கருத்துக்கள்-19: "இரவல் புத்தகங்கள்"

இன்று காலை மரபின் மைந்தன் ம.முத்தையா அவர்கள் எழுதிய “ஒரு கப் உற்சாகத்தை” எடுத்துப் புரட்டினேன். (கையடக்கமான அழகான, நேர்த்தியான பதிப்பு (நன்றி: விஜயா பதிப்பகம், கோவை). பக்கத்துக்கு நச்சென்று நான்கு வரிகள், மனதில் உரைக்கும் வண்ணம். பலமுறை படித்தும் திரும்பத் திரும்ப வாசிக்கும், அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு ஒப்பற்ற நூல். தமிழில் இது போன்ற உற்சாகமூட்டும் சுய முன்னேற்ற நூல்கள் இருப்பது பெருமகிழ்ச்சியைத் தருகிறது. முத்தையா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.)

அதிலே “இரவல் வாங்குபவற்றைத் திருப்பிக் கொடுங்கள்” என்றொரு மணி வரி. இதை நான்கு முறை திரும்பத் திரும்ப போட்டிருந்தாலும் தவறில்லை. நான் என்னுடைய புத்தகங்கள், மிகச் சிறந்த புத்தகங்கள், சிலவற்றை இரவல் கொடுத்துவிட்டு திரும்பப் பெறமுடியாமல் இருக்கிறேன். (நான் சிலரிடம் புத்தகங்கள் இரவலாக வாங்கிவிட்டுத் திருப்பாமல் இருந்தது வேறு விஷயம்!).

பொதுவாக நம்மவர்களுக்கு இரவல் வாங்கினால் திரும்பக் கொடுப்பது என்பது ஒரு சிரமமான வேலை. அதிலும் இரவலாகப் பெற்ற பொருள் புத்தகமாக இருந்துவிட்டால், சிக்கல்தான். அவர்களது மனசாட்சி இடம் கொடுக்காது.

– அங்கே இருப்பது இங்கேயே இருந்துவிட்டுப் போகட்டுமே!
– திரும்பக் கொடுக்காவிட்டால்தான் என்ன செய்யப்போகிறார்?
– மறுபடியும் தேவைப்படும், மறுபடியும் போய் கேட்கவேண்டும், அதனால் இங்கேயே இருக்கட்டுமே.
– இன்னும் படித்து முடிக்கவில்லை, முடித்தபின் கொடுக்கலாம்.
– கேட்டால் கொடுக்கலாம். அல்லது நச்சரித்தால் கொடுக்கலாம்.
– அந்த முட்டாளுக்கு இதன் அருமை தெரியாது.

இப்படிப் பல சமாதானங்கள்.

எங்கேயோ படித்திருக்கிறேன். ஒரு பெரிய மனிதர் சொன்னார்: “என்னுடைய புத்தகங்களை நான் யாருக்கும் இரவல் கொடுப்பதில்லை. கொடுத்தால் அவர்கள் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள். சொல்லப்போனால், என்னுடைய புத்தகங்களெல்லாம் அப்படிச் சேர்த்ததுதான்!”

இன்னும் சில மேன்மக்கள் இரவல் கொடுக்கும் நிலை வந்தால், பேசாமல் அதை தன் கையொப்பமிட்டு அன்பளிப்பாகவே கொடுத்துவிடுகிறார்கள். இதனால் பெற்றவர்க்கும் குற்ற உணர்வு இல்லை. கொடுத்தவர்க்கும் பெற்றவர் மேல் மனதில் ஒரு மூலையில் கோப உணர்வோ, வெறுப்போ இல்லாமல் இருக்கும்.

ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைத்ததாலோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் என்னுடைய புத்தக அலமாரிகளைப் புரட்டி இரவல் வாங்கியவற்றை எல்லாம் தேடித் தேடி திரும்பக் கொடுக்க ஆரம்பித்தேன். அதிலும் ஒரு புத்தகம் பல வருடங்களாக கொடுக்க மனமில்லாமல், பாதி படித்ததோடு நின்றுவிட்ட, அருமையான புத்தகம், William Shirer’s “The Rise and Fall of Third Reich”. கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் சென்று திருப்பிக் கொடுத்ததும் நண்பராலேயே நம்பமுடியவில்லை. அவர் கேட்கவே இல்லை, முற்றிலுமாக மறந்தே போய்விட்டார். இன்னும் சொல்லப்போனால் அவருக்குத் தன் புத்தகமா என்றே சந்தேகம் வந்துவிட்டது.

தேவைக்கு அதிகமாகச் சேர்த்துவைப்பது ஒருவித வியாதி என்ற உணர்வும், அடுத்தவர் பொருள் நமக்கு ஏன் என்ற உணர்வும் வந்ததால்தான் இந்த மாற்றம். பிறனில் விழையாமை என்பது சிறு சிறு பொருட்களில் இருந்து ஆரம்பிக்கிறது என்று கருதுகிறேன். அதைச் சிறுவயதிலேயே நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது நலம்.

நான் தற்போது அதற்கு அடுத்த நிலைக்கு வந்துவிட்டேன். அறுபதைத் தாண்டிவிட்டேன். உடல் முழுவதும் உபாதைகள். இன்னும் எவ்வளவு காலம் இருக்கப் போகிறேன். நல்லபடியாக இருக்கும்போதே யாருக்கு எந்தப் புத்தகம் பயனுள்ளதாக இருக்குமோ அதை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், தொடர்ந்து கொடுப்பேன்.

“Fight The Hoarding Instinct. Be true to yourself. இரவல் பெற்றவற்றை சுடும் நெருப்பாக எண்ணி, சீக்கிரம் திரும்பக் கொடுங்கள்.

நன்றி, வணக்கம்.

கருத்துக்கள்-18: "பரிசுகள்"



பரிசுகள் வழங்கும் பழக்கம் உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவானது. திருமணம், பிறந்தநாள், மணிவிழா, புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என்று பல சமயங்களில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளிலும் போட்டிகளுக்கும், மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப் படுகின்றன.

இதில் பிரச்சினை என்னவென்றால் பரிசுப் பொருளை தேர்ந்தெடுப்பது. என் நண்பர் ஒருவர் கூறினார்: “என் வீட்டில் கழிப்பறை தவிர எல்லா அறைகளிலும் சுவர்க்கடிகாரம் உள்ளது. அத்தனையும் பரிசாக வந்தது.” ஒரு சமயத்தில் பல பேர் ஒரே பொருளை பரிசாக வழங்கி, பெற்றவர் அதை என்ன செய்வது என்று தெரியாமல், அடுத்து வரும் வாய்ப்பில் அதை அவர் மற்றவர்க்கு பரிசாக வழங்கி, அப்பாடா என்று பெருமூச்சு விடலாம்.

இந்த பிரச்சினைக்கு விடையாக சிலர் பணமாகவே பரிசுகளை வழங்கி விடுகின்றனர். இதிலும் வேடிக்கை இருக்கிறது. ஒரு பெரும் பணக்காரருக்கு ஒன்றுமே இல்லாத சாதாரண மனிதர் பணம் பரிசாகக் கொடுப்பது.

நானறிந்தவரை இதற்கு சரியான விடை நல்ல புத்தகங்களை பரிசாக வழங்குவதே. பெறுபவரின் விருப்பு வெறுப்புகளை ஓரளவு அறிந்திருந்தால் சரியான புத்தகங்களை தேர்ந்தெடுக்க முடியும்.

காரைக்குடியில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தும்போது, முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் மாவட்டத்திலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு விண்ணப்பம் அளித்தோம். பள்ளிகளில் வழங்கப்படும் பரிசுகள் அனைத்தும் புத்தக வடிவில் இருக்க வேண்டும். பல பள்ளிகள் பிளாஸ்டிக் சாமான்கள், பாத்திரங்கள் என்று பரிசு வழங்கியதை மாற்றி, புத்தகங்களைப் பரிசாக வழங்கினர்.

சமீபத்தில் நடந்த எனது மணிவிழாவில் இரண்டு அன்பர்கள் மட்டும் புத்தகங்களைப் பரிசாக வழங்கினர். ஒரு அன்பர், சிரிக்க வேண்டாம், இரயில்வே கால அட்டவணையைப் பரிசாக வழங்கினார்! இன்னொரு நண்பர் ஜக்கி வாசுதேவ் அவர்களின் சிந்தனைத் தொகுப்பான, “ஆயிரம் ஜன்னல்” என்ற அற்புதமான நூலையும், சுஜாதாவின் “கடவுள்” என்ற நூலையும் அன்புப் பரிசாக வழங்கினார்.

ஒன்று இரண்டுமே என்னிடம் இல்லாத புத்தகங்கள். இரண்டாவது இரு நூலாசிரியர்களும் நான் பெரிதும் மதிப்பவர்கள். ஆயிரம் ஜன்னலில் முதல் இரு அத்தியாயங்களைப் படித்து விட்டேன். என் மனதிற்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கின்றது. அற்புதமான புத்தகம் என்பதை அவை கட்டியம் கூறுகின்றன. ஏற்கனவே சத்குரு அவர்களின் “அத்தனைக்கும் ஆசைப்படு” புத்தகத்தை மூன்று முறை படித்து மகிழ்ந்திருக்கிறேன். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை தேர்ந்தெடுத்த பகுதிகளை எனது குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறேன். ஈடு இணையற்ற நூல் அது.

இந்த இரு புத்தகங்களை வழங்கிய அன்பர் பணத்தைச் செலவு செய்தது மட்டுமல்லாமல், நேரத்தை செலவு செய்து, சிந்தனை செய்து, எனக்கு என்ன பிடிக்கும் என்று யூகித்து, புத்தகக் கடையைத் தேடிச் சென்று அருமையான இந்த இரு புத்தகங்களை வாங்கியிருக்கிறார் என்பதை என்னால் உணரமுடிகிறது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இத்தருணத்தில் எனது மணிவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அன்பர்கள், சிறப்பாக நடக்க உதவிய அன்பர்கள், பரிசுகள் வழங்கிய அன்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

கருத்துக்கள்-17: "கண் திருஷ்டி" (Evil Eye)

கோவிலுக்குச் சென்று திரும்புகையில், ஒரு வீட்டுச் சுவரில் அந்த அழகியகண் திருஷ்டி விநாயகர்படத்தைக் கண்டேன். கேமெரா கையில் இல்லை. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

அது கண் திருஷ்டி பற்றி என்னை சிந்திக்க வைத்தது. பொறாமைக்காரர்கள், வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் பார்வை நம்மை பாதிக்கும் என்ற நம்பிக்கை நம்மிடையே பரவலாக இருக்கிறது. பல வீடுகளில் சுவற்றிலோ அல்லது வாசலிலோ கண் திருஷ்டி விநாயகர் படத்தைப் பார்க்கலாம். சில வீடுகளில் திருஷ்டி பூசணிக்காயை கட்டித் தொங்கவிட்டிருப்பர்கள். அல்லது கோரமான ராக்ஷஸ உருவத்தின் படத்தை மாட்டியிருப்பார்கள். இதை மூட நம்பிக்கை என்று எளிதாக தள்ளிவிடலாம்.

ஆனால் இதில் ஏதோ உண்மை இருக்கிறது என்பதை என்னால் கூறமுடியும். நான் ஹோமியோபதி பயின்ற காலத்தில்அஸாரம் யூரோப்பியம்‘ (Asarum Europeum) என்ற மருந்தைப் பற்றி படித்திருக்கிறேன். (‘நிலக் கடம்புஎன்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் கண் திருஷ்டிக்கான (Evil Eye) மருந்து அது). எனக்கு ஆச்சரியமாக இருந்தது, மேலை நாட்டினரிடமும் இது போன்ற நம்பிக்கை இருப்பது. மேலும் அந்த மருந்திற்கான அனுபவக் குறிப்புகளில் ஹோமியோபதி மருத்துவர்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மருந்தைக் கொடுத்து குணப்படுத்தியதைக் கூறியிருந்தார்கள்.

நன்றாகப் பால் கொடுத்துக் கொண்டிருந்த கொழு கொழுவென்றிருந்த பசுமாடுகள் திடீரென பால் கொடுப்பதை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், உருக்குலைந்து எழும்பும் தோலுமாக ஆகின. அவற்றை ஹோமியோ மருத்துவர்கள் குணப்படுத்தியிருக்கிரார்கள். எனவே மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும்கெட்ட பார்வையால்பாதிக்கப் படக்கூடும்.

நம் தமிழ்நாட்டிலேயே ஒரு புகழ் பெற்ற ஹோமியோபதி மருத்துவர் இதைப் பற்றிக் கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது. அவரது உறவினரின் குழந்தை வயதுக்கு மீறிய அறிவு வளர்ச்சி மற்றும் இனிமையான குரல், ஸ்லோகங்கள், பாடல்களை மிகத் தெளிவாகப் பாடி அனைவரையும் கவரும் தன்மை பெற்றிருந்தது. ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு ஒரு பெண்மணி வந்திருந்தபோது, வழக்கம்போல் அந்தக் குழந்தையை அழைத்து பாடச் சொன்னார்கள். அதன் பாடும், பேச்சும் அந்தப் பெண்மணியை மிகவும் கவர, அவர்குழந்தை என்னமா பாடுகிறாள்என்று வியந்து பாராட்டிச் சென்றாராம். திடீரென அது முதல் அந்தக் குழந்தை பேச முடியாமல் போனது. பெரிய மருத்துவர்களிடம் சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியவில்லை, என்ன நோய் என்று அறியவும் முடியவில்லை. இறுதியில் அப்போது ஹோமியோபதி படித்துக்கொண்டிருந்த பின்னாளில் புகழ் பெற்ற அந்த ஹோமியோபதி மருத்துவர், அந்தக் குடும்பத்தில் ஒருவர். குழந்தையின் பெற்றோர் எப்படியாவது குணமானால் சரி என்று சம்மதிக்க. அவர் ‘அஸாரம் யூரோப்பியம்என்ற மருந்தைக் கொடுக்க, குழந்தை விரைவில் குணமடைந்து, முன்போல் பாட, பேச ஆரம்பித்து விட்டாள். இதெல்லாம் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். ஆனால் நான் இதை முழுமையாக நம்புகிறேன்.

கருத்துக்கள்-16: உழைக்காமல் உண்பதில்லை!


இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பெரியவர், சிறியவர், குழந்தைகள் பிச்சை எடுப்பதை அன்றாடம் நாம் பார்க்கிறோம். மனதிற்கு கஷ்டமாக இருக்கும். ஏதோ சில்லறையைப் போட்டுவிட்டு மறந்துவிட முயற்சிப்போம், ஒருவகையான குற்ற உணர்வோடு.

சென்ற முறை இராமேஸ்வரம் செல்லுகையில், இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் அந்தப் பாட்டியைப் பார்த்தேன். பனை ஓலை விசிறி, பனை ஓலை கிலுகிலுப்பை வேண்டுமா என்று ஒவ்வொரு இரயில் பெட்டியாகத் தேடித் தேடி விற்றுக்கொண்டிருந்தாள்.

சிரித்த முகத்தோடு, பொறுமையாக, குறைந்த விலையில் கலைநயம் மிக்க பொருட்களை விற்று, வாழும் அந்தப் பாட்டி என்னைப் பெரிதும் கவர்ந்தாள். அந்தப் பாட்டியிடம் ஒரு படம் எடுக்கலாமா என்று கேட்டதும் வெட்கம் வந்துவிட்டது. இரண்டு விசிறி பத்து ரூபாய், இரண்டு கிலுகிலுப்பை பத்து ரூபாய்! கிலுகிலுப்பை வைத்து விளையாடும் வயதில் வீட்டில் யாரும் இல்லாதிருந்தபோதும், நாங்கள் கிலுகிலுப்பைகள், விசிறிகள் வாங்கினோம்.

இந்தத் தள்ளாத வயதிலும் உழைத்து உண்ண வேண்டும். வேறு யாரையும் சார்ந்து வாழக் கூடாது என்றிருக்கும் அந்தப் பாட்டியை நாம் அனைவருமே, குறிப்பாக, நம் இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

சிந்தனைகள்-4: "ஈ"

தமிழ்நாட்டில் குக்கிராமத்தில்கூட தெருவுக்கு குறைந்த பட்சம் ஒரு டீக்கடை இருக்கும். அந்த டீக்கடையில் மொறுமொறுவென்று வடை இருக்கும். விலை நம்பமுடியாது: ஒரு ரூபாய் மட்டும்! பார்த்தாலே சாப்பிடத்தோன்றும், அதாவது நீங்களும் என்னைப்போன்ற ஒரு போஜனப் பிரியனாக இருந்தால். (எண்ணெய், பருப்பு விற்கும் விலையில் இது எப்படி சாத்தியமாகிறது?)

டீக்கடையில் எப்போதும் நான்கைந்து பேர் வடையை சுவைத்து மென்றுகொண்டு, அரட்டை அடித்துக்கொண்டு, டீயை உறிஞ்சிக்கொண்டு இருப்பதைப் பார்க்கலாம். இதில் கொடுமை என்னவென்றால், அந்த வடைகளில் தவறாது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். கடைக்காரருக்கோ, ‘கஸ்டமர்களுக்கோ’ அதைப்பற்றிய எந்த உணர்வும் இருப்பதாகத் தெரியாது.

ஒருநாள் இதுபோன்ற ஒரு டீக்கடையில் வடை சாப்பிட கையை நீட்டியபின் நீட்டிய கையை பின்னே இழுத்துகொண்டேன். காரணம்: ஈ. நொந்துபோய் கடைக்காரரிடம், “ஏம்பா! வடையை ஒரு இலையாலோ அல்லது ஒரு பேப்பராலோ மூடிவைத்தால் ஈ மொய்க்காதிருக்கும் இல்லையா?” என்றேன். டீக்கடைக்காரரும், சுற்றியிருந்தவர்களும் ஏதோ விசித்திரமான பிராணியைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தார்கள். தர்ம சங்கடமாக இருந்தது; நான் ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டதைப்போல் உணர்ந்தேன். மெதுவாக நகர்ந்து விட்டேன்.

சிரமப்பட்டு சுவையான வடை தயார் செய்கிறார்கள். அதை மூடி சுகாதாரமாகப் பாதுகாப்பது எவ்வளவு எளிது! இருப்பினும் ஏன் செய்ய மறுக்கிறார்கள்? அந்த ஈ எங்கெல்லாமோ உட்கார்கிறது. அது நமக்குத் தெரியாமலா இருக்கிறது? ஏன் கொஞ்சம்கூட அருவருப்பு உணர்வே இல்லை.

பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழு தளைகள் (விலங்குகள்) இருக்கின்றன. அவற்றிலிருந்து விடுபடாதவரை முக்தி என்பது கிடையாது. அருவருப்பு அவற்றில் ஒன்று. நம்மவர்கள் அருவருப்பு என்ற தலையை உடைத்து ஆன்மீகத்தில் முன்னேறி விட்டார்களா என்று எடுத்துக் கொள்ளவா?

சரி, சாதாரண டீக்கடையில்தான் இப்படி என்றால், ஒருமுறை உலகப் புகழ் பெற்ற ஒரு மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டலில் அலுவலக வேலையாக, ஒரு தேசிய கருத்தரங்கத்திற்காகச், சென்றிருந்தேன். மூன்று நாள் கருத்தரங்கம் முடிந்து, கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாய் ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்தினார்கள். அங்கே ‘பஃபே’ முறையில் உணவு. ஒரு தட்டை கையில் எடுத்தாலே ரூபாய் 650 கணக்கில் ஏறிவிடும். என் நண்பர் சாப்பாட்டில் நாட்டமின்றி, கொஞ்சம் சுண்டல் மட்டும் சாப்பிட்டால் போதும் என்று ஒரு தட்டில் சுண்டல் எடுக்க, அதில் ஒரு முழு கரப்பான் பூச்சி இருந்தது. உடனே அதை மூடி மறைக்க பயங்கர பரபரப்பு.

ஏன் நம்மிடம் சுத்தம், சுகாதாரம் என்பது பெயரளவில் மட்டுமே இருக்கிறது. நம் சுத்தம், சுகாதார உணர்வுகள் முற்றிலும் மழுங்கிப் போய்விட்டனவா?

மறுபக்கம் சுத்தம், சுகாதாரம் என்பது ஒரு ‘fetish’ ஆக்கிவிட்ட ஒரு கூட்டம்.

ஒன்றும் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்கள். நன்றி.

சிந்தனைகள்-3:"குழி தோண்டல்"

நம்மவர்களுக்கு குழி தோண்டுவது என்றால் ஏக குஷிமனிதருக்கு மனிதரும் சரி, சாலைகளிலும், சாலை ஓரங்களிலும் சரி. அதுவும் அரசு அமைப்புக்கள் ஒருவரை ஒருவர் கண்டுகொள்வதில்லை. ஏகப்பட்டஈகோபிரச்னை வேறு. அப்போதுதான் அழகாகப் போட்டு முடித்திருப்பார்கள் சாலையை. பின்னாலேயே வந்துவிடுவார்கள், குழி தோண்ட. ஒரு துறை குழி தோண்டி மூடிய பின் அடுத்த துறையினர் குழி தோண்ட வந்து விடுவார்கள். அதிலும் தோண்டுவார்களே தவிர சரியாக மூட மாட்டார்கள். சமயத்தில் எனக்குத் தோன்றும்: “அரசுத் துறைகள் ஒப்பந்தக்காரர்களின் வசதியை மட்டும்தான் பார்க்கிறதோ என்று“. ஏன் சரியாக மூடவில்லை என்று கேட்கமாட்டார்கள்.

அதிலும் மழைக்காலத்துக்கு முன் தோண்டிப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். மழை பெய்ய ஆரம்பித்ததும் மக்கள் நரக வேதனை அனுபவிக்க வேண்டாமா? மேலெல்லாம் சேற்றை வாரியிறைக்க வசதியாக குழிகள் சரியாக மூடப் படாமல் இருக்கும். மழை நீர் சாலையில் ஓட, குழி கண்ணில் படாமல், விழுந்து எழுவோர், விழும் வாகனங்கள் என்று நம் ரோதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் குழந்தைகள், பெண்டிர் படும்பாடு சொல்லிமுடியாது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் அரசு எந்திரங்களுக்குக் கவலை இல்லை.

இந்த வேதனைகளை எல்லாம் நான் நிறைய அனுபவித்திருக்கிறேன், நீங்களும் அனுபவித்திருக்கலாம்.

தற்போது இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வந்து விட்டதுபோல் தோன்றுகிறது.

இரயில் பயணச்சீட்டு ஒன்றின் பின்புறம் கண்ட விளம்பரம் மனதிற்கு நம்பிக்கை தருவதாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளது. (படம் ஆரம்பத்தில்). “குழாயோ, கேபிளோ அமைப்பதற்கு குழி தோண்டவேண்டாம்.ஒரு புதியடெக்னாலஜிவந்துள்ளது. மோகன் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் என்ற இந்தக் கம்பெனியின் விளம்பரம் உண்மையாயின், நல்ல காலம் பிறந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் இன்னொரு முட்டுக்கட்டையைத் தாண்டவேண்டும். அரசு அமைப்புக்கள் இந்தடெக்னாலஜியைப்பயன்படுத்த முன்வரும் என்று கூறமுடியாது. ஒப்பந்தக்காரர்களின் நலம் நாடி செய்யப்படும் இவ்வாறான வேலைகளை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியுமா? என் நண்பர் கூறுவார்: “Government for the contractors, of the contractors and by the contractorsஎன்று கூறுவதுண்டு. அது முற்றிலும் உண்மையா என்று பார்க்க வேண்டும்.

சிந்தனைகள்-2: "பிறந்தநாள்!"

இன்று அக்டோபர் 21. அறுபது ஆண்டுகளைத் தாண்டி, அறுபத்து ஒன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். பெருமைப்படவோ, கொண்டாடவோ எதுவுமில்லைதான்.

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது குழந்தைகளுக்கும், பெரும்பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டும்தானா?

பரவாயில்லை, சந்தோஷப்படும்படி ஏதாவது கிடைக்கிறதா என்று விக்கிப்பீடியாவைத் (Wikipedia.com) திறந்தேன். அக்டோபர் 21-ஐத் தேடினேன். அடேயப்பா, எவ்வளவு தகவல்கள்! வரலாற்றில் அக்டோபர் 21-ம் தேதி நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்!! அன்று பிறந்த, இறந்த பெரிய மனிதர்களின் பட்டியல்.

நான் பிறந்த அதே வருடம், அதே மாதம், அதே தேதிஅக்டோபர் 21, 1949 – அன்று பிறந்தவர் இஸ்ரேல் நாட்டின் ஒன்பதாவது பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகூ(Benjamin Netanyahu).

அக்டோபர் 21 அன்று பிறந்த மற்ற சில வி..பி.க்கள் மட்டும்:

ஜப்பானியப் பேரரசர் ஹிகஷியாமா (Emperor Higashiyama) – 1675
ஆங்கிலக் கவியரசர் சாமுவல் டைலர் காலரிட்ஜ் (Samuel Taylor Coleridge) – 1772
நோபல் பரிசை நிறுவிய ஆலஃப்ரட் நோபல் (Alfred Nobel) – 1833
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஃப் பாய்காட் (Geoff Boycott) – 1940

வெப்துனியா (Webduniya.com) செய்தியிலிருந்து அறிந்துகொண்ட ஒரு செய்திதமிழகத்தின் ஆளுநர் மேதகு சுர்ஜீத் சிங் பர்னாலா தன்னுடைய எண்பத்தைந்தாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

1969 அக்டோபர் 21 அன்று அமெரிக்க எழுத்தாளர் ஜேக் கெரொவ்வாக் (Jack Kerouac) மறைந்தார்.

அக்டோபர் 21, இங்கிலாந்தில்ஆப்பிள் தினமாகக்‘ (Apple Day) கொண்டாடப் படுகிறது.

இதெல்லாம் மனதிற்கு உற்சாகம் தருகிறது. நாமும் வாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகத்தையும், சாதிப்போம் என்ற நம்பிக்கையும் தருகிறது.

படித்து, கேட்டு, சிந்தித்து நான் உணர்ந்த மகத்தான உண்மைகளுள் சில: நாம் யாரும் யாருக்கும் தாழ்ந்தவரில்லை; நம் எல்லோருள்ளும் அளப்பரிய ஆற்றல், மகத்தான சக்தி உறைந்துள்ளது. மனதை ஒருமுகப் படுத்தி, நம்முடைய தனித்திறமை என்ன, நம்முடைய வாழ்வின் லட்சியம் எது என்பதில் தெளிவு பெற்று, பின் அந்த ஆற்றலைக் கொண்டு, நம்முடைய லட்சியத்தை அடையப் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி நிச்சயம்; முழுமை பெறுதல் திண்ணம். தியானம், சுவாசப் பயிற்சிகள், யோகா போன்றவை இதற்கு உறுதுணையாக உதவும். மனதைத் தளரவிடாது, விடாமுயற்சியுடன் முயன்றுதான் பார்ப்போமே. It is never too late!

அடுத்து ஒரு சில வினாடியில், எல்லாத் தகவல்களையும் இலவசமாக அள்ளித்தரும் விக்கிப்பீடியாவை நினைத்து பிரமிக்கிறேன். அதில் இல்லாததே இல்லை என்று சொல்லலாம். எவ்வளவு விஷயங்கள் விக்கிபீடியாவிலிருந்து தெரிந்துகொண்டிருக்கிறேன்! விக்கிப்பீடியா, உனக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்! வாழ்க நீ!! வளர்க நின் தொண்டு!!!

நன்றி: Wikipedia & Webduniya.

சிந்தனைகள்-1: "எருமைப்பாலை தடை செய்யவேண்டுமா?"

இந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். வாகனத்தில் நாம் செல்கையில், எவ்வளவு ஒலி எழுப்பியும் கண்டுகொள்ளாமல் சாலையில் இஷ்டம்போல் வழிவிடாமல் சென்று, நம் பொறுமையை சோதிக்கும் மனிதர்கள். ஆத்திரத்தில் மனதிற்குள்எருமைமாடுஎன்று திட்டிவிட்டு சென்றிருப்போம். ஒழுங்கீனம் என்பது நாட்டில் ஒரு மாபெரும் கலையாக வளர்ந்துவிட்டது. ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? காபியாகவும், டீயாகவும், மோராகவும், தயிராகவும் உண்ணப்பட்ட எருமைப்பாலின் பாதிப்பா?

இன்னும் மேலே சென்று சிந்திக்கிறேன். நாம் உண்ணும் உணவு நம்மை எந்த அளவிற்கு பாதிக்கின்றது?

காரம் அதிகம் சாப்பிடுபவர்கள் முன்கோபிகளாக இருப்பார்கள் என்றும், உப்பு அதிகம் சேர்ப்பவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்றும் சொல்வதுண்டு.

கீதையைப் புரட்டிப் பார்க்கின்றேன். உணவை மூன்று வகையாக பிரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. சாத்வீக உணவு, ராஜச உணவு, தாமச உணவு என்று.

காய்கனிகள், அவ்வப்போது சமைத்து உண்ணப்படும் உணவு, அனைத்திலும் மிதம் மற்றும் உடலுக்கு வலிவையும், சக்தியையும் தரும் நன்மை பயக்கும் தன்மை கொண்ட உணவுகள் அனைத்தும் சாத்வீக உணவுகளாகும். சாத்வீக உணவைக்கொள்பவர்கள் சாத்வீக குணங்கள் (பொறுமை, நிதானம் போன்ற உயர் குணங்கள்) கொண்டவர்களாக இருப்பார்கள்.

சுவைகள் தூக்கலாக உள்ள உணவு வகைகள், வறுத்தவை, பொரித்தவை, மசாலாக்கள் சேர்ந்தவை ராஜச உணவுகளாகும். ராஜச உணவை அதிகம் கொள்பவர்கள் தேவையில்லாத பரபரப்பு, எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை, தேவையில்லாமல் எப்போதும் ஏதாவது செய்துகொண்டிருப்பவர்கள் போன்ற குணங்களை உடையவர்களாக இருப்பார்கள்.

கெட்டுப்போன, மக்கிப்போன, பழைய உணவு, சுத்தமில்லாத உணவு, உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவு போன்றவை தாமச உணவுகளாகும். தாமச உணவைக் கொள்பவர்கள் மந்த புத்தி உள்ளவர்களாகவும், சிந்தனையில் தெளிவில்லாதவர்களாகவும் இருப்பார்கள்.

இன்னும் உணவைத் தயாரிப்பவர்களின் மன நிலை, பரிமாறுபவர்களின் மன நிலை, உண்ணும் சுற்றுச் சூழல் இவை அனைத்தும்கூட உண்ணுபவர்களிடம் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

இயற்கை மருத்துவம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு காய்கனிகள், சமைக்காத உணவுகள், அமிலத்தன்மையில்லாத உணவுகள் போன்றவற்றை பரிந்துரைக்கின்றது.

வரும் நாட்களில் உணவைப்பற்றி இன்னும் பார்க்கலாம்.