடைகள்:
1. கொலை:  உயிர்க்கொலை  கூடாது.  சீவனைச்  சிவமயமாகக்  கருதவேண்டும்.  அஹிம்சா  விரதமே  அரிய  பெரிய  தருமமாகும்.
2. புலை:   புலாலுண்ணல்,  கொன்றதைத் தின்று  உண்ணல்,  உடலை  வளர்க்கப்  போதுமான  தாவரப்  பொருள்  இருக்கையில்,  பிற  உயிர்களைக் கொன்று  அவற்றின்  ஊனை  உண்ணல்  எவ்வளவு  கொடுமை!
3.  கூத்தி:  வேசையுறவு,  விபச்சாரம்.  தருமபத்திநியுடன்  கூட  இல்லறம்  நடத்த வேண்டும்.  வேசை  என்னும்  மாசு  உலகிற் படராதொழியவேண்டும்.
4.  குடி:  தென்னங்கள்:  ஈச்சங்கள்,  திராட்சைக்கள்,  விஸ்கி,  பிராந்தி,  தேயிலை,  காப்பி,  சுருட்டு  முதலிய  மயக்கப்  பொருட்கள்  நரம்பைத்  தளர்த்தும்.  மனத்  திட்பத்தைக் கெடுக்கும்.  பிணி பல  செய்யும்.
5.  களவு:  மனத்தை,  வாழ்வை,  மானத்தைக் கெடுக்கும் கொடிய பாவம் களவு.  பிறருக்குரியதை  தன்னலத்துடன்  அபகரித்தல்  களவாகும்.
6.  சூது:  சகுனிவலை; சீட்டு,  பகடை,  உழக்குருட்டல்,  குதிரைப்பந்தயம்,  வீண்  போதுபோக்கல்   எல்லாம்  சூதாட்டமே.  வீண் போதுபோக்கல் காலத்தைச்  சூதாடலாகும்.  பொய்வாய்ச்  சூதாகும்.   சீருஞ் செல்வமும், பண்பும், பரிசும்  சூதால்  கெடும்.

இந்த  ஆறு  தீமைகளால்  இருள்  வறுமை,  துன்பம்,  நோய்,  மதிமயக்கம்,  இடர்,  இன்னல்கள்  எல்லாம்  சூழ்ந்து  மனித  வாழ்வை  நரகமாக்கும்.                   

யோக சித்தி-56: அறநெறி-2

அன்புண்மையின்  சொலடக்கம்  பொறுமை  அருள்
இன்பப்  பொதுநெறியென்று  எண்.

எல்லோருக்கும்  பொதுவாக  அறநூல்  சொல்லும்  இன்பவழி:-

1 .  அன்பு :  கடவுலன்பு,  ஆருயிரன்பு.
2 .  உண்மை:  மனசாட்சிக்கு  இசைந்து,  உள்ளத்தில் உண்மை,  வாயில்  வாய்மை,  மெயில்  மெய்ம்மை கொண்டு நடத்தல்
3.  இன்சொல்:  வஞ்சம்,  பொறாமை, கடுமை இல்லாது,  பிறருக்கு  நன்மை தரும்  இனிய சொல், இத மொழி.
4.  அடக்கம்:  செருக்கு, தற்புகழ் இல்லாமல்,  இடம்பம் இல்லாமல், அமைதியாக  அறிந்து  திருவருளைப் பணிந்து நடத்தல்
5.  பொறாமை:  நன்முயற்சிகளில் எத்தனைச் சோதனைகள், இடர்கள் வரினும் வெற்றி தோல்விகளில் வேறுபடாமல் நிதானமாகப் பொறுமையாக நடத்தல், திதீட்சை
6.  அருள்:  எல்லா உயிர்களும் இறைவனும் உடலே என்றெண்ணி  அனைத்திடமும்  எல்லையற்ற கருணையும்,  இரக்கமும், நேயமும் கொண்டு அன்பு செய்தல்;  இறைவன் திருவருளை வேண்டுதல்

இவையே, உலகோர்  உய்யத்  தத்துவப்  பெரியாரும், வித்தகப் புலவரும் பலவாறாகச் சொன்ன உபடேசங்களின் சாரமாகும்.  இவற்றைச் சிந்தித்தொழுகுக.  இவை  விண்ணின்பம்  அளிப்பன.       

யோக சித்தி-55: அறநெறி-1

விண்ணின்  விரிந்த  வியன்செய்  அறநூலின்
உண்மை  உடுவிற்  பல.

அற்புதமான (வியன்செய்)  அறநூல்  வானினும்  விரிந்தது.  அதிற் காணும் இயலுண்மைகள்  விண்மீன்களை விடப்  பலவாம்.  ‘உடு’  என்றால்  நட்சத்திரம்.    

யோக சித்தி-54: அறத்தகுதி -5

உள்ளொளியிற்   பூத்த  உயிர்வாழ்வில்  சாதிமதச்
சல்லையிலை  சச்சர  வில்லை.

ஒவ்வொருவர்  உள்ளத்தும்  சுத்தான்மக்கதிர்  நிலவுகிறது.  அதுவே  உள்ளொளி.  அதனின்றே  உயிர்வாழ்வு  மலர  வேண்டும்.    அத்தகைய  வாழ்வே  அத்யாத்ம  வாழ்வு.  அது  சுத்த  சமரச  வாழ்வு.  என்  சாதி,  என்  மதம்  என்ற  மூடப் பிடிவாதங்கொண்டு   தொல்லை  செய்து  உலகிற்  சண்டை  விளைவிக்கும்  சாதிமதப்  பூசல்கள் அத்தகைய  சுத்தான்ம  சமரச  வாழ்விற்கில்லை.  

யோக சித்தி-53: அறத்தகுதி -4

உலகோர்  அருட்குலமாய்  ஒன்றி  இனிதோங்கு
நலமார்  போதுநிலையை  நாட்டு.

இறைவன் தந்தை;  அவனருளே  தாய்;  உயிர்கள்  அவனருள்  மைந்தர்.  இவ்வாறு  உலகமெல்லாம்  ஒரு  அருட்குலமாக,  தெய்வஜாதியாக  ஒற்றுமைப்பட்டு,  மன்க்கலாமாகச்  செழித்தோங்க  வேண்டும்.  அதற்கேற்ற  பொதுநிலை  வாழ்வை  சர்வாத்ம  சமரச  உணர்ச்சி  கொண்டு  நிலைநாட்டுக.   அதனால்  எல்லா  நன்மையையும்  உண்டாகும்.  

யோக சித்தி-52: அறத்தகுதி -3

சோர்வு  விடுத்துச்  சுயேட்சை  அடைந்துலகில்
வீரனாய்  வாழ  விரும்பு.

மனத்தளர்வை  நீக்கு.   எல்லாக்  கட்டுக்களினின்றும்  விடுதலை பெறு.  இந்த  உலகில்  வீரனாக,  ஆத்ம  தீரனாகப்  பலருக்கும்  பயன்பட  வாழ  விரும்பு.

யோக சித்தி-51: அறத்தகுதி -2

உண்டு  உடுக்க  உவந்திருக்க  நன்முயற்சி
பண்ணல்  அறவாழ்வின்  பண்பு.

மனிதன்  முதலில்  சரீர  தருமத்தைக்  கவனிக்கவேண்டும்.  உண்ண,  உடுக்க,  இருக்கப்  போதுமான  உணவு, உடை,  மனை  முதலிய  சௌகரியங்களை  நல்ல  யோக்கியமான  தொழிலின்  முயற்சி  செய்து  பெறவேண்டும்,.  இது,  அறவழி  வாழ்வின்  மாண்பாகும்.
 
 

யோக சித்தி-50: அறத்தகுதி -1

போக்கும்  வரவும்  பொழுதும்  அறியோமதனால்
யாக்கை  யோடே  செய்யறம்.

இவ்வுடலிற்   புகுந்த  ஆன்மா  எப்போது  இதை  விட்டுப்  போகும்,  வேறு  எந்த  உடலுடன்  மீண்டு  வரும்  என்று  நாம்  அறியோம்.   இந்த  உடல்  உள்ளபோதே  நல்ல  அறவினைகளைச்  செய்க. 

யோக சித்தி-49: அறவிரிவு -5

எதுதீதென  நோக்கி  எள்ளற்க;  நன்மை
அது  போற்றல்  ஆற்றலறிவு.

நம்மைத்  தொடர்ந்த  மனித  மனித  சமுதாயத்தினிடம்  நாம்  எப்படி  நடந்துகொள்ள  வேண்டும்?  பிறரிடம்  எது  கெடுதல்  என்று  நோட்டம்  பார்த்து,  குட்ட்ரமே  பாராட்டி  அவர்களை  இகழக்கூடாது.  பிறரிடம்  எது  நன்மை,  எது  உத்தமமான  குணம்  என்று  கவனிக்கவேண்டும்.  அதை  நாமும்  பேணி,  அதன்படி  செய்து,  நன்மை  பெறுதலே  அறிவாகும்.         

யோக சித்தி-48: அறவிரிவு -4

தொடர்ந்தாரின்  துன்பம்  துடைக்காத  செல்வன்
கடமை  வழுவியோன்  காண்.

நாகரிகம்  பெற்ற  செல்வன்,  சுகபோகங்களைச்  சுயனலத்திர்கே  பயன்படுத்தாது,  தன்னைத்  தொடர்ந்த,  தன்னினமான,  மாந்தரின்  துன்பத்தைத்  துடைக்கப்  பயன்படுத்தவேண்டும்.  அவர்களுக்குற்ற  இடர்களைத்  தன்னால்  இயன்ற  மட்டும்  தவிர்க்கவேண்டும்.  இன்றேல்,  அவன்  தனக்குரிய  கடமையினின்று  வழுவியோனாவன்.    

யோக சித்தி-47: அறவிரிவு -3

மோகரிகம்  இன்றி,  முரணற்ற  முன்னேற்றம்
நாகரிகம்  என்றே  நவில்.
நாகரிகம்  என்றால்  என்ன?  மோகரிகம், மனமயக்கம்  இல்லாது,  ஒருவொருக்கொருவர்  முரண்பட்டு,  மாறுபட்டுப்  போட்டி  பொறாமைகளால்  பகைத்துப்  போராடாமல்,  மனித  சமுதாயம்  ஒன்றுபட்டு,  அன்பிலும்  அறிவிலும்  ஆன்ம  உணர்விலும்  வளர்ச்சி  பெரும்  முன்னேற்றமே  நாகரிகம்  என்று  சொல்லுக.   

யோக சித்தி-46: அறவிரிவு -2

பழமை  பழமையெனும்   பல்லவியே  பாடேல்;
புதுமை  புதுமையெனப்   போ.

‘இது  பழைய  வழக்கம், பழைய  ஆசாரம்,  முன்னோர்  வகுத்தது’  என்று  திருப்பித் திருப்பி  பல்லவி  பாடிக்கொண்டு  காலமுன்னேற்றத்தின்  குறுக்கே  நில்லாதே.  ‘புதுமை,  புதுமை,  புதுவாழ்வு,  புதுநினைப்பு,  புதிய  சுயேச்சை  வேண்டும்’  என்று  சொல்லி  முன்னேறிச்  செல்.